பொது மாநாடு
அன்றாட மறுஸ்தாபிதம்
அக்டோபர் 2021 பொது மாநாடு


அன்றாட மறுஸ்தாபிதம்

பரலோக ஒளியின் தொடர்ச்சியான, தினசரி ஊடுருவல் நமக்குத் தேவை. நமக்கு “புத்துணர்ச்சியூட்டும் நேரங்கள்” தேவை. தனிப்பட்ட மறுஸ்தாபித நேரம்.

கிறிஸ்துவைப்பற்றி பேசவும், அவருடைய சுவிசேஷத்தில் மகிழ்ச்சியடையவும், நமது இரட்சகரின் “வழியில்”1 நாம் நடக்கும்போது ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், ஆதரிக்கவும் இந்த அழகான ஓய்வுநாள் காலை நாம் கூடியிருக்கிறோம்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்களாக, இந்த நோக்கத்திற்காக ஆண்டு முழுவதும் ஒவ்வொரு ஓய்வு நாளிலும் நாம் கூடுகிறோம். நீங்கள் சபை உறுப்பினராக இல்லாவிட்டால், நாங்கள் உங்களை மிகவும் அன்புடன் வரவேற்கிறோம், இரட்சகரை ஆராதிக்கவும் அவரிடத்திலிருந்து கற்றுக்கொள்ளவும் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி. உங்களைப் போலவே, நாங்கள் அபூரணமாக இருந்தாலும், சிறந்த நண்பர்களாகவும், அயலார்களாகவும், மனிதர்களாகவும் இருக்க முயற்சி செய்கிறோம்,2 எங்கள் முன்மாதிரியான இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி இதைச் செய்ய முற்படுகிறோம்.

படம்
இரட்சகர் இயேசு கிறிஸ்து

எங்கள் சாட்சியின் நேர்மையை நீங்கள் உணர்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார்! அவர் ஜீவிக்கிற தேவனின் குமாரன், அவர் நம் காலத்தில் பூமியில் தீர்க்கதரிசிகளை வழிநடத்துகிறார். அனைவரையும் வரவும், தேவனின் வார்த்தையைக் கேட்கவும், அவருடைய நன்மையில் பங்கு கொள்ளவும் நாங்கள் அழைக்கிறோம்! தேவன் நம் மத்தியில் இருக்கிறார் என்பதற்கும், அவரிடம் நெருங்கி வரும் அனைவரிடமும் அவர் நிச்சயம் அருகில் வருவார் என்பதற்கும் நான் தனிப்பட்ட சாட்சியமளிக்கிறேன்.3

போதகரின் இடுக்கமான மற்றும் குறுகிய சீஷத்துவ பாதையில் உங்களுடன் நடப்பதை நாங்கள் கவுரவமாக கருதுகிறோம்.

ஒரு நேர் கோட்டில் நடக்கும் கலை

வட்டங்களில் நடந்து காணாமற்போனவர்கள் என்று அடிக்கடி மீண்டும் மீண்டும் சொல்லப்படும் கோட்பாடு உள்ளது. அண்மையில், உயிரியல் சைபர்நெடிக்ஸ் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டின் விஞ்ஞானிகள் அந்த கோட்பாட்டை சோதித்தனர். அவர்கள் பங்கேற்பாளர்களை ஒரு அடர்ந்த காட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு எளிய வழிமுறைகளை வழங்கினர்: “ஒரு நேர் கோட்டில் நடக்கவும்.” காணக்கூடிய அடையாளங்கள் எதுவும் இல்லை. சோதிக்கப்படுபவர்கள் தங்கள் திசை உணர்வை மட்டுமே நம்பியிருக்க வேண்டும்.

அவர்கள் எப்படி செய்தார்கள் என்று நினைக்கிறீர்கள்?

“நடமாடும் திசைக்கு நம்பகமான குறிப்புகள் இல்லாதபோது உண்மையில் மக்கள் வட்டங்களில் நடக்கிறார்கள்”4 என விஞ்ஞானிகள், முடிவுசெய்தார்கள். பின்னர் விசாரித்தபோது, சில பங்கேற்பாளர்கள் தாங்கள் சிறிதும் விலகவில்லை என்று தன்னம்பிக்கையுடன் கூறினர். அவர்களுக்கு அதிக நம்பிக்கை இருந்தபோதிலும், ஜிபிஎஸ் தரவு அவர்கள் 20 மீட்டர் விட்டம் கொண்ட இறுக்கமான சுற்றுக்களில் நடந்ததாகக் காட்டியது.

நேர்கோட்டில் நடப்பது நமக்கு ஏன் மிகக் கடினமான நேரமாயிருக்கிறது? நிலப்பரப்பில் சிறியதாகத் தோன்றும் சிறிய மாற்றுப்பாதைகள் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மற்றவர்கள் நம் அனைவருக்கும் ஒரு கால் மற்றதை விட சற்று வலிமையானது என்ற உண்மையை சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், “பெரும்பாலும்,” நேராக முன்னோக்கி நடக்க போராடுகிறோம். “[ஏனெனில்] நேர் முன்னால் எங்கே இருக்கிறது என்பது பற்றி நிச்சயமற்ற தன்மை அதிகரித்து வருகிறது.”5

காரணம் எதுவாக இருந்தாலும், அது மனித இயல்பு: நம்பகமான அடையாளங்கள் இல்லாமல், நாம் பாதையிலிருந்து விலகிச் செல்கிறோம்.

பாதையிலிருந்து வழிதவறுதல்

எவ்வளவு சிறிய, முக்கியமற்ற காரணிகள் நம் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது சுவாரஸ்யமானது அல்லவா?

ஒரு விமானியாக தனிப்பட்ட அனுபவத்திலிருந்து இதை நான் அறிவேன். ஒவ்வொரு முறையும் நான் ஒரு விமான நிலையத்தை அணுகத் தொடங்கியபோது, விரும்பிய தரையிறங்கும் ஓடுபாதைக்கு விமானத்தை பாதுகாப்பாக வழிநடத்த சிறிய திருத்தங்களைச் செய்வதே எனது வேலையின் பெரும்பகுதியாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

வாகனம் ஓட்டும்போது உங்களுக்கும் இதே போன்ற அனுபவம் இருக்கலாம். மற்ற ஓட்டுனர்களின் செயல்களைக் குறிப்பிடாமல், காற்று, சாலை முறைகேடுகள், அபூரண சக்கர சீரமைப்பு, கவனக்குறைவு, இவை அனைத்தும் உங்களை நீங்கள் நினைத்த பாதையிலிருந்து தள்ளிவிடும். இந்த காரணிகளுக்கு கவனம் செலுத்தத் தவறினால், நீங்கள் ஒரு மோசமான நாளில் முடிக்கலாம்.6

படம்
குளத்தில் கார்

இது நமக்கு உடல் ரீதியாக பொருந்தும்.

இது ஆவிக்குரிய ரீதியிலும் நமக்குப் பொருந்தும்.

நமது ஆவிக்குரிய வாழ்வில் நேர்மறை மற்றும் எதிர்மறையான பெரும்பாலான மாற்றங்கள், , படிப்படியாக, ஒரு நேரத்தில் ஒரு படியாக நடக்கின்றன. மேக்ஸ் பிளாங்க் ஆய்வில் பங்கேற்பாளர்களைப் போலவே, நாம் வழியை விட்டு விலகிச் செல்லும்போது நம்மால் உணர முடியாதிருக்கலாம். நாம் ஒரு நேர் கோட்டில் நடக்கிறோம் என்ற அதிக நம்பிக்கை நமக்கு இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், நமக்கு வழிகாட்டும் அடையாளங்களின் உதவியின்றி, நாம் தவிர்க்க முடியாமல் வழியிலிருந்து விலகி, நாம் ஒருபோதும் நினைக்காத இடங்களுக்குச் சென்றுவிடுவோம்.

இது தனிநபர்களைப் பொருத்தவரை உண்மை. இது சமூகங்கள் மற்றும் நாடுகளுக்கும் பொருந்தும். வேதங்கள் எடுத்துக்காட்டுகளால் நிரப்பப்பட்டுள்ளன.

யோசுவா மரித்த பிறகு “கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காக செய்ததையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப் பின் எழும்பிற்று” என நியாயாதிபதிகள் புத்தகம் பதிவு செய்கிறது. 7

வியக்க வைக்கும் பரலோக இடைபடுதல்கள், சந்திப்புகள், மீட்பு மற்றும் அற்புத வெற்றிகளை இஸ்ரவேலின் பிள்ளைகள் மோசே மற்றும் யோசுவாவின் வாழ்நாளில் கண்டபோதிலும், ஒரு தலைமுறைக்குள் மக்கள் வழியைக் கைவிட்டு தங்கள் விருப்பப்படி நடக்கத் தொடங்கினர். மற்றும், நிச்சயமாக, அவர்கள் அந்த நடத்தைக்கான விலையை செலுத்துவதற்கு அது நீண்ட காலம் எடுக்கவில்லை.

சில நேரங்களில் இந்த வீழ்ச்சிக்கு தலைமுறைகள் எடுக்கும். சில நேரங்களில் அது சில வருடங்கள் அல்லது மாதங்களில் கூட நடக்கும்.8 ஆனால் நாம் அனைவரும் பாதிக்கப்படக்கூடியவர்கள். கடந்த காலத்தில் நமது ஆவிக்குரிய அனுபவங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும், மனிதர்களாகிய நாம் அலைந்து திரிகிறோம். ஆதாமின் நாட்களில் இருந்து இப்போது வரை இதுதான் மாதிரியாக இருந்திருக்கிறது.

இதோ நற்செய்தி

ஆனால், அனைத்தும் இழக்கப்படவில்லை. அலைந்து திரியும் சோதனை பாடங்களைப் போலல்லாமல், நமது பாதையை மதிப்பீடு செய்ய நாம் பயன்படுத்தக்கூடிய நம்பகமான, புலப்படும் அடையாளங்கள் நம்மிடம் உள்ளன.

இந்த அடையாளங்கள் யாவை?

நிச்சயமாக அன்றாட ஜெபம் மற்றும் வேதங்களைப்பற்றி சிந்திப்பது மற்றும் என்னைப் பின்பற்றி வாருங்கள், போன்ற உணர்த்தப்பட்ட கருவிகளைப் பயன்படுத்துதலும் அவைகளில் அடங்கும். ஒவ்வொரு நாளும், நாம் தேவனின் சிம்மாசனத்தை தாழ்மையுடனும் நேர்மையுடனும் அணுகலாம். நம் விருப்பத்தையும் வாஞ்சைகளையும் அவருடைய ஒளியில் கருத்தில் கொண்டு, நாம் நமது செயல்களைச் சிந்திக்கலாம் மற்றும் நம் நாளின் தருணங்களை மறுபரிசீலனை செய்யலாம். நாம் திசைதிருப்பப்பட்டிருந்தால், நம்மை மீட்கும்படி தேவனிடம் கெஞ்சுகிறோம், மேலும் சிறப்பாகச் செய்ய நாம் உறுதியளிக்கிறோம்.

படம்
அவரது ஆடுகளை இரட்சகர் வழிநடத்துகிறார்

இந்த சுயபரிசோதனை நேரம் மறுசீரமைப்புக்கான ஒரு வாய்ப்பாகும். இது நாம் கர்த்தருடன் நடக்க மற்றும் நம் பரலோக பிதாவின் எழுதப்பட்ட மற்றும் ஆவி வெளிப்படுத்திய வார்த்தையால் அறிவுறுத்தப்பட்டு, திருத்தப்பட்டு, சுத்திகரிக்கப்படக்கூடிய ஒரு பிரதிபலிப்பின் தோட்டம். மென்மையான கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான நமது பரிசுத்த உடன்படிக்கைகளை நாம் நினைவுகூரும்போது, நம் முன்னேற்றத்தை மதிப்பிட்டு, தேவன் தனது பிள்ளைகளுக்கு வழங்கிய ஆவிக்குரிய அடையாளங்களுடன் நம்மைச் சீரமைக்கும்போது, இது பரிசுத்தமான நேரம்.

