பொது மாநாடு
மார்மன் புஸ்தகத்தை நாம் பெற வேண்டும் என்பது கர்த்தரின் ஞானம்
ஏப்ரல் 2024 பொது மாநாடு


மார்மன் புஸ்தகத்தை நாம் பெற வேண்டும் என்பது கர்த்தரின் ஞானம்

இந்த ஆண்டு மார்மன் புத்தகத்தைப் படிப்பது நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மகிழ்ச்சியாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்க வேண்டும்.

அன்பான சகோதர சகோதரிகளே, என்னைப் பின்பற்றி வாருங்களுடன் வேதத்தை வாசிப்பதில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நீங்கள் செய்யும் அனைத்திற்கும் நன்றி. தேவனுடனும் அவருடைய வார்த்தையுடனும் உங்கள் தினசரி தொடர்பு ஆழமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. “ஏனெனில் ஒரு மகத்தான பணிக்கு நீங்கள் அஸ்திபாரம் போடுகிறீர்கள். சிறிய காரியங்களிலிருந்து பெரிதானவை வரும்”1

வேதத்தில் உள்ள இரட்சகரின் போதனைகளைப் படிப்பது, நம் வீடுகளை நம்பிக்கையின் பரிசுத்த ஸ்தலங்களாகவும், சுவிசேஷக் கற்றல் மையங்களாகவும் மாற்ற உதவுகிறது.2 அது ஆவியானவரை நம் வீடுகளுக்குள் அழைக்கிறது. பரிசுத்த ஆவியானவர் நம் ஆத்துமாக்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறார் 3 மேலும் நம்மை இயேசு கிறிஸ்துவின் வாழ்நாள் சீடர்களாக மாற்றுகிறார்.

கடந்த பல ஆண்டுகளாக, பரிசுத்த நூல்களைப் படிக்கும் போது, அனைத்து முக்கிய சுவிசேஷ ஊழியகாலங்களிலும் தேவன் அவருடைய பிள்ளைகளுக்குக் கொடுத்த போதனைகளின் விசாலமான காட்சியைப் பார்த்தோம்.4

ஒவ்வொரு ஊழியக்காலத்திலும், நாம் ஒரு பழக்கமான முறையைப் பார்க்கிறோம். தேவன் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் மறுஸ்தாபிதம் செய்கிறார் அல்லது வெளிப்படுத்துகிறார். மக்கள் தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுகிறார்கள் அவர்கள் பெரிதும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். இருப்பினும், காலப்போக்கில், சிலர் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்பதை நிறுத்திவிட்டு, கர்த்தரிடமிருந்தும் அவருடைய சுவிசேஷத்திலிருந்தும் தங்களைத் தூர விலக்கிக் கொள்கிறார்கள். இதைத்தான் மதமாறுபாடு என்கிறோம். சுவிசேஷம் முதன்முதலில் ஆதாமுக்கு வெளிப்படுத்தப்பட்டது, ஆனால் ஆதாம் மற்றும் ஏவாளின் சில பிள்ளைகள் மதமாறுபாட்டில் கர்த்தரை விட்டு விலகினர்.5 ஏனோக், நோவா, ஆபிரகாம், மோசே மற்றும் பிறரின் ஊழியக்காலங்களில் மறுஸ்தாபிதம் மற்றும் மதமாறுபாட்டின் ஒரு மாதிரியை நாம் பார்க்கிறோம்.

இன்று நாம் ஊழியக்காலத்தின் நிறைவான காலத்தில் வாழ்கிறோம்.6 மதமாறுபாட்டில் முடிவடையாத ஒரே ஊழியக் காலம் இதுதான்.7 இந்த ஊழியக்காலமே இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் அவருடைய ஆயிர வருட அரசாட்சியையும் கொண்டுவரும்.

எனவே இந்த ஊழியக்காலத்தின் வித்தியாசம் என்ன? இரட்சகரிடம் நெருங்கிச் செல்லவும், அவரை விட்டு விலகாமல் இருக்கவும் உதவும், குறிப்பாக நம் காலத்திற்கு, கர்த்தர் இன்று நமக்கு என்ன அளித்திருக்கிறார்?

என் நினைவுக்கு வரும் ஒரு பதில் வேதங்கள்—குறிப்பாக மார்மன் புஸ்தகம்: இயேசு கிறிஸ்துவின் மற்றொரு ஏற்பாடு.

