பொது மாநாடு
வாருங்கள் சொந்தமாகுங்கள்
ஏப்ரல் 2020 பொது மாநாடு


வாருங்கள் சொந்தமாகுங்கள்

இந்த மிகப்பெரிய முயற்சியில் நம்மோடு சேர உலகமுழுவதிலுமுள்ள தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்.

எனக்கன்பான சகோதர, சகோதரிகளே, எனக்கன்பான நண்பர்களே, உலகமுழுவதிலுமுள்ள பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்கள், ஒவ்வொரு வாரமும் பிரபஞ்சத்தின் தேவனும் ராஜாவுமான நமது நேசமுள்ள பரலோக பிதாவையும், அவருடைய நேசகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் தொழுதுகொள்கிறார்கள். என்றென்றைக்கும் ஜீவிக்கிறவரும், மாசற்ற ஆட்டுக்குட்டியானவருமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் போதனைகளையும் நாம் தியானிக்கிறோம். அவருடைய பிராயச்சித்தத்தை நினைவுகூருதலில், நமது வாழ்க்கையில் அவரே மையமானவரென்பதை அடையாளங்காண்பதில், நம்மால் முடிந்தளவு அடிக்கடி திருவிருந்தில் நாம் பங்கேற்கிறோம்.

நாம் அவரை நேசிக்கிறோம், கனம்பண்ணுகிறோம். அவருடைய ஆழ்ந்த, நித்திய அன்பினால், உங்களுக்காகவும் எனக்காகவும் இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்தார். மரணத்தின் வாசல்களை அவர் உடைத்தார், நண்பர்களையும், நமக்கன்பானவர்களையும் பிரிக்கும் தடைகளை சிதறடித்தார்1 மற்றும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கையையும், நோயாளிகளுக்கு குணமாக்குதலையும், சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலையையும் கொண்டுவந்தார்2.

நமது இருதயங்களையும், நமது வாழ்க்கையையும், நமது அன்றாட பிரார்த்தனையையும் அவருக்கு நாம் அர்ப்பணிக்கிறோம். அந்த காரணத்திற்காக, “எங்கள் பிள்ளைகள் தங்களுடைய பாவங்களின் மன்னிப்புக்காக, எதனைக் கண்நோக்கவேண்டுமென்று அறியும்பொருட்டாக, நாங்கள் கிறிஸ்துவைப்பற்றிப் பேசுகிறோம். கிறிஸ்துவில் களிகூருகிறோம், கிறிஸ்துவைப்பற்றிப் போதிக்கிறோம், கிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசனமுரைக்கிறோம். எங்கள் தீர்க்கதரிசனங்களின்படியே நாங்கள் எழுதுகிறோம்.”3

சீஷத்துவத்தை பயிற்சி செய்தல்

எப்படியாயினும், இயேசு கிறிஸ்துவின் ஒரு சீஷராக இருப்பதற்கு, கிறிஸ்துவைப்பற்றி பேசுவதையும் பிரசங்கிப்பதையும் விட அதிகம் இருக்கிறது. அவரைப் போலாகும் பாதையில் நமக்குதவ அவருடைய சபையை இரட்சகரே மறுஸ்தாபிதம் செய்தார். சீஷத்துவத்தின் அடிப்படைகளை பயிற்சி செய்ய வாய்ப்புகளை வழங்க, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சபையில் நமது பங்கேற்பின் மூலமாக, பரிசுத்த ஆவியின் உணர்த்துதலை அடையாளம் காணவும், தூண்டுதலின்படி செயல்படவும் நாம் கற்றுக்கொள்கிறோம். மற்றவர்களை இரக்கத்துடனும் கருணையுடனும் அடைகிற மனப்பாங்கை நாம் விருத்தி செய்கிறோம்.

இது ஒரு வாழ்நாள் முயற்சி, இதற்கு பயிற்சி தேவை.

திறமையான விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டின் அடிப்படை திறன்களை பயிற்சி செய்ய எண்ணற்ற மணிநேரங்களை செலவிடுகிறார்கள். செவிலியர்கள், இணையதள பணியாளர்கள், அணுசக்தி பொறியாளர்கள் மற்றும் ஹாரியட்டின் சமையலறையில் ஒரு போட்டி பொழுதுபோக்கு சமையல்காரராக நானும், எங்கள் கைவினைகளை விடாமுயற்சியுடன் பயிற்சி செய்யும்போது மட்டுமே திறனுள்ளவர்களாகவும், திறமையுள்ளவர்களாகவும் ஆகிறோம்.

ஒரு விமான கேப்டனாக, பறக்கும் அனுபவத்தை பிரதிபலிக்கிற ஒரு அதிநவீன இயந்திரமான விமான சிமுலேட்டரைப் பயன்படுத்தி பெரும்பாலும் நான் விமானிகளுக்கு பயிற்சி அளித்தேன். பறக்கும் அடிப்படைகளை கற்றுக்கொள்ள விமானிகளுக்கு சிமுலேட்டர் உதவுகிறது மட்டுமல்ல, நிஜ விமானத்தின் கட்டுப்பாட்டை அவர்கள் எடுத்துக்கொள்ளும்போது, எதிர்பாராத நிகழ்வுகளை அவர்கள் எதிர்கொள்ளும்போது அனுபவிக்கவும் எதிர்செயலாற்றவும் இது அவர்களை அனுமதிக்கிறது.

இதே கொள்கைகள் இயேசு கிறிஸ்துவின் சீஷத்துவத்திற்கும் பொருந்துகிறது.

இயேசு கிறிஸ்து சபையில் ஊக்கமாக பங்கேற்பதும், அதன் மிகப்பெரிய வகை வாய்ப்புகளும், அவைகள் எதுவாயிருந்தாலும் எப்படியிருந்தாலும், வாழ்க்கை மாற்றத்தின் சூழ்நிலைகளுக்கு சிறப்பாக ஆயத்தப்பட நமக்குதவும். சபையின் அங்கத்தினர்களாக, அவருடைய பழங்கால மற்றும் தற்கால தீர்க்கதரிசிகள் மூலமாக வருகிற தேவனின் வார்த்தைகளில் நம்மை மூழ்கடிக்க நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். நமது பரலோக பிதாவிடம் நமது நேர்மையான அடக்கமான ஜெபத்தின் மூலமாக, பரிசுத்த ஆவியின் குரலை அடையாளங்காண நாம் கற்றுக்கொள்கிறோம். சேவை செய்ய, போதிக்க, திட்டமிட, ஊழியம் செய்ய மற்றும் நிர்வகிக்க அழைப்புகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இந்த வாய்ப்புகள் ஆவியில், மனதில் மற்றும் பண்பில் வளர நம்மை அனுமதிக்கிறது.

இந்த வாழ்க்கையிலும் வரப்போகிற வாழ்க்கையிலும் நம்மை ஆசீர்வதிக்கிற பரிசுத்த உடன்படிக்கைகளை செய்யவும் கைக்கொள்ளவும் ஆயத்தப்பட அவைகள் நமக்குதவும்.

வாருங்கள், எங்களோடு இணையுங்கள்!

இந்த மிகப்பெரிய முயற்சியில் நம்மோடு சேர உலகமுழுவதிலுமுள்ள தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம். வந்து பாருங்கள்! கோவிட்-19 தொற்றுநோயின் இந்த சவாலான நேரத்திலும் இயங்கலையில் எங்களை சந்தியுங்கள். எங்கள் ஊழியக்காரர்களை இயங்கலையில் சந்தியுங்கள். சபையைப்பற்றிய எல்லாவற்றையும் நீங்களே கண்டுபிடியங்கள்! இந்த கடினமான நேரம் கடந்துபோகும்போது, எங்கள் வீடுகளிலும், எங்களுடைய தொழுதுகொள்ளும் இடங்களிலும் எங்களை சந்தியுங்கள்.

வந்து எங்களுக்குதவ நாங்கள் உங்களை அழைக்கிறோம். வந்து, தேவனுடைய பிள்ளைகளுக்கு ஊழியம் செய்வதில், இரட்சகரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில், இந்த உலகத்தை சிறப்பான இடமாக மாற்றுவதில், எங்களோடு சேவை செய்யுங்கள்.

வந்து சொந்தமாகுங்கள்! நீங்கள் எங்களைப் பெலப்படுத்துவீர்கள். நீங்கள் சிறப்பானவர்களாக, இரக்கமுள்ளவர்களாக, சந்தோஷமுள்ளவர்களாகவும் மாறுவீர்கள். வாழ்க்கையின் கொந்தளிப்புகளுக்கும் எதிர்பாராத சோதனைகளுக்கும் தாக்குப்பிடிக்கும் அதிக உறுதியாக, உங்கள் விசுவாசம் ஆழமாகும், வளரும்.

நாம் எப்படி ஆரம்பிப்போம்? அநேக சாத்தியமான வழிகளிருக்கின்றன.

மார்மன் புஸ்தகத்தை வாசிக்க நாங்கள் உங்களை அழைக்கிறோம். உங்களிடம் ஒரு பிரதி இல்லையானால் ChurchofJesusChrist.org4ல் அதைப் படிக்கவும், அல்லது மார்மன் புஸ்தக செயலியில் பதிவிறக்கம் செய்யவும். மார்மன் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு மற்றும் பழைய, புதிய ஏற்பாடுகளுக்கு ஒரு துணையாயிருக்கிறது. இந்த அனைத்து பரிசுத்த வேதங்களை நாங்கள் நேசிக்கிறோம், அவைகளிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

சபை அங்கத்தினர்கள் எதைப் போதிக்கிறார்கள். நம்புகிறார்களென்பதைக் கண்டுபிடிக்க, ComeuntoChrist.orgல் நேரம் செலவிட நாங்கள் உங்களை அழைக்கிறோம்

இயங்கலையில் உங்களை சந்திக்க அல்லது சாத்தியமானால் தனிமையில் உங்கள் வீட்டில் சந்திக்க ஊழியக்காரர்களை அழையுங்கள், நம்பிக்கை மற்றும் குணமாக்குதலின் செய்தி அவர்களிடமுண்டு. அவர்களுடைய சொந்த நேரத்திலும் பணத்திலும் உலகமுழுவதிலுமுள்ள அநேக இடங்களில் ஊழியம் செய்கிற இந்த ஊழியக்காரர்கள் எங்களுடைய அருமையான குமாரர்களும் குமாரத்திகளுமாய் இருக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்துவின் சபையில், உங்களிலிருந்து அதிகம் வேறுபடாத மக்களின் ஒரு குடும்பத்தை நீங்கள் காண்பீர்கள். உங்கள் உதவி தேவைப்படுகிற, நீங்கள் மாறும்படியாக, தேவன் உங்களை சிருஷ்டித்த, உங்களின் சிறந்த பதிப்பாக மாற நீங்கள் முயற்சிக்கும்போது உங்களுக்கு உதவ விரும்புகிற மக்களை நீங்கள் காண்பீர்கள்.

இரட்சகரின் அரவணைப்பு எல்லோருக்கும் நீள்கிறது

“என்னுடைய வாழ்க்கையில் நான் தவறுகளைச் செய்திருக்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவின் சபைக்குச் சொந்தமானவனாக எப்போதும் உணரமுடியும் என்று எனக்கு நிச்சயமிலை. என்னைப்போன்ற ஒருவரிடம் தேவனுக்கு அக்கறை இருக்கமுடியாது” என நீங்கள் நினைக்கக்கூடும்.

கிறிஸ்துவாகிய இயேசு “ராஜாதி ராஜாவாகவும்”5 மேசியாவாகவும் “ஜீவிக்கிற தேவனின் குமாரனாகவும்”6 இருந்தாலும்கூட தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரைப்பற்றியும் அவர் ஆழமான அக்கறையுள்ளவராயிருக்கிறார். எவ்வளவு ஏழை அல்லது பணக்காரர், எவ்வளவு குறையுள்ளவர் அல்லது அம்மாதிரியான நபராக நிரூபிக்கப்பட்டவர் என்ற ஒருவரின் அந்தஸ்தை பொருட்படுத்தாது அவர் அக்கறையுள்ளவராயிருக்கிறார். அவருடைய அநித்திய வாழ்க்கையில் இரட்சகர், மகிழ்ச்சியான, சாதனை படைத்த, நொறுங்குண்ட மற்றும் காணாமற்போன, நம்பிக்கை இல்லாதவர்கள் என அனைவருக்கும் ஊழியம் செய்தார். பெரும்பாலும், அவர் சேவை செய்த, ஊழியம் செய்த மக்கள், முக்கியத்துவம், அழகு அல்லது செல்வமிக்க நபர்கள் அல்ல. பெரும்பாலும், அவர் உயர்த்திய மக்கள் திரும்பக்கொடுக்க சிறிதே வைத்திருந்தனர், ஆனால் நன்றியுணர்வையும், ஒரு அடக்கமான இருதயத்தையும், விசுவாசம் வைத்திருக்க வாஞ்சையையும் கொண்டிருந்தார்கள்.

“இவர்களில் சிறியவர்களுக்கு”7 ஊழியம் செய்வதில் இயேசு அவருடைய அநித்திய வாழ்க்கையை செலவழித்திருந்தால் இன்று அவர்களை அவர் நேசிக்கமாட்டாரா? தேவனுடைய பிள்ளைகள் அனைவருக்கும் அவருடைய சபையில் ஒரு இடமில்லையா? தகுதியில்லாதவர்களாக, மறக்கப்பட்டவர்களாக, அல்லது தனியாக உணருகிறவர்களுக்குமா?

தேவனுடைய கிருபைக்கு தகுதியாயிருக்கும்படியாக நீங்கள் அடையவேண்டிய முழுமைக்கு வாசல் இல்லை. உங்கள் ஜெபம் பரலோகத்தை அடைய சத்தமாகவோ அல்லது சரளமாகவோ அல்லது இலக்கண ரீதியாகவோ சரியாக பேச வேண்டியதில்லை.

உண்மையில், தேவன் பாரபட்சம் காட்டுவதில்லை8 உலகம் மதிக்கிற காரியங்கள் அவருக்கு ஒன்றுமில்லை. அவர் உங்கள் இருதயத்தை அறிந்திருக்கிறார், உங்கள் பதவியை, பொருளாதாரத் தகுதியை, அல்லது இன்ஸ்டாகிராமைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை பொருட்படுத்தாது உங்களை அவர் நேசிக்கிறார்.

பரலோக பிதாவிடம் நமது இருதயங்களை சாய்க்கும்போது, அவருக்கு நெருக்கமாக வரும்போது, நமக்கு நெருக்கமாக அவர் வருவதை நாம் உணருவோம்.9

நாம் அவருடைய நேசமுள்ள பிள்ளைகள்.

அவரை மறுப்பவர்களும்கூட.

ஒரு தலைக்கனமுள்ள, கட்டுக்கடங்காத குழந்தையைப் போன்றவர்கள், தேவன்மீதும் அவருடைய சபையின் மீதும் கோபமடைபவர்கள், ஓடிப்போகிறோம், திரும்பவரமாட்டோம் என அறிவித்து தங்கள் பைகளை மூட்டை கட்டிக்கொண்டு வெளியேறுபவர்களும்கூட.

ஒரு பிள்ளை வீட்டைவிட்டு ஓடிப்போகிறபோது, ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருக்கிற அக்கறையான பெற்றோரை அவன் அல்லது அவள் கவனிப்பதில்லை. தங்கள் அருமையான பிள்ளை இந்த இதயத்தைக் கிழிக்கும் அனுபவத்திலிருந்து ஏதாவது கற்றுக் கொள்ளுவார்கள், ஒருவேளை புதிய கண்களால் வாழ்க்கையைப் பார்ப்பார்கள், இறுதியில் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் கனிவான இருதயங்களுடன், அவர்கள் தங்கள் மகன் அல்லது மகள் செல்வதைப் பார்க்கிறார்கள்

அப்படியே இது நமது அன்பான பரலோக பிதாவுக்கும் பொருந்தும். நாம் திரும்பிவர அவர் காத்திருக்கிறார்.

அவருடைய கண்களில் அன்பு மற்றும், மனதுருக்கத்தின் கண்ணீரோடு உங்கள் இரட்சகர் நீங்கள் திரும்பிவர காத்திருக்கிறார். தேவனிடமிருந்து நீங்கள் தொலைவிலிருப்பதாக உணரும்போதுகூட, அவர் உங்களை பார்ப்பார், உங்கள்மேல் அவர் மனதுருக்கமுள்ளவராயிருப்பார், உங்களை அரவணைக்க அவர் ஓடிவருவார்.10

வாருங்கள் சொந்தமாகுங்கள்.

நம்முடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள தேவன் நம்மை அனுமதிக்கிறார்.

அர்த்தமுள்ள இறுதியான சத்தியத்திற்காகவும் ஒரு மிகப்பெரிய தேடலில் அநித்திய சாலையில் நடந்துகொண்டிருக்கும் நாம் யாத்திரீகர்கள். பெரும்பாலும், நாம் பார்ப்பதெல்லாம் நேராக நமக்கு முன்னாலிருக்கிற பாதையைத்தான், சாலையிலுள்ள வளைவுகள் நம்மை எங்கே நடத்திச் செல்கிறதென்பதை நம்மால் பார்க்கமுடியாது. நமக்கு அன்பான பரலோக பிதா எல்லா பதிலையும் நமக்குக் கொடுக்கவில்லை. நாமே அநேக காரியங்களைக் கண்டுபிடிக்கவேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார். அப்படிச் செய்ய கடினமாயிருந்தாலும்கூட நம்புவதற்கு அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

நம்முடைய தோள்களை நேராக்கி, முதுகெலும்பை கொஞ்சம் விருத்திசெய்து, மற்றொருபடி முன்னேற அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

அந்த வழியில்தான் நாம் கற்றுக்கொண்டு வளருவோம்.

எல்லா காரியங்களும் எல்லா விவரத்துடன் உச்சரிக்கப்படவேண்டுமென நீங்கள் உண்மையில் விரும்புகிறீர்களா? எல்லா கேள்விகளும் பதிலளிக்கப்படவேண்டுமென நீங்கள் உண்மையில் விரும்புகிறீர்களா? ஒவ்வொரு இலக்கும் வரைபடமாக்கப்பட்டிருக்கிறதா?

நம்மில் பெரும்பாலோர் இந்த வகையான பரலோக நுண் நிர்வாகத்தில் மிக விரைவாக சோர்வடைவார்கள் என்று நான் நம்புகிறேன். அனுபவத்தின் மூலமாக வாழ்க்கையின் முக்கியமான பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். நமது தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலமாகவும். மனந்திரும்புதல் மூலமாகவும் “துன்மார்க்கம் ஒருபோதும் மகிழ்ச்சியாயிருந்ததில்லை ”11 என்பதை நாமே உணர்ந்துகொள்வதன் மூலமாகவும்.

நமது தவறுகள் நம்மை கண்டிக்காதிருக்கும்படியாகவும், நமது முன்னேற்றத்தை எப்போதுமே நிறுத்தாதிருக்கும்படியாகவும், தேவனின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மரித்தார் அவரால் நாம் மனந்திரும்பமுடியும் மற்றும் நமது தவறுகள் பெரும் மகிமைக்கான படிக்கற்களாக மாறமுடியும்.

நீங்கள் இந்த சாலையில் தனியாக நடக்கவேண்டியதில்லை. இருளில் அலைந்து திரிய நமது பரலோக பிதா நம்மை விட்டுவிடவில்லை.

இதனால்தான், 1820 வசந்த காலத்தில், அவர் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடன் ஜோசப் ஸ்மித் என்ற இளம் வாலிபனுக்குத் தரிசனமானார்.

அதைப்பற்றி ஒரு கணம் சிந்திப்போம். பிரபஞ்சத்தின் தேவன் மனுஷனுக்குத் தரிசனமானார்.

தேவனுடனும், பரலோகத்திலிருக்கிற பிறருடனும் ஜோசப்புக்கிருந்த அநேக சந்திப்புகளில் இது முதன்மையாயிருந்தது. இந்த தெய்வீக நபர்கள் அவருடன் பேசிய பல வார்த்தைகள் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எளிதில் அணுகக்கூடியவை. அவைகளை யாரும் படிக்கலாம், நமது நாளில் தேவன் நமக்காக வைத்திருக்கிற செய்தியை நாமே கற்றுக்கொள்ளலாம்.

நீங்களே அதைப் படிக்க நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

இந்த வெளிப்படுத்தல்களை ஜோசப் ஸ்மித் பெற்றுக்கொண்டபோது அவர் மிகவும் இளமையாயிருந்தார். அவருக்கு 30 வயதாகுவதற்கு முன்பே அவைகளில் அநேகம் வந்தது.12 அவருக்கு அனுபவம் குறைவாயிருந்தது, அவர் கர்த்தருடைய தீர்க்கதரிசியாயிருக்க தகுதியற்றவராக சில மக்களுக்குத் தோன்றியிருக்கலாம்.

இருந்தும், பரிசுத்த வேதங்கள் முழுவதிலும் நாம் காண்கிற ஒரு மாதிரியைப் பின்பற்றியதில் கர்த்தர் அவரை அழைத்தார்.

சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்ய ஒரு சரியான நபரைக் கண்டுபிடிக்க தேவன் காத்திருக்கவில்லை.

அப்படியிருந்திருந்தால் அவர் இன்னமும் காத்திருந்திருப்பார்.

ஜோசப் உங்களையும் என்னையும் போன்றவர். ஜோசப் தவறுகளைச் செய்திருந்தாலும், அவருடைய மகத்தான நோக்கங்களை நிறைவேற்ற தேவன் அவரைப் பயன்படுத்தினார்.

புத்திமதியின் இந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் தலைவர் தாமஸ் எஸ்.மான்சன் கூறினார்: “கர்த்தர் அழைக்கிறவரை கர்த்தர் தகுதிப்படுத்துகிறார்”13

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்துவிலுள்ள பரிசுத்தவான்களுக்கு அறிவுறுத்தினான்: “எப்படியெனில், சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள், மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை”14

அவருடைய நோக்கங்களைக் கொண்டுவர பெலவீனர்களையும் எளியவர்களையும் தேவன் பயன்படுத்துகிறார். மனிதனுடையதல்ல, தேவனுடைய வல்லமையே பூமியில் அவருடைய பணியை நிறைவேற்றுகிறது என்ற இந்த சத்தியம் ஒரு சாட்சியாக நிற்கிறது.15

அவருக்குச் செவிகொடுங்கள், அவரைப் பின்பற்றுங்கள்

ஜோசப் ஸ்மித்துக்கு தேவன் தோன்றியபோது, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அவருக்கு அறிமுகப்படுத்தி சொன்னார் “அவருக்குச் செவிகொடு!”16

அவருக்குச் செவிகொடுத்து, அவரைப் பின்பற்றி, அவருடைய எஞ்சிய நாட்களை ஜோசப் செலவழித்தார்.

ஜோசப்பைப்போலவே, இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்குச் செவிகொடுக்கவும், பின்பற்றவும் நமது தீர்மானத்துடன் நமது சீஷத்துவம் ஆரம்பமாகிறது.

அவரைப் பின்பற்ற உங்களுக்கு விருப்பமிருந்தால், உங்களுடைய விசுவாசத்தை ஒன்றுகூட்டி அவருடைய சிலுவையை உங்கள்மீது எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள், சீஷத்துவத்தின் மகிழ்ச்சியின் பெரிய தேடுதலில் சேரமுடிகிற அரவணைப்பான வரவேற்கிற இடமான அவருடைய சபைக்குச் சொந்தமானவர்கள் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

முதல் தரிசனத்தின் இந்த இருநூற்றாண்டு ஆண்டில், இயேசு கிறிஸ்துவின் சபையின் மறுஸ்தாபிதத்தைப்பற்றி நாம் சிந்தித்து அறியும்போது, அது ஒரு வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல என்பதை நாம் உணருவோம் என்பது எனது நம்பிக்கை. இந்த மகத்தான தொடர்ந்துகொண்டிருக்கிற கதையில் நீங்களும் நானும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறோம்.

அப்படியானால், உங்களுடைய மற்றும் என்னுடைய பங்கு என்ன?

இது இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்ள. அவருடைய வார்த்தைகளை படிக்க. அவருக்குச் செவிகொடுக்கவும், அவரைப் பின்பற்றவும், இந்த மகத்தான பணியில் ஊக்கமுடன் பங்கேற்கவும். வந்து சொந்தமாக நான் உங்களை அழைக்கிறேன்.

நீங்கள் பரிபூரணராக இருக்க வேண்டியதில்லை. உங்கள் விசுவாசத்தை விருத்தி செய்யவும், ஒவ்வொரு நாளும் அவருக்கருகில் நெருங்கிவரவும் விருப்பம் மட்டும் உங்களுக்கிருக்கவேண்டும்.

தேவனை நேசிப்பதும், சேவை செய்வதும், தேவனுடைய பிள்ளைகளை நேசிப்பதுவும் சேவை செய்வதும் நம்முடைய பங்கு.

நீங்கள் அப்படிச் செய்யும்போது, இந்த வாழ்க்கையின் மூலம், மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும், அதற்கு அப்பாலும் தேவன் தம்முடைய அன்பு, மகிழ்ச்சி மற்றும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களால் உங்களைச் சூழ்ந்துகொள்வார்.

இதைக் குறித்து நான் சாட்சியளிக்கிறேன், ஆழ்ந்த நன்றியுடன் அன்புடனும் உங்கள் ஒவ்வொருவர் மீதும் என்னுடைய ஆசீர்வாதத்தை வைக்கிறேன், நமது இரட்சகரும், நமது போதகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.