பொது மாநாடு
இயேசு கிறிஸ்துவின் மீதான சாட்சியத்தை வார்த்தையிலும் செயல்களிலும் கூறுதல்
அக்டோபர் 2023 பொது மாநாடு


இயேசு கிறிஸ்துவின் மீதான சாட்சியத்தை வார்த்தையிலும் செயல்களிலும் கூறுதல்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு இசைவாக நம் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யும்போது, ​​நமது நடத்தை, நம் மீட்பர் மற்றும் அவருடைய நாமத்திற்கு வாழும் சாட்சியாக இருக்கும்.

ஞானஸ்நானத்தின் போது நாம் செய்யும் வாக்குறுதிகளில் ஒன்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொள்ள சித்தமாக இருக்கிறோம் என்பதாகும். வார்த்தையிலும் செயலிலும் சாட்சி கூறுவதன் மூலம் தேவ குமாரனின் நாமத்தை நம்மீது தரிப்பதை காட்ட முடியும் என்பதை நமக்கு நினைவூட்டுவதே எனது இன்றைய நோக்கம் ஆகும்.

தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அமெரிக்காவில் உள்ள மக்களுக்கு ஊழியம் செய்து போதித்தபோது, ​​இரட்சகர் அறிவித்தார்:

“என்னுடைய நாமமாகிய கிறிஸ்துவின் நாமத்தை உங்கள்மேல் தரித்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லுகிற வசனங்களை அவர்கள் வாசிக்கவில்லையா? ஏனெனில் கடைசி நாளின்போது இந்த நாமத்தின்படியே நீங்கள் அழைக்கப்படுவீர்கள்;

“என் நாமத்தை தன் மீது தரித்துக்கொண்டு, முடிவுபரியந்தம் நிலைநிற்கிறவன் எவனோ, அவனே கடைசிநாளின்போது இரட்சிக்கப்படுவான்.”1

“நம்மீது இரட்சகரின் நாமத்தை தரித்துக்கொள்வதென்பது, இயேசுவே கிறிஸ்து என்று நமது செயல்கள் மற்றும் நமது வார்த்தைகளின் மூலமாக மற்றவர்களுக்கு அறிவிப்பதும் சாடசியளிப்பதும் அதில் அடங்கியிருக்கிறது” என்று தலைவர் ரசல் எம். நெல்சன் நமக்கு போதித்துள்ளார்.2

பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களாக இருக்கும் நமக்கு, நாம் இருக்கும் எல்லா இடங்களிலும் கர்த்தருக்கும் அவருடைய நாமத்திற்கும் சாட்சிகளாக நிற்கும் ஆசீர்வாதமும் சிலாக்கியமும் உண்டு.3 இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு இசைவாக நம் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யும்போது, ​​நமது நடத்தை, நம் மீட்பர் மற்றும் அவருடைய நாமத்திற்கு வாழும் சாட்சியாக இருக்கும். மேலும், கிறிஸ்துவைப் பற்றி நாம் நம்புகிற, உணருகிற அல்லது அறிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் கிறிஸ்துவைப் பற்றி வார்த்தையில் சாட்சி கொடுக்கிறோம்.

நம்முடைய வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் கர்த்தரைப் பற்றிய சாட்சியை நாம் தாழ்மையுடன் பகிர்ந்து கொள்ளும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் 4 உண்மையான நோக்கம், திறந்த மனது மற்றும் விருப்பமுள்ள இருதயமுள்ளவர்களுக்கு இயேசு உண்மையில் கிறிஸ்து என்பதை உறுதிப்படுத்துகிறார்.5

சபைக் கூட்டங்களில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பேசுவதன் மூலமும் கர்த்தரைக் குறித்த பரிசுத்த சாட்சியை பகிர்ந்து கொள்வதின் மூலமும் உறுப்பினர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொள்கிறார்கள் என்பதை தேவனுக்கு காட்டும் உணர்த்துதலான இரண்டு சமீபத்திய உதாரணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதல் உதாரணம்: நானும் என் மனைவி எலைனும் 2022 இல் ஸ்பெயினுக்குச் சென்றபோது, ​​அங்குள்ள சிறிய சபையின் ஞாயிறு கூட்டங்களில் கலந்துகொண்டோம். நான் மேடையிலும் என் மனைவி கூட்டத்திலும் அமர்ந்திருந்தபோது, ​​அவள் ஒரு வயதான பெண்ணின் அருகில் அமர்ந்திருப்பதைக் கவனித்தேன். திருவிருந்து கூட்டம் முடிந்ததும், நான் எலைனை நோக்கி நடந்தேன், அவளுடைய புதிய தோழிக்கு என்னை அறிமுகப்படுத்தச் சொன்னேன். அவள் அதை செய்த பின்பு, சபையில் உறுப்பினராக இல்லாத இந்த பெண் சுமார் இரண்டு ஆண்டுகளாக சபைக்கு வருகை தருகிறார் என்று சுட்டிக்காட்டினார். நான் அதைக் கேட்டபோது, ​​தேவ பக்தியுள்ள இந்தப் பெண் இவ்வளவு நீண்டகாலம் மறுபடியுமாக நமது கூட்டங்களில் கலந்துகொள்ளச் செய்தது என்ன என்று கேட்டேன். அந்த பெண் அன்புடன் பதிலளித்தார், “நீங்கள் உங்கள் கூட்டங்களில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பேசுவதால் நான் இங்கு வர விரும்புகிறேன்.”

