பொது மாநாடு
ஒரு மறைந்துள்ள நெருப்பின் இயக்கங்கள்
ஏப்ரல் 2024 பொது மாநாடு


ஒரு மறைந்துள்ள நெருப்பின் இயக்கங்கள்

தேவன் நாம் செய்யும் ஒவ்வொரு ஜெபத்தையும் கேட்கிறார், மேலும் நம் பரிபூரணத்திற்காக அவர் கோடிட்டுக் காட்டிய பாதையின்படி அவை ஒவ்வொன்றிற்கும் பதிலளிக்கிறார்.

சகோதர சகோதரிகளே, நான் கடைசியாக 2022 அக்டோபரில் இந்தப் பிரசங்க பீடத்தில் இருந்ததிலிருந்து ஒரு வேதனையான பாடத்தைக் கற்றுக்கொண்டேன். அந்த பாடம்: நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய செய்தியைக் கொடுக்கவில்லை என்றால், அடுத்த பல மாநாடுகளில் இருந்து நீங்கள் தடைசெய்யப்படலாம். இந்த முதல் அமர்வில் நான் பணிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் பார்க்க முடியாதது என்னவென்றால், நான் மிகவும் மென்மையான தாழ்ப்பாள் கொண்ட ஒரு பொறி கதவின் மீது நிறுத்தப்பட்டிருக்கிறேன். இந்தப் பேச்சு சரியாக அமையவில்லை என்றால், இன்னும் சில மாநாடுகளுக்கு உங்களைப் பார்க்க மாட்டேன்.

இந்த அழகான இசைக்குழுவுடன் கூடிய அந்த அழகான பாடலின் உணர்வில், நான் சமீபத்தில் சில பாடங்களைக் கற்றுக்கொண்டேன், கர்த்தரின் உதவியால், இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது இதை மிகவும் தனிப்பட்ட செய்தியாக மாற்றும்.

இந்த சமீபத்திய அனுபவங்களில் மிகவும் தனிப்பட்ட மற்றும் வேதனையானது எனது அன்பு மனைவி பாட் காலமானதாகும். நான் அறிந்த மிகச்சிறந்த பெண் அவள்-—ஒரு சிறந்த மனைவி மற்றும் தாய், அவளுடைய தூய்மை, தெரிவிக்கும் வரம் மற்றும் ஆவிக்குரிய தன்மை பற்றி எதுவும் சொல்ல முடியாது. அவள் ஒருமுறை “உங்கள் சிருஷ்டிப்பின் அளவை நிறைவேற்றுதல்” என்ற தலைப்பில் ஒரு செய்தி கொடுத்தாள். யாரும் கனவு கண்டதை விட அவள் தனது சிருஷ்டிப்பின் அளவை வெற்றிகரமாக நிறைவேற்றியதாக எனக்குத் தோன்றுகிறது. அவள் தேவனின் முழுமையான மகள், கிறிஸ்துவின் முன்மாதிரியான பெண். என் வாழ்நாளில் 60 வருடங்களை அவளுடன் கழித்ததால் ஆண்களில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நான் தகுதியானவன் என்று நிரூபித்தால், அவளுடன் நான் நித்தியத்தை கழிக்க முடியும் என்று அர்த்தம்.

என் மனைவி அடக்கம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு மற்றொரு அனுபவம் தொடங்கியது. அந்த நேரத்தில், நான் மோசமான உடல்நிலையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். நான் தங்கியிருந்த ஆறு வாரங்களில் முதல் நான்கு வாரங்களை தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள்ளும் வெளியேயும் சுயநினைவிலும், இல்லாமலும் கழித்தேன்.

அந்த காலகட்டத்தில் மருத்துவமனையில் இருந்த எனது அனுபவங்கள் அனைத்தும் என் நினைவுக்கு மறைந்துவிட்டன. தொலைந்து போகாதது, மருத்துவமனைக்கு வெளியே, நித்தியத்தின் விளிம்பில் தோன்றிய பயணத்தின் எனது நினைவு. அந்த அனுபவத்தை என்னால் இங்கு முழுமையாகப் பேச முடியாது, ஆனால் நான் பெற்றவற்றின் ஒரு பகுதியை அதிக அவசரத்துடனும், அதிக அர்ப்பணிப்புடனும், இரட்சகரிடம் அதிக கவனம் செலுத்தி, அவருடைய வார்த்தையில் அதிக நம்பிக்கையுடன் என் ஊழியத்திற்குத் திரும்புவதற்கான அறிவுரையை என்னால் கூற முடியும்.

ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பு பன்னிருவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வெளிப்பாட்டின் எனது சொந்த கருத்தாக நான் உணர்ந்ததை சொல்லாமலிருக்க முடியவில்லை:

“என்னுடைய நாமத்தைக் குறித்து நீ சாட்சி கொடுப்பாயாக… [மற்றும்] பூமியின் எல்லைவரை என்னுடைய வார்த்தையை நீ அனுப்புவாயாக. …

“… ஒவ்வொரு காலையும் ; ஒவ்வொரு நாளும் உன்னுடைய எச்சரிக்கையின் குரல் கேட்கப்படுவதாக; இரவு வரும்போது உன்னுடைய பேச்சால் பூமியின் குடிகள் உறங்காதிருக்கட்டும். …

“உங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றுங்கள்.”1

என் அன்புச் சகோதரிகளே, சகோதரர்களே, அந்த அனுபவத்திலிருந்து, காலையிலும், பகலிலும், இரவிலும் அரவணைப்பும் எச்சரிக்கையும் கொண்ட அப்போஸ்தல குரலை எங்கு எழுப்ப முடியும் என்பதைக் கண்டறிய, என் சிலுவையை எடுத்துச் செல்ல நான் அதிக ஆர்வத்துடன் முயற்சித்தேன்.

இது இழப்பு, நோய் மற்றும் துயரத்தின் அந்த மாதங்களில் வந்த மூன்றாவது உள்ளுணர்வுக்கு என்னை வழிநடத்துகிறது. இது ஒரு புதுப்பிக்கப்பட்ட சாட்சியாகவும் முடிவில்லாத நன்றியறிதலாகவும் இருந்தது, உறுதியான ஜெபங்களின் செயல்திறனால்—இந்த சபையால்—நான் பயனாளியாக இருந்தேன். துயரத்திலிருந்த விதவையைப்2 போல, என் சார்பாக பரலோகத்தின் இடைபடுதலை மீண்டும் மீண்டும் நாடிய ஆயிரக்கணக்கான மக்களின் மன்றாட்டுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் ஆசாரியத்துவ ஆசீர்வாதங்களைப் பெற்றேன், என் உயர்நிலைப் பள்ளி வகுப்பு நண்பர்கள் எனக்காக உபவாசம் இருப்பதைப் பார்த்தேன், சபையில் உள்ள பல தொகுதிகள் அதுபோலவே செய்தனர். சபையில் உள்ள ஒவ்வொரு ஆலயத்தின் ஜெபப் பட்டியலில் எனது பெயர் இருந்திருக்க வேண்டும்.

இவை அனைத்திற்கும் எனது ஆழ்ந்த நன்றியுடன், நான் ஜி.கே. செஸ்டர்டனுடன் இணைகிறேன், அவர் ஒருமுறை கூறினார் “நன்றி என்பது சிந்தனையின் உயர்ந்த வடிவம்; மற்றும் … நன்றியுணர்வு என்பது ஆச்சரியத்தால் இரட்டிப்பாக்கப்படும் மகிழ்ச்சி.”3 என் இருதயத்தின் அடியில் இருந்து, “ஆச்சரியம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது,” உங்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் உங்கள் ஜெபங்களைக் கேட்டு என் வாழ்க்கையை ஆசீர்வதித்த பரலோகத்திலுள்ள என் பிதாவுக்கு நன்றி.

சகோதர சகோதரிகளே, நாம் செய்யும் ஒவ்வொரு ஜெபத்தையும் தேவன் செவிமடுப்பார் என்றும், நம் பரிபூரணத்திற்காக அவர் கோடிட்டுக் காட்டிய பாதையின்படி அவை ஒவ்வொன்றிற்கும் பதிலளிக்கிறார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். ஏறக்குறைய அதே நேரத்தில் எனது ஆரோக்கியத்தை மீட்டெடுக்க பலர் ஜெபம் செய்தனர், நான் உட்பட சம எண்ணிக்கையிலானவர்கள் என் மனைவியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஜெபம் செய்தனர். பாட்டின் ஜெபங்களுக்கு நான் கேட்ட விதத்தில் பதில் கிடைக்காவிட்டாலும், அந்த இரண்டு ஜெபங்களும் ஒரு தெய்வீக இரக்கமுள்ள பரலோக பிதாவால் கேட்கப்பட்டு மற்றும் பதிலளிக்கப்பட்டன என்று நான் சாட்சியமளிக்கிறேன். ஜெபங்களுக்கு நாம் எதிர்பார்ப்பதை விட வித்தியாசமாக பதிலளிக்கப்படுவது ஏன் என்பது தேவனுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக உள்ளது—ஆனால் அவை கேட்கப்படுகின்றன, மேலும் அவை அவருடைய தவறாத அன்பு மற்றும் கால அட்டவணையின்படி பதிலளிக்கப்படுகின்றன.

நாம் “தவறாகக் கேட்கவில்லை” என்றால்,4 எப்போது, எங்கே, அல்லது எதைப் பற்றி நாம் ஜெபிக்க வேண்டும் என்பதற்கு வரம்புகள் இல்லை. வெளிப்பாடுகளின்படி, நாம் “எப்போதும் ஜெபிக்க வேண்டும்.”5 அமுலேக் கூறினான், “நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்காக”6 “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது,”7 எனும் நம்பிக்கையுடன் நாம் ஜெபம் செய்ய வேண்டும். அவற்றை செய்வதற்கு தனிமை இருக்கும்போது நமது ஜெபங்கள் குரலாக இருக்க வேண்டும்.8 அதை செய்யமுடியவில்லை என்றால், அவை நம் இருதயத்தில் மௌனமான வார்த்தைகளாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.9 நமது ஜெபங்கள் “மறைக்கப்பட்ட நெருப்பின் இயக்கம்” என்று நாம் பாடுகிறோம்,10 எப்போதும் இரட்சகரின் கூற்றுப்படி, நித்திய பிதாவாகிய தேவனுக்கு அவருடைய ஒரே பேறான குமாரனின் நாமத்தில் அர்ப்பணிக்கப்பட வேண்டும்.11

என் அன்பான நண்பர்களே, நமது ஜெபங்கள், நமது இனிமையான நேரம்,12 நமது மிகவும் “உண்மையான விருப்பம்,”13 நமது எளிய, தூய்மையான ஆராதனை முறை.14 நாம் தனித்தனியாகவும், நம் குடும்பங்களிலும், எல்லா அளவிலான சபைகளிலும் ஜெபிக்க வேண்டும்.15 சோதனைக்கு எதிராக ஜெபத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்த வேண்டும்,16 மற்றும் ஜெபிக்க வேண்டாம் என்று நினைத்தால், எந்த நேரத்திலும், எல்லா நேரங்களிலும் தம் குழந்தைகளுடன் தொடர்பு கொள்ள விரும்பும் தேவனிடமிருந்து தயக்கம் வராது என்பதில் உறுதியாக இருக்கலாம். உண்மையில், ஜெபம் செய்வதிலிருந்து நம்மைத் தடுப்பதற்கான சில முயற்சிகள் சத்துருவிடமிருந்து நேரடியாக வருகின்றன.17 மேலும், எப்படி அல்லது எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று சரியாக நமக்குத் தெரியாதபோது, நாம் ஏறெடுக்க வேண்டிய ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்தும் வரை, நாம் ஆரம்பித்து, தொடர வேண்டும்.18 நம்முடைய எதிரிகளுக்காகவும், நம்மைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபிக்கும்போது இந்த அணுகுமுறையே இருக்க வேண்டும்.19

இறுதியில், மிக மிக அடிக்கடி ஜெபித்த இரட்சகரின் உதாரணத்தை நாம் பார்க்கலாம். ஆனால் ஜெபிக்க வேண்டிய அவசியத்தை இயேசு உணர்ந்தார் என்பது எனக்கு எப்போதும் புதிராகவே இருந்து வருகிறது. அவர் பரிபூரணர் இல்லையா? அவர் எதைப் பற்றி ஜெபிக்க வேண்டியிருந்தது? நல்லது, அவரும் நம்முடன், “[பிதாவின்] முகத்தைத் தேடவும், அவருடைய வார்த்தையை நம்பவும், அவருடைய கிருபையை நம்பவும்” விரும்பினார் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.20 காலங்காலமாக, அவர் தனது ஜெபங்களுடன் பரலோகத்தைத் துளைக்கும் முன் தனியாக இருக்க சமுதாயத்திலிருந்து பின்வாங்கினார்.21 மற்ற நேரங்களில், அவர் ஒரு சில தோழர்களுடன் சேர்ந்து ஜெபம் செய்தார். பின்னர் அவர் ஒரு மலைப்பகுதியை மறைக்கக்கூடிய திரளான மக்கள் சார்பாக பரலோகத்தை நாடுவார். சில நேரங்களில் ஜெபம் அவருடைய வஸ்திரங்களை மகிமைப்படுத்தியது.22 சில நேரங்களில் அது அவரது முகத்தை மகிமைப்படுத்தியது.23 சில நேரங்களில் அவர் ஜெபிக்க நின்றார், சில சமயங்களில் அவர் ஜெபிக்க மண்டியிட்டார், ஒரு முறையாவது அவர் ஜெபத்தில் முகங்குப்புற விழுந்தார்.24

லூக்கா இயேசுவின் பாவநிவாரணத்தின்போது இறங்கியதை அவர் “அதிக ஊக்கத்தோடே” ஜெபிக்க வேண்டும் என்று விவரிக்கிறான்.25 ஆனால் பரிபூரணமாக இருந்த ஒருவர் எப்படி அதிக ஊக்கத்துடன் ஜெபிக்கிறார்? அவருடைய ஜெபங்கள் அனைத்தும் ஊக்கமானவை என்று நாம் கருதுகிறோம், இருப்பினும் அவரது பாவநிவர்த்தியை நிறைவேற்றுவதில் மற்றும் அதன் உலகளாவிய விதமான வலியின் மூலம், ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தத்தை கொண்டு வரும் அவரது காணிக்கையின் எடையுடன் அவர் மேலும் கெஞ்சி ஜெபிக்க உணர்ந்தார்.

மரணத்தின் மீதான கிறிஸ்துவின் வெற்றியின் பின்னணியில், மேலும் சில நாட்கள் அல்லது வாரங்கள் அல்லது மாதங்கள் இம்மையில் எனக்கு அவர் சமீபத்தில் பரிசளித்ததன் பின்னணியில், நித்திய ஜீவனின் யதார்த்தத்திற்கும், அதற்கான நமது திட்டமிடலில் நாம் தீவிரமாக இருக்க வேண்டியதன் அவசியத்திற்கும் நான் உறுதியான சாட்சியாக இருக்கிறேன்.

கிறிஸ்து வரும்போது, அவர் நம்மை அடையாளம் காண வேண்டும் என்று நான் சாட்சி கூறுகிறேன்—மங்கிப்போன ஞானஸ்நான பதிவேட்டில் பட்டியலிடப்பட்ட பெயரளவிலான உறுப்பினர்களாக அல்ல, மாறாக முற்றிலும் அர்ப்பணிப்புள்ள, உண்மையுள்ள விசுவாசமுள்ள, உடன்படிக்கையைக் காக்கும் சீடர்களாக. இது நம் அனைவருக்கும் ஒரு அவசரமான விஷயம், பேரழிவு தரும் வருத்தத்துடன் நாம் கேட்கக்கூடாது: “நான் உன்னை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை,”26 அல்லது ஜோசப் ஸ்மித் அந்த சொற்றொடரை மொழிபெயர்த்தது போல், “[நீங்கள்] என்னை அறிந்திருக்கவில்லை.”27

அதிர்ஷ்டவசமாக, நமது பணிக்கு நம்மிடம் உதவி உள்ளது—நிறைய உதவி. தூதர்கள் மற்றும் அற்புதங்கள் மற்றும் பரிசுத்த ஆசாரியத்துவத்தின் வாக்குறுதிகளை நாம் நம்ப வேண்டும். பரிசுத்த ஆவியின் வரத்திலும், நல்ல குடும்பங்கள் மற்றும் நண்பர்களின் செல்வாக்கிலும், கிறிஸ்துவின் தூய அன்பின் வல்லமையிலும் நாம் விசுவாசிக்க வேண்டும். வெளிப்படுத்தல் மற்றும் தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்கள் மற்றும் தலைவர் ரசல் எம். நெல்சன் ஆகியோரை நாம் நம்ப வேண்டும். நம்முடைய ஜெபங்கள் மற்றும் மன்றாட்டு மற்றும் தனிப்பட்ட நீதியின் மூலம், அந்த தூதர்கள் நம்மை, “சீயோன் மலைக்கும், மகா பரிசுத்த ஸ்தலமெனப்படும், பரலோக ஸ்தலமான ஜீவிக்கிற தேவனுடைய நகரத்திற்கும்” வழிநடத்த முடியும் என்று நாம் நம்ப வேண்டும்.28

சகோதர சகோதரிகளே, நாம் நமது பாவங்களுக்காக மனந்திரும்பி, “கிருபாசனத்துக்கு” தைரியமாக வரும்போது,29 அவருக்கு முன்பாக நமது இதயப்பூர்வமான வேண்டுதல்களை விட்டுவிட்டு, நம் நித்திய பிதா மற்றும் அவருடைய கீழ்ப்படிதலுள்ள பரிபூரண தூய்மையான குமாரனின் கருணையுள்ள கரத்தில் இரக்கத்தைப் பெற்று மன்னிப்பைக் காண்போம். பிறகு, யோபு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உண்மையுள்ளவர்களுடன், நாம் புரிந்துகொள்ள முடியாத ஒரு “மிக அற்புதமான” உலகத்தைக் காண்போம்.30 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.