பொது மாநாடு
இயேசு கிறிஸ்துவிடம் நமது மனமாற்றத்தை ஆழப்படுத்துதல்
அக்டோபர் 2021 பொது மாநாடு


இயேசு கிறிஸ்துவிடம் நமது மனமாற்றத்தை ஆழப்படுத்துதல்

வேதங்கள் மற்றும் தேவனைப்பற்றிய நமது அறிவு, மிகப் பெரும்பாலும் எளிதாக கருதப்படும் வரங்கள் ஆகும். இந்த ஆசீர்வாதங்களைப் போற்றுவோமாக.

உங்கள் அழகான செய்திக்கு மிகவும் நன்றி, மூப்பர் நீல்சன். எங்களுக்கு அது தேவை.

என் அன்பு சகோதர சகோதரிகளே, தலைவர் ரசல் எம். நெல்சன் சமீபத்தில் நமக்கு போதித்தார், நான் அதை மேற்கோள் காட்டுகிறேன், “எதையும் நன்றாகச் செய்ய முயற்சி தேவை. இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷராக மாறுவதும் விதிவிலக்கல்ல. உங்கள் விசுவாசத்தையும் அவர் மீதுள்ள நம்பிக்கையையும் அதிகரிக்க முயற்சி தேவை.” இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை அதிகரிக்க அவர் நமக்கு அளித்த பரிந்துரைகளில், நாம் கற்றுக்கொள்ளும் ஆர்வமுள்ளவர்களாக ஆக வேண்டும், கிறிஸ்துவின் ஊழியம் மற்றும் ஊழியச்செயலை நன்கு புரிந்துகொள்ள வேதத்தில் மூழ்க வேண்டும். (“Christ Is Risen; Faith in Him Will Move Mountains,” Liahona, May 2021, 103 பார்க்கவும்.)

லேகியின் குடும்பத்தில் வேதங்கள் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது என்பதை மார்மன் புஸ்தகத்தில் கற்றுக்கொள்கிறோம், அதனால்தான், நேபி மற்றும் அவனது சகோதரர்கள் பித்தளை தகடுகளைப் பெற எருசலேம் திரும்பினர் (1 நேபி 3–4 பார்க்கவும்).

நேபிக்கும் அவனது தகப்பனுக்கும் லியஹோனா செய்ததைப் போல நமக்கான தேவனின் சித்தத்தை வேதங்கள் வெளிப்படுத்துகின்றன. அவன் வில்லை உடைத்த பிறகு, உணவு பெற எங்கு செல்ல வேண்டும் என்பதை நேபி தெரிந்து கொள்ள வேண்டும். அவனது தகப்பன் லேகி, லியஹோனாவைக் கண்டு, அதில் எழுதப்பட்ட காரியங்களைப் பார்த்தான். விசுவாசம், விடாமுயற்சி மற்றும் அவற்றுக்கு கொடுக்கப்படுகிற கவனத்திற்கு ஏற்ப முட்கள் செயல்படுவதை நேபி கண்டான். அவன் வாசிப்பதற்கு எளிதான மற்றும் கர்த்தரின் பாதைகளைப்பற்றிய புரிதலை அவர்களுக்கு அளித்த எழுத்தையும் பார்த்தான். தேவன் சிறிய காரியங்கள் மூலம் பெரிய காரியங்களை கொண்டு வருகிறார் என்பதை அவன் உணர்ந்தான். லியஹோனாவால் கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்து அவன் கீழ்ப்படிந்திருந்தான். அவன் மலைக்கு ஏறிச்சென்று, பற்றாக்குறையால் மிகவும் கஷ்டப்பட்ட, தனது குடும்பத்திற்கு உணவைப் பெற்றான். (1 நேபி 16:23–31 பார்க்கவும்.)

நேபி, வேதங்களுக்கு அர்ப்பணிப்புள்ள மாணவன் என்று எனக்குத் தோன்றுகிறது. வேதங்களில் நேபி மகிழ்ச்சியடைந்ததை நாம் படித்தோம், அவனுடைய இருதயத்தில் அவற்றை சிந்தித்து, அவனுடைய பிள்ளைகளின் கற்றல் மற்றும் ஆதாயத்திற்காக அவற்றை எழுதினான் (2 நேபி 4:15–16 பார்க்கவும்).

தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார்:

“நாம் ‘முன்னேறிச் சென்று, கிறிஸ்துவின் வார்த்தையை ருசித்து, முடிவுபரியந்தம் நிலைத்து நின்றால், …[நாம்] நித்திய ஜீவனைப் பெறுவோம்’ [2 நேபி 31:20].

“ருசித்து என்பதற்கு சுவைத்தலை விட அதிகப்பொருள் உண்டு. ருசித்தல் என்றால் சுவைத்து அனுபவித்தல் ஆகும். மகிழ்ச்சியான கண்டுபிடிப்பின், விசுவாசமிக்க கீழ்படிதலின் ஆவியோடு நாம் வேதங்களைப் படிப்பதில் நாம் அவைகளை ருசிக்கிறோம். நாம் கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசிக்கும்போது, அவை ‘இருதயங்களாகிய சதையான பலகைகளில்’ பதிக்கப்படுகிறது [2 கொரிந்தியர் 3:3]. அவை நமது சுபாவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுகின்றன” (“Living by Scriptural Guidance,” Liahona, Jan. 2001, 21).

