பொது மாநாடு
ஆசாரியத்துவ திறவுகோல்களின் வரத்தில் களிகூர்வோம்
ஏப்ரல் 2024 பொது மாநாடு


ஆசாரியத்துவ திறவுகோல்களின் வரத்தில் களிகூர்வோம்

கர்த்தருடைய நோக்கங்களை நிறைவேற்றவும், இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் ஆசீர்வதிக்கவும் தேவனின் ஆசாரியத்துவம் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை ஆசாரியத்துவ திறவுகோல்கள் நிர்வகிக்கின்றன.

என் அன்பான சகோதர சகோதரிகளே, தலைவர் டாலின் எச். ஓக்ஸுக்கும் எனக்கும் இன்று ஒரு வரலாற்று முக்கிய நாள். 40 ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 7, 1984 அன்று, நாங்கள் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்திற்கு ஆதரிக்கப்பட்டோம்.1 இது உட்பட ஒவ்வொரு பொது மாநாட்டிலும் நாங்கள் களிகூர்ந்துள்ளோம். நாம் மீண்டும் ஒருமுறை ஆவியானவரின் பரிசுத்த பொழிவால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். வரும் மாதங்கள் முழுவதும் இந்த மாநாட்டின் செய்திகளை மீண்டும் மீண்டும் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நான் பிறந்தபோது,2 சபையில் ஆறு ஆலயங்கள் செயல்பட்டன—ஒவ்வொன்றும் செயின்ட். ஜார்ஜ், லோகன், மாண்டி மற்றும் சால்ட் லேக் சிட்டி, யூட்டா; அத்துடன் கார்ட்ஸ்டன், ஆல்பர்ட்டா, கனடா; மற்றும் லே, ஹவாய். இரண்டு முந்தைய ஆலயங்கள் கர்த்லாந்து, ஒஹாயோ மற்றும் இல்லினாயின் நாவூவில் சிறிது காலம் செயல்பட்டன. சபை அமைப்பு மேற்கு நோக்கி நகர்ந்ததால், பரிசுத்தவான்கள் அந்த இரண்டு ஆலயங்களையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நாவூ ஆலயம் ஒரு வன்முறை தீவிபத்தால் அழிக்கப்பட்டது. இது பின்னர் தலைவர் கார்டன் பி. ஹிங்க்லியால் மீண்டும் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.3 கர்த்லாந்து ஆலயம் சபையின் எதிரிகளால் நாசமாக்கப்பட்டது. பின்னர் கர்த்லாந்து ஆலயம் கிறிஸ்து சமூக பிரிவால் கையகப்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக அவர்கள் அதை சொந்தமாக வைத்திருந்தனர்.

கடந்த மாதம், நாவூவில் உள்ள பல குறிப்பிடத்தக்க வரலாற்று தளங்களுடன், கர்த்லாந்து ஆலயத்தையும், பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை வாங்கியதாக அறிவித்தோம். இந்த உடன்படிக்கைக்கு வழிவகுத்த கிறிஸ்துவின் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களுடன் நாங்கள் நடத்திய அன்பான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் விவாதங்களை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்.

படம்
கர்த்லாந்து ஆலயம்

கர்த்லாந்து ஆலயம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தில் அசாதாரண முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அங்கு நடந்த பல நிகழ்வுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தீர்க்கதரிசனம் கூறப்பட்டு, கர்த்தரின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை அதன் பிற்காலப்பணியை நிறைவேற்றுவதற்கு அவசியமானது.

இந்த நிகழ்வுகளில் மிக முக்கியமானது ஈஸ்டர் ஞாயிறு, ஏப்ரல் 3, 18364 அன்று நடந்தது. அந்த நாளில், ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கவுட்ரி ஆகியோர் தொடர்ச்சியான குறிப்பிடத்தக்க தரிசனங்களை அனுபவித்தனர். முதலில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தோன்றினார். இரட்சகருடைய “கண்கள் அக்கினி ஜூவாலையைப் போலிருந்தது, அவருடைய சிரசின் மயிர் உறைந்த மழையைப்போன்று தூய வெண்மையாயிருந்தது, அவருடைய முகரூபம் சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமாய் பிரகாசித்தது, அவரது சத்தம் கொந்தளிக்கிற ஜலப்பிரவாகத்தின் சத்தத்தைப் போலிருந்தது,”5 என தீர்க்கதரிசி பதிவு செய்தார்.

இந்த வருகையின் போது, கர்த்தர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தினார். அவர் சொன்னார், “நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன், நானே ஜீவிக்கிறவர், நானே அடிக்கப்பட்டவர், நானே பிதாவிடத்தில் உங்களின் மத்தியஸ்தராயிருக்கிறேன்.”6

இயேசு கிறிஸ்து ஆலயத்தை தனது வீடாக ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார், மேலும் இந்த அற்புதமான வாக்குறுதியை அளித்தார்: “என்னுடைய ஜனங்களுக்கு நான் என்னை இரக்கத்தில் இந்த வீட்டில் வெளிப்படுத்துவேன்.”7

இந்த முக்கியமான வாக்குறுதி இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒவ்வொரு ஆலயத்துக்கும் பொருந்தும். கர்த்தருடைய வாக்குத்தத்தம் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் என்ன அர்த்தமாகிறது என்பதை சிந்திக்க நான் உங்களை அழைக்கிறேன்.

இரட்சகரின் வருகையைத் தொடர்ந்து, மோசே தோன்றினான். மோசே ஜோசப் ஸ்மித்திடம் இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்ப்பதற்கும் பத்து கோத்திரங்கள் திரும்புவதற்கும் திறவுகோல்களை வழங்கினான்.8

இந்த தரிசனம் முடிந்த பிறகு எலியாஸ் தோன்றி, ஆபிரகாமின் காலத்தில் கொடுக்கப்பட்ட அதே சுவிசேஷத்தின் ஊழியக்காலத்தை ஜோசப்புக்கு ஒப்படைத்தான்.9

அப்போது எலியா தீர்க்கதரிசி தோன்றினான். இரண்டாம் வருகைக்கு முன், கர்த்தர் எலியாவை “பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்,” என்ற மல்கியாவின் வாக்குறுதியை அவனுடைய தோற்றம் நிறைவேற்றியது.10 எலியா ஜோசப் ஸ்மித்துக்கு முத்திரிக்கும் அதிகாரத்தின் திறவுகோலை வழங்கினான்.11

இந்த திறவுகோல்கள் கர்த்தரின் வழிகாட்டுதலின் கீழ் மூன்று பரலோக தூதர்களால் பூமிக்குத் திரும்பியதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. ஆசாரியத்துவ திறவுகோல்கள் தலைமையின் அதிகாரத்தையும் வல்லமையையும் கொண்டுள்ளன. கர்த்தருடைய நோக்கங்களை நிறைவேற்றவும், இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் ஆசீர்வதிக்கவும் தேவனின் ஆசாரியத்துவம் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை ஆசாரியத்துவ திறவுகோல்கள் நிர்வகிக்கின்றன.

சபையின் அமைப்புக்கு முன்னர், பரலோக தூதர்கள் தீர்க்கதரிசி ஜோசப்புக்கு ஆரோனிய மற்றும் மெல்கிசெதேக்கு ஆசாரியத்துவங்களை அருளினர் மற்றும் இரண்டு ஆசாரியத்துவங்களுக்கான திறவுகோல்களை அவரிடம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.12 இந்த திறவுகோல்கள் ஜோசப் ஸ்மித்துக்கு 1830 இல் சபையை ஒழுங்கமைக்க அதிகாரம் அளித்தன.13

பின்னர் 1836 இல் கர்த்லாந்து ஆலயத்தில், வழங்கிய இந்த மூன்று கூடுதல் ஆசாரியத்துவ திறவுகோல்கள்—அதாவது, இஸ்ரவேலை கூட்டிச் சேர்த்தலின் திறவுகோல்கள், ஆபிரகாமின் சுவிசேஷத்தின் திறவுகோல்கள் மற்றும் முத்திரிக்கும் வல்லமையின் திறவுகோல்கள்—இன்றியமையாததாக இருந்தது. இந்தத் திறவுகோல்கள் ஜோசப் ஸ்மித்—மற்றும் கர்த்தரின் சபையின் அனைத்துத் தலைவர்களும்—இஸ்ரவேலை திரையின் இருபுறங்களிலும் கூட்டிச் சேர்க்கவும், உடன்படிக்கைப் பிள்ளைகள் அனைவரையும் ஆபிரகாமின் ஆசீர்வாதத்துடன் ஆசீர்வதிக்கவும், ஆசாரியத்துவ நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகளில் ஒரு உறுதியான முத்திரையை இடுவதற்கும், குடும்பங்கள் நித்தியமாக முத்திரிக்கப்படவும் அதிகாரம் அளித்தன. இந்த ஆசாரியத்துவ திறவுகோல்களின் வல்லமை எல்லையற்றது மற்றும் மூச்சடைக்கக்கூடியது.

ஆசாரியத்துவத் திறவுகோல்கள் பூமியில் மறுஸ்தாபிதம் செய்யப்படாவிட்டால், உங்கள் வாழ்க்கை எப்படி வித்தியாசமாக இருந்திருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.14 ஆசாரியத்துவத் திறவுகோல்கள் இல்லாமல், நீங்கள் தேவனின் வல்லமையைப் பெற்றிருக்க முடியாது.15 ஆசாரியத்துவ திறவுகோல்கள் இல்லாமல், சபை ஒரு குறிப்பிடத்தக்க போதனை மற்றும் மனிதாபிமான அமைப்பாக மட்டுமே பணியாற்ற முடியும், ஆனால் அதிகமாக இல்லை. ஆசாரியத்துவ திறவுகோல்கள் இல்லாமல், நம் அன்புக்குரியவர்களுடன் நித்தியமாக நம்மை பிணைத்து, இறுதியில் தேவனுடன் வாழ அனுமதிக்கும் அத்தியாவசிய நியமங்கள் மற்றும் உடன்படிக்கைகளை நம்மில் யாரும் அணுக முடியாது.

ஆசாரியத்துவ திறவுகோல்கள் பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையை பூமியில் உள்ள வேறு எந்த அமைப்பிலிருந்தும் வேறுபடுத்துகின்றன. மற்ற பல அமைப்புகள் பூலோகத்தில் உங்கள் வாழ்க்கையை சிறப்பாகச் செய்ய முடியும். ஆனால் மரணத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கையில் வேறு எந்த அமைப்பாலும் செல்வாக்கு செலுத்த முடியாது. மற்றும் செலுத்தாது.16

ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை, உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நீட்டிக்க ஆசாரியத்துவ திறவுகோல் நமக்கு அதிகாரம் அளிக்கிறது. ஆலயப் பணி, தேவனின் எல்லா குழந்தைகள் எங்கு அல்லது, எப்போது வாழ்ந்தாலும், இப்போது வாழ்ந்தாலும் அது பொருட்டின்றி, இந்த நேர்த்தியான ஆசீர்வாதங்களை அவர்களுக்குக் கிடைக்கச் செய்கிறது. ஆசாரியத்துவ திறவுகோல்கள் மீண்டும் பூமியில் வந்திருப்பதில் மகிழ்ந்து களிகூர்வோமாக!

பின்வரும் மூன்று வாசகங்களை கவனமாக பரிசீலிக்க உங்களை அழைக்கிறேன்:

  1. எல்லா இடங்களிலும் தேவன் தம்முடைய பிள்ளைகள் அனைவரையும் நேசிக்கிறார் என்பதற்கு இஸ்ரவேலின் கூடுகை சான்றாகும்.

  2. ஆபிரகாமின் சுவிசேஷம், தேவன் எல்லா இடங்களிலும் உள்ள தம் பிள்ளைகள் அனைவரையும் நேசிக்கிறார் என்பதற்கு மேலும் சான்றாகும். தம்மிடத்தில் வருமாறு அவர் அனைவரையும் அழைக்கிறார்—“வெள்ளையனாகிலும், கருப்பனாகிலும் அடிமையாகிலும், சுதந்திரவாளியாகிலும், ஆணாகிலும், பெண்ணாகிலும் அவர் மறுப்பதில்லை, … அனைவரும் தேவனுக்குச் சமமானவர்களே.”17

  3. தேவன் தம்முடைய எல்லா குழந்தைகளையும் எவ்வளவு நேசிக்கிறார் என்பதற்கும், அவர்கள் ஒவ்வொருவரும் தம்மிடம் வீடு திரும்புவதைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார் என்பதற்கும் முத்திரிக்கும் வல்லமை மிகச்சிறந்த சான்றாகும்.

ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசி மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட ஆசாரியத்துவ திறவுகோல்கள், உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நம்பமுடியாத தனிப்பட்ட ஆவிக்குரிய சிலாக்கியங்களை அனுபவிப்பதை சாத்தியமாக்குகிறது. இங்கே மீண்டும், கர்த்லாந்து ஆலயத்தின் பரிசுத்த வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

கர்த்லாந்து ஆலயத்தின் ஜோசப் ஸ்மித்தின் பிரதிஷ்டை ஜெபம், இந்த கடைசி நாட்களில் வாழ்க்கையின் சவால்களை சந்திக்க உங்களுக்கும் எனக்கும் ஆவிக்குரிய ரீதியில் எப்படி அதிகாரம் அளிக்கிறது என்பது பற்றிய பயிற்சி. கோட்பாடும் உடன்படிக்கைகளும் பாகம் 109 இல் பதிவு செய்யப்பட்டுள்ள ஜெபத்தைப் படிக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன். வெளிப்பாட்டால் பெறப்பட்ட அந்த பிரதிஷ்டை ஜெபம், “ஆலயம், ஜெபத்தின் வீடு, உபவாசத்தின் வீடு, விசுவாசத்தின் வீடு, கற்றுக்கொள்ளுதலின் வீடு, மகிமையின் வீடு, ஒழுங்கின் வீடு, தேவனின் வீடு” என போதிக்கிறது. 18

இந்த பண்புகளின் பட்டியல் ஒரு ஆலயத்தின் விவரிப்பை விட அதிகம். கர்த்தரின் இல்லத்தில் சேவை செய்பவர்களுக்கும், ஆராதிப்பவர்களுக்கும் என்ன நடக்கும் என்பது பற்றிய வாக்குத்தத்தம் இது. ஜெபம், தனிப்பட்ட வெளிப்பாடு, அதிக விசுவாசம், வலிமை, ஆறுதல், அதிகரித்த அறிவு மற்றும் அதிகரித்த வல்லமை ஆகியவற்றுக்கான பதில்களைப் பெற அவர்கள் எதிர்பார்க்கலாம்.

ஆலயத்தில் இருக்கும் நேரம் சிலஸ்டியலாக சிந்திக்கவும், நீங்கள் உண்மையில் யார், நீங்கள் யாராக ஆக முடியும் மற்றும் நீங்கள் என்றென்றும் வாழக்கூடிய வாழ்க்கையைப் பற்றிப் பார்க்கவும் உதவும். வழக்கமான ஆலய ஆராதனை உங்களை நீங்கள் பார்க்கும் விதத்தையும், தேவனின் மகத்தான திட்டத்திற்கு நீங்கள் எவ்வாறு பொருந்துகிறீர்கள் என்பதையும் மேம்படுத்தும். அதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

ஆலயத்தில் நாம் “பரிசுத்த ஆவியின் பரிபூரணத்தை பெறலாம்” என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.19 நித்திய சத்தியத்தை ஆர்வத்துடன் தேடும் ஒவ்வொருவருக்கும் வானங்கள் திறக்கப்படுவதன் அடிப்படையில் அந்த வாக்குறுதியின் அர்த்தம் என்ன என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

ஆலயத்தில் ஆராதிக்கும் அனைவரும் தேவனின் வல்லமையோடும், தேவதூதர்கள் “தங்கள்மீது பொறுப்பேற்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்படுகிறோம்.20 ஒரு பெண் அல்லது தேவனின் வல்லமையைக் கொண்ட ஆணாக, நீங்கள் தனியாக வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை அறிவது உங்கள் நம்பிக்கையை எந்தளவுக்கு அதிகரிக்கிறது? தூதர்கள் உண்மையில் உங்களுக்கு உதவுவார்கள் என்பதை அறிவது உங்களுக்கு என்ன தைரியத்தை அளிக்கிறது?

இறுதியாக, கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதிப்பவர்கள் மேல், “தீமையின் சேர்க்கை எதுவும்” ஜெயம் கொள்ளாது என்று நமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.21

ஆலயத்தில் சாத்தியமான ஆவிக்குரிய சிலாக்கியங்களைப் புரிந்துகொள்வது இன்று நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது.

என் அன்பு சகோதர சகோதரிகளே, இதோ என் வாக்குறுதி. இரும்புக் கம்பியை உறுதியாகப் பிடித்துக் கொள்ள,22 உங்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கும் அளவுக்குத் தவறாமல் ஆலயத்தில் வழிபடுவதைத் தவிர அதிகமாக வேறு எதுவும் உங்களுக்கு உதவாது. உலகின் இருள் மூடுபனிகளை நீங்கள் சந்திக்கும் போது எதுவும் அதிகம் உங்களைப் பாதுகாக்காது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய பாவநிவர்த்தி பற்றிய உங்கள் சாட்சியை வேறு எதுவும் வலுப்படுத்தாது அல்லது தேவனின் மகத்தான திட்டத்தை அதிகம் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவாது. வலியின் போது எதுவும் உங்கள் ஆவியை அதிகம் அமைதிப்படுத்தாது. எதுவும் வானத்தை அதிகம் திறக்காது. எதுவும் திறக்காது!

ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்ட அனைத்து ஆசீர்வாதங்களையும் நாம் பெறக்கூடிய ஒரே இடம் ஆலயம் என்பதால், நம் ஒவ்வொருவருக்கும் தேவன் வைத்திருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதங்களுக்கான நுழைவாயில் ஆலயம்.23 இதனால்தான், ஆலய ஆசீர்வாதங்களை சபையின் உறுப்பினர்களுக்கு மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு, கர்த்தருடைய வழிகாட்டுதலின் கீழ், நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். எனவே, பின்வரும் இந்த ஒவ்வொரு 15 இடங்களிலும் ஒரு புதிய ஆலயம் கட்ட திட்டமிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • யுட்டுரோவா, ப்ரெஞ்ச் பாலினீசியா

  • சிஹுவாஹுவா, மெக்சிகோ

  • ப்லோரியானோபோலிஸ், பிரேசில்

  • ரோசாரியோ, அர்ஜென்டினா

  • எடின்பர்க், ஸகாட்லாந்து

  • பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா தெற்கு பகுதி

  • விக்டோரியா, பிரிட்டிஷ் கொலம்பியா

  • யூமா, அரிசோனா

  • ஹூஸ்டன், டெக்சாஸ் தெற்கு பகுதி

  • டெஸ் மொயின்ஸ், அயோவா

  • சின்சினாட்டி, ஒஹாயோ

  • ஹானலுலு, ஹவாய்

  • மேற்கு ஜோர்டான், யூட்டா

  • லேகி, யூட்டா

  • மரகாய்போ, வெனிசுவேலா

அன்பான சகோதர சகோதரிகளே இது, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என நான் சாட்சியமளிக்கிறேன். அவர் இதன் தலைவராயிருக்கிறார். நாம் அவருடைய சீடர்கள்.

ஆசாரியத்துவ திறவுகோல்களை மறுஸ்தாபிதம் செய்வதில் களிகூர்வோம், இது உங்களுக்கும் எனக்கும் ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும் பெற தகுதியாக இருக்க சித்தமாயிருப்பதை சாத்தியமாக்குகிறது. அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.