பொது மாநாடு
சமுத்திரத்தின் தீவுகளில் இருப்பவர்களுக்கும் இரட்சகரின் குணப்படுத்தும் வல்லமை
அக்டோபர் 2023 பொது மாநாடு


சமுத்திரத்தின் தீவுகளில் இருப்பவர்களுக்கும் இரட்சகரின் குணப்படுத்தும் வல்லமை

ஆலய ஆசீர்வாதங்கள் மூலம், இரட்சகர் தனிநபர்களையும், குடும்பங்களையும், நாடுகளையும் குணமாக்குகிறார்.

1960 களின் முற்பகுதியில், நான் பிறந்த இடமான லாயியே உள்ள ஹவாய் சபைக் கல்லூரியில் எனது தந்தை பணியாற்றினார். எனது ஏழு மூத்த சகோதரிகள் எனது பெற்றோரை எனக்கு “கீமோ” என்று பெயரிடுமாறு வற்புறுத்தினார்கள். ஜப்பான் உட்பட ஆசிய பசிபிக் பகுதியின் பெரும்பாலான சபை உறுப்பினர்களுக்கு சேவை செய்த லாயியே ஹவாய் ஆலயத்திற்கு அருகில் நாங்கள் வசித்து வந்தோம்.1 இந்த நேரத்தில், ஜப்பானிய பரிசுத்தவான்கள் குழுக்களாக ஆலய ஆசீர்வாதங்களைப் பெற ஹவாய்க்கு வரத் தொடங்கினர்.

அவ்வாறு வந்த உறுப்பினர்களில் ஒருவர் வசீகரமான ஒகினாவா தீவைச் சேர்ந்த ஒரு சகோதரி. ஹவாய் ஆலயத்திற்கு அவள் பயணம் செய்த கதை குறிப்பிடத்தகுந்தது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், அவர் பாரம்பரிய முறையில் பௌத்த முறையில் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்குப் பிறகு, ஜப்பான் ஹவாயில் உள்ள பேர்ல் துறைமுகத்தைத் தாக்கி, அமெரிக்காவை ஜப்பானுடன் மோதலை உருவாக்கியது. மிட்வே மற்றும் இவோ ஜிமா போர்களை அடுத்து, போரின் தீவிரம் ஜப்பானியப் படைகளை ஜப்பானின் மத்திய பகுதிக்கு முன்னால் நேச நாட்டுப் படைகளின் கடைசி வரிசையாக ஒகினாவா தீவின் கரையோரமாகத் தள்ளியது.

1945ல் ஒரு துக்கமான மூன்று மாதங்களுக்கு ஒகினாவா போர் எழுந்தது. 1,300 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் கொண்ட கப்பற்படை தீவைச் சுற்றி வளைத்து குண்டுவீசின. இராணுவம் மற்றும் பொதுமக்கள் மிகப் பெரிய உயிரிழப்பைச் சந்தித்தனர். இன்று ஒகினாவாவில் உள்ள ஒரு பரிசுத்தமான நினைவுச்சின்னம் போரில் இறந்தவர்களின் அறியப்பட்ட 240,000 பெயர்களை தாங்கி நிற்கிறது.2

தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒகினாவா பெண், அவரது கணவர் மற்றும் அவர்களது இரண்டு சிறிய குழந்தைகள் தீவிர முயற்சிக்கு பின்பு ஒரு மலை குகையில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அடுத்தடுத்த வாரங்கள் மற்றும் மாதங்களில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தனர்.

போருக்கு மத்தியில் ஒரு அவநம்பிக்கையான இரவில், பட்டினியால் வாடும் தன் குடும்பத்துடனும், கணவனும் சுயநினைவின்றி இருந்த நிலையில், அதிகாரிகள் தனக்கும் மற்றவர்களுக்கும் உயிரை மாய்த்துக்கொள்ள வழங்கிய ஒரு கையெறிகுண்டு மூலம் தங்கள் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர நினைத்தாள். இருப்பினும், அவள் அவ்வாறு செய்யத் தயாரானபோது, ​​ஒரு ஆழ்ந்த ஆவிக்குரிய உணர்வு வெளிப்பட்டது, அது அவளுக்கு தேவனின் இயல்பு மற்றும் அவள் மீதான அவருடைய அன்பின் உறுதியான உணர்வைக் கொடுத்தது, இது அவளைத் தொடர்ந்து முன்னேற வலிமையைக் கொடுத்தது. அடுத்தடுத்த நாட்களில், அவள் தனது கணவரை நினைவு பெறச் செய்து, தனது குடும்பத்திற்கு காட்டுச்செடி, காட்டுத் தேன் கூட்டில் இருந்து தேன் மற்றும் அருகிலுள்ள ஓடையில் பிடிபட்ட உயிரினங்கள் மூலம் தன் குடும்பத்திற்கு உணவளித்தாள். குறிப்பிடத்தக்க வகையில், போர் முடிவடைந்ததாக உள்ளூர் கிராமவாசிகள் தெரிவிக்கும் வரை அவர்கள் ஆறு மாதங்கள் வரை குகையில் நிலைத்திருந்தனர்.

