பொது மாநாடு
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
அக்டோபர் 2023 பொது மாநாடு


நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?

உடன்படிக்கையின் பாதையில் இருங்கள். உங்கள் வாழ்க்கை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும், ஆனந்தத்தால் நிறைந்தும் இருக்கும்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? எது உங்களை மகிழ்ச்சியடையாமல் செய்கிறது? தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினார்: “நீங்கள் துயரத்தோடு இருக்க விரும்பினால், கட்டளைகளை மீறுங்கள்—எப்போதும் மனந்திரும்பாதீர்கள். நீங்கள் மகிழ்ச்சியை விரும்பினால், உடன்படிக்கையின் பாதையில் இருங்கள்.”1 மகிழ்ச்சியாக இருப்பது எளிதல்லவா? உங்கள் வாழ்க்கையில் உடன்படிக்கைகளை ஏற்படுத்தி அவற்றைக் கடைபிடியுங்கள். உடன்படிக்கையின் பாதையில் நிலைத்திருக்கவும், நம்மை மகிழ்ச்சியடையச் செய்யவும் உதவும் சில விஷயங்களை மதிப்பாய்வு செய்வோம்.

1. உடன்படிக்கை பாதை என்பது என்ன?

மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட் கூறியபடி: “உடன்படிக்கை பாதை என்ற சொல் கிறிஸ்துவிடம் வந்து அவருடன் இணைக்கும் உடன்படிக்கைகளின் தொடரைக் குறிக்கிறது. இந்த உடன்படிக்கையின் இணைப்பின் மூலம், அவருடைய நித்திய வல்லமையை நாம் பெறுகிறோம். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மற்றும் மனந்திரும்புதலுடன் அதைத் தொடர்ந்து ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியைப் பெறுதலில் பாதை தொடங்குகிறது.”2 நாம் ஒவ்வொரு முறையும் திருவிருந்தில் பங்குபெறும் போது அந்த உடன்படிக்கையை புதுப்பிக்கிறோம்.

ஞானஸ்நான உடன்படிக்கையில் தொடங்கி, நம் வாழ்நாள் முழுவதும் அதிக உடன்படிக்கைகளை மேற்கொள்கிறோம். மீண்டுமாக, மூப்பர் ரென்லண்ட் கூறினார்: உடன்படிக்கைப் பாதை, ஆலய தரிப்பித்தல் போன்ற ஆலயத்தின் நியமங்களுக்கு வழிவகுக்கிறது. தரிப்பித்தல் என்பது நம்மை அவருடன் முழுமையாக இணைக்கும் பரிசுத்த உடன்படிக்கைகளின் தேவ வரம்.”3

2. நீங்கள் உடன்படிக்கையின் பாதையில் இருக்கிறீர்களா?

சில சமயங்களில் நாம் உடன்படிக்கைகளைச் செய்யும்போது, ​​​​அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறுகிறோம். இது நிகழும்போது, ​​நீங்கள் எப்படி உடன்படிக்கை பாதைக்கு திரும்பலாம்? உடன்படிக்கை பாதைக்குத் திரும்புவதற்கான சில உதாரணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு மாதத்திற்கு முன்பு, எங்களுடன் சேவை செய்த, திரும்பி வந்த ஊழியக்காரர் ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. அவர் சொன்னார், “கடைசி சில காலம் கடினமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் கவலை மற்றும் மனச்சோர்வை எதிர்த்துப் போராடுவது என்னை பலவீனப்படுத்துகிறது, மற்றும் கடினமாய் இருக்கிறது. நான் தனியாகவும் துயரமாகவும் உணர்கிறேன். சமாதானம் மற்றும் தேறுதலுடன் துயரத்தை எதிர்த்துப் போராட, நான் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலுக்காக நமது பரலோக பிதாவிடம் ஜெபித்து வருகிறேன். … நான் ஜெபித்து, வழிகாட்டுதலைத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​என்னுடைய தசமபாகத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும் என்று பரிசுத்த ஆவியின் தூண்டுதல் என்னிடம் கூறுவதை உணர்ந்தேன். … நான் பரிசுத்த ஆவியை மிகவும் வலுவாக உணர்ந்தேன், அதை துரிதமாக செய்வதற்கான தூண்டுதலை உணர்ந்தேன். அதைச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தபோது, ‘தசமபாகம் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என்ற தூண்டுதலை உணர்ந்தேன் நான் இன்னும் சமாதானத்தைப் பெற போராடிக் கொண்டிருக்கிறேன், ஆனால் நமது இரட்சகரைக் குறித்த ஒரு சாட்சி எனக்கு இருக்கிறது, அது என்னவென்றால் என் கீழ்ப்படிதலின் மூலம் நான் என் இருதயத்திலும் மனதிலும் நான் தேடும் சமாதானத்தை உணரவும் பெறவும் முடியும். நான் சிறிது காலத்திற்கு முன்பு மீண்டும் சபைக்கு வரவும், நான் செய்யும் எல்லாவற்றிலும் பரிசுத்த ஆவியியை அறிந்துகொள்ளவும் முடிவு செய்துள்ளேன்.”

இப்போது அவர் நன்றாக இருக்கிறார். நீங்கள் பரலோக பிதாவிடம் சமாதானத்தைக் கேட்கலாம், ஆனால் பதில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேறு விதமாக இருக்கலாம். நீங்கள் இரட்சகரைப் பற்றி அறிந்துகொண்டு பரலோக பிதாவிடம் ஜெபிக்கும் காலம் வரை, அவர் உங்களுக்காக வழக்கமான பதிலைத் தருவார்.

தலைவர் தாமஸ் எஸ். மான்சன் போதித்தார்:

“உலக வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய மிகப்பெரிய பாடம் என்னவென்றால், கர்த்தர் பேசும்போது, ​​நாம் கீழ்ப்படிந்தால், நாம் எப்போதும் சரியாக இருப்போம்.”4

“நாம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, ​​நம் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும், குறைவான குழப்பத்துடன் இருக்கும். நம்முடைய சவால்கள் மற்றும் பிரச்சனைகளை சமாளிப்பது எளிதாக இருக்கும், மேலும் [கர்த்தரின்] வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.”5

என் வாழ்வின் மிகவும் கடினமான காலகட்டத்தில் நான் ஆயராக அழைக்கப்பட்டேன். நான் ஒரு இளம் தந்தையாக எனது 30களின் ஆரம்பத்தில் இருந்தேன், குடும்பச் சவால்கள் காரணமாக நான் பொருளாதார சிக்கலில் இருந்தேன். என்னால் எந்த தீர்வையும் காண முடியவில்லை, சவால்கள் ஒருபோதும் முடிவுக்கு வராது என்று நினைத்தேன். நான் பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்தேன். என்னுடைய ஆவிக்குரிய பலத்தையும் சந்தேகிக்க ஆரம்பித்தேன். அந்தக் கடினமான நேரத்தில்தான் எனது பிணையத் தலைவர் எனக்கு அழைப்பு விடுத்தார். அது கடினமாக இருந்தாலும், அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

என் மனைவியும் பிணையத் தலைவருடன் ஒரு நேர்காணலுக்குச் சென்றாள், ஆனால் அவளால் ஆம், என்று சொல்ல முடியவில்லை, அவளும் இல்லை என்று சொல்லாமல் கண்ணீர் வடித்தாள். “ஏன் இப்போது?” என்றும் “உங்களுக்கு உண்மையில் ஒவ்வொரு நபரையும் தெரியுமா?” என்று அவள் வாரம் முழுவதும் அழுதாள் பரலோக பிதாவிடம் ஜெபித்தாள். அவளுக்கு பதில் கிடைக்கவில்லை, ஆனால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் ஆயராக ஆதரிக்கப்பட்டேன். அவள் பரலோக பிதாவிடம் அந்தக் கேள்விகளை மறுபடியும் கேட்கவில்லை, மாறாக ஆறு வருடங்களாக என் அழைப்பில் எனக்கு ஆதரவளித்தாள்.

நான் விடுவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை, என் மனைவி திருவிருந்து பெறும்போது ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் அவளிடம் கிசுகிசுத்தது, “உனக்கு நடப்பதற்கு மிகவும் கடினமாக இருந்ததால், உன்னைப் பிடித்து உனக்காக நடப்பதற்காக நான் அவரை ஆயராக அழைத்தேன் என்று.” கடந்த ஆறு வருடங்களை திரும்பிப் பார்க்கையில், முடிவில்லாததாகத் தோன்றிய பல சவால்கள் அனைத்தும் இப்போது காலப்போக்கில் தீர்க்கப்பட்டுவிட்டன என்பதை அவள் உணர்ந்தாள்.

அழைப்பைப் பெறுவதற்கு இது நல்ல நேரம் அல்ல என்று நாங்கள் நினைக்கும் போது, ​​​​அந்த அழைப்பு நமக்கு மிகவும் தேவைப்படும் நேரமாக இருக்கலாம் என்பதை நாங்கள் அறிந்தோம். இலகுவான அழைப்பாக இருந்தாலும் சரி, கனமான அழைப்பாக இருந்தாலும் சரி, எந்த அழைப்பிலும் சேவை செய்யும்படி கர்த்தர் நம்மை அழைக்கும் போதெல்லாம், நம் தேவைகளை பார்க்கிறார். அவர் நமக்குத் தேவையான பலத்தை அளிக்கிறார், நாம் உண்மையுடன் சேவை செய்யும்போது நம்மீது ஆசீர்வாதங்களை பொழிவதற்காக அவர் தயாராக வைத்திருக்கிறார்.

உடன்படிக்கையின் பாதையில் நிலைத்திருப்பதில் பல காரியங்கள் நம்மை திசை திருப்புகின்றன. அது என்னவாக இருந்தாலும், உதவிக்காக நம் இருதயங்களை பரலோக பிதாவிடம் திருப்புவது ஒருபோதும் காலம் கடந்ததல்ல. மூப்பர் பால் வி. ஜான்சன் நமக்குக் கற்பித்தார்: “நாம் சாத்தானைப் பின்தொடரும் போது, நாம் அவனுக்கு வல்லமை கொடுக்கிறோம். நாம் தேவனைப் பின்பற்றும்போது, அவர் நமக்கு வல்லமை தருகிறார்.”6

பென்யமீன் இராஜா மார்மன் புஸ்தகத்தில் சொன்னான், “ தன் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்பவர்களின் ஆசீர்வாதமானதும், மகிழ்ச்சியானதுமான நிலையை நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டுமென நான் விரும்புகிறேன். ஏனெனில், இதோ ஆவிக்குரியதும் லெளகீகமானதுமான சகல காரியங்களில் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் இறுதிபரியந்தமும் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பார்களெனில் முடிவற்ற மகிழ்ச்சி உள்ள நிலையிலே தேவனோடு வாசம்செய்யும்படி பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.“7

3. தேவனுடனான உங்கள் உடன்படிக்கைகளைக் கடைபிடிப்பது உங்களை எவ்வாறு மகிழ்ச்சியாக மாற்றும்?

எங்கள் திருமணம் எங்களை இணைக்கிறது என்றும், அதன் காரணமாக அவளால் முன்பு செய்ய முடியாத விஷயங்களைச் செய்ய முடியும் என்றும் என் மனைவி கூறுகிறார். உதாரணமாக, சிறு வயதிலிருந்தே, இருட்டில் வெளியே செல்வது அவளுக்கு கடினமாக இருந்தது, ஆனால் தற்போது கடினமாக இல்லை, ஏனென்றால் நான் அவளுடன் செல்கிறேன். அவள் குட்டையானவள், ஒரு நாற்காலி அல்லது ஏணியைப் பயன்படுத்தாவிட்டால் உயரமான அலமாரிகளை அடைய முடியாது, ஆனால் நான் அவளை விட உயரமானவன் என்பதால் அவளுக்காக உயர்ந்த அலமாரிகளில் இருந்து பொருட்களை எடுக்க முடியும். நம்முடைய இரட்சகரின் நுகத்தை நம்மீது எடுத்துக்கொள்வது அப்படித்தான். நாம் அவருடன் நம்மை இணைத்துக் கொள்ளும்போது, ​​நம்மால் செய்ய முடியாத காரியங்களை செய்ய முடியும், ஏனென்றால் நம்மால் செய்ய முடியாத காரியங்களை அவரால் செய்ய முடியும்.

மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் கூறினார்: “பரிசுத்த உடன்படிக்கைகளை செய்வதும் கைக்கொள்ளுவதும் இயேசு கிறிஸ்துவுடன், நம்மை இணைக்கிறது. சாராம்சமாக, இரட்சகர் அவரைச் சார்ந்திருக்கவும், அவருடன் சேர்ந்து இழுக்கவும் அழைக்கிறார், நம்முடைய சிறந்த முயற்சிகள் சமமாக இல்லாமலும் மற்றும், அவருடன் ஒப்பிட முடியாதது என்றாலும். உலகப் பயணத்தின் போது நாம் அவரை நம்பி, நம் சுமையை அவரோடு இணைந்து இழுக்கும்போது, ​​உண்மையிலேயே அவருடைய நுகம் எளிதானது, அவருடைய சுமை இலகுவானது8

தலைவர் நெல்சன் போதித்தார்:

அவர் கூறினார், “இரட்சகருடன் உங்களை இணைத்துக் கொள்வது என்பது அவருடைய பலத்தையும் மீட்டுக்கொள்ளும் வல்லமையையும் நீங்கள் பெறுவதைக் குறிக்கிறது.”9

தேவனுடன் செய்த உடன்படிக்கைகளைக் கடைபிடிப்பதற்கான வெகுமதி பரலோக வல்லமையாகும், நமது துன்பங்கள், சோதனைகள் மற்றும் மனவேதனைகளை சிறப்பாகச் சமாளிக்க நம்மைப் பலப்படுத்தும் வல்லமை. இந்த வல்லமை நம் வழியை எளிதாக்குகிறது. இயேசு கிறிஸ்துவின் உயர் பிரமாணங்களில் வாழ்பவர்கள் அவருடைய உயர் வல்லமையை அணுகலாம்.10

உடன்படிக்கைகளைக் கடைப்பிடிப்பது உண்மையில் வாழ்க்கையை எளிதாக்குகிறது! ஞானஸ்நான தொட்டிகளிலும், ஆலயங்களிலும் உடன்படிக்கைகளைச் செய்து, அவற்றைக் கடைபிடிக்கும் ஒவ்வொரு நபரிடம் இயேசு கிறிஸ்துவின் வல்லமைக்கான அதிகரித்த நெருக்கமிருக்கிறது.11

என் அன்பு சகோதர சகோதரிகளே, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? உடன்படிக்கையின் பாதையில் இருங்கள். உங்கள் வாழ்க்கை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும், ஆனந்தத்தால் நிறைந்தும்இருக்கும். நம் இரட்சகர் நம்மை அழைக்கிறார், “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”12 இயேசுவே ஜீவிக்கும் கிறிஸ்து. அவர் நம் சுமைகளைச் சுமந்து, நம் வாழ்க்கையை எளிதாக்குகிறார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.