வேதங்களில் நம் ஆத்துமாக்கள் மகிழ்ச்சியடைந்தால் நாம் செய்ய வேண்டிய சில காரியங்கள் யாவை?

திரையின் இருபுறமும் இஸ்ரவேலின் கூடுகையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற நமது விருப்பம் அதிகரிக்கும். ஊழியக்காரர்களின் பேச்சைக் கேட்க நமது குடும்பத்தினரையும் நண்பர்களையும் நாம் அழைப்பது சாதாரணமானதும் இயல்பானதுமாகும். நாம் தகுதியானவர்களாக இருப்போம், மேலும் ஆலயத்துக்கு முடிந்தவரை அடிக்கடி செல்ல, தற்போதைய ஆலய பரிந்துரை வைத்திருப்போம். நமது முன்னோர்களின் பெயர்களைக் கண்டுபிடித்து, தயார் செய்து, ஆலயத்தில் சமர்ப்பிக்க பிரயாசப்படுவோம். நாம் ஓய்வுநாளை கடைபிடிப்பதில் உண்மையாக இருப்போம், நாம் திருவிருந்தில் தகுதியுடன் பங்கேற்கும்போது கர்த்தருடன் நம் உடன்படிக்கைகளை புதுப்பிக்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபையில் கலந்துகொள்கிறோம். தேவனின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழவும் உடன்படிக்கையின் பாதையில் நிலைத்திருக்கவும் நாம் தீர்மானிப்போம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:44 பார்க்கவும்).

கர்த்தருடைய காரியங்களில் களிகூர்வது என்றால் உங்களுக்கு என்ன அர்த்தமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

வேதங்களில் மகிழ்வது அறிவிற்கான பசி மற்றும் தாகத்தை விட அதிகமானது. நேபி தனது வாழ்நாளில் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவித்தான். இருப்பினும், அவன் சிரமங்களையும் சோகத்தையும் எதிர்கொண்டான் (2 நேபி 4:12–13 பார்க்கவும்). “ஆயினும்,” அவன் கூறினான், “நான் விசுவாசிக்கிறவர் இன்னாரென்று எனக்குத் தெரியும்” (2 நேபி 4:19) நாம் வேதங்களைப் படிக்கும்போது, தேவனின் இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதலின் திட்டத்தை நாம் நன்கு புரிந்துகொள்வோம், மேலும் அவர் வேதங்களில் நமக்கு அளித்த வாக்குறுதிகளையும், அதே போல் தற்கால தீர்க்கதரிசிகளின் வாக்குறுதிகள் மற்றும் ஆசீர்வாதங்களையும் நம்புவோம்.

படம்
தாவீதும் கோலியாத்தும்

ஒரு நாள் பிற்பகல், என் மனைவியும் நானும் ஒரு நண்பரின் வீட்டிற்கு அழைக்கப்பட்டோம். அவர்களின் ஏழு வயது மகன் டேவிட், தாவீது மற்றும் கோலியாத்தைப்பற்றிய வேதாகமக் கதையைக் கேட்டதில்லை, அவன் அதைக் கேட்க விரும்பினான். நான் கதையைச் சொல்லத் தொடங்கியபோது, தாவீது, தன்னுடைய விசுவாசத்தாலும், இஸ்ரவேலின் தேவனின் நாமத்தாலும், பெலிஸ்தியனைக் கையில் வாள் இல்லாமல் கவணாலும் கல்லாலும் காயப்படுத்தி கொன்றான் எனக் கேட்டதில் அவன் தொடப்பட்டான். (1 சாமுவேல் 17 பார்க்கவும்).

தன் பெரிய கறுப்பு கண்களால் என்னைப் பார்த்து, அவன் உறுதியாக என்னிடம் கேட்டான், “தேவன் யார்?” தேவன் நம் பரலோக பிதா என்றும் அவரைப்பற்றி நாம் வேதங்களில் கற்றுக்கொள்கிறோம் என்றும் நான் அவனுக்கு விளக்கினேன்.

பிறகு அவன் என்னிடம், “வேதங்கள் என்றால் என்ன?” என்று கேட்டான். நான் அவனிடம் வேதங்கள் தேவனின் வார்த்தை என்றும், தேவனை நன்கு அறிந்துகொள்ள உதவும் அழகான கதைகளை அவைகளில் அவன் கண்டுபிடிப்பான் என்றும் சொன்னேன். நான் அவனுடைய அம்மாவிடம் அவள் வீட்டில் இருந்த வேதாகமத்தை உபயோகிக்கச் சொன்னேன், டேவிட்டை முழு கதையையும் படிக்காமல் அவள் தூங்க விடக்கூடாது என்றும் சொன்னேன். அவன் அதைக் கேட்டு மகிழ்ந்தான். வேதங்கள் மற்றும் தேவனைப்பற்றிய நமது அறிவு, மிகப் பெரும்பாலும் எளிதாகக் கருதப்படும் வரங்கள் ஆகும். இந்த ஆசீர்வாதங்களைப் போற்றுவோமாக.

ஒரு இளைஞனாக ஊழியம் செய்யும்போது, வேதங்களுடன் எங்கள் கற்பித்தலால், பலரின் வாழ்க்கை மாற்றப்பட்டது என்பதை நான் கவனித்தேன். அவற்றில் உள்ள வல்லமை மற்றும் அவை எப்படி நம் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதை நான் அறிந்தேன். மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை நாங்கள் கற்பித்த ஒவ்வொரு நபரும் வெவ்வேறு தேவைகளைக் கொண்ட ஒரு தனித்துவமான நபர். பரிசுத்த வேதங்கள், ஆம், பரிசுத்த தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்கள், அவர்களை கர்த்தரில் விசுவாசம் மற்றும் மனந்திரும்புதலுக்கு கொண்டு வந்து அவர்களின் இருதயங்களை மாற்றியது.

அவர்கள் தேவைகளுக்கு உணர்த்துதல், வழிகாட்டுதல், ஆறுதல், வலிமை மற்றும் பதில்களைப் பெற்றதால் வேதங்கள் அவர்களை மகிழ்ச்சியால் நிரப்பின. அவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய முடிவு செய்து தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர்.

கிறிஸ்துவின் வார்த்தைகளில் மகிழ்ச்சியடைய நேபி நம்மை ஊக்குவிக்கிறான், ஏனென்றால் கிறிஸ்துவின் வார்த்தைகள் நாம் செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் நமக்குச் சொல்லும் (2 நேபி 32:3 பார்க்கவும்).

படம்
குடும்ப வேத படிப்பு

வேதங்களைப் படிக்க ஒரு நிரந்தரத் திட்டம் வகுக்க நான் உங்களை அழைக்கிறேன். சுவிசேஷத்தைக் கற்பிப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும், இயேசு கிறிஸ்துவிடம் நம் மனமாற்றத்தை ஆழப்படுத்துவதற்கும், அவரைப் போல ஆக உதவுவதற்கும் என்னைப் பின்பற்றி வாருங்கள், ஒரு சிறந்த ஆதாரமாகும். நாம் சுவிசேஷத்தைப் படிக்கும்போது, நாம் புதிய தகவலுக்காக மட்டும் தேடுவதில்லை, மாறாக நாம் “புதிய சிருஷ்டிகளாக” மாற விரும்புகிறோம் (2 கொரிந்தியர் 5:17).

பரிசுத்த ஆவியானவர் சத்தியத்துக்கு நம்மை வழிநடத்தி அந்த சத்தியத்தைப்பற்றி சாட்சி பகர்கிறார் (யோவான் 16:13 பார்க்கவும்). அவர் நமது மனங்களைத் தெளிவுபடுத்தி, நமது புரிதலுக்கு உயிரூட்டி, எல்லா சத்தியங்களின் ஆதாரமாகிய தேவனிடமிருந்து வெளிப்படுத்தலுடன் நமது இருதயங்களைத் தொடுகிறார். பரிசுத்த ஆவி நமது இருதயங்களை சுத்திகரிக்கிறது. சத்தியத்தின்படி வாழ நமக்குள் விருப்பத்தை உணர்த்துகிறார், மற்றும் இதை செய்ய நம்மிடம் வழிகளை கிசுகிசுக்கிறார். “பரிசுத்த ஆவியானவர் … உங்களுக்கு சகலகாரியங்களையும் போதிப்பார்” (யோவான் 14:26).

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு அவர் வெளிப்படுத்திய வார்த்தைகளைப்பற்றி பேசுகையில், நம் இரட்சகர் கூறினார்:

“இந்த வார்த்தைகள் மனிதர்களுடையதோ அல்லது மனிதனிடமிருந்தோ அல்ல, ஆனால் என்னுடையது; …

“இந்தச் சொற்களை உங்களிடம் பேசுவது என் குரல்; ஏனென்றால் அவை என் ஆவியினால் உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன … ;

“ஆகையால், நீங்கள் என் குரலைக் கேட்டீர்கள் மற்றும் என் வார்த்தைகளை அறிவீர்கள் என்று நீங்கள் சாட்சியளிக்க முடியும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:34–36).

நாம் பரிசுத்த ஆவியின் தோழமையை நாட வேண்டும். இந்த இலக்கே நம்முடைய தீர்மானங்களை ஆளுகை செய்து நம்முடைய சிந்தனைகளையும் செயல்களையும் வழிநடத்த வேண்டும். பரிசுத்த ஆவியின் செல்வாக்கை அழைக்கும் அனைத்தையும் நாம் தேட வேண்டும் மற்றும் இந்த செல்வாக்கிலிருந்து விலகும் எதையும் நிராகரிக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்து நம் பரலோக பிதாவின் நேச குமாரன் என்று நான் சாட்சியளிக்கிறேன். நான் என் இரட்சகரை நேசிக்கிறேன். அவருடைய வேதங்கள் மற்றும் அவருடைய ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தலைவர் நெல்சன், அவருடைய தீர்க்கதரிசி. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.