பொது மாநாடு
ஏற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் தாழ்மையாயிருத்தல்
அக்டோபர் 2023 பொது மாநாடு


ஏற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் தாழ்மையாயிருத்தல்

தேவ பிரசன்னத்திற்கு திரும்ப நம்மை ஆயத்தப்படுத்த தாழ்மை ஒரு கட்டாயத் தேவை.

ஆல்மாவின் ஐந்தாவது அதிகாரத்தில் ஒரு சுயபரிசோதனை கேள்வி முன்வைக்கப்படுகிறது: “இச்சமயத்திலே நீங்கள் மரிக்க அழைப்பைப் பெற்றால், நீங்கள் போதுமான அளவுக்கு தாழ்மையாயிருந்தீர்களா?”1 தேவ பிரசன்னத்திற்கு திரும்ப நம்மை தயார் படுத்த மனத்தாழ்மை ஒரு கட்டாயத் தேவை என்பதை அந்தக் கேள்வி குறிக்கிறது.

நாம் அனைவரும் போதுமான தாழ்மையுடன் இருப்பதாக நினைக்கிறோம், ஆனால் வாழ்க்கையின் சில அனுபவங்கள் சுபாவ பெருமைமிக்க மனிதன் நமக்குள் உயிர்ப்புடன் இருப்பதை அடிக்கடி நமக்கு உணர்த்துகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் இரு மகள்களும் வீட்டில் இருந்த பொழுது, ​​நான் பணிபுரிந்த நிறுவனத்தில் என்னுடைய பொறுப்பில் இருந்த வணிகப் பிரிவை அவர்களுக்கும் என் மனைவிக்கும் காட்ட முடிவு செய்தேன்.

எங்கள் வீட்டைப் போலல்லாமல், அனைவரும் நான் கேட்பதை மறு கேள்வியின்றி நிறைவேற்றும் இடத்தை அவர்களுக்குக் காண்பிப்பதே எனது உண்மையான நோக்கம். நாங்கள் முன்பக்க வாயிலுக்கு வந்தபோது, ​​​​வழக்கமாக எனது கார் நெருங்கும்போது தானாகவே திறக்கும் வாயில், இந்த முறை திறக்காதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மாறாக, நான் இதுவரை பார்த்திராத ஒரு பாதுகாவலர் எனது கார் அருகில் வந்து எனது நிறுவன அடையாள அட்டையைக் கேட்டார்.

எனது காருடன் வளாகத்திற்கு உள்ளே செல்ல எனக்கு ஒருபோதும் அடையாள அட்டை தேவையில்லை என்று அவரிடம் கூறினேன், பின்னர் அவரிடம் முக்கிய பெருமையான கேள்வியைக் கேட்டேன்: “நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?”

அதற்கு அவர், “சரி, உங்களிடம் உங்கள் நிறுவன அடையாள அட்டை இல்லாததால், நீங்கள் யார் என்பதை என்னால் அறிய முடியவில்லை, நான் இந்த வாயிலில் இருக்கும்வரை சரியான அடையாள அட்டை இல்லாமல் நீங்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டீர்கள்” என்று பதிலளித்தார்.

அதற்கெல்லாம் என் மகள்களின் எதிர்வினையைச் சரிபார்க்க பின்புறக் கண்ணாடியைப் பார்ப்பது பற்றி நான் நினைத்தேன், ஆனால் அவர்கள் அந்த தருணத்தின் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்! என்னருகில் இருந்த என் மனைவி நான் பிறரை நடத்தும் முறையை ஏற்காமல் தலையை ஆட்டினார். காவலரிடம் மன்னிப்பு கேட்பது மற்றும் அவரை மிகவும் மோசமாக நடத்தியதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் என்று சொல்வதுதான் எனது கடைசி முயற்சி. அவர் சொன்னார், “நீங்கள் மன்னிக்கப்பட்டீர்கள், ஆனால் நிறுவன அடையாள அட்டை இல்லாமல் இன்று உள்ளே அனுமதிக்கப்படமாட்டீர்கள்!”

இந்த மதிப்புமிக்க பாடத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, எனது அடையாள அட்டையைப் பெறுவதற்காக நான் மிகவும் மெதுவாக வீட்டிற்குத் திரும்பினேன்: தாழ்மை வேண்டாம் என தேர்வுசெய்யும்போது, ​​​​நாம் தாழ்மைப்படுத்தப்படுகிறோம்.

நீதிமொழிகளில் நாம் காண்கிறோம், “மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.” 2 மனத்தாழ்மையை வளர்ப்பதற்கு, சுவிசேஷத்தின் சூழலில் அதன் உண்மையான பொருள் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிலர் தாழ்மையுடன் இருப்பதை ஏழையாக இருப்பது போன்ற மற்ற விஷயங்களுடன் குழப்புகிறார்கள். ஆனால் உண்மையில் பலர் ஏழைகளாகவும் பெருமையுடையவர்களாகவும் உள்ளனர், மேலும் பலர் பணக்காரர்களாகவும் தாழ்மையுடனும் உள்ளனர். மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் அல்லது குறைந்த தன்னம்பிக்கை உள்ளவர்கள் வெளித்தோற்றத்தில் மனத்தாழ்மையுடன் இருப்பார்கள், ஆனால் உள்ளத்தில் பெருமை நிரம்பியிருக்கும்.

