பொது மாநாடு
எல்லாவற்றிலும் எதிர்ப்பு
ஏப்ரல் 2024 பொது மாநாடு


எல்லாவற்றிலும் எதிர்ப்பு

நம்முடைய சுயாதீனத்தை பிரயோகிக்க நாம் யோசித்து தெரிந்துகொள்ள முரணான விருப்பங்கள் இருப்பது அவசியம்.

என் மனைவியும் நானும் முன்பு சென்றிராத ஒரு நகரத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த போது, நான் தெரியாமல், தவறுதலாக ஒரு இடத்திலே வண்டியைத் திருப்பினேன். இதனால் நாங்கள் மீண்டும் திருப்பமுடியாதபடி, முடிவற்ற மைல்கள் விரைவு நெடுஞ்சாலையில் செல்லவேண்டியதாயிற்று ஒரு நண்பருடைய இல்லத்திற்கு வரும்படி அன்பாக அழைக்கப்பட்டிருந்தோம். ஆனால் இப்போதோ நாங்கள் எதிர்பார்த்த நேரத்தை காட்டிலும் அதிக தாமதமாக போய் சேருவோமே என்று கலக்கமடைதோம்.

இந்த நெடுஞ்சாலையில் வண்டியைத் திருப்ப ஒரு வழியை விரக்தியுடன் தேடுகையில், புவியிடங்காட்டி சாதனம் முன்வைத்த தடத்தை கவனம் கொள்ளாமலிருந்ததற்கு என்னையே நான் திட்டிகொண்டேன். எப்படி நம்முடைய வாழ்வில் சில சமயங்களில் தவறான தீர்மானங்களுக்கு வருகிறோம் என்றும், நம்முடைய வழியை மாற்றும்வரைக்கும் பின்விளைவுகளுடன் தாழ்மையோடும் பொறுமையோடும் வாழ வேண்டி இருக்கிறதென்றும் இந்த அனுபவம் என்னை சிந்திக்க வைத்தது.

தேர்வுசெய்வதே வாழ்க்கையின் சாராம்சம். குறிப்பாக நம்முடைய தேர்வுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவே பரலோக பிதா சுயாதீனத்தை நமக்கு அருளியிருக்கிறார். சரியானவைகளிருந்து மாத்திரமல்ல தவறான தேர்வுகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்கிறோம். நாம் மனந்திரும்பும்போது தவறான தேர்வுகளை சரிசெய்கிறோம். இங்கேதான் வளர்ச்சி ஏற்படுகிறது. நம் எல்லோருக்குமான பரலோக பிதாவின் திட்டம் கற்றல், விருத்தியடைதல், மற்றும் நித்திய ஜீவனை நோக்கிய முன்னேறுதல் என்பவைகளை பற்றியதாக இருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்பு என் மனைவியும் நானும் ஊழியக்காரர்களால் போதிக்கப்பட்டு சபையில் சேர்ந்தது முதல், நான் மார்மன் புஸ்தகத்தில் லேகி தன் குமாரனாகிய யாக்கோபுக்கு கொடுத்த ஆழமான போதனைகளால் மனம் நெகிழ்ந்து போகிறேன். “கர்த்தராகிய தேவன், மனுஷன் தானாகவே செயல்படும்படிக்கு அருளினார்.” என்றும்1”எல்லாவற்றிலும் எதிர்ப்பு இருப்பது அவசியமாயிருக்கிறது” என்றும் அவனுக்கு போதித்தான்.2 நம்முடைய சுயாதீனத்தை பிரயோகிக்க நாம் யோசித்து தெரிந்துகொள்ள முரணான தேர்வுகள் இருப்பது அவசியம். இப்படி செய்வதின் நிமித்தம், “போதுமான அளவு உபதேசிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றும்,3 “கிறிஸ்துவின் ஆவி” 4“தீமையினின்று, நன்மையை அறியும் பொருட்டு” நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் மார்மன் புஸ்தகம் நமக்கு நினைப்பூட்டுகிறது. 5

வாழ்வில், நாம் அநேக முக்கிய தேர்வுகளை நீங்காது கடந்து வருகிறோம். உதாரணமாக:

  • தேவனுடைய கட்டளைகளை நாம் கைக்கொள்ளுவோம் அல்லது கைக்கொள்ளமாட்டோம் என்று தேர்வுசெய்தல்.

  • அற்புதங்கள் நிகழும்போது விசுவாசம் மற்றும் அடையாளம் கண்டுகொள்வதைத் தேர்ந்தெடுப்பது அல்லது ஏதாவது நடக்கும் வரை சந்தேகத்துடன் காத்திருப்பதைத் தேர்ந்தெடுப்பது.