உறுதியாக, ஸ்பெயினில் உள்ள அந்த அங்கத்தில் உள்ள சபை உறுப்பினர்கள் தங்கள் கூட்டங்களில் கிறிஸ்துவைப் பற்றி பேசினார்கள், கற்பித்தார்கள் மற்றும் சாட்சியமளித்தனர்.

இரண்டாவது உதாரணம்: பிரேசில் பகுதியில் சேவை செய்த பிறகு, சபை தலைமையகத்தில் சேவை செய்ய ஒரு புதிய பணித்தல் வந்தது. இந்த ஆண்டு ஜூலை இறுதியில், நாங்கள் சால்ட் லேக் சிட்டிக்கு குடிபெயர்ந்தபோது, ​​ எங்கள் புதிய மற்றும் அற்புதமான தொகுதியில் ஞாயிறு கூட்டங்களில் கலந்துகொண்டோம். இந்தக் கூட்டங்களில் ஒன்று உபவாச மற்றும் சாட்சி கூட்டமாகும். பயபக்தியுடன் திருவிருந்தில் பங்கேற்ற பிறகு, உறுப்பினர்கள் எழுந்து நின்று இரட்சகரின் இதயப்பூர்வமான சாட்சியங்களை ஒருவர் பின் ஒருவராக பகிர்ந்தார்கள். கூட்டம் இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டது, மேலும் பரிசுத்த ஆவியை நாங்கள் தெளிவாக உணர முடிந்தது. நாங்கள் தெளிவுபடுத்தப்பட்டோம், எங்கள் விசுவாசம் பலப்படுத்தப்பட்டது. நேர்மையாக சத்தியத்தைத் தேடும் சபையின் நண்பர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்திருந்தால், இது இயேசு கிறிஸ்துவின் சபை என்பதை உணர்ந்திருப்பார்கள்.

கிறிஸ்துவைப் பற்றி சாட்சியமளிப்பதற்கும், அவருடைய குமாரனின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்வதிலும் மகிழ்ச்சியடைகிறோம் என்று கர்த்தருக்கு சமிக்ஞை கொடுப்பதற்கு நம்முடைய சபைக் கூட்டங்கள் நமக்கு தரப்பட்ட வாய்ப்புகள் என்பதை அறிவது என்ன ஒரு ஆசீர்வாதம்.

இப்போது, ​​இயேசு கிறிஸ்துவின் நாமத்தை செயல்கள் மூலம் சாட்சி கொடுப்பதற்கு ஒரு வல்லமை வாய்ந்த உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன்.

கடந்த ஆகஸ்டில், யூபா நகரில் உள்ள பெதர் ரிவர் கலிபோர்னியா ஆலய திறந்த வீட்டுக்கு மூப்பர் ஜோனாதன் ஷ்மிட்டுடன் சென்றேன். அங்கு, குழுக்களின் ஆலய சுற்றுலாவுக்கு வழிகாட்டும் ஆசீர்வாதத்தைப் பெற்றேன். இந்த குழுக்களில் ஒன்று சபையின் உறுப்பினரான விர்ஜில் அட்கின்சன் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த ஏழு நண்பர்களை உள்ளடக்கியது. சுற்றுலாவின் முடிவில், சகோதரர் அட்கின்சன் அன்று ஆலயத்திற்கு வந்திருந்த தனது நண்பர்களிடம் ஆலய முத்திரிப்பு அறையில், தனது அன்பை வெளிப்படுத்தியபோது உணர்ச்சிவசப்பட்டார். அவர் அதைச் செய்த உடனேயே, குழுவில் இருந்த ஒரு பெண் எழுந்து, “நாங்கள் அனைவரும் விர்ஜிலை நேசிக்கிறோம் என்றார். அவர் தனது விசுவாசத்தை எங்கள் மீது ஒருபோதும் திணித்ததில்லை. அதைக் கூறுவதற்கு கூச்சப்பட்டவராகவும் இல்லை. தான் நம்புவதின் படி அவர் வாழ்கிறார்.”