மற்றொரு பொதுவான மதமாறுபாடு ஒருபோதும் இருக்காது என்று தேவன் உறுதியளித்திருந்தாலும், தனிப்பட்ட மதமாறுபாட்டை தவிர்ப்பதற்கு நாம் விழிப்புடனும் கவனமாகவும் இருக்க வேண்டும்— தலைவர் ரசல் எம். நெல்சன் கற்பித்ததைப் போல, “நமது தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சிக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பு.”8 மார்மன் புஸ்தகத்தைப் படிப்பது, இந்த ஆண்டு நாம் செய்து கொண்டிருப்பது போல, எப்போதும் நம்மை இரட்சகரிடம் நெருக்கமாகக் கொண்டுவருகிறது—அவருடன் நெருக்கமாக இருக்க உதவுகிறது.

நாம் அதை “படிப்பு” என்று அழைக்கிறோம், அது நல்லது, ஏனென்றால் அது முயற்சியைக் குறிக்கிறது. ஆனால் நாம் எப்போதும் சில புதிய உண்மைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. சில சமயங்களில் மார்மன் புஸ்தகத்தைப் படிப்பது என்பது இன்று தேவனுடன் இணைந்திருப்பதை உணருவதாகும்—ஆத்துமாவை போஷிப்பது, உலகத்தை எதிர்கொள்ளும் முன் ஆவிக்குரிய விதமாக பலப்படுத்துவது அல்லது உலகில் ஒரு கடினமான நாளுக்குப் பிறகு குணமடைவது.

நாம் வேதங்களைப் படிக்கிறோம், அதனால் பரிசுத்த ஆவியானவர், பெரிய போதகர், பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவிடம் நம் மனமாற்றத்தை ஆழமாக்கி, அவர்களைப் போல் ஆக நமக்கு உதவ முடியும்.9

இந்த எண்ணங்களை மனதில் கொண்டு, “மார்மன் புஸ்தகத்தைப் படிக்கும்போது இந்த வாரம் பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்ன கற்பித்தார்?” மற்றும் “இது எவ்வாறு நம்மை இரட்சகரிடம் நெருக்கமாகக் கொண்டுவருகிறது?” என்று நாம் கருத்தில் கொள்ளலாம்.

வீட்டில் நமது வேதப் படிப்புக்கு இவை நல்ல கேள்விகள். அவை சபையில் ஞாயிறு வகுப்பைத் தொடங்குவதற்கான சிறந்த கேள்விகளும்கூட. வாரத்தில் வீட்டில் நமது கற்றலை மேம்படுத்துவதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை சபையில் நமது கற்றலை மேம்படுத்துகிறோம். எனவே, நமது ஞாயிறு வகுப்புகளில், “பிரசங்கிக்கிறவனும் பெறுகிறவனும் ஒருவருக்கொருவரை புரிந்துகொள்கிறார்கள், இருவருமே பக்திவிருத்தியடைந்து ஒன்றாக களிகூருகிறார்கள்.”

இந்த வார மார்மன் புஸ்தகத்தின் படிப்பிலிருந்து ஆவியானவர் என் மனதில் பதித்த சில வசனங்கள் இதோ:

  • நேபி யாக்கோபிடம் “இந்தத் தகடுகளைப் பாதுகாத்து, தலைமுறை தலைமுறைதோறும் … ஒப்படைக்கவேண்டுமென்றும், பரிசுத்தமான பிரசங்கங்களோ, வெளிப்படுத்தல்களோ, தீர்க்கதரிசனங்களோ இந்தத் தகடுகளின்மீது பதிக்கவும், … [தன்] ஜனத்துக்காகவும்,” அறிவுறுத்தினான்.”11

  • யாக்கோபு பின்னர் சாட்சியமளித்தான், “[வேதங்களை] நாங்கள் ஆராய்ந்து பார்க்கிறோம். … இந்த எல்லா சாட்சிகளையும், பெற்றிருப்பதால், நாங்கள் நம்பிக்கையைப் பெறுகிறோம். எங்களின் விசுவாசம் அசைக்கப்பட முடியாததாயிருக்கிறது.”12

பித்தளைத் தகடுகளைப் பற்றி நேபி முன்பு கூறியதை இந்த வசனங்கள் எனக்கு ஞாபகப்படுத்தியது:

“பதிவேடுகளை நாங்கள் பெற்று, அவைகளை ஆராய்ந்து, அவைகள்; … கர்த்தருடைய கட்டளைகளை எங்கள் பிள்ளைகளுக்குப் பாதுகாத்து வைக்கும் அளவுக்கு எங்களுக்கு அவ்வளவு பெருமதிப்பு உடையனவாய் இருந்தன.