அதை உங்கள் தனிப்பட்ட, அன்றாட மறுஸ்தாபிதமாக நினைத்துப் பாருங்கள். மகிமையின் பாதையில் யாத்ரீகர்களாகிய நமது பயணத்தில், பாதை மாறுவது எவ்வளவு எளிது என்பது நமக்குத் தெரியும். ஆனால், சிறு விலகல்கள் நம்மை இரட்சகரின் வழியிலிருந்து வெளியே இழுப்பது போல், சிறிய மற்றும் எளிமையான மறுசீரமைப்புச் செயல்களும் நிச்சயம் நம்மைத் திரும்ப அழைத்துச் செல்லும். இது பெரும்பாலும் செய்கிறதைப்போல, இருள் நம் வாழ்வில் ஊடுருவிச் செல்லும்போது, நமது அன்றாட மறுஸ்தாபிதம் நம் இருதயங்களை பரலோக ஒளிக்கு திறக்கிறது, நிழல்கள், அச்சங்கள் மற்றும் சந்தேகங்களை விரட்டி, இது நம் ஆத்துமாவை ஒளிரச் செய்கிறது.

சிறிய சுக்கான்கள், பெரிய கப்பல்கள்

நாம் அதைத் தேடினால், நிச்சயமாக “அவருடைய பரிசுத்த ஆவியினால் தேவன் [நமக்கு]அறிவைக் கொடுப்பார், ஆம், பரிசுத்த ஆவியின் சொல்லமுடியாத வரத்தினால் கொடுப்பார்.”9 நாம் கேட்கும் போதெல்லாம், அவர் நமக்கு வழியைக் கற்பிப்பார், அதைப் பின்பற்ற நமக்கு உதவுவார்.

நிச்சயமாக, இதற்கு நமது தரப்பில் நிலையான முயற்சி தேவைப்படும். கடந்த கால ஆவிக்குரிய அனுபவங்களால் நாம் திருப்தியடைய முடியாது. நமக்கு நிலையான போக்கு தேவை.

நாம் மற்றவர்களின் சாட்சியங்களை என்றென்றைக்கும் சார்ந்திருக்க முடியாது. நாம் சொந்தமாக கட்டியெழுப்ப வேண்டும்.

பரலோக ஒளியின் தொடர்ச்சியான, தினசரி ஊடுருவல் நமக்குத் தேவை.

நமக்கு “புத்துணர்ச்சியூட்டும் நேரங்கள்” தேவை.10 தனிப்பட்ட மறுஸ்தாபித நேரம்.

“ஓடுகின்ற தண்ணீர்கள்” நீண்ட காலமாக “அசுத்தமாயிருக்க முடியாது”.11 நம் எண்ணங்களையும் செயல்களையும் தூய்மையாக வைத்திருக்க, நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்!

எல்லாவற்றிற்கும் மேலாக, சுவிசேஷம் மற்றும் சபையின் மறுஸ்தாபிதம் என்பது ஒரு முறை நிகழ்ந்து முடிவடைந்த ஒன்றல்ல. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை, ஒரு நேரத்தில் ஒரு நாள், ஒரு நேரத்தில் ஒரு இதயம்.

நமது நாட்கள் செல்லச்செல்ல, நமது வாழ்க்கையும் போகும். ஒரு ஆசிரியர் இதை இவ்வாறு கூறினார்: “ஒரு நாள் முழு வாழ்க்கையைப் போன்றது. நீங்கள் ஒன்றைச் செய்யத் தொடங்குகிறீர்கள், ஆனால் வேறு ஏதாவது செய்து முடிக்கிறீர்கள், ஒரு வேலையைச் செய்யத் திட்டமிடுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் அங்கு செல்வதில்லை. … உங்கள் வாழ்க்கையின் முடிவில், உங்கள் முழு வாழ்க்கையும் அதே சீரற்ற தரத்தைக் கொண்டுள்ளது. உங்கள் முழு வாழ்க்கையும் ஒரே நாளைப் போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது.”12

உங்கள் வாழ்க்கையின் வடிவத்தை மாற்ற விரும்புகிறீர்களா?

உங்கள் நாளின் வடிவத்தை மாற்றவும்.

உங்கள் நாளை மாற்ற வேண்டுமா?

இந்த மணிநேரத்தை மாற்றவும்.

இந்த நேரத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உணர்கிறீர்கள் மற்றும் செய்கிறீர்கள் என்பதை மாற்றவும்.

ஒரு சிறிய சுக்கான் ஒரு பெரிய கப்பலை திருப்ப முடியும்.13

சிறிய செங்கற்கள் அற்புதமான மாளிகைகளாக மாறும்.

சிறிய விதைகள் உயர்ந்த சீக்வோயாக்களாக மாறும்.

நன்றாக செலவழித்த நிமிடங்கள் மற்றும் மணிநேரங்கள், நன்றாக வாழ்ந்த ஒரு வாழ்க்கையின் கட்டுமான செங்கற்கள். அவர்கள் நன்மையை உணர்த்தலாம், குறைபாடுகளின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை உயர்த்தலாம், மேலும் மன்னிப்பு மற்றும் பரிசுத்தப்படுத்துதலின் மீட்புப் பாதைக்கு நம்மை மேலே வழிநடத்திச் செல்லலாம்.

புதிய தொடக்கங்களின் தேவன்

உங்களுடன், புதிய வாய்ப்பு, புதிய வாழ்க்கை, புதிய நம்பிக்கை ஆகியவற்றின் அற்புதமான பரிசுக்கு என் இருதயத்தை நன்றியுடன் உயர்த்துகிறேன்.

நமது உதாரத்துவ மற்றும் மன்னிக்கும் தேவனைப் புகழ்ந்து குரல் எழுப்புகிறோம். ஏனெனில் நிச்சயமாக, அவர் புதிய தொடக்கங்களின் தேவன். அவரது பிரயாசத்தின் உயர்ந்த நோக்கத்தின் முடிவு, அவரது பிள்ளைகளாகிய நமக்கு, நமது தேடலில் அழியாமையையும் நித்திய ஜீவனையும் வெற்றிகொள்வதே. 14

நாம் கிறிஸ்துவில் புதிய சிருஷ்டிகளாக மாறலாம், ஏனென்றால் தேவன் வாக்களித்திருக்கிறார், “எவ்வளவுக்கெவ்வளவு ஜனங்கள் மனந்திரும்புவார்களோ அவ்வளவாய் எனக்கு விரோதமான அவர்களது மீறுதல்களை நான் மன்னிப்பேன்,”15 “அவற்றை மீண்டும் நினைவுகூரமாட்டேன்.”16

என் அன்பு சகோதர சகோதரிகளே, அன்பான நண்பர்களே, நாம் அனைவரும் அவ்வப்போது சருக்குகிறோம்.

ஆனால் நாம் பாதைக்குத் திரும்பலாம். இந்த வாழ்க்கையின் இருள் மற்றும் சோதனைகளின் வழியாக நாம் செல்லலாம் மற்றும் அவர் வழங்கிய ஆவிக்குரிய அடையாளங்களை நாடினால், நம் அன்பான பரலோக பிதாவிடம் திரும்பிச் செல்லலாம். தனிப்பட்ட வெளிப்பாட்டைத் தழுவி, அன்றாட மறுஸ்தாபிதத்துக்கு பாடுபடலாம். இப்படித்தான் நாம் நம் அன்புக்குரிய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக ஆகிறோம்.

நாம் அவ்வாறு செய்யும்போது, தேவன் நம்மைப் பார்த்து புன்னகைப்பார். “உன் தேவனாகிய கர்த்தர் … உனக்குக் கொடுக்கும் தேசத்தில் உன்னை ஆசீர்வதிப்பார். கர்த்தர் உன்னைத் தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.”17

நாம் அன்றாட மறுஸ்தாபிதத்தை தேடுவோம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் வழியில் நடக்க தொடர்ந்து முயற்சிப்போம் என்பது எனது ஜெபமாகும். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. இயேசு சொன்னார், ”நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.”(யோவான் 14:6). என்.ஐ.வி முதல் நூற்றாண்டு ஆய்வு வேதாகமம் இந்த விளக்கத்தைக் கொண்டுள்ளது: “எபிரேய வேதாகமத்தில் ஒரு பாதை அல்லது வழியின் உருவம் பெரும்பாலும் தேவனின் கட்டளைகள் அல்லது போதனைகளைக் கடைப்பிடிப்பதற்காக நிற்கிறது [சங்கீதம் 1: 1 ; 16:11; 86:11 பார்க்கவும்]. நம்பிக்கைகள், போதனைகள் அல்லது நடைமுறைகளின் தொகுப்பில் உற்சாகமான பங்கேற்பதற்கான பொதுவான பழங்கால உருவகம் இது. அவர் சவக்கடல் சுருள் சங்கம் தங்களை ‘வழியைப்’ பின்பற்றுபவர்கள் என்று அழைத்தனர், இதன் மூலம் அவர்கள் தேவனை மகிழ்விக்கும் பாதையின் சொந்த விளக்கத்தைப் பின்பற்றுபவர்கள் என்று அர்த்தம். பவுல் மற்றும் முதல் கிறிஸ்தவர்கள் தங்களை ‘வழியைப் பின்பற்றுபவர்கள்’ என்று அழைத்தனர் [அப்போஸ்தலர் நடபடிகள் 24:14 பார்க்கவும்] (in “What the Bible Says about the Way, the Truth, and the Life,” Bible Gateway, biblegateway.com/topics/the-way-the-truth-and-the-life).

    1873 ஆம் ஆண்டில், கான்ஸ்டான்டினோப்பிளில் உள்ள எருசலேம் கோத்திர பிதா நூலகத்தில் டிடாச்சே என்ற தலைப்பில் ஒரு பழங்கால புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது. பல அறிஞர்கள் இது முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் (கிபி 80–100) எழுதப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக நம்புகிறார்கள். டிடாச்சே இந்த வார்த்தைகளுடன் தொடங்குகிறது: “இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று வாழ்க்கை மற்றும் ஒரு மரணம், ஆனால் இரண்டு வழிகளுக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அப்படியானால், வாழ்க்கை முறை இதுதான்: முதலில், உன்னை உருவாக்கிய தேவனை நீ நேசிக்க வேண்டும்; இரண்டாவதாக, உங்களைப் போலவே உங்கள் அயலாரையும் நேசிக்க வேண்டும்” (Teaching of the Twelve Apostles, trans. Roswell D. Hitchcock and Francis Brown [1884], 3).

    தி எக்ஸ்போசிட்டரின் வேதாகம வர்ணனை போன்ற பிற ஆதாரங்கள், “சபையின் ஆரம்பகாலத்தில், இயேசு மேசியா என ஏற்றுக்கொண்டு அவரைத் தங்கள் கர்த்தர் என்று கூறியவர்கள் தங்களை ‘வழி’ என்று அழைத்தனர். [அப்போஸ்தலர் நடபடிகள்19:9, 23; 22:4; 24:14, 22 பார்க்கவும்]” (ed. Frank E. Gaebelein and others [1981], 9:370).

  2. மோசியா 2:17 பார்க்கவும்.

  3. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:63 பார்க்கவும்.

  4. “Walking in Circles,” Aug. 20, 2009, Max-Planck-Gesellschaft, mpg.de.

  5. “Walking in Circles,” mpg.de. இந்த உருவம் ஆய்வில் நான்கு பங்கேற்பாளர்களின் ஜி.பி.எஸ் கண்காணிப்பைக் காட்டுகிறது. அவர்களில் மூன்று பேர் மேகமூட்டமான நாளில் நடந்தார்கள். அவர்களில் ஒருவர் (SM) சூரியன் மேகங்களால் மூடப்பட்டிருக்கும் போது நடக்கத் தொடங்கினார், ஆனால் 15 நிமிடங்களுக்குப் பிறகு மேகங்கள் சிதறின, மேலும் பங்கேற்பாளர் சூரியனைப் பார்க்க முடிந்தது. சூரியன் தெரிந்தவுடன், ஒரு நேர்கோட்டில் நடப்பதில் நடப்பவர் மிகவும் வெற்றிகரமாக இருந்தார் என்பதைக் கவனியுங்கள்.

  6. வெறும் இரண்டு டிகிரி பாதை பிழையானது, அண்டார்டிகாவில் உள்ள எரெபஸ் மலையில் ஒரு பயணிகள் ஜெட் விமானத்தை விபத்துக்குள்ளாக்கி, 257 பேரைக் கொன்றது என்பதற்கான ஒரு சோகமான உதாரணத்திற்கு, Dieter F. Uchtdorf,“A Matter of a Few Degrees,” Liahona, May 2008, 57–60 பார்க்கவும்.

  7. நியாயாதிபதிகள் 2:10.

  8. கிறிஸ்துவின் அமெரிக்க வருகைக்குப் பிறகு, மக்கள் தங்கள் பாவங்களுக்காக உண்மையிலேயே மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியைப் பெற்றனர். அவர்கள் ஒரு காலத்தில் சர்ச்சைக்குரிய மற்றும் பெருமைமிக்க மக்களாக இருந்த இடத்தில், இப்போது “அவர்களிடையே எந்தவிதமான சச்சரவுகளும் பிணக்குகளும் இல்லை, ஒவ்வொரு மனிதனும் ஒருவருக்கொருவர் நியாயமாக நடந்து கொண்டார்கள்” (4 நேபி 1: 2). இந்த நீதியின் காலம் பெருமை மக்களை வழியிலிருந்து திருப்பத் தொடங்குவதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நீடித்தது. இருப்பினும், ஆவிக்குரிய சறுக்கலும் மிக விரைவாக நிகழலாம். உதாரணமாக, பல தசாப்தங்களுக்கு முன்னர், மார்மன் புஸ்தகத்தில் நியாயாதிபதிகளின் ஆட்சியின் 50 வது ஆண்டில், மக்களிடையே “தொடர்ச்சியான அமைதியும் மிகுந்த மகிழ்ச்சியும்” இருந்தது. ஆனால் சபை உறுப்பினர்களின் இருதயத்தில் நுழைந்த பெருமையின் காரணமாக, நான்கு வருடங்களுக்குப் பிறகு “சபையில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன, மேலும் மக்களிடையே ஒரு சர்ச்சை இருந்தது, அதனால் அதிக இரத்தம் சிந்தப்பட்டது” (ஏலமன் 3:32–4:1 பார்க்கவும்).

  9. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:26.

  10. அப்போஸ். 3:19.

  11. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:33.

  12. Michael Crichton, Jurassic Park (2015), 190.

  13. “கப்பல்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அவை மிகப் பெரியதாகவும், பலத்த காற்றால் உந்தப்பட்டாலும், விமானி எங்கு செல்ல விரும்புகிறாறோ அங்கெல்லாம் அவை மிகச் சிறிய சுக்கானால் இயக்கப்படுகின்றன” (James 3:4; New International Version).

  14. மோசே 1:39 பார்க்கவும்.

  15. மோசியா 26:30.

  16. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:42.

  17. உபாகமம் 28:8–9; மற்றும் வசனங்கள் 1–7 ஐயும் பார்க்கவும்.