பொது மாநாடு
கர்த்தரை நம்புங்கள்
ஏப்ரல் 2024 பொது மாநாடு


கர்த்தரை நம்புங்கள்

தேவனுடனான நமது உறவு அவரை நம்புவதற்கு தயாராக இருக்கும் அளவிற்கு மட்டுமே வளர முடியும்.

நாங்கள் எங்கள் குடும்பத்தில் சில நேரங்களில் “தி கிரேசி ட்ரஸ்ட் எக்சர்சைஸ்” என்ற ஒரு விளையாட்டை விளையாடுவோம். நீங்களும் இதுபோல விளையாடி இருக்கலாம். இரண்டு பேர் சில அடி இடைவெளியில் நிற்கிறார்கள், ஒருவர் முதுகை மற்றவருக்கு காண்பித்தவாறு நிற்கிறார். பின்னால் இருப்பவர் தந்த சமிக்ஞையில், முன்னால் இருப்பவர் தனது நண்பரின் காத்திருக்கும் கைகளில் பின்னோக்கி விழுகிறார்.

எல்லா உறவுகளுக்கும் நம்பிக்கையே அடித்தளம். எந்தவொரு உறவுக்கும் ஒரு ஆரம்ப கேள்வி “மற்ற நபரை நான் நம்பலாமா?” என்பதே. மக்கள் ஒருவருக்கொருவரில் நம்பிக்கை வைக்க விரும்பும் போதுதான் உறவு உருவாகிறது. ஒருவர் முழுமையாக நம்பினாலும் மற்றவர் நம்பவில்லை என்றால் அது உறவாகாது.

நாம் ஒவ்வொருவரும் “பரலோக பெற்றோரின் அன்புக்குரிய ஆவி குமாரன் அல்லது குமாரத்தி.”1 இருப்பினும், ஆவிக்குரிய வம்சவரலாறு ஒரு அஸ்திபாரத்தை வழங்கும் அதே வேளையில், அது தேவனுடன் ஒரு அர்த்தமிக்க உறவை உருவாக்குவதில்லை. நாம் அவரை நம்பும் போது ஒரு உறவை கட்டியெழுப்ப முடியும்.

பரலோக பிதா தம் ஒவ்வொரு ஆவி பிள்ளைகளுடனும் ஆழ்ந்த மற்றும் தனிப்பட்ட உறவை உருவாக்க முயல்கிறார்.2 அவர் ஜெபிக்கும்போது அந்த வாஞ்சையை இயேசு தெரிவித்தார், “அவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கவும், நீர் என்னிலேயும், நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்ளுகிறேன்.”3 ஒவ்வொரு ஆவிக்குழந்தைகளுடனும், தேவன் தேடும் உறவு மிகவும் நெருக்கமானது மற்றும் தனிப்பட்டது, அவரையும், தன்னிடம் உள்ள அனைத்தையும் அவர் பகிர்ந்து கொள்ள முடியும்.4 அத்தகைய ஆழமான நித்திய உறவானது, பரிபூரணமான, முழுமையான நம்பிக்கையின் மீது கட்டப்படும்போது மட்டுமே மேம்படும்.

அவருடைய பங்கிற்கு, பரலோக பிதா தனது ஒவ்வொரு பிள்ளையின் தெய்வீக ஆற்றலின் மீதான தனது முழுமையான நம்பிக்கையைத் தெரிவிக்க ஆரம்பத்திலிருந்தே கிரியை செய்தார். நாம் பூமிக்கு வருவதற்கு முன்பு நமது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக அவர் முன்வைத்த திட்டத்தின் அடிப்படை நம்பிக்கைதான். அவர் நமக்கு நித்திய பிரமாணங்களை கற்பிப்பார், ஒரு பூமியை சிருஷ்டிப்பார், நமக்கு உலகப்பிரகார சரீரங்களை வழங்குவார், நமக்காகத் தேர்ந்தெடுப்பதற்கான வரத்தை நமக்கு வழங்குவார், மேலும் நமது சொந்த விருப்பங்களைச் செய்வதன் மூலம் கற்றுக்கொள்ளவும் வளரவும் நம்மை அனுமதிக்கிறார். நாம் அவருடைய பிரமாணங்களை பின்பற்றி, அவரோடும் அவருடைய குமாரனோடும் நித்திய ஜீவனை அனுபவிக்க திரும்புவோம் என்று அவர் விரும்புகிறார்.