வீடு திரும்பிய குடும்பம், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஆரம்பித்தபோது, ​​இந்த ஜப்பானிய பெண் கர்த்தரைப் பற்றிய கேள்விகளுக்கு பதில்களைத் தேட ஆரம்பித்தார். அவள் படிப்படியாக இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையையும் ஞானஸ்நானம் பெற வேண்டிய அவசியத்தையும் பெற்றாள். இருப்பினும், இயேசு கிறிஸ்து மற்றும் ஞானஸ்நானம் பற்றிய ஞானம் இல்லாமல் தன்னைப்பெறும்போதே மரித்த தாய் உட்பட தனது அன்புக்குரியவர்களைப் பற்றி அவள் கவலைப்பட்டாள்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையைச் சேர்ந்த இரண்டு ஊழிய சகோதரிகள் ஒரு நாள் அவளுடைய வீட்டிற்கு வந்து, ஆவி உலகில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஜனங்கள் கற்றுக்கொள்ளலாம் என்று அவளுக்கு போதித்த போது அவள் பெற்ற மகிழ்ச்சியை கற்பனை செய்து பாருங்கள். இறப்பிற்குப் பிறகு, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கும், ஆலயங்கள் எனப்படும் பரிசுத்த ஸ்தலங்களில் அவர்கள் சார்பாக செய்யப்படும் ஞானஸ்நானத்தை ஏற்றுக்கொள்வதற்கும் அவளுடைய பெற்றோர்கள் தேர்வு செய்யலாம் என்ற போதனையில் அவள் ஈர்க்கப்பட்டாள். அவளும் அவளுடைய குடும்பமும் இரட்சகருக்குள் மனம் மாறி ஞானஸ்நானம் பெற்றனர்.

அவளுடைய குடும்பம் கடினமாக உழைத்து மேலும் மூன்று குழந்தைகளைச் சேர்த்து பலுகிப் பெருகியது. அவர்கள் சபையில் விசுவாசமாகவும் தீவிரமாகவும் இருந்தனர். பின்னர், எதிர்பாராத விதமாக, அவரது கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இறந்தார், அவரது ஐந்து குழந்தைகளின் தேவைக்காக பல ஆண்டுகளாக பல வேலைகளில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவளது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள சிலர் அவளை விமர்சித்தனர். அவளுடைய பிரச்சனைகள் ஒரு கிறிஸ்தவ சபையில் சேர அவள் முடிவெடுத்ததால் வந்தது என அவர்கள் குற்றம் சாட்டினார்கள். தீவிரமான துயரம் மற்றும் கடுமையான விமர்சனங்களால் துவண்டுவிடாமல், இயேசு கிறிஸ்துவின் மேலான விசுவாசத்தை அவள் உறுதியாகப் பற்றிக்கொண்டாள், தேவன் தன்னை அறிந்திருக்கிறார் என்றும் பிரகாசமான நாட்கள் வரவுள்ளன என்றும் நம்பி முன்னேறத் தீர்மானித்தாள்.3

அவளது கணவரின் அகால மரணத்திற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஜப்பானின் ஊழிய தலைவர் ஜப்பானிய உறுப்பினர்களை ஆலயத்திற்கு செல்வதற்கு தயாராகுமாறு ஊக்குவித்தார். ஒகினாவா சகோதரியும் அவரது குடும்பமும் மிகவும் பாதிக்கப்பட்ட ஒகினாவா போரில் அமெரிக்க வீரராக இருந்த, தற்போதைய ஊழியத் தலைவர்.4 இருந்தபோதிலும், தாழ்மையான அந்த சகோதரி “அப்போது அவர் எங்களின் வெறுக்கப்பட்ட எதிரிகளில் ஒருவராக இருந்தார், ஆனால் இப்போது அவர் அன்பு மற்றும் சமாதானத்தின் சுவிஷேசத்துடன் இங்கே இருக்கிறார் என்றார். அது எனக்கு ஒரு அற்புதம்.”5

ஊழிய தலைவரின் செய்தியைக் கேட்டதும், விதவை சகோதரி ஆலயத்தில் ஒருநாள் தனது குடும்பத்துடன் முத்திரிக்கப்பட விரும்பினார். இருப்பினும், நிதிக் கட்டுப்பாடுகள் மற்றும் மொழித் தடைகள் காரணமாக அவளுக்கு சாத்தியப்படாமல் போனது.