“ஆகையால் வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கி வனாந்தரத்தில் நாங்கள் பயணம் செய்யும்போது, அவைகளை எங்களுடன் எடுத்துச் செல்வது கர்த்தரின் ஞானமாயிருந்தது.”13

இப்போது, லேகிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் வேதம் இருப்பது ஞானமாக இருந்தால், நமக்கும் அதே ஞானம்தான். வேதங்களின் பெரும் மதிப்பும் ஆவிக்குரிய வல்லமையும் இன்றும் நம் வாழ்வில் மங்காமல் தொடர்கிறது.

இன்று நாம் பெற்றிருக்கும் மார்மன் புஸ்தகத்தையும் மற்ற வேதங்களையும் பெறக்கூடிய ஒரு ஜனம் வரலாற்றில் இருந்ததில்லை.14 ஆம், லேகியும் அவனது குடும்பத்தினரும் பித்தளைத் தகடுகளை எடுத்துச் செல்லும் ஆசீர்வாதம் பெற்றனர், ஆனால் ஒவ்வொரு கூடாரத்திற்கும் ஒரு நகல் அவர்களிடம் இல்லை! மார்மன் புஸ்தகத்தின் மிக முக்கியமான நகல் நமது தனிப்பட்ட நகல் ஆகும். நாம் வாசிக்கிற பிரதி அது.

ஜீவ விருட்சத்தைப் பற்றிய லேகியின் தரிசனத்தில், தேவனின் அன்புடன் தனிப்பட்ட அனுபவத்தின் முக்கியத்துவத்தை லேகி நமக்குக் கற்பித்தான். அவன் பழத்தை சாப்பிட்ட பிறகு, லேகி தனது மனைவி சரயாவையும், அவனது மகன்களான நேபியையும் சாமையும் சிறிது தூரத்தில் பார்த்தான்.

“மேலும் அவர்கள் எங்கே போகவேண்டுமென்று தெரியாதவர்களைப்போல நின்றுகொண்டிருந்தார்கள்.

லேகி சொன்னான், “ … நான் அவர்களிடத்தில் சைகை காட்டினேன்; மேலும் அவர்கள் என்னிடத்தில் வந்து எல்லாக் கனிகளையும் விட, விரும்பத்தக்க இந்தக் கனியைப் புசிக்கவேண்டும் என்று உரத்த குரலிலும் அவர்களிடத்தில் சொன்னேன்.

“அவர்கள் என்னிடம் வந்து அந்தக் கனியைப் புசித்தார்கள்.”15

மனதார்ந்த பெற்றோருக்குரிய லேகியின் உதாரணத்தை நான் விரும்புகிறேன். சரயா, நேபி, சாம் ஆகியோர் நல்ல, நீதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால் கர்த்தர் அவர்களுக்குச் சிறந்த, இனிமையான ஒன்றை வைத்திருந்தார். அதை எங்கு கண்டுபிடிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை, ஆனால் லேகிக்குத் தெரியும். எனவே, ஜீவ விருட்சத்தினிடத்தில் வந்து, தாங்களாகவே கனிகளை சாப்பிடும்படி, “உரத்த சத்தத்தோடு,” அவர்களை அழைத்தான். அவரது நடத்துதல் தெளிவாக இருந்தது. தவறான புரிதல் இருக்க முடியாது.

நான் அதே மாதிரியான மனதாரச் செய்த வளர்ப்பின் விளைபொருள்.16 நான் சிறுவனாக இருந்தபோது, ஒருவேளை 11 அல்லது 12 வயது இருக்கலாம், என் அம்மா என்னிடம், “மார்க், சுவிசேஷம் உண்மையென்று பரிசுத்த ஆவியினாலே உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

அவள் கேள்வி என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் எப்போதும் “நல்ல பையனாக” இருக்க முயற்சித்தேன், அது போதும் என்று நினைத்தேன். ஆனால் லேகியைப் போலவே என் அம்மாவுக்கும் இன்னும் அதிகம் தேவை என்று தெரியும். என்னை நானே தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

எனக்கு அந்த அனுபவம் இதுவரை இல்லை என்று பதிலளித்தேன். என் பதிலில் அவர் ஆச்சரியப்பட்டதாகத் தெரியவில்லை.