ஆகவே தாழ்மை என்பது என்ன? எனது சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்படி இது “கர்த்தருடைய சித்தத்திற்கு இணங்க விருப்பம் என கூறுகிறது. … இது கற்பிக்கக்கூடியவர்களாக இருப்பதாகும். … ஆவிக்குரிய வளர்ச்சியில் [இது] ஒரு முக்கிய அம்சமாகும்.”3

கிறிஸ்துவைப் போன்ற இந்த குணாதிசயத்தை மேம்படுத்துவதற்கு நிச்சயமாக நம் அனைவருக்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. நமது தீர்க்கதரிசியின் அறிவுரையைப் பின்பற்றுவதில் நாம் எவ்வளவு தாழ்மையாக இருந்தோம் அல்லது இருக்க வேண்டும் என்பதை முதலில் ஆராய விரும்புகிறேன். நமக்கான தனிப்பட்ட நேரடியான வினாடி-வினாவாக இருக்கக்கூடியது:

  • நமது எல்லா தொடர்புகளிலும் சபையின் முழுப் பெயரைக் குறிப்பிடுகிறோமா? தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினார், “கர்த்தரின் சபையில் கர்த்தரின் பெயரை அகற்றுவது சாத்தானுக்கு ஒரு முக்கிய வெற்றி.”4

  • நம்முடைய தீர்க்கதரிசியின் குறிப்பிட்ட அழைப்பை ஏற்று நம் வாழ்வில் தேவனை மேலோங்க விடுகிறோமா? “பாரபட்சத்தின் அணுகுமுறைகளையும் செயல்களையும் கைவிடுவதில் முன்னிலை வகிக்க இன்று எல்லா இடங்களிலும் உள்ள நமது உறுப்பினர்களை நான் அழைக்கிறேன்.”5

  • நம் தீர்க்கதரிசி போதித்தபடி, மனிதர்களின் தத்துவங்களை விட கிறிஸ்துவின் கோட்பாட்டை நம்பி உலகத்தை ஜெயிக்கிறோமா?6

  • ஜனங்களிடம் மற்றும் அவர்களை பற்றி நேர்மறையான விஷயங்களைச் சொல்லி சமாதானம் செய்பவர்களாக மாறிவிட்டோமா? தலைவர் நெல்சன் கடந்த பொது மாநாட்டில் பின்வருமாறு நமக்குக் கற்றுக் கொடுத்தார்: “உத்தமமானவை, அழகானவை அல்லது, நற்கீர்த்தியுள்ளவை அல்லது, புகழத்தக்கவை எதாவதிருந்தால் அவரது முகத்திலோ அல்லது அவள் முதுகுக்குப் பின்னோ, மற்றொரு நபரைப்பற்றி நாம் கூறலாம், அதுதான் நமது தகவல்தொடர்பு தரமாக இருக்க வேண்டும்.”7

இவை எளிய ஆனால் வல்லமையான வழிமுறைகள். மோசேயின் மக்கள் குணமடைய, செய்ய வேண்டியதெல்லாம் அவன் உண்டாக்கிய வெண்கலச் சர்ப்பத்தை பார்ப்பதே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.8 ஆனால் “இந்த வழியின் எளிமையினிமித்தம் அல்லது இலகுவின் நிமித்தமும் அநேகர் அங்கே அழிந்துபோனார்கள்.”9

இந்த மாநாட்டின் போது நமது தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் என்றும் தவறாத அறிவுரைகளை நாம் கேட்டோம், இன்னும் கேட்கப் போகிறோம். மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மூலம் கர்த்தர் பேசுகிறார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் நமது வலுவான கருத்துகளை புறந்தள்ளுவதற்கு இது ஒரு சரியான சந்தர்ப்பம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மனத்தாழ்மையை வளர்ப்பதில், நமது சவால்களை சமாளிக்கவோ அல்லது நமது சொந்த முயற்சியால் மட்டுமே நமது முழு திறனை அடையவோ முடியாது என்பதை நாம் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகெங்கிலும் உள்ள ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள், குறிப்பாக டிஜிட்டல் தளங்களில், அனைத்தும் நம்மையும் நம் செயல்களையும் மட்டுமே சார்ந்துள்ளது என்று கூறுவார்கள். உலகம் மாமிச புயத்தை நம்புகிறது.