நாம் எப்போதும் நல்ல தேர்வுகளை செய்ய மாட்டோம் என்பதை அறிந்த அவர், நமது மோசமான தேர்வுகளின் விளைவுகளிலிருந்து தப்பிக்க ஒரு வழியையும் ஆயத்தப்படுத்தினார். அவர் நமக்கு ஒரு இரட்சகரை—அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை —நம் பாவங்களுக்கு பாவநிவர்த்தி செய்யவும், மனந்திரும்புதலின் நிபந்தனையுடன் நம்மை மீண்டும் தூய்மையாக்கவும் வழங்கினார்.5 மனந்திரும்புதல் என்ற விலையேறப்பெற்ற வரத்தை தவறாமல் பயன்படுத்தும்படி அவர் நம்மை அழைக்கிறார்.6

குறிப்பாக குழந்தை தவறு செய்து அதன் விளைவாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதை பெற்றோர் அறிந்தால், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்கும் அளவுக்கு ஒரு குழந்தையை நம்புவது எவ்வளவு கடினம் என்பதை அறிவார்கள். ஆனாலும் பரலோகபிதா நம் தெய்வீக ஆற்றலை அடைய உதவும் தேர்வுகளைச் செய்ய நம்மை அனுமதிக்கிறார்! மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட் கற்பித்தபடி, “நமது பரலோக பிதாவின் குறிக்கோள், அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்ய வேண்டுமென்பதல்ல; அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்யத் தேர்ந்தெடுத்து இறுதியில் அவரைப் போல் ஆக வேண்டும் என்பதே.”7

இருப்பினும், தேவன் நம்மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், அவருடனான நமது உறவு நாம் அவரை நம்ப தயாராக இருக்கும் அளவிற்கு மட்டுமே வளர முடியும். சவால் என்னவென்றால், நாம் ஒரு வீழ்ச்சியடைந்த உலகில் வாழ்கிறோம், மேலும் நம்பிக்கை துரோகம், நேர்மையின்மை, தவறான கையாளுதல் அல்லது மற்றவர்களின் பயமுறுத்தலின் விளைவுகளை நாம் அனைவரும் அனுபவித்திருக்கிறோம். ஒருமுறை துரோகம் இழைக்கப்பட்டால், மீண்டும் நம்புவது நமக்கு கடினமாயிருக்கிறது. அபூரண மனிதர்களுடனான இந்த எதிர்மறை நம்பிக்கை அனுபவங்கள், ஒரு பரிபூரண பரலோக பிதாவை நம்புவதற்கான நமது விருப்பத்தையும் கூட பாதிக்கலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, என்னுடைய இரண்டு நண்பர்கள், லியோனிட் மற்றும் வாலண்டினா, சபையின் உறுப்பினர்களாக ஆவதற்கு விருப்பம் தெரிவித்தனர். சுவிசேஷத்தைக் கற்கத் தொடங்கியபோது, லியோனிட்டிற்கு ஜெபிப்பது கடினமாக இருந்தது. லியோனிட் தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மேலதிகாரிகளின் தவறான கையாளுதல் மற்றும் கட்டுப்பாட்டை அனுபவித்தார், மேலும் அதிகாரத்தின் மீது அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டார். இந்த அனுபவங்கள் அவரது இருதயத்தைத் திறந்து பரலோக பிதாவிடம் தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனைப் பாதித்தன. நேரம் மற்றும் படிப்பின் மூலம், லியோனிட் தேவனின் குணாதிசயத்தைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு தேவனின் அன்பை உணர்ந்தார். அது நடந்தவுடன், நன்றியைத் தெரிவிக்கவும், தேவனிடம் அவர் உணரும் அன்பை பிரதிபலிக்கவும் ஜெபம் அவருக்கு ஒரு இயல்பான வழியாக மாறியது. தேவன் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை, இறுதியில் அவரையும் வாலண்டினாவையும் தேவன் மற்றும் ஒருவருக்கொருவர் தங்கள் உறவை வலுப்படுத்த பரிசுத்த உடன்படிக்கைகளில் பிரவேசிக்க வழிவகுத்தது.

முந்தைய நம்பிக்கை இழப்பு உங்களை தேவனை நம்புவதிலிருந்து தடுக்கிறது என்றால், தயவுசெய்து லியோனிடின் உதாரணத்தைப் பின்பற்றுங்கள். பரலோக பிதா, அவருடைய குணாதிசயங்கள், அவருடைய பண்புகள் மற்றும் அவருடைய நோக்கங்களைப் பற்றிப் பொறுமையாகத் தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் அவருடைய அன்பையும் வல்லமையையும் உணரும் அனுபவங்களைத் தேடுங்கள் மற்றும் பதிவு செய்யுங்கள். தேவனைப்பற்றி நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு அவரை நம்புவது நமக்கு எளிதாக இருக்கும் என்று நமது ஜீவிக்கும் தீர்க்கதரிசியான தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்.8

சில நேரங்களில் தேவனை நம்ப கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி அவரை நம்புவதேயாகும். “தி கிரேஸி டிரஸ்ட் எக்ஸர்சைஸ்” போல, சில சமயங்களில் நாம் பின்வாங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும், மேலும் அவர் நம்மைப் பிடிக்க அனுமதிக்க வேண்டும். நமது பூலோக வாழ்க்கை ஒரு சோதனை. நம் சொந்த திறனைத் தாண்டி நம்மை இழுத்துக் கொண்டிருக்கும் சவால்கள் அடிக்கடி வரும். நமது சொந்த அறிவும் புரிதலும் போதுமானதாக இல்லாதபோது, இயற்கையாகவே நமக்கு உதவ ஆதாரங்களைத் தேடுகிறோம். தகவல் நிறைந்த உலகில், நமது சவால்களுக்கான தீர்வுகளை ஊக்குவிக்கும் ஆதாரங்களுக்கு பஞ்சமில்லை. இருப்பினும், நீதிமொழிகள் புத்தகத்திலுள்ள எளிய, காலத்தால் அழியாத ஆலோசனை மிகச் சிறந்த ஆலோசனை அளிக்கிறது: “உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு.”9 வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் போது முதலில் அவரிடம் திரும்புவதன் மூலம் நாம் தேவன் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறோம்.

