பொது மாநாடு
கீலேயாத்தில் பிசின் தைலம் இல்லையோ?
அக்டோபர் 2021 பொது மாநாடு


கீலேயாத்தில் பிசின் தைலம் இல்லையோ?

இரட்சகரின் குணப்படுத்தும் வல்லமை நம் சரீரங்களை குணமாக்கும் திறமை மட்டுமல்ல, ஆனால் ஒருவேளை இன்னும் மிக முக்கியமாக, நமது இருதயங்களை குணமாக்கும் அவரது திறமையும்கூட.

எனது ஊழியம் முடிந்த சிறிது காலத்தில், பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவனாக இருந்தபோது, என் அப்பாவிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவர் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் நன்றாக இல்லை என்றாலும், அவர் குணமடைந்து தனது இயல்பு வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு திரும்புவதில் உறுதியாக இருப்பதாக கூறினார். அந்த தொலைபேசி அழைப்பு எனக்கு மிகவும் சோகமான தருணம். என் அப்பா என் ஆயராகவும், என் நண்பராகவும் என் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். என் அம்மாவும், என் உடன்பிறப்புகளும் நானும் எதிர்காலத்தைப்பற்றி யோசித்தபோது, அது இருண்டதாகத் தோன்றியது. என் இளைய சகோதரன் டேவ், நியூயார்க்கில் ஊழியம் செய்து கொண்டிருந்தான் மற்றும் இந்த கடினமான குடும்ப நிகழ்வுகளின்போது நீண்ட தூர ஓட்டங்களில் பங்கேற்றான்.

அன்றைய மருத்துவர்கள் புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த முயல, அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். எங்கள் குடும்பம் ஒரு அற்புதத்திற்காக தீவிரமாக உபவாசம் இருந்து ஜெபம் செய்தோம். எனது தகப்பனை குணப்படுத்த முடியும் என்று எங்களுக்கு போதுமான விசுவாசம் இருப்பதாக நான் உணர்ந்தேன். அறுவை சிகிச்சைக்கு சற்று முன்பு, நானும் என் மூத்த சகோதரன் நார்மும் என் அப்பாவுக்கு ஆசீர்வாதம் கொடுத்தோம். நாங்கள் திரட்ட முடிந்த முழு விசுவாசத்துடன் அவர் குணமடைய ஜெபம் செய்தோம்.

அறுவை சிகிச்சை பல மணி நேரம் நீடிக்கும், ஆனால் சிறிது நேரம் கழித்து, மருத்துவர் எங்கள் குடும்பத்தை சந்திக்க காத்திருப்பு அறைக்கு வந்தார். அவர்கள் அறுவை சிகிச்சையைத் தொடங்கியபோது, என் தகப்பனின் உடல் முழுவதும் புற்றுநோய் பரவியதை அவர்கள் பார்க்க முடிந்தது என்று அவர் எங்களிடம் கூறினார். அவர்கள் கவனித்ததன் அடிப்படையில், என் தகப்பன் வாழ சில மாதங்களே இருந்தன. நாங்கள் நொறுங்கிப் போனோம்.

அறுவை சிகிச்சையில் இருந்து என் தகப்பன் விழித்தபோது, நடந்த செயல்முறை வெற்றிகரமாக இருந்ததா என்பதை அறிய அவர் ஆர்வமாக இருந்தார். நாங்கள் அவருடன் மோசமான செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம்.

அற்புதத்திற்காக நாங்கள் தொடர்ந்து உபவாசமிருந்து ஜெபம் செய்தோம். என் தகப்பனின் உடல்நிலை விரைவில் சரிந்ததால், அவர் வலியில்லாமல் இருக்க நாங்கள் ஜெபிக்க ஆரம்பித்தோம். இறுதியில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவரை விரைவாக மரிக்க அனுமதிக்குமாறு கர்த்தரிடம் கேட்டோம். அறுவை சிகிச்சைக்கு சில மாதங்களுக்குப் பிறகு, அறுவை சிகிச்சை நிபுணர் கணித்தபடி, என் தகப்பன் காலமானார்.

தொகுதி உறுப்பினர்கள் மற்றும் குடும்ப நண்பர்களால் எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொட்டப்பட்டது. எங்கள் தகப்பனின் வாழ்க்கையை கவுரவப்படுத்திய ஒரு அழகான இறுதிச் சடங்கை நாங்கள் நடத்தினோம். எனினும், காலம் செல்லச் செல்ல, நானும் என் குடும்பமும் என் தகப்பன் இல்லாத வலியை அனுபவித்தோம், என் தகப்பன் ஏன் குணமாக்கப்படவில்லை என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். என் விசுவாசம் போதுமான வலிமையானது இல்லையா என்று நான் ஆச்சரியப்பட்டேன். சில குடும்பங்கள் ஏன் ஒரு அதிசயத்தைப் பெற்றன, ஆனால் எங்கள் குடும்பம் ஏன் பெறவில்லை? பதில்களுக்காக வேதங்களை நோக்கி திரும்புவதற்கு எனது ஊழியத்தில் நான் கற்றுக்கொண்டேன், அதனால் நான் வேதங்களைத் தேட ஆரம்பித்தேன்.

கீலேயாத்தில் வளர்ந்த ஒரு புதரிலிருந்து செய்யப்பட்ட ஒரு நறுமண பொருள் அல்லது களிம்பைப்பற்றி பழைய ஏற்பாடு கற்பிக்கிறது, இது காயங்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. பழைய ஏற்பாட்டு காலத்தில் இந்த களிம்பு “கீலேயாத்தின் பிசின் தைலம்” என்று அழைக்கப்பட்டது.1 தீர்க்கதரிசி எரேமியா தனது மக்களிடையே கண்ட பேரிடர்கள் குறித்து வருந்தினான் மற்றும் குணமடைவார்கள் என்று நம்பினான். எரேமியா கேட்டான், “கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ; இரண வைத்தியனும் அங்கில்லையோ?”2 இலக்கியம், இசை மற்றும் கலை மூலம், மீட்பர் இயேசு கிறிஸ்து அவரது குறிப்பிடத்தக்க குணப்படுத்தும் வல்லமையால் அடிக்கடி கீலேயாத் பிசின் தைலம் என்று குறிப்பிடப்படுகிறார். எரேமியாவைப் போலவே, நானும் ஆச்சரியப்பட்டேன் “நீல்சன் குடும்பத்திற்கு கீலேயாத்தின் பிசின் தைலம் இல்லையா?”

புதிய ஏற்பாட்டின் மாற்கு அதிகாரம் 2ல், கப்பர்நகூமில் இரட்சகரைக் காண்கிறோம். இரட்சகரின் குணப்படுத்தும் வல்லமையைப்பற்றிய செய்தி தேசம் முழுவதும் பரவியது, மேலும் பல மக்கள் இரட்சகரால் குணமடைய கப்பர்நகூம் சென்றனர். இரட்சகர் இருந்த வீட்டிலும் அதைச் சுற்றிலும் ஏராளமானோர் கூடியிருந்ததால், அவர்கள் அனைவரையும் வரவேற்க அவருக்கு இடமில்லை. இரட்சகரால் குணமடைய வாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனை நான்கு பேர் சுமந்து வந்தனர். அவர்களால் கூட்டத்தை கடந்து செல்ல முடியவில்லை, அதனால் அவர்கள் வீட்டின் கூரையை பிரித்து இரட்சகரை சந்திக்க அந்த மனிதனை கீழே இறக்கினர்.

இந்த விவரத்தை நான் வாசித்தபோது, இரட்சகர் இந்த மனிதனைச் சந்தித்தபோது சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது: “மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது.”3 இந்த மனிதனைச் சுமந்த நான்கு பேரில் நானும் ஒருவராக இருந்திருந்தால், இரட்சகரிடம், “நாங்கள் உண்மையில் அவரை குணப்படுத்த இங்கு அழைத்து வந்தோம்” என்று நான் சொல்லியிருக்கலாம். “நான் அவனை குணப்படுத்தினேன்” என்று இரட்சகர் பதிலளித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இரட்சகரின் குணப்படுத்தும் வல்லமை நம் உடல்களை குணமாக்கும் திறமை மட்டுமல்ல, ஆனால் ஒருவேளை இன்னும் மிக முக்கியமாக, நமது இருதயங்களையும் நமது குடும்பத்தின் உடைந்த இருதயங்களையும் குணமாக்கும் அவரது திறமை என நான் முழுமையாக புரிந்து கொள்ளாதது சாத்தியமா?

அந்த மனிதனை இறுதியாக சரீர ரீதியாக குணப்படுத்தியபோது இரட்சகர் இந்த அனுபவத்தின் மூலம் ஒரு முக்கியமான பாடம் கற்பித்தார். அவர் பார்வையற்றவர்களின் கண்களைத் தொட முடியும், அவர்கள் பார்க்க முடியும் என்பது அவருடைய செய்தி என்பது எனக்கு தெளிவாகியது. அவர் காது கேளாதவர்களின் காதுகளைத் தொட முடிந்தது, அவர்கள் கேட்க முடிந்தது. நடக்க முடியாதவர்களின் கால்களை அவரால் தொட முடிந்தது, அவர்களால் நடக்க முடிந்தது. அவர் நம் கண்களையும் காதுகளையும் கால்களையும் குணமாக்க முடியும், ஆனால் மிக முக்கியமாக, அவர் நம்மை பாவங்களிலிருந்து சுத்திகரித்து, அவர் நம் இருதயங்களை குணமாக்க முடியும்.

மீட்பர் தனது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு மார்மன் புஸ்தக ஜனங்களுக்குத் தோன்றும்போது, அவர் மீண்டும் அவருடைய குணப்படுத்தும் வல்லமையைப்பற்றி பேசுகிறார். நேபியர்கள் பரலோகத்திலிருந்து அவருடைய குரலைக் கேட்கிறார்கள், “நீங்கள் இப்பொழுதாவது என்னிடம் திரும்பி, உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, நான் உங்களை சுகப்படுத்தும்படியாக மனமாறமாட்டீர்களோ?”4 என்றார். பின்னர், இரட்சகர் போதிக்கிறார், “ஏனென்றால் அவர்கள் மனந்திரும்பி இருதயத்தின் முழு நோக்கத்தோடு என்னிடத்தில் வருவார்களோவென்றும், நான் அவர்களைக் குணப்படுத்துவேன் என்றும் நீங்கள் அறியீர்கள்.5 இரட்சகர் சரீர குணப்படுத்துதலைக் குறிப்பிடவில்லை, மாறாக அவர்களின் ஆத்துமாக்களின் ஆவிக்குரிய குணப்படுத்துதலைக் குறிப்பிடுகிறார்.

மரோனி தனது தகப்பனாகிய மார்மனின் வார்த்தைகளைப் பகிரும்போது கூடுதல் புரிதலைக் கொண்டுவருகிறான். அற்புதங்களைப்பற்றிப் பேசிய பிறகு, மார்மன் விளக்குகிறான், “மேலும் கிறிஸ்து சொன்னார்: நீங்கள் என்னில் விசுவாசம் கொண்டிருந்தால், என்னிலுள்ள தேவையான எந்தக் காரியத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.”6 என் விசுவாசத்தின் குறிக்கோள் இயேசு கிறிஸ்துவாக இருக்க வேண்டும் நான் அவரில் விசுவாசம் வைக்கும்போது, அவருக்கு ஏற்றதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். என் தகப்பனின் மறைவு தேவனின் திட்டத்திற்கு ஏற்றது என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். இப்போது, நான் மற்றொருவரின் தலையில் என் கைகளை வைத்து அவனை அல்லது அவளை ஆசீர்வதிக்கும்போது, என் விசுவாசம் இயேசு கிறிஸ்து மீது உள்ளது மற்றும் ஒரு நபர் கிறிஸ்துவுக்கு ஏற்புடையதாக இருந்தால் சரீர ரீதியாக குணமடைவார் என்பதை புரிந்துகொள்கிறேன்.

அவருடைய மீட்பு மற்றும் அவரது சாத்தியமாக்கும் வல்லமை இரண்டும் கிடைக்கக்கூடிய இரட்சகரின் பாவநிவர்த்தி, இயேசு கிறிஸ்து அனைவருக்கும் வழங்கும் இறுதி ஆசீர்வாதம். இருதயத்தின் முழு நோக்கத்துடன் நாம் மனந்திரும்பும்போது, இரட்சகர் நம்மை பாவத்திலிருந்து சுத்திகரிக்கிறார். மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட, நம் விருப்பத்தை பிதாவிடம் மகிழ்ச்சியுடன் சமர்ப்பிப்பதால், இரட்சகர் நம் சுமைகளைத் தூக்கி, அவைகளை இலகுவாக்குவார்.7

ஆனால் நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம் இதோ. இரட்சகரின் குணப்படுத்தும் வல்லமை என் குடும்பத்திற்கு பலிக்கவில்லை என்று நான் தவறாக நம்பினேன். நான் இப்போது மிகவும் முதிர்ந்த கண்களுடனும் அனுபவத்துடனும் திரும்பிப் பார்க்கையில், இரட்சகரின் குணப்படுத்தும் வல்லமை என் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தெளிவாக நிருபணமானதை நான் பார்க்கிறேன். நான் சரீர குணப்படுத்துவதில் மிகவும் கவனம் செலுத்தினேன், நிகழ்ந்த அற்புதங்களை நான் பார்க்கத் தவறிவிட்டேன். இந்த கடினமான சோதனையின் மூலம் கர்த்தர் என் தாயை தனது திறனுக்கு அப்பாற்பட்டு வலுப்படுத்தி உயர்த்தினார், மேலும் அவர் நீண்ட மற்றும் பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார். பிள்ளைகள்மீதும் பேரக்குழந்தைகள்மீதும் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை அவர் கொண்டிருந்தார். கர்த்தர் என்னையும் என் உடன்பிறப்புகளையும் அன்பு, ஒற்றுமை, விசுவாசம் மற்றும் மனஉறுதியுடன் ஆசீர்வதித்தார், இது எங்கள் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறி இன்றும் தொடர்கிறது.

ஆனால் என் அப்பாவுக்கு என்ன ஆனது? மனந்திரும்பும் அனைவரையும் போலவே, அவர் நாடியவாறே ஆவிக்குரிய ரீதியில் குணமாக்கப்பட்டார், அவர் இரட்சகரின் பாவநிவர்த்தி காரணமாக அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஆசீர்வாதங்களைப் பெற்றார். அவர் தனது பாவங்களுக்காக மீட்பைப் பெற்றார், இப்போது உயிர்த்தெழுதலின் அற்புதத்திற்காகக் காத்திருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் போதித்தான்: “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.”8 பாருங்கள், நான் இரட்சகரிடம், “என் அப்பாவை குணமாக்க நாங்கள் உங்களிடம் கொண்டு வந்தோம்” என்று கூறினேன், மேலும் இரட்சகர் அவரை குணப்படுத்தினார் என்பதை அவர் இப்போது எனக்கு தெளிவுபடுத்தியுள்ளார். கீலேயாத்தின் பிசின் தைலம் நீல்சன் குடும்பத்துக்கு உதவியது, நாம் நினைத்த விதத்தில் அல்ல, ஆனால் இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் எங்கள் வாழ்க்கையை ஆசீர்வதித்து, தொடர்ந்து ஆசீர்வதித்து வருகிறது.

புதிய ஏற்பாட்டின் யோவான் அதிகாரம் 6ல், இரட்சகர் மிகவும் சுவாரஸ்யமான அற்புதத்தை நிகழ்த்தினார். ஒரு சில மீன்கள் மற்றும் ஒரு சில ரொட்டிகளுடன், மீட்பர் 5,000 பேருக்கு உணவளித்தார். இந்த விவரத்தை நான் பலமுறை வாசித்திருக்கிறேன், ஆனால் அந்த அனுபவத்தின் ஒரு பகுதியை நான் தவறவிட்டேன், அது இப்போது எனக்கு பெரிய அர்த்தத்தைக் கொடுத்துள்ளது. இரட்சகர் 5,000 பேருக்கு உணவளித்த பிறகு, மீதமுள்ள துண்டுகளை, 12 கூடைகளை நிரப்பிய துணிக்கைகளையும், மீதமுள்ளவற்றையும் சேகரிக்கும்படி அவர் தனது சீஷர்களிடம் கேட்டார். இரட்சகர் ஏன் அதைச் செய்ய நேரம் எடுத்துக்கொண்டார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். அந்த சந்தர்ப்பத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாடம் இது என்பது எனக்கு தெளிவாகிவிட்டது: அவர் 5,000 பேருக்கு உணவளிக்க முடியும் மற்றும் மீதியும் இருந்தன. “அனைத்து மனுஷருக்கும் என் கிருபையே போதுமானதாயிருக்கிறது.”9 இரட்சகரின் மீட்பு மற்றும் குணப்படுத்தும் வல்லமை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அல்லது எவ்வளவு கடினமாக இருந்தாலும் எந்த பாவம், காயம் அல்லது சோதனையையும் மறைக்க முடியும், மற்றும் மீதம் எஞ்சியுள்ளன. அவரது கிருபை போதும்.

அந்த அறிவுடன், நாம் விசுவாசத்துடன் முன்னேறலாம், கடினமான காலங்கள் வரும் என்பதை அறிந்து, அவை நிச்சயம் வரும், அல்லது பாவம் நம் வாழ்க்கையை சூழும் போது, நம்மை அவரிடம் வர அழைத்தவாறு, இரட்சகர் “தன் செட்டைகளின் கீழ் குணமாக்குதலுடன்”10 நிற்கிறார்,

கீலேயாத் பிசின் தைலம், இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, நமது மீட்பர் மற்றும் அவரது அற்புதமான குணப்படுத்தும் வல்லமைபற்றி நான் உங்களுக்கு சாட்சி கூறுகிறேன். உங்களை குணமாக்கும் அவரது விருப்பம் குறித்து நான் சாட்சி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.