பல ஆண்டுகளாக, சகோதரர் அட்கின்சனின் கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கை, அவருடைய நண்பர்களுக்கு ஒரு வல்லமை வாய்ந்த சாட்சியாக இருந்தது. கிறிஸ்துவின் பெயரை அவர் தரித்துக்கொண்டார் என்பதற்கு அவருடைய உதாரணம் வலுவான சான்றாகும்.

முடிவாக, கிறிஸ்துவின் நாமத்தை எப்படி நம்மீது தரித்துக்கொள்வது மற்றும் சபையின் சரியான பெயரைப் பயன்படுத்தி அவரைப் பற்றி சாட்சியமளிப்பது பற்றி நான் கற்றுக்கொண்ட பாடத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

தலைவர் நெல்சன், கர்த்தருடைய ஜீவிக்கும் தீர்க்கதரிசி, 2018 பொது மாநாட்டு உரையில் “சபையின் சரியான பெயர்” என்ற தலைப்பில் பேசினார்: “இது ஒரு திருத்தம்.” இது கர்த்தருடைய கட்டளை ஆகும். அவர் மூலமாக மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபைக்கு ஜோசப் ஸ்மித் பெயர் சூட்டவில்லை, மார்மனும் செய்யவில்லை. இதை இரட்சகரே சொன்னார், “ஏனெனில் கடைசி நாட்களில் என்னுடைய சபை இப்படியாக, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என அழைக்கப்படும்.”(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 115:4)”.6

நாங்கள் அனைவரும் அன்றைய பொது மாநாட்டிற்கு பிறகு தீர்க்கதரிசியைப் பின்பற்றவும், அன்றிலிருந்து சபையின் வெளிப்படுத்தப்பட்ட பெயரைப் பயன்படுத்தவும் உறுதியளித்தோம். சபையின் சரியான பெயரை நான் பயன்படுத்துவதை உறுதிசெய்ய என்னை நானே கவனித்தேன். ஆரம்பத்தில் சில நேரங்களில் நான் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியிருந்தது, பழைய வழிகளுக்குச் செல்வதை தடுக்க வேண்டியிருந்தது. முதல் முயற்சிக்குப் பிறகு, சபையின் வெளிப்படுத்தப்பட்ட பெயரைப் பயன்படுத்துவதில் நான் மிகவும் எளிதாக உணர்ந்தேன். பல முறை, நான் சபையின் பெயரை சுருக்கி பேசுவேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். சபையின் முழுப் பெயரையும் ஜனங்கள் கவனிக்க மாட்டார்கள் என்றும், அது சற்று நீளமாக இருக்கிறது என அவர்கள் நினைக்கலாம் என்றும் நான் கவலைப்பட்டேன்.

இருப்பினும், சபையின் முழுப் பெயரையும் அந்நோக்கத்துடன் பேசுவது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தைப் பேசுவதற்கு மதிப்புமிக்க வாய்ப்புகளை எனக்குக் கொடுத்தது என்பதையும், உண்மையில் அவருடைய சபையின் பெயரில் அவருடைய நாமத்தை அறிவிப்பதன் மூலம் இரட்சகரின் சாட்சியாக இருப்பதையும் நான் பின்னர் உணர்ந்தேன். நான் மற்றவர்களிடம் சபையின் சரியான பெயரைப் பேசும்போது, ​​நான் அடிக்கடி இயேசு கிறிஸ்துவை நினைவு கூர்ந்ததையும், என் வாழ்க்கையில் அவருடைய செல்வாக்கை உணர்ந்ததையும் கவனித்தேன்.

தீர்க்கதரிசியைப் பின்பற்றுவதன் மூலமும், சபையின் சரியான பெயரைப் பயன்படுத்துவதன் மூலமும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அதிகம் சாட்சியமளிக்க நாம் அனைவரும் கற்றுக்கொள்ளலாம், இதனால் கர்த்தரின் நாமத்தை இன்னும் முழுமையாக நம்மேல் தரித்துக் கொள்ளலாம்.

இந்த ஓய்வுநாள் காலையில், தலைவர் நெல்சன் கர்த்தரின் ஜீவிக்கும் தீர்க்கதரிசி என்றும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை, கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை என்றும் நான் மகிழ்ச்சியுடன் சாட்சியமளிக்கிறேன். நான் தேவனுடைய குமாரன் மற்றும் அவருடைய தெய்வீகத்தன்மைக்கு தாழ்மையுடன் சாட்சி கொடுக்கிறேன். அவர் தேவனின் முதற்பேறான மற்றும் ஒரே பேறான குமாரன், நமது இரட்சகரும் மீட்பருமான இம்மானுவேல்.7 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.