அப்போது அவர் நான் மறக்காத ஒன்றைச் சொன்னார். இன்றுவரை அவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு நினைவிருக்கிறது: “பரலோக பிதா நீங்களாகவே தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார். ஆனால் நீயே முயற்சி செய்ய வேண்டும். நீ மார்மன் புஸ்தகத்தைப் படித்து, பரிசுத்த ஆவியால் அறிய ஜெபிக்க வேண்டும். பரலோக பிதா உன் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார்.”

சரி, நான் இதற்கு முன் மார்மன் புஸ்தகத்தைப் படித்ததில்லை. அதைச் செய்ய எனக்கு வயதாகிவிட்டது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் என் அம்மாவுக்கு நன்றாகத் தெரியும்.

அவரது கேள்வி என்னுள் என்னை அறியும் ஆவலைத் தூண்டியது.

எனவே, ஒவ்வொரு இரவும், எனது இரண்டு சகோதரர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட படுக்கையறையில், என் படுக்கைக்கு மேலே உள்ள விளக்கை போட்டுக்கொண்டு செய்து, மார்மன் புஸ்தகத்தில் ஒரு அதிகாரத்தைப் படித்தேன். பின்னர், விளக்கை அணைத்து, நான் என் படுக்கையில் இருந்து என் முழங்காலில் விழுந்து ஜெபம் செய்தேன். நான் முன்பை விட அதிக மனப்பூர்வமாகவும் அதிக விருப்பத்துடனும் ஜெபித்தேன். மார்மன் புஸ்தகத்தின் உண்மைத்தன்மையை எனக்கு தெரியப்படுத்துமாறு பரலோக பிதாவிடம் கேட்டேன்.

நான் மார்மன் புஸ்தகத்தைப் படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே, பரலோக பிதா என் முயற்சிகளை அறிந்திருப்பதை உணர்ந்தேன். மேலும் நான் அவருக்கு முக்கியம் என்று உணர்ந்தேன். நான் படித்து ஜெபிக்கும்போது, வசதியான, அமைதியான உணர்வுகள் என் மீது தங்கியிருந்தன. ஒவ்வொரு அதிகாரமாக என் உள்ளத்தில் நம்பிக்கையின் ஒளி பிரகாசமாக வளர்ந்து கொண்டிருந்தது. காலப்போக்கில், இந்த உணர்வுகள் பரிசுத்த ஆவியிடமிருந்து சத்தியத்தின் திடப்படுத்தல் என்பதை நான் உணர்ந்தேன்.17 மார்மன் புஸ்தகம் உண்மை என்றும், இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் என்றும் நானே அறிந்து கொண்டேன். என் அம்மாவின் ஊக்கமளிக்கும் அழைப்பிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

சிறுவனாக இருந்தபோது மார்மன் புஸ்தகத்தைப் படித்த இந்த அனுபவம், இன்றுவரை என்னை ஆசீர்வதிக்கும் வேதப் படிப்பின் ஒரு முறையைத் தொடங்கியது. நான் இன்னும் மார்மன் புஸ்தகத்தைப் படித்து, முழங்கால்படியிட்டு ஜெபம் செய்கிறேன் பரிசுத்த ஆவியானவர் அதன் சத்தியங்களை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.

நேபி சொன்னது சரிதான். நம் வாழ்நாள் முழுவதும் வேதத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது கர்த்தரில் உள்ள ஞானம். மார்மன் புஸ்தகம் “முக்கிய கல்” ஆகும், இது இந்த காலகட்டத்தை முந்தைய எல்லா காலகட்டங்களிலிருந்தும் வேறுபடுத்துகிறது. நாம் மார்மன் புஸ்தகத்தைப் படித்து, ஜீவிக்கும் தீர்க்கதரிசியைப் பின்பற்றும்போது, நம் வாழ்வில் தனிப்பட்ட மதமாறுபாடு இருக்காது.18

தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு ஜீவ விருட்சத்திற்கு வருவதற்கான அழைப்பு அவரது குடும்பத்திற்கான லேகியின் வெறும் அழைப்பல்ல, மேலும் மார்மன் புஸ்தகத்தைப் படித்து ஜெபிக்க என் அம்மாவின் அழைப்பு மட்டுமல்ல. இது நம் தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன், நம் ஒவ்வொருவருக்கும் விடுத்த அழைப்பாகும்.

