பொது மாநாடு
உடன்படிக்கை ஜனங்களின் குரலை வளரும் தலைமுறையில் பாதுகாத்தல்
அக்டோபர் 2023 பொது மாநாடு


உடன்படிக்கை ஜனங்களின் குரலை வளரும் தலைமுறையில் பாதுகாத்தல்

நம்முடைய மிகவும் பரிசுத்த பொறுப்புகளில் ஒன்று, இயேசுவே கிறிஸ்து என்பதை நம் பிள்ளைகள் ஆழமாகவும் குறிப்பாகவும் அறிந்துகொள்ள உதவுவது.

மார்மன் புஸ்தகத்தில் உள்ள மிகவும் நெருடலான தருணங்களில் ஒன்று, உதாரத்துவஸ்தல தேசத்தில் உள்ள ஆலயத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்ட இரட்சகரின் வருகை. ஒரு நாள் முழுவதுமான போதனை, குணப்படுத்துதல் மற்றும் விசுவாசத்தை பலப்படுத்தலுக்கு பிறகு, வளர்ந்து வரும் தலைமுறைக்கு இயேசு ஜனங்களின் கவனத்தைத் திருப்பினார்: “அவர்களுடைய சிறுபிள்ளைகளைக் கூட்டிவரும்படிக்கு அவர் கட்டளையிட்டார்.”1 அவர்களுக்காக ஜெபித்து; ஒவ்வொருவராக ஆசீர்வதித்தார். இரட்சகரே பலமுறை அழுகின்ற அளவில் அந்த அனுபவம் நிறைவாக இருந்தது.

அவர் திரளானோருடன் பேசி, அவர்களை நோக்கி இயேசு சொன்னார்:

“உங்கள் சிறுபிள்ளைகளைப் பாருங்கள்.

“அவர்கள் பார்க்க … வானம் திறக்கிறதைக் கண்டார்கள், தூதர்கள் வானத்திலிருந்து கீழே வந்து,” சிறுபிள்ளைகளுக்கு பணிவிடை செய்தார்கள்.2

இந்த அனுபவத்தை நான் அடிக்கடி சிந்தித்திருக்கிறேன். அது ஒவ்வொருவரின் இதயத்தையும் உருக்கியிருக்கும்! அவர்கள் இரட்சகரைக் கண்டார்கள். அவர்கள் அவரை உணர்ந்தார்கள். அவர்கள் அவரை அறிந்திருந்தனர். அவர்களுக்கு அவர் கற்பித்தார். அவர்களை அவர் ஆசீர்வதித்தார். மேலும் அவர் அவர்களை நேசித்தார். இந்த பரிசுத்த நிகழ்வுக்குப் பிறகு, இந்த பிள்ளைகள் வளர்ந்து சமாதானம், செழிப்பு மற்றும் தலைமுறைக்கும் கிறிஸ்துவைப் போன்ற அன்பின் சமுதாயத்தை நிறுவ உதவுவார்கள் என்று வியக்க வேண்டியதில்லை.3

நம் பிள்ளைகளுக்கு இயேசு கிறிஸ்துவுடன் அத்தகைய அனுபவங்கள் கிடைத்தால் அது அற்புதமாக இருக்கும் அல்லவா—அவர்களது இருதயங்களை அவருடன் பிணைக்கும் ஒன்று! மார்மன் புஸ்தகத்தில் அந்த பெற்றோரை அழைத்தது போல், நம்முடைய பிள்ளைகளை தன்னிடம் கொண்டு வரும்படி அவர் நம்மை அழைக்கிறார். இந்த குழந்தைகள் செய்ததைப் போல தங்களின் இரட்சகரையும் மீட்பரையும் அறிந்துகொள்ள அவர்களுக்கு உதவலாம். வேதங்களில் இரட்சகரை எவ்வாறு கண்டு பிடிப்பது மேலும் அவர் மீது அவர்களின் அஸ்திபாரத்தை கட்டுவது என்பதை நாம் அவர்களுக்குக் காண்பிக்கலாம். 4

சமீபத்தில், ஒரு இனிய நண்பர் ஒரு கன்மலையின் மீது தனது வீட்டைக் கட்டிய ஞானவானின் உவமையைப் பற்றி நான் இதுவரை கவனிக்காத ஒன்றைக் கற்றுக் கொடுத்தார். லூக்காவின் பதிவின்படி, ஞானவான் தன் வீட்டிற்கு அஸ்திவாரம் போட்டபோது, ​​அவன் “ஆழமாய்த் தோண்டினான்.”5 இது ஒரு சாதாரண அல்லது எளிய முயற்சி அல்ல—அதில் பிரயத்தனம் இருந்தது.

நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்து கன்மலையின் மேல் நம் வாழ்க்கையை கட்டியெழுப்ப, நாம் ஆழமாக தோண்ட வேண்டும். நம் வாழ்வில் மணல் அல்லது மிதமிஞ்சிய எதையும் அகற்றுவோம். அவரைக் கண்டுபிடிக்கும் வரை நாம் தோண்டிக்கொண்டே இருப்போம். மேலும், நமது பிள்ளைகளுக்குப் பரிசுத்த கட்டளைகள் மற்றும் உடன்படிக்கைகள் மூலம் அவருடன் பிணைத்துக் கொள்ளக் கற்றுக்கொடுக்கிறோம், அதனால் சூறாவளிகள் மற்றும் வெள்ளங்கள் கண்டிப்பாக எதிராக வரும்போது, ​​“கன்மலையின் மேல் [அவர்கள்] அஸ்திபாரத்தைக் கட்டியிருப்பதால்” நிச்சயமாக அவர்கள் மீது ஒரு சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும்.6

இந்த மாதிரியான பலம் வெறுமனே கிடைக்கப்பெறாது. இது ஆவிக்குரிய சுதந்தரத்தை போல அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை. ஒவ்வொரு நபரும் கன்மலையைக் கண்டுபிடிக்க ஆழமாக தோண்ட வேண்டும்.

மார்மன் புத்தகத்தில் உள்ள மற்றொரு அத்தியாயத்திலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். பென்யமீன் ராஜா தனது இறுதி உரையை ஜனங்களுக்கு வழங்கியபோது, ​​அவனுடைய வார்த்தைகளைக் கேட்க அவர்கள் குடும்பங்களாகக் கூடினர்.7 பென்யமீன் ராஜா இயேசு கிறிஸ்துவைப் பற்றி வல்லமையான சாட்சியமளித்தான், அவனுடைய சாட்சியத்தால் ஜனங்களின் இருதயம் மிகவும் மிருதுவாகியது. அவர்கள் அறிவித்தார்கள்:

“ஆவியானவரினிமித்தம்… எங்கள் இருதயங்களிலேயும், எங்களுக்குள்ளேயும், பலத்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. …

“மேலும்,எங்களுடைய மீதி நாட்கள் யாவிலும் அவருடைய சித்தத்திற்கேற்ப நடக்கவும், அவரோடு ஒரு உடன்படிக்கையினுள் பிரவேசிக்க மனமுள்ளவர்களாயிருக்கிறோம்” 8

இத்தகைய ஆழ்ந்த மனமாற்றம் பெற்ற பெற்றோரைக் கொண்ட சிறு பிள்ளைகள் இறுதியில் மனமாற்றம் அடைந்து அவர்களே உடன்படிக்கை செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இன்னும், பதிவில் குறிப்பிடப்படாத சில காரணங்களால், பெற்றோர் செய்த உடன்படிக்கை அவர்களின் சில குழந்தைகளுடன் இசைவு பெறவில்லை. “பென்யமீன் ராஜா தன் ஜனங்களிடம் பேசிய காலத்தில் சிறு குழந்தைகளாக, ​​அவன் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியாத வளர்ந்து வரும் தலைமுறையினர் பலர் இருந்தனர்; பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தங்கள் பிதாக்களின் பாரம்பரியத்தை விசுவாசிக்கவில்லை.

மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து சொல்லப்பட்டிருந்தவைகளையும் அவர்கள் விசுவாசிக்கவில்லை, கிறிஸ்துவினுடைய வருகையைக்குறித்தும் அவர்கள் விசுவாசிக்கவில்லை. …

“ஞானஸ்நானம் பெறவோ, சபையிலே சேர்ந்துகொள்ளவோ அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் தங்கள் விசுவாசத்தின்படியே தனிப்பட்ட ஜனமாயிருந்தார்கள்.” 9

என்ன ஒரு கசப்பான உண்மை! வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு, இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம் “தங்கள் பிதாக்களின் பாரம்பரியமாக” இருப்பது போதாது. அவர்கள் தாங்களாகவே கிறிஸ்துவின் மீது தனிப்பட்ட விசுவாசம் வைத்திருக்க வேண்டும். கர்த்தரின் உடன்படிக்கை ஜனங்களாக, அவருடன் உடன்படிக்கைகளை செய்துகொள்வதற்கான விருப்பத்தை நம் பிள்ளைகளின் இருதயங்களுக்குள் எவ்வாறு விதைக்க முடியும்?