நான் யூட்டாவில் சட்டப் படிப்பை முடித்த பிறகு, எங்கள் குடும்பம் எங்கு வேலை செய்வது மற்றும் எங்கள் வீட்டை உருவாக்குவது என்ற முக்கியமான முடிவை எதிர்கொண்டது. ஒருவருக்கொருவர் மற்றும் கர்த்தருடன் ஆலோசனை செய்த பிறகு, எங்கள் குடும்பத்தை பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புகளிலிருந்து வெகு தொலைவில் கிழக்கு அமெரிக்காவிற்கு மாற்ற நாங்கள் வழிநடத்தப்பட்டோம். ஆரம்பத்தில், விஷயங்கள் நன்றாக நடந்தன, எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாக உணர்ந்தோம். பின்னர் காரியங்கள் மாறின. சட்ட நிறுவனத்தில் ஆட்குறைப்பு இருந்தது, எங்கள் மகள் டோரா பிறந்து கடுமையான மருத்துவ சவால்கள் மற்றும் நீண்டகால சிறப்புத் தேவைகளை எதிர்கொண்ட அதே நேரத்தில் வேலை மற்றும் காப்பீடு இரண்டையும் இழந்தேன். இந்த சவால்களை எதிர்கொள்ளும் போது, கணிசமான நேரமும் அர்ப்பணிப்பும் தேவைப்படும் சேவைக்கான அழைப்பு எனக்கு கொடுக்கப்பட்டது.

நான் ஒருபோதும் இதுபோன்ற சவாலை எதிர்கொண்டதில்லை, அழுத்தப்பட்டேன். நாங்கள் எடுத்த முடிவையும் அதனுடன் இணைந்த உறுதியையும் நான் கேள்வி கேட்க ஆரம்பித்தேன். நாங்கள் கர்த்தரை நம்பியிருந்தோம், காரியங்கள் நிறைவேற வேண்டும். நான் பின்னோக்கி விழுந்துவிட்டேன், இப்போது யாரும் என்னைப் பிடிக்கப் போவதில்லை என்று தோன்றியது.

ஒருநாள், “ஏன் என்று கேட்க வேண்டாம் ; நீ கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்று கேள்” என்ற வார்த்தைகள் என் மனதிலும் இருதயத்திலும் தனித்துவமாக எழுந்தது. நான் இன்னும் அதிகம் குழம்பினேன். என் முந்தைய தீர்மானத்தைப் பற்றி நான் குழப்பமடைந்த தருணத்தில், தேவன் தன்னை இன்னும் அதிகமாக நம்பும்படி என்னை அழைத்தார். திரும்பிப் பார்க்கும்போது, இது என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணம்—தேவனை நம்புவதற்குக் கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி அவரை நம்புவதே என்பதை நான் உணர்ந்த தருணம் அது. அடுத்தடுத்த வாரங்களில், எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கும் திட்டத்தை கர்த்தர் அற்புதமாக வெளிப்படுத்தியதை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

மனதையும் தசைகளையும் இழுப்பதன் மூலமே அறிவு வளர்ச்சியும் உடல் வலிமையும் ஏற்பட முடியும் என்பதை நல்ல ஆசிரியர்களும் பயிற்சியாளர்களும் அறிவார்கள். அதேபோல், ஆத்தும தேடல் ஆவிக்குரிய கற்பித்தலோடே அவரது போதனையை நம்புவதன் மூலம் வளர தேவன் நம்மை அழைக்கிறார். ஆகையால், கடந்த காலத்தில் நாம் என்ன நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தாலும், நம்பிக்கையை நீட்டிக்கும் மற்றொரு அனுபவம் இன்னும் காத்திருக்கிறது என்பதை நாம் உறுதியாக நம்பலாம். நமது வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தேவன் கவனம் கொள்கிறார். அவரே சிறந்த போதகர், முழுமையான பயிற்சியாளர், அவர் எப்போதும் நமது தெய்வீக ஆற்றலை இன்னும் கொஞ்சம் உணர உதவுகிறார். அது எப்போதும் அவரை இன்னும் கொஞ்சம் நம்புவதற்கான எதிர்கால அழைப்பை உள்ளடக்கும்.

மார்மன் புத்தகம், நம்முடன் வலுவான உறவுகளை உருவாக்க தேவன் நம்மை இழுக்க பயன்படுத்தும் முறையைக் கற்பிக்கிறது. என்னை பின்பற்றி வாருங்கள் கையேட்டில், பித்தளை தகடுகளைப் பெற எருசலேமுக்குத் திரும்பும்படி அவனும் அவனுடைய சகோதரர்களும் கட்டளையிