பொது மாநாடு
ஆரம்பச் செய்தி
ஏப்ரல் 2020 பொது மாநாடு


ஆரம்பச் செய்தி

பரிசுத்த ஆவியின் வல்லமை மற்றும் ஊழியம் மூலமாக நம்மிடம் பேசும் இயேசு கிறிஸ்துவுக்கு செவிகொடுக்க நம்மால் முடிந்த எல்லா வழியிலும் நாம் நாடவேண்டும்.

என் அன்பான சகோதர சகோதரிகளே, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த ஏப்ரல் 2020 பொது மாநாட்டிற்கு நாங்கள் உங்களை வரவேற்கும்போது, உங்களுக்குத் தெரிந்த காரணங்களுக்காக, நான் ஒரு வெற்று அரங்கத்தில் நின்றுகொண்டிருக்கிறேன்!

இந்த ஏப்ரல் மாநாடு “நினைவுகூரத்தக்கது” மற்றும் “மறக்க முடியாதது” என்று அக்டோபர் 2019 பொது மாநாட்டில் நான் உங்களுக்கு வாக்களித்தபோது, காணக்கூடிய 10 க்கும் குறைவான நபர்களான பார்வையாளர்களுடன் பேசுவது எனக்கு, இந்த மாநாட்டை மிகவும் நினைவுகூரத்தக்கதாக மற்றும் மறக்க முடியாததாக மாற்றும் என்பதைப்பற்றி எனக்கு சிறிதே தெரியும். இருந்தும், மின்னணு பரிமாற்றம் மூலம் நீங்கள் பங்கேற்கிறீர்கள் என்று அறிவதும், இசைக் குழுவினரின் “It Is Well with My Soul,” என்ற பாடலின் அழகிய விளக்கமும் என்னுடைய ஆத்துமாவுக்கு மிகுந்த ஆறுதலைக் கொண்டுவருகிறது.

உங்களுக்குத் தெரிந்ததைப்போல, நல்ல உலகளாவிய குடிமக்களாக இருக்கவும், கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவும், நமது முயற்சிகளின் பகுதியாக இந்த பொது மாநாட்டில் கலந்துகொள்ளுதல், கண்டிப்பாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிருமி உலகமுழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நமது சபைக் கூட்டங்களையும், ஊழிய சேவையையும், சிறிது காலத்திற்கு ஆலயப் பணியையும் தற்காலிகமாக மாற்றியிருக்கிறது.

இன்றைய கட்டுப்பாடுகள் கடுமையான நச்சுக்கிருமிக்கு தொடர்புடையதாயிருந்தாலும், வாழ்க்கையின் தனிப்பட்ட சோதனைகள் இந்த தொற்றுநோய்க்கு அப்பாற்பட்டதாகும். வருங்கால சோதனைகள், விபத்து, இயற்கை பேரழிவு அல்லது எதிர்பாராத தனிப்பட்ட மனவேதனையால் ஏற்படலாம்.

இத்தகைய சோதனைகளை நாம் எவ்வாறு சகித்திருக்கலாம்? “நீங்கள் ஆயத்தமாயிருந்தால் நீங்கள் பயப்படமாட்டீர்கள்”1 என கர்த்தர் நமக்குக் கூறியிருக்கிறார். நிச்சயமாக, உடல் ரீதியாக, நம்முடைய சொந்த இருப்புகளான உணவு, தண்ணீர் மற்றும் சேமிப்புகளை நாம் சேமித்து வைக்கமுடியும் ஆனால், விசுவாசம், சத்தியம் மற்றும் சாட்சியத்தால் நம்முடைய தனிப்பட்டஆவிக்குரிய களஞ்சியங்களை நிரப்ப வேண்டிய அவசியமும் சமமாக முக்கியமானது.

நமது சிருஷ்டிகரை சந்திக்க ஆயத்தப்படுவதே வாழ்க்கையில் நம்முடைய இறுதியான தாகமாயிருக்கிறது. நமது இரட்சகரான இயேசு கிறிஸ்துவைப்போல மாறுவதற்கு தினமும் முயற்சி செய்வதில் இதை நாம் செய்கிறோம்.2 தினமும் நாம் மனந்திரும்பி, அவருடைய சுத்திகரிக்கும், குணமாக்குதலின் மற்றும் பெலப்படுத்தும் வல்லமையைப் பெறும்போது, நாம் அதைச் செய்கிறோம். பின்னர், கொந்தளிப்பான காலங்களிலும்கூட, நிலைத்திருக்கிற சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் நாம் உணர முடியும். இதனால்தான், பரிசுத்த ஸ்தலங்களில் நிற்கவும் “அசையாதிருக்கவும்”3 கர்த்தர் நம்மை வேண்டிக்கொண்டார்.

பிதாவாகிய தேவனும் அவருடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் ஜோசப் ஸ்மித்துக்கு தரிசனமானது உலக வரலாற்றில் மிக விசேஷித்த நிகழ்வுகளில் ஒன்றான 200 வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டில் நாம் நினைவுகூருகிறோம். அந்த ஒற்றை தரிசனத்தில், பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டி, “இவர் என் நேச குமாரன். அவருக்கு செவிகொடுங்கள்!”4 என்றார்.

ஜோசப்புக்குக் கொடுக்கப்பட்ட அந்த அறிவுரை நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியின் வல்லமை மற்றும் ஊழியம் மூலமாக நம்மிடம் பேசும் இயேசு கிறிஸ்துவுக்கு செவிகொடுக்க நம்மால் முடிந்த எல்லா வழியிலும் நாம் நாடவேண்டும்.

இதன் மற்றும் ஒவ்வொரு பொது மாநாட்டின் நோக்கமும் அவருக்குச் செவிகொடுக்க நமக்கு உதவுவதே. இரட்சகர் உங்களுக்காக, குறிப்பாக உங்களுக்காக உள்ள செய்திகளை, உங்கள் ஆத்துமாவுக்கு அமைதியைக் கொடுக்கும் செய்திகளை நீங்கள் கேட்கும் அளவுக்கு அத்தகைய செழிப்பான ஏராளத்தில் கர்த்தருடைய ஆவியானவர் நம்முடன் இருப்பார் என்று நாங்கள் ஜெபித்தோம், ஜெபிக்க உங்களை அழைக்கிறோம். உங்கள் நொறுங்கிய இருதயத்தை குணப்படுத்தும் செய்திகள். உங்கள் மனதிற்கு ஒளியேற்றும் செய்திகள். கொந்தளிப்பு மற்றும் சோதனையின் காலங்கள் வழியே நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள உதவக்கூடிய செய்திகள்.

நீங்கள் கேட்கப்போகிற செய்திகள், செய்யப்படப்போகிற தனித்துவமான அறிவிப்புகள் மற்றும் நீங்கள் பங்கேற்க அழைக்கப்படும் அனுபவங்களினால் இந்த மாநாடு நினைவுகூரப்படத்தக்கதாகவும் மறக்க முடியாததாகவும் இருக்க நாங்கள் ஜெபிக்கிறோம்.

உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலைக் கூட்டத்தின் முடிவில், புனிதமான ஓசன்னா சத்தத்தில் நான் உங்களை வழிநடத்தும் போது உலகளாவிய பயபக்தியான கூடிச்சேருதலை நாங்கள் கூட்டுவோம். இந்த தனித்துவமான வழியில் அவர்களைத் துதிப்பதன் மூலம் பிதாவாகிய தேவனுக்கும் அவருடைய நேச குமாரனுக்கும் நம்முடைய ஆழ்ந்த நன்றியை உலகளாவிய ஒற்றுமையில் நாம் தெரிவிப்பதால் இது உங்களுக்கு ஒரு ஆவிக்குரிய சிறப்பம்சமாக இருக்கும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்.

இந்த பரிசுத்த அனுபவத்திற்காக, நாம் சுத்தமான வெள்ளை கைக்குட்டைகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் கைக்குட்டை ஒன்று உங்களிடம் இல்லையானால், நீங்கள் கையை மட்டும் அசைக்கலாம். ஓசன்னா சத்தத்தின் முடிவில், “The Spirit of God”5 என்ற பாடலைப் பாடுவதில் தேர்ந்திசைக் குழுவினருடன் சபையோர் சேர்ந்துகொள்வார்கள்.

என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே, இந்த மாநாடு மகத்துவமாயிருக்கும். இரட்சகர் மற்றும் அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தில் நாம் தீவிரமாக கவனம் செலுத்தும்போது இந்த ஆண்டு அசாதாரணமாக இருக்கும். இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டின் மிக முக்கியமான நீடித்த விளைவுகள், நமது இருதயங்கள் மாறுவதாகவும், அவருக்குச் செவிகொடுக்க வாழ்நாள் தேடலைத் தொடங்குவதாயுமிருக்கும்.

ஏப்ரல் 2020 பொது மாநாட்டிற்கு வரவேற்கிறோம்! நமது தேவனாகிய பரலோக பிதாவும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் நம்மீது அக்கறை உள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவர்களுக்கு நெருக்கமாக வரும்போதும், அவர்களைக் கனம்பண்ணவும், நாம் நாடும்போது, இந்த இரண்டு மகிமையான நாட்களின் கூட்டங்கள் முழுவதிலும் அவர்கள் நம்மோடிருப்பார்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.