நேபியின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் தொடங்கலாம்: “எங்கள் பிள்ளைகள் தங்களுடைய பாவங்களின் மன்னிப்புக்காக, எதனைக் கண்நோக்கவேண்டுமென்று அறியும்பொருட்டாக, நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம். கிறிஸ்துவில் களிகூருகிறோம், கிறிஸ்துவைப்பற்றிப் பிரசங்கிக்கிறோம், கிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசனமுரைக்கிறோம். எங்கள் தீர்க்கதரிசனங்களின்படியே நாங்கள் எழுதுகிறோம்.10 நேபியின் வார்த்தைகள் கிறிஸ்துவைப் பற்றி நம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க ஒரு நிலையான, தொடர்ச்சியான முயற்சியைக் குறிக்கிறது. உடன்படிக்கை மக்களின் குரல் வளரும் தலைமுறையினரின் காதுகளில் ஓசையற்று இல்லை என்பதையும், இயேசு ஒரு ஞாயிற்றுக்கிழமை தலைப்பு மட்டுமே அல்ல என்பதையும் உறுதிப்படுத்த முடியும்.11

உடன்படிக்கையின் மக்களின் குரல் நம்முடைய சொந்த சாட்சிய வார்த்தைகளில் காணப்படுகிறது. தற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தையில் காணப்படுகிறது. மேலும் இது வேதங்களில் வல்லமையுடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. அங்கேதான் நம் பிள்ளைகள் இயேசுவை அறிந்துகொள்வார்கள், அவர்களுடைய கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிப்பார்கள். அங்கே அவர்கள் கிறிஸ்துவின் கோட்பாட்டைக் கற்றுக்கொள்வார்கள். அங்கே அவர்கள் நம்பிக்கை அடைவார்கள். இது வாழ்நாள் முழுவதும் சத்தியத்தைத் தேடுவதற்கும் உடன்படிக்கையின் பாதையில் வாழ்வதற்கும் அவர்களைத் தயார்படுத்தும்.

தலைவர் ரசல் எம். நெல்சனின் இந்த ஆலோசனையை நான் விரும்புகிறேன்:

“அவர் சொல்வதைக் கேட்க நாம் எங்கு செல்லமுடியும் ?

“நாம் வேதங்களிடத்தில் செல்லமுடியும். இயேசு கிறிஸ்து மற்றும் அவரது சுவிசேஷம், அவரது பாவநிவர்த்தியின் ஆற்றல், நமது பிதாவின் மகிழ்ச்சி மற்றும் மீட்பின் மாபெரும் திட்டத்தைப்பற்றி அவை நமக்கு போதிக்கின்றன. விசேஷமாக அதிகரிக்கும் குழப்பங்களின் இந்த நாட்களில் ஆவிக்குரிய பிழைத்திருத்தலில் தேவனின் வார்த்தையில் தினமும் மூழ்குதல் முக்கியமாகும். நாம் தினமும் கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசிக்கும்போது, நாம் எதிர்கொள்வோம் என ஒருபோதும் நாம் நினைக்காத கஷ்டங்களுக்கு எப்படி பதிலளிப்பது என கிறிஸ்துவின் வார்த்தைகள் பதிலளிக்கும்.”12

அப்படியானால் கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்து அவருக்குச் செவிகொடுப்பது எவ்வாறு இருக்கும்? எது உங்களுக்குச் சிறப்பாகச் செயல்படும் என்று தெரிகிறது! என்னைப் பின்பற்றி வாருங்கள் என்பதைப் பயன்படுத்தி உங்கள் வேதப் படிப்பில் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குப் போதித்த விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு உங்கள் குடும்பத்தினருடன் கூடலாம். ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வேதங்களிலிருந்து சில வசனங்களைப் படிக்கலாம், பின்னர் நீங்கள் ஒன்றாக நேரத்தை செலவிடும்போது நீங்கள் கற்றுக்கொண்டவற்றைக் கலந்தாலோசிக்க வாய்ப்புகளைத் தேடலாம். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எதை செயல்படுத்தமுடியும் என்பதைக் கண்டறிந்து, ஒவ்வொரு நாளும் கொஞ்சம் சிறப்பாகச் செய்ய முயற்சிக்கவும்.