பின்னர் பல புதுமையான யோசனைகள் உருவாகியது. பருவம் தவறிய மாதத்தில் ஜப்பான் உறுப்பினர்கள் ஹவாய்க்கு செல்ல முழு விமானத்தையும் முன்பதிவு செய்தால் செலவு பாதியாக குறையும்.6 உறுப்பினர்கள் ஜப்பானிய பரிசுத்தவான்கள் பாடல்களை குறுந்தட்டுகளில் பதிவுசெய்து விற்பனை செய்தனர். சில உறுப்பினர்கள் வீடுகளையும் விற்றனர். மற்றவர்கள் பயணத்தை மேற்கொள்வதற்காக வேலையை ராஜினாமா செய்தனர்.7

உறுப்பினர்களுக்கான மற்ற சவால் என்னவென்றால், ஆலய விளக்கக்காட்சி ஜப்பானிய மொழியில் இல்லை. சபைத் தலைவர்கள் ஒரு ஜப்பானிய சகோதரரை ஹவாய் ஆலயத்திற்கு வந்து தரிப்பிக்கப்படுத்தல் நியமத்தை மொழிபெயர்க்க அழைத்தனர்.8 விசுவாசமுள்ள அமெரிக்க வீரர்களால் போதிக்கப்பட்டு, போருக்குப் பிறகு ஞானஸ்நானம் பெற்ற முதல் மனமாறிய ஜப்பானியர் அவர்.9

ஹவாயில் வசிக்கும் ஜப்பானிய அங்கத்தினர்கள் இந்த மொழிபெயர்ப்பை முதன்முறை கேட்டபோது, ​​கண்ணீர் விட்டனர். ஒரு உறுப்பினர் கூறினார்: “நாங்கள் ஆலயத்திற்கு பலமுறை சென்றிருக்கிறோம். நியமங்களை ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறோம். [ஆனால்] ஆலய பணியைப் பற்றிய உணர்வை இப்போது எங்கள் சொந்த மொழியில் உணர்ந்ததைப்போல [கேட்பது] நாங்கள் உணர்ந்ததில்லை” 10

அதே வருடத்தின் பிற்பகுதியில், 161 பெரியவர்களும் குழந்தைகளும் டோக்கியோவிலிருந்து ஹவாய் ஆலயத்திற்க்கு செல்ல புறப்பட்டனர். ஒரு ஜப்பானிய சகோதரர் இந்தப் பயணத்தைப் பற்றி நினைவு கூர்ந்தார்: “விமானத்திலிருந்து வெளியே ​​பேர்ல் துறைமுகத்தைப் பார்த்தபோது, ​​டிசம்பர் 7, 1941-ல் இந்த மக்களுக்கு நம் நாடு செய்ததை நினைத்து, என் இதயத்தில் நடுக்கம் வந்தது. அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்வார்களா? ஆனால் ஆச்சரியமாக அவர்கள் என் வாழ்நாளில் நான் பார்த்ததை விட அதிக அன்பையும் இரக்கத்தையும் காட்டினார்கள்.”11

படம்
ஜப்பானிய பரிசுத்தவான்கள் மலர் லீஸுடன் வரவேற்கப்படுகிறார்கள்.

ஹவாய் வந்தவுடன் உறுப்பினர்கள் ஜப்பானிய பரிசுத்தவான்களை எண்ணற்ற மலர் மாலையுடன் வரவேற்றனர், அதே நேரத்தில் ஜப்பானிய கலாச்சாரத்திற்கு அந்நியமான அணைப்புகளையும் கன்னங்களில் முத்தங்களையும் பரிமாறிக்கொண்டனர். ஹவாயில் 10 மாற்றும் நாட்களைக் கழித்த பிறகு, ஜப்பானிய பரிசுத்தவான்கள் ஹவாய் பரிசுத்தவான்கள் பாடிய “அலோஹா ஓ” இன் மெல்லிசையை பாடி விடைபெற்றனர்.12

ஜப்பானிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது ஆலய பயணத்தில் விதவையான ஒகினாவா சகோதரியும் இருந்தார். அவர் தனது கிளையில் சேவை செய்த ஊழியக்காரர்கள் தாராளமான அன்பளிப்பின் காரணமாக 10,000 மைல் (16,000-கி.மீ) பயணத்தை மேற்கொண்டார். ஆலயத்தில் இருந்தபோது, ​​அவள் தன் தாயின் ஞானஸ்நானத்திற்குப் பதிலியாகச் செயல்பட்டு, இறந்துபோன தன் கணவனிடம் முத்தரிக்கப்பட்டதால் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

செயல்பாட்டில் உள்ள 18 வது ஆலயமான டோக்கியோ ஜப்பான் ஆலயம் 1980 இல் அர்ப்பணிக்கப்படும் வரை, ஜப்பானில் இருந்து ஹவாய் வரையிலான ஆலய பயணங்கள் வழக்கமாகத் தொடர்ந்தன. இந்த ஆண்டு நவம்பரில், ஜப்பானின் ஒகினாவாவில் 186வது ஆலயம் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியிருந்த மத்திய ஒகினாவாவில் உள்ள குகைக்கு வெகு அருகில் இது அமைந்துள்ளது.13

ஒகினாவாவைச் சேர்ந்த இந்த அற்புதமான சகோதரியை நான் ஒருபோதும் சந்திக்கவில்லை என்றாலும், அவளுடைய விசுவாசத்தின் சந்ததியினரின் வழியே அவரது மரபு வாழ்கிறது, அவர்களில் பலர் எனக்குத் தெரிந்தவர்கள் மற்றும் நான் நேசிக்கிறவர்கள்14

ஒரு இளம் ஊழியக்காரனாக ஜப்பானில் சேவை செய்ய எனக்கு அழைப்பு வந்தபோது, ​​பசிபிக் பகுதியில் இரண்டாம் உலகப் போரில் வீரராக இருந்த என் அப்பா, சிலிர்த்துப் போனார். டோக்கியோ ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே நான் ஜப்பானுக்கு வந்தேன், ஆலயங்கள் மீதான அவர்களின் அன்பை நேரடியாகப் பார்த்தேன்.

ஆலய உடன்படிக்கைகள் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடர்களுக்கு நம்முடைய பரலோக பிதாவிடமிருந்து வரும் ஈவுகளாகும். ஆலயத்தின் மூலம், நம்முடைய பரலோக பிதா தனிப்பட்டவர்களையும் குடும்பங்களையும் இரட்சகரோடும் ஒருவருக்கொருவரோடும் இணைக்கிறார்.

தலைவர் ரசல் எம். நெல்சன்: கடந்த ஆண்டு அறிவித்தார்:

ஞானஸ்நான தொட்டிகளிலும், ஆலயங்களிலும் உடன்படிக்கைகளைச் செய்து, அவற்றைக் கடைபிடிக்கும் ஒவ்வொரு நபரிடம் இயேசு கிறிஸ்துவின் வல்லமைக்கான அதிகரித்த நெருக்கமிருக்கிறது.

தேவனுடன் செய்த உடன்படிக்கைகளைக் கடைபிடிப்பதற்கான வெகுமதி பரலோக வல்லமையாகும், நமது துன்பங்கள், சோதனைகள் மற்றும் மனவேதனைகளை சிறப்பாகச் சமாளிக்க நம்மைப் பலப்படுத்தும் வல்லமை. இந்த வல்லமை நம் வழியை எளிதாக்குகிறது.”15

ஆலய ஆசீர்வாதங்கள் மூலம், இரட்சகர் தனிநபர்களையும், குடும்பங்களையும், ஒரு காலத்தில் கடும் எதிரிகளாக இருந்த நாடுகளையும் குணமாக்குகிறார். உயிர்த்தெழுந்த தேவன் , “என் நாமத்திற்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் குமாரன் தன் செட்டைகளின் ஆரோக்கியத்தை வைத்து எழும்புவார்” என்று ஒரு முரண்பாடுகள் நிறைந்த சமுதாயத்திற்கு அறிவித்தார்.16

“எல்லா தேசத்திற்கும், இனத்திற்கும், பாஷைக்காரருக்கும் மற்றும் ஜனத்திற்கும் இரட்சகரைக் குறித்த ஞானம் பிரசித்திபெறும்” என்ற கர்த்தரின் வாக்குறுதியின் தொடர்ச்சியான நிறைவேற்றத்தைக் காண்பதற்கு 17“சமுத்திரத்தின் தீவுகளிலிருப்பவர்களையும்” நினைவுகூருகிறேன் என்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.18

இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய தீர்க்கதரிசி மற்றும் அப்போஸ்தலர்களைப் பற்றி நான் இந்த கடைசி நாட்களில் சாட்சி கூறுகிறேன். பூமியில் பிணைக்கப்பட்டுள்ளது பரலோகத்தில் பிணைக்கும் பரலோக வல்லமையைப் பற்றி நான் உறுதியாக சாட்சி கூறுகிறேன்.

இது இரட்சகரின் பணி, ஆலயங்கள் அவருடைய பரிசுத்த வீடு.

இந்த சத்தியங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உறுதியுடன் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. லை ஹவாய் ஆலயம் 1919 இல் தலைவர் ஹீபர் ஜே. கிராண்டால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போஸ்தலராக, அவர் 1901 இல் ஜப்பானில் சபையைத் திறந்தார். இது ஐந்தாவது செயல்படும் ஆலயம் மற்றும் அமெரிக்க ஐக்கிய கண்ட நாடுகளுக்கு வெளியே கட்டப்பட்ட முதல் ஆலயம்.

  2. மார்ச் 2, 2023 நிலவரப்படி, நினைவுச்சின்னத்தில் 241,281 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

  3. Gordon B. Hinckley, “Keep the Chain Unbroken” (Brigham Young University devotional, Nov. 30, 1999), speeches.byu.edu பார்க்கவும்.

  4. டுவைன் என். ஆண்டர்சன் ஒகினாவா போரில் காயமடைந்தார். அவர் 1962 முதல் 1965 வரை ஜப்பானில் ஊழியத் தலைவராக பணியாற்றினார் மற்றும் டோக்கியோ ஜப்பான் ஆலயத்தின் முதல் தலைவராக 1980 முதல் 1982 வரை இருந்தார்.

  5. நானும் என் மனைவியும் டோக்கியோவில் ஊழியத் தலைவர்களாக பணியாற்றிய போது நான் அவளுடைய குடும்ப உறுப்பினர்களை சந்தித்தேன். அவளுடைய தனிப்பட்ட குடும்ப வரலாறு விவரங்களிலிருந்து இந்தத் தகவலை அவர்கள் எனக்கு வழங்கினர்.

  6. See Dwayne N. Andersen, An Autobiography for His Posterity, 102–5, Church History Library, Salt Lake City.

  7. See Dwayne N. Andersen, 104.

  8. See Edward L. Clissold, “Translating the Endowment into Japanese,” Stories of the Temple in Lā‘ie, Hawai‘i, comp. Clinton D. Christensen (2019), 110–13.

  9. டாட் சுயி என்ற மொழிபெயர்ப்பாளர், ஜூலை 7, 1946 இல், அமெரிக்கப் போர்வீரரான சி. எலியட் ரிச்சரிட்ஸ் என்பவரால் ஞானஸ்நானம் பெற்றார். டாட்சுயியின் மனைவி சியோ சாடோ, அதே நாளில் பாய்ட் கே. பாக்கரால் ஞானஸ்நானம் பெற்றார். தனித்தனியாக, நீல் ஏ. மேக்ஸ்வெல் ஒகினாவா போரில் சண்டையிட்டார், மேலும் சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து ஜப்பானில் கரைக்குச் சென்ற கடற்படைகளின் முதல் குழுவில் எல். டாம் பெர்ரியும் ஒருவர். மூப்பர்கள் பாக்கர், மேக்ஸ்வெல் மற்றும் பெர்ரி ஆகியோர் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தின் உறுப்பினர்களாக மாறுவார்கள்.

  10. In Clissold, “Translating the Endowment into Japanese,” 112.

  11. In Dwayne N. Andersen, “1965 Japanese Excursion,” Stories of the Temple in Lā‘ie, Hawai‘i, 114.

  12. Andersen, “1965 Japanese Excursion,” , 114, 117 பார்க்கவும்.

  13. பின்னர் அக்டோபர் 2023 பொது மாநாட்டின் இந்த அமர்வில், தலைவர் ரசல் எம். நெல்சன் ஜப்பானின் ஐந்தாவது ஆலயமாக இருக்கும் ஒசாகா ஜப்பான் ஆலயம் உட்பட 20 புதிய ஆலயங்களை அறிவித்தார்.

  14. 2018 முதல் 2021 வரை டோக்கியோவில் எங்கள் ஊழியத்தின் போது, கோவிட் தொற்றுநோயின் சவால்களுக்கு மத்தியில், அவரது குடும்பத்தினர் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அன்பையும் அக்கறையையும் அளித்தனர், அதற்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

  15. Russell M. Nelson, “Overcome the World and Find Rest,” Liahona, Nov. 2022, 96.

  16. 3 நேபி 25:2.

  17. மோசியா 3:20.

  18. 2 நேபி 29:7.