“மார்மன் புஸ்தகத்தை ஜெபத்தோடு ஒவ்வொரு நாளும், நீங்கள் படிக்கும்போதுஒவ்வொரு நாளும் நீங்கள் சிறந்த தீர்மானங்களை எடுப்பீர்கள். நீங்கள் படிப்பதை சிந்தித்துப் பார்க்கும்போது, வானத்தின் பலகணிகள் திறக்கும், உங்கள் சொந்த கேள்விகளுக்கும் உங்களுக்குப் பதில் கிடைக்கும், உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல் வரும் என்று நான் வாக்களிக்கிறேன்.”19

இந்த ஆண்டு மார்மன் புத்தகத்தைப் படிப்பது நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மகிழ்ச்சியாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்க வேண்டும், மேலும் நம்மை எப்போதும் இரட்சகரிடம் நெருங்கி வரச்செய்ய வேண்டும் என்பதே எனது ஜெபம்.

பரலோக பிதா ஜீவிக்கிறார் இயேசு கிறிஸ்து நம் இரட்சகரும் மீட்பருமானவர். மார்மன் புஸ்தகம் அவருடைய வார்த்தைகளைக் கொண்டுள்ளது மற்றும் அவருடைய அன்பை வெளிப்படுத்துகிறது. இன்று, தலைவர் ரசல் எம்.நெல்சன் பூமியில் கர்த்தருடைய ஜீவிக்கும் தீர்க்கதரிசி. சிறுவனாக இருந்தபோது மார்மன் புஸ்தகத்தைப் படிக்கும் போது நான் முதன்முதலில் பெற்ற சாட்சியான பரிசுத்த ஆவியின் உறுதிப்படுத்தும் சாட்சியின் காரணமாக இவைகள் உண்மை என்று நான் அறிகிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:33.

  2. “புதிய வீட்டை மையமாகக் கொண்ட, சபை-ஆதரவு ஒருங்கிணைந்த பாடத்திட்டம் குடும்பங்களின் வல்லமையை கட்டவிழ்த்துவிடுவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது, ஏனெனில் அந்த ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டை நம்பிக்கையின் சரணாலயமாக மாற்றுவதற்கு மனசாட்சியுடனும் கவனமாகவும் பின்பற்றுகிறது. உங்கள் வீட்டை சுவிசேஷக் கற்கும் மையமாக மாற்ற நீங்கள் விடாமுயற்சியுடன் உழைக்கும்போது, காலப்போக்கில் உங்கள் ஓய்வுநாள் உண்மையிலேயே மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். உங்கள் பிள்ளைகள் இரட்சகரின் போதனைகளைக் கற்றுக்கொள்ளவும் அதன்படி வாழவும் உற்சாகமுள்ளவராயிருப்பார்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் வீட்டிலும் சத்துருவின் செல்வாக்கு குறைந்துபோகும். உங்கள் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் வியக்கத்தக்கதாகவும் நீடித்ததாகவுமிருக்கும்” (Russell M. Nelson, “Becoming Exemplary Latter-day Saints,” Liahona, Nov. 2018, 113).

  3. “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் என் ஆவியை உங்களுக்கு வழங்குவேன், அது உங்கள் மனதை அறிவூட்டும், அது உங்கள் ஆன்மாவை மகிழ்ச்சியால் நிரப்பும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:13).

  4. “பரிசுத்த ஆசாரியத்துவத்தையும் திறவுகோலையும் சுமந்துகொண்டு, பூமியில் வசிப்பவர்களுக்கு சுவிசேஷத்தை வழங்குவதற்கான தெய்வீக ஆணையைக் கொண்ட ஒரு அதிகாரம் பெற்ற ஊழியரையாவது கர்த்தர் பூமியில் வைத்திருக்கும் காலகட்டங்கள் ஊழியக்காலமாகும்.” (Topics and Questions, “Dispensations,” Gospel Library).

  5. மோசே 5:12-16 பார்க்கவும்.

  6. தானியேல் தீர்க்கதரிசி நேபுகாத்நேச்சாரின் கனவை விளக்கியபோது நம்முடைய நாளை, நம்முடைய காலகட்டத்தைப் பார்த்தார். இயேசு கிறிஸ்துவின் பிற்காலப் பரிசுத்தவான்கள் சபை அந்தக் கனவில் உள்ள கல், கைகள் இல்லாமல் மலையிலிருந்து வெட்டப்பட்டு, முழு பூமியையும் நிரப்ப முன்னோக்கி உருளும். (தானியேல் 2:34–35, 44–45; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 65:2).

  7. “பிதாவாகிய தேவனும் இயேசு கிறிஸ்துவும் ஜோசப் ஸ்மித்தை இந்த ஊழியக்காலத்தின் தீர்க்கதரிசியாக அழைத்தார்கள். முந்தைய ஊழியக்காலங்களின் அனைத்து தெய்வீக வல்லமைகளும் அவர் மூலம் மறுஸ்தாபிதம் செய்யப்பட வேண்டும். காலங்களின் முழுமையின் இந்த ஊழியக்காலம் நேரத்திலோ அல்லது இருப்பிடத்திலோ மட்டுப்படுத்தப்படாது. அது மதமாறுபாட்டில் முடிவடையாது, அது உலகை நிரப்பும்” (Russell M. Nelson, “The Gathering of Scattered Israel,” Liahona, Nov. 2006, 79–80).

  8. Russell M. Nelson, “Opening Remarks,” Liahona, Nov. 2018, 8.

  9. See “மனமாற்றம் நமது இலக்கு,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024, v.

  10. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:22; வசனங்கள் 17-21 ஐயும் பார்க்கவும்.

  11. யாக்கோபு 1:3–4.

  12. யாக்கோபு 4:6.

  13. 1 நேபி 5:21–22.

  14. இந்த ஊழியக்காலத்தில் மார்மன் புஸ்தகத்தின் 200 மில்லியன் பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. மார்மன் புஸ்தகம் இப்போது 113 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, 17 புதிய மொழிபெயர்ப்புகள் செயல்பாட்டில் உள்ளன. அச்சு, டிஜிட்டல், ஆடியோ, வீடியோ மற்றும் பிற வடிவங்களில் மார்மன் புத்தகம் இருப்பது என்ன ஒரு ஆசீர்வாதம். (See Ryan Jensen, “Church Distributes 200 Millionth Copy of the Book of Mormon,” Church News, Dec. 29, 2023, thechurchnews.com.)

  15. 1 நேபி 8:14–16; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  16. ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் மிகவும் வல்லமை வாய்ந்த ஆவிக்குரிய செல்வாக்கு, தங்கள் சொந்த பரிசுத்த உடன்படிக்கைகளை உண்மையுடன் கடைப்பிடிக்கும் அன்பான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளின் நீதியான உதாரணம். உணர்வுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தைக் கற்பிக்கிறார்கள், அதனால் அவர்களும் “தங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக எதனைக் கண்நோக்கவேண்டும் என்பதை அறிந்துகொள்வார்கள்.” [2 Nephi 25:26]. தற்செயலான மற்றும் சீரற்ற உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பது ஆவிக்குரிய விபத்துக்கு வழிவகுக்கிறது. ஆவிக்குரிய சேதம் பெரும்பாலும் நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் மீதுதான் அதிகம்” (Kevin W. Pearson, “Are You Still Willing?,” Liahona, Nov. 2022, 69).

  17. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 06:22–24 பார்க்கவும்.

  18. தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சொன்னார்: “பூமியில் இருக்கும் புஸ்தகங்களில் மார்மன் புஸ்தகமே மிகவும் சரியானது என்றும், நம் மதத்தின் மூலைக்கல் என்றும், பிற புஸ்தகங்களை விட இந்தப் புஸ்தகத்தின் கொள்கைகளில் நிலைத்திருப்பதன் மூலம் ஒருவர் தேவனுக்கு மிக அருகில் நெருங்கி வருவார் என்றும் நான் சகோதரர்களுக்குக் கூறினேன்” (மார்மன் புஸ்தகத்தின் முன்னுரை).

  19. Russell M. Nelson, “The Book of Mormon: What Would Your Life Be Like without It?,” Liahona, Nov. 2017, 62–63.