இரட்சகரின் வழியில் போதித்தலில் இருந்து இந்த கருத்தை கவனியுங்கள்: தனித்தனியாக எடுத்துக் கொண்டால், ஒரு வீட்டு மாலை, வேதப் படிப்பு அமர்வு அல்லது சுவிசேஷ உரையாடல் அதிக அளவில் சாதிப்பதாகத் தெரியவில்லை. ஆனால், சிறிய, எளிய முயற்சிகளின் தொகுப்பு, காலப்போக்கில் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும், எப்போதாவது நினைவுகூரக்கூடிய தருணம் அல்லது சிறந்த பாடத்தை விட மிகவும் வல்லமை வாய்ந்ததாகவும் வலுவூட்டுவதாகவும் இருக்கும். எனவே விட்டுவிடாதீர்கள், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பெரிய சாதனையை நிறைவேற்றுவதைப்பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் முயற்சிகளில் நிலைத்திருங்கள்.”13

நம்முடைய மிகவும் பரிசுத்தமான பொறுப்புகளில் ஒன்று, இயேசு கிறிஸ்துவே, ஜீவனுள்ள தேவ குமாரன், அவர்களின் தனிப்பட்ட இரட்சகர் மற்றும் மீட்பர், அவருடைய சபையின் தலைவராக நிற்கிறார் என்பதை ஆழமாகவும் தனிப்பட்ட விதமாகவும் நம் பிள்ளைகள் அறிந்துகொள்ள உதவுவது! நமது உடன்படிக்கையின் குரல் அவரைப்பற்றியதாயிருக்கும்போது அதை முடக்கவோ அல்லது அமைதியாக்கவோ முடியாது.

இந்த பணியில் நீங்கள் கொஞ்சம் குறைவுள்ளவர்களாக உணரலாம், ஆனால் நீங்கள் தனியாக இல்லை என்பதை உணருங்கள். உதாரணமாக, தொகுதி ஆலோசனைக் குழுக்கள் பெற்றோருக்கு ஆசிரியர் ஆலோசனை கூட்டங்களை ஏற்பாடு செய்ய அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. இந்த காலாண்டு கூட்டங்களில், பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளவும், தங்கள் குடும்பங்களை எவ்வாறு பலப்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி விவாதிக்கவும், கிறிஸ்துவைப் போன்ற போதனையின் முக்கிய கொள்கைகளைக் கற்றுக்கொள்ளவும் கூடலாம். சபையின் இரண்டாவது மணி நேரத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.14 இது ஆயரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி உறுப்பினரால் வழிநடத்தப்படுகிறது மற்றும் இரட்சகரின் வழியில் போதித்தலை முதன்மை ஆதாரமாகப் பயன்படுத்தி, வழக்கமான ஆசிரியர் ஆலோசனைக் கூட்டங்களின் வடிவமைப்பைப் பின்பற்றுகிறது.15 ஆயர்களே, உங்கள் தொகுதி தற்போது பெற்றோர்களுக்கான ஆசிரியர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தவில்லை என்றால், இதை ஒழுங்குபடுத்த உங்கள் ஞாயிறு பள்ளித் தலைவர் மற்றும் தொகுதி ஆலோசனைக் குழுவுடன் இணைந்து பணியாற்றுங்கள்.16

கிறிஸ்துவுக்குள் என் அன்பான நண்பர்களே, நீங்கள் நினைப்பதை விட சிறப்பாக செயல்படுத்துகிறீர்கள். அதில் தொடர்ந்து பணியாற்றுங்கள். உங்கள் பிள்ளைகள் பார்த்து, கேட்டு, கற்கிறார்கள். நீங்கள் அவர்களுக்குப் போதிக்கும்போது தேவனின் குமாரர்களும், குமாரத்திகளுமான அவர்களின் உண்மையான தன்மையை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அவர்கள் இரட்சகரை ஒரு பருவத்திற்கு மறந்துவிடலாம், ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், அவர் அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டார்! பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம் பேசும் அந்த தருணங்கள் அவர்களின் இதயங்களிலும் மனதிலும் நிலைத்திருக்கும். ஒரு நாள் உங்கள் பிள்ளைகள் ஏனோஸின் சாட்சியத்தை எதிரொலிப்பார்கள்: “இதோ ஆனபடியால், என் பெற்றோர்கள் நியாயவான்கள் என்று நான் அறிவேன். ஏனெனில் கர்த்தருடைய போஷிப்பிலே எனக்கு போதித்து என்னை எச்சரித்தார்கள். அதனிமித்தம் என் தேவனின் நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.17

இரட்சகரின் அழைப்பை ஏற்று, நம் பிள்ளைகளை அவரிடம் கொண்டு வருவோம். நாம் அவ்வாறு செய்யும்போது, ​​அவர்கள் அவரைப் பார்ப்பார்கள். அவர்கள் அவரை உணர்வார்கள். அவர்கள் அவரை அறிவார்கள். அவர்களுக்கு அவர் போதிப்பார். அவர் அவர்களை ஆசீர்வதிப்பார். மேலும் அவர் அவர்களை எவ்வளவாய் நேசிப்பார். நான் அவரை அதிகம் நேசிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.