ஆனால் மறுஸ்தாபிதம் பண்ணப்பட்ட சுவிசேஷத்தின் மூலம், பரலோக பிதாவின் கிருபையும், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பாவ நிவர்த்தியையும் நாம் பெரிதும் சார்ந்திருப்பதை அறிந்து கொண்டோம், “ஏனென்றால் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்த பின்பு, நாம் கிருபையாலே இரட்சிக்கப்படுகிறோம் என்பதை நாம் அறிவோம்.”10 அதனால்தான் கர்த்தருடன் உடன்படிக்கைகளை செய்துகொள்வதும் கடைப்பிடிப்பதும் மிகவும் முக்கியமானது, ஏனெனில் அவ்வாறு செய்வதால் இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம் குணப்படுத்தும், செயல்படுத்தும் மற்றும் பரிபூரணப்படுத்தும் வல்லமையை முழுமையாக பெறலாம்.

வாரந்தோறும் திருவிருந்தில் கலந்துகொள்வதும், நியமங்களில் பங்கேற்கவும், உடன்படிக்கைகளைப் பெறவும், புதுப்பிக்கவும் தவறாமல் ஆலயத்திற்கு தொடர்ந்து செல்வதும், பரலோக பிதா மற்றும் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நாம் சார்ந்திருப்பதை நாம் அங்கீகரிக்கிறோம் என்பதற்கான அறிகுறியாகும். அது அவர்களின் வல்லமையை நம் வாழ்வில் வரவழைத்து, நமது எல்லா பிரச்சனைகளிலும் நமக்கு உதவவும், இறுதியில் நமது சிருஷ்டிப்பின் நோக்கத்தை நிறைவேற்றவும் உதவும்.

சிறிது காலத்திற்கு முன்பு, எனது தாழ்மையின் நிலை மற்றும் கர்த்தரின் மீது நான் சார்ந்திருப்பதைப் பற்றிய எனது உணர்வு மீண்டும் சோதிக்கப்பட்டது. நான் ஒரு வாடகை வண்டியில் விமான நிலையத்திற்குச் சென்று விமானத்தைப் பிடித்து சிறிது நேரத்தில் மிகவும் கடினமான தீர்க்க முடியாத சூழலுடைய இடத்திற்கு செல்ல வேண்டியதாயிருந்தது. சபையில் உறுப்பினராக இல்லாத வாடகை வண்டி ஓட்டுநர், கண்ணாடி வழியாக என்னைப் பார்த்து, “இன்று உங்களது உடல்நிலை சரியில்லை என்பதை என்னால் பார்க்க முடிகிறது!” என்றார்.

“எப்படி என்று சொல்ல முடியுமா?” நான் கேட்டேன்.

“நிச்சயமாக,” என கூறினார். பின்னர் அவர், “உண்மையில் உங்களைச் சுற்றி மிகவும் எதிர்மறை ஒளிவட்டம் உள்ளது!”

“இதைத் தீர்க்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டீர்களா?” என்று அவர் என்னிடம் கேட்டபோது, ​​நான் மிகவும் கடினமான சமாளிக்க முடியாத சூழ்நிலை இது என்று அவரிடம் விளக்கினேன்.

என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டேன் என்று பதிலளித்தேன்.

அப்போது அவர் ஒன்றைச் சொன்னார், அதை நான் ஒருபோதும் மறக்கவில்லை, “இதை கர்த்தரின் கையில் விட்டு விடுங்கள், எல்லாம் சரியாக நடக்கும்.”

“நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று அவரிடம் கேட்க நான் ஆசைப்பட்டேன் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் அதைச் செய்யவில்லை! அந்த ஒரு மணி நேர விமான பயணம் முழுவதும் ஜெபத்தில் தேவனிடம் என்னைத் தாழ்த்தி, தெய்வீக உதவியைக் கேட்டேன். நான் விமானத்தை விட்டு வெளியே வந்ததும், தீர்க்கப்பட வேண்டிய கடினமான சூழ்நிலை ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதையும், இனி என் உதவி அவசியமில்லை என்பதையும் அறிந்தேன்.

சகோதர சகோதரிகளே, தேவனிடமிருந்து வரும் கட்டளை, அழைப்பு மற்றும் வாக்குத்தத்தம் தெளிவாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது: “தாழ்மையாயிரு; கர்த்தராகிய உன்னுடைய தேவன், கரம் பிடித்து உன்னை நடத்துவார், உன்னுடைய ஜெபங்களுக்காக உனக்கு பதிலளிப்பார்.”11

நம்முடைய தீர்க்கதரிசிகளின் அறிவுரைகளை தாழ்மையுடன் பின்பற்றி, கர்த்தரும், இயேசு கிறிஸ்துவும் மட்டுமே நம்மை மாற்ற முடியும் என்பதை ஏற்றுக்கொள்வோமாக, இந்த வாழ்க்கையில் நாம் சிறந்த நபராக மாற—அவரது சபையில் பெற்ற கட்டளைகள் மற்றும் உடன்படிக்கைகளின் மூலமாக ஒரு நாள், கிறிஸ்துவில் நாம் முழுமையடைவோம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.