  • தேவ நம்பிக்கை வளர்க்க முற்படுதல் அல்லது பயத்துடனே மறுநாளில் மற்றுமொரு சவாலை எதிர்கொள்ள தேர்வுசெய்தல்.

அந்த நெடுஞ்சாலையில் தவறாக திருப்பியதைப் போல, நம்முடைய சொந்த மட்டமான தீர்மானங்களின் பின்விளைவுகளினால் வரும் பாடுகள் அநேகந்தரம் வலிமிகுந்ததாய் இருக்கக்கூடும். ஏனெனில் பழி சுமத்தப்பட நாம் மட்டுமே இருக்கிறோம். இருப்பினும் மனந்திரும்புதலெனும் தெய்வீக முறையின் மூலம் நாம் ஆறுதலை பெற எப்போதும் தேர்வுசெய்து, தவறுகளை மறுபடியும் செம்மையாக்க வேண்டும். இப்படி செய்வதின்மூலம் வாழ்க்கையை மாற்றிப்போடும் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

சில சமயங்களில் நம்முடைய சக்திக்கு மீறியவைகளால் எதிர்ப்பையும் சோதனைகளையும் அனுபவிக்கக்கூடும். பின்வருபவைகளை போல:

  • சுகமான தருணங்கள் மற்றும் நோய்வாய்ப்படும் நேரங்கள்.

  • சமாதான மற்றும் யுத்த சமயங்கள்.

  • பகல் மற்றும் இரவு, கோடை மற்றும் குளிர் காலங்கள்.

  • பிரயாச காலம் அதை பின்தொடர்ந்து வரும் இளைப்பாறுதலின் காலம்.

இப்பேர்ப்பட்ட சூழ்நிலைகள் சாதாரணமாக சம்பவிப்பதால் இவைகளில் நாம் தேர்வு செய்யக்கூடாமற்போனாலும், இக்காலங்களில் நாம் எப்படிநடந்துகொள்வோம் என்பதை தேர்வுசெய்ய நாம் சுயாதீனர்களாய் இருக்கிறோம். நேர்மறை அல்லது அவநம்பிக்கையான போதும் நாம் அப்படிச் செய்யலாம். நாம் இந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு நம்முடைய கர்த்தரின் உதவிக்காகவும் ஆதரவுக்காகவும் விண்ணப்பம் செய்யலாம், அல்லது நாம் இந்த சோதனையில் தனித்து இருக்கிறோம் என்றும், ஒற்றை நபராக பாடுகளை சகிக்கவேண்டும் என்றும் கருதலாம். புதிய யதார்த்தத்திற்கு ஏற்ப நம்முடைய போக்கை மாற்றிக்கொள்ளலாம், அல்லது எதையும் மாற்ற வேண்டாம் என்று தீர்மானிக்கலாம். இரவின் இருளில், நம் விளக்குகளை எரிய விடலாம். குளிர்காலத்தில், நாம் சூடான ஆடைகளை அணிய தேர்வு செய்ய விரும்புகிறோம். நோயின் காலங்களில், நாம் மருத்துவ மற்றும் ஆவிக்குரிய உதவியை நாடலாம். இந்த காலகட்டங்களில் எப்படி நடந்துகொள்வது என்பதை நாம் தேர்வுசெய்யலாம்.

அனுசரிப்பு, கற்றல், தேடல், தேர்வுசெய்தல் ஆகியவை யாவும் வினைச்சொற்களே, நாம் சுயாதீனர்கள், பொருட்கள் அல்ல என்பதை நினைவுகூருங்கள். இயேசு, “அவர் தம் ஜனத்தின் வேதனைகளையும், நோய்களையும் தம் மேல் ஏற்றுக்கொள்வேன்” அல்லது அவரிடத்தில் திரும்பும்போது உதவி செய்வதாகவும் அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 6 இயேசு கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் நம்முடைய அஸ்திபாரத்தைக் கட்ட தேர்வுசெய்யலாம். சூறாவளி வரும்போது “அது [நம்மீது] வல்லமையற்று போகும்.” 7 “யார் [தம்மிடத்தில்] வந்தாலும், [அவர்] அவனை ஏற்றுக்கொள்வார். [அவரிடத்தில்] வருகிறவர்கள் பாக்கியவான்கள்” என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.8

இப்போது, குறிப்பாக முக்கியமான ஒரு கூடுதல் கொள்கை உள்ளது. “எல்லாவற்றிலும். எதிர்ப்பு இருப்பது அவசியமாயிருக்கிறது” என்று லேகி சொன்னான்.9 இதன் அர்த்தம் என்னவென்றால் எதிர்மறையானவைகள் ஒன்றுக்கு ஒன்று விலகி இருப்பது அல்ல. அவை ஒன்றோடு ஒன்று ஒத்தாசை செய்யக்கூடும். நாம் ஒரு காலகட்டத்தில் துக்கத்தை அனுபவியாமல் நாம் சந்தோஷத்தை அடையாளம் காண முடியாது. சில நேரங்களில் பசியாய் இருப்பது மறுபடியும் உண்ண அதிகம் கிடைக்கும் போது குறிப்பாக நன்றியுள்ளவர்களாக இருக்க உதவுகிறது. பொய்களை இங்கும் அங்குமாக காணும் வரைக்கும், சத்தியத்தை அடையாளம் காண முடியாது.

இந்த எதிர்மறைகள் ஒரே நாணயத்தின் இரு புறங்களைப் போன்றவை. இரு புறங்கள் எப்போதும் நிலைத்திருக்கக்கூடியவை. “அது காலங்கள் அனைத்திலும் சிறப்புள்ளதாயும், காலங்கள் அனைத்திலும் கேடுள்ளதாயும் இருந்தது” என்று சார்லஸ் டிக்கன்ஸ் எழுதியதின் மூலம் அவர் இந்த கருத்துக்கு ஓர் உதாரணம் தந்துள்ளார்.10

எங்களுடைய சொந்த வாழ்க்கையிலிருந்து நான் ஓர் உதாரணத்தை கொடுக்கிறேன். மணம் முடித்தல், குடும்பமாகுதல், பிள்ளைகளைப் பெற்றெடுத்தல் ஆகியவை எங்களுடைய வாழ்க்கையில் நாங்கள் என்றும் அனுபவித்த மிக சந்தோஷமான தருணங்கள், ஆனாலும் எங்களில் ஒருவருக்கு எதாவது சம்பவித்தால் அவை பாடுள்ளதும் வியாகுலமும் துக்கமும் நிறைந்த மிக சங்கடமான நிகழ்வுகளாயும் இருக்கின்றன. எங்கள் பிள்ளைகளினிடத்தில் கொண்ட முடிவற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும், திரும்பத் திரும்ப நடந்தேறுகிற நிகழ்வுகளான நோய்கள், மருத்துவமனை சேர்க்கை, இக்கட்டு நிறைத்த தூக்கமற்ற இரவுகள் ஆகியவைகளாலும், மற்றும் ஜெபத்திலும் ஆசாரியத்துவ ஆசீர்வாதத்திலும் நிவாரணம் தேடுதலாலும் கூட பின்தொடரப்படுகின்றன. கஷ்ட காலங்களில் நாம் என்றும் தனியாக விடப்படுவதில்லை என்று இந்த முரண்பாடுள்ள அனுபவங்கள் எங்களுக்கு கற்பித்தன. கர்த்தருடைய ஒத்தாசையுடனும் உதவியுடனும் அதிகமானவற்றை தாங்க முடியும் என்றும் அது காண்பித்தது. அந்த அனுபவங்கள் எங்களை அருமையான வழிகளில் ஒழுங்குபடுத்தின. இவைகள் அனைத்தும் மிகவும் பிரயோஜனமானவை. இதற்கல்லவா இங்கே நாம் வந்திருக்கிறோம்?

வேதங்களில் நாம் சில சுவாரஸ்யமான உதாரணங்களையும் காணலாம்.

  • லேகி தன் குமாரனாகிய யாகோபுக்கு, தான் வனாந்திரத்தில் பட்ட உபத்திரவங்கள் தனக்கு தேவனின் மகத்துவத்தை அறிய உதவின என்றும், “[தேவன்] [அவனது ] உபத்திரவங்களை, [அவனது] ஆதாயத்திற்கென மாற்றுவார்” என்றும் போதித்தான்.11

  • லிபர்ட்டி சிறையில் ஜோசப் ஸ்மித் கொடூரமாக அடைத்துவைக்கப்பட்டிருத்தபோது, கர்த்தர் அவரிடத்தில் “இந்தக் காரியங்கள் யாவும் [அவருக்கு] அனுபவத்தைத் தரும், [அவருடைய] நன்மைக்காயிருக்கும்” என்றார். 12

  • இறுதியாக, இது வரைக்கும் கண்டவைகளில் இயேசு கிறிஸ்துவின் முடிவற்ற தியாகமே, வேதனைகள் மற்றும் பாடுகள் கொண்ட மாபெரும் உதாரணமாக நிச்சயமாக இருக்கிறது மட்டும் அல்லாமல், அவருடைய பாவநிவர்த்தியின் அருமையான ஆசீர்வாதங்களை தேவ பிள்ளைகள் யாவருக்கும் கொண்டுவந்தது.

எங்கு சூரிய ஒளி படுகிறதோ அங்கு நிழல்களும் இருக்கும். ஜலப்பிரளயம் சேதப்படுத்தும், ஆனால் அவை பொதுவாக ஜீவனையும் கொண்டுவரும். சோக கண்ணீர் பலமுறை நிவாரணமான மற்றும் ஆனந்த கண்ணீராக மாறும். அன்புக்குரியவர்கள் பிரிந்துபோகும்போது உண்டாகும் சோக உணர்வுகள் அவர்களை மறுபடியும் சந்திப்பதில் வரும் மகிழ்ச்சியால் பின்பு ஈடுசெய்யப்படும். யுத்த அழிவு காலங்களில், தயவும் அன்பும் கொண்ட அநேக சிறிய செயல்கள் “காண கண்களையும் கேட்க காதுகளையும்” பெற்றிருப்போருக்கு சம்பவிக்கின்றன.13

நம்முடைய உலகம் பயமும் திகிலும் கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது—எதிர்காலம் நமக்கு என்னவற்றை கொண்டுவரக் கூடுமோ என்ற பயமே அது. ஆனால் இயேசுவோ, நாம் நம்பிக்கை வைக்கவும், “ஒவ்வொரு எண்ணத்திலும் [தம்மை] நோக்கிப்பார்; சந்தேகப்படாதே, பயப்படாதே” என்று போதித்தார்.14

நம்முடைய வாழ்வில் நமக்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு நாணயத்தின் இரு புறங்களையும் காணத்தக்கதாக விழிப்புடனே தொடர்ந்து தீவிர முயற்சி செய்வோமாக. இரு புறங்களும் சிலசமயங்களில் உடனே நமக்கு தென்படாமல் போனாலும், அவை எப்பொழுதும் அங்கே இருக்கின்றன என்று நாம் அறிந்து நம்பிக்கை வைக்கலாம்.

நம்முடைய கஷ்டங்கள், துக்கங்கள், உபத்திரவங்கள், பாடுகள் ஆகியவை நம்மை நிதானிப்பதில்லை என்பது அதிநிச்சயமே. அவைகளை எப்படி கையாளுகிறோம் என்பதே நம்முடைய வளர்ச்சிக்கும் தேவனிடத்தில் கிட்டி சேர்வதற்கும் உதவுகிறது. நம்முடைய சவால்களை காட்டிலும் நம்முடைய செயல்பாடுகளும் தேர்வுகளுமே நம்மை அதிகமாக நிதானிக்கின்றன.

சுகவாழ்வில், சந்தோஷப்பட்டு அதற்காய் ஒவ்வொரு கணமும் நன்றியோடு இருங்கள். சுகவீனத்தில், அதிலிருந்து பொறுமையாய் கற்றுக்கொள்ளத் தேடி, இந்த நிலைமை தேவ சித்தத்திற்கேற்ப மறுபடியும் மாறக்கூடும் என்று அறிந்து கொள்ளுங்கள். துக்கத்தில், சந்தோஷம் அருகாமையில் உள்ளது என்று நம்புங்கள்; அது அங்கு இருந்தும் பலமுறை அதை காணாதே போகிறோம். விழிப்புடனே உங்கள் கவனத்தை நகர்த்தி, சவால்களின் அனுகூலமான அம்சங்களுக்கு உங்கள் எண்ணங்களை உயர்த்துங்கள். ஏனெனில் அவை சந்தேகத்திற்கு இடமின்றி அங்கேயும் எப்போதும் இருக்கின்றன! நன்றியோடு இருக்க மறக்காதீர்கள். நம்பிக்கையோடு இருக்க தேர்வு செய்யுங்கள். இயேசு கிறிஸ்துவில் விசுவாசிக்க தேர்வு செய்யுங்கள். எப்போதும் தேவனை நம்ப தேர்வுசெய்யுங்கள். தலைவர் ரசல் எம். நெல்சன் சமீபத்தில் போதித்ததுபோல “சிலஸ்டியலாக சிந்திக்க” தேர்வு செய்யுங்கள்.15

நம்முடைய பரலோக பிதாவின் நமக்கான அற்புதத் திட்டத்தை எப்போதும் கவனத்தில் வைத்திருப்போமாக. அவர் நம்மை நேசிக்கிறார். அவர் தம்முடைய பிரியமான குமாரனை நம்முடைய சோதனைகளில் நமக்கு உதவவும், அவரிடத்தில் திரும்பி செல்ல கதவை திறந்திடவும் அனுப்பினார். இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார், ஒவ்வொரு கணமும் அங்கே நின்று, ஒத்தாசை, பெலன், இரட்சிப்பு ஆகியவைகளை வழங்கிட அவரை அழைக்க நாம் தேர்வு செய்யும்படியாய் காத்திருக்கிறார். இந்தக் காரியங்களைக் குறித்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.