குறிப்புகள்

  1. 3 நேபி 17:11

  2. 3 நேபி 17:23–24; 3 Nephi 17:11–22ஐயும் பார்க்கவும்.

  3. 4 நேபி 1:1–22 பார்க்கவும்.

  4. லூக்கா 6:47–49; ஏலமன் 5:12 பார்க்கவும்.

  5. லூக்கா 6:48.

  6. ஏலமன் 5:12.

  7. மோசியா 2:5 பார்க்கவும்.

  8. மோசியா 5:2, 5. அந்தப்படியே, சிறு பிள்ளைகளைத் தவிர அங்கிருந்த ஒரு ஆத்துமாவும் உடன்படிக்கையினுள் பிரவேசித்து கிறிஸ்துவினுடைய நாமத்தை தங்கள் மீது தரித்துக்கொள்ளாமலிருக்கவில்லை. (மோசியா 6:2).

  9. மோசியா 26:1–2, 4

  10. 2 நேபி 25:26.

  11. இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தில் கற்பிக்க பல காரியங்கள் உள்ளன—கொள்கைகள், கட்டளைகள், தீர்க்கதரிசனங்கள் மற்றும் வேதக் கதைகள். ஆனால் இவை அனைத்தும் ஒரே மரத்தின் கிளைகள், ஏனென்றால் அவை அனைத்தும் ஒரே நோக்கம் கொண்டவை: எல்லா ஜனங்களும் கிறிஸ்துவண்டை வந்து அவரில் பரிபூரணமாக இருக்க உதவ. (யாரோம் 1:11; மரோனி 10:32 பார்க்கவும்). ஆகவே, நீங்கள் எதைக் கற்பித்தாலும் அதைப் பொருட்படுத்தாது, உண்மையில் நீங்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் எவ்வாறு அவரைப் போலாகுவது என்பதைப்பற்றியும் கற்பிக்கிறீர்கள் என நினைவுகூருங்கள்.(Teaching in the Savior’s Way: For All Who Teach in the Home and in the Church [2022], 6).

  12. Russell M. Nelson, “Hear Him,” Liahona, May 2020, 89.

  13. (இரட்சகரின் வழியில் போதித்தல்31 பார்க்கவும்.)

  14. ஆரம்ப வகுப்பில் கற்பிக்கும் பெற்றோருக்கு 20 நிமிட ஆரம்ப வகுப்பு பாடலின் போது சந்திப்பது அல்லது வேறொரு நேரத்தில் தனிக் கூட்டத்தை நடத்துவது போன்ற சிறப்பு வசதிகள் செய்யப்படலாம். (see General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 17.4, Gospel Library).

  15. உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் விநியோக சேவைகள் மூலம் இரட்சகரின் வழியில் கற்பித்தலை ஆர்டர் செய்யலாம். இது சுவிசேஷ நூலகத்திலும் டிஜிட்டல் முறையில் கிடைக்கிறது.

  16. General Handbook, 13.5. பார்க்கவும்.

  17. ஏனோஸ் 1:1 மார்மன் புஸ்தகத்தில் நம்பிக்கையற்றவர்களின் வளரும் தலைமுறையில் இளைய ஆல்மா மற்றும் மோசியாவின் மகன்கள் இருந்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இளைய ஆல்மா தனது வாழ்க்கையை மாற்ற வேண்டியதன் அவசியத்தை இறுதியாக உணர்ந்தபோது, ​​இயேசு கிறிஸ்துவைப் பற்றி தனது தந்தை கற்பித்ததை அவர் நினைவு கூர்ந்தார்—ஆல்மா கடந்த காலத்தில் வெளிப்படையாகப் புறக்கணித்த போதனைகள். ஆனால் அதன் நினைவு அப்படியே இருந்தது, மேலும் அந்த நினைவு ஆல்மாவை ஆவிக்குரிய விதமாக காப்பாற்றியது. (ஆல்மா 36:17–20 பார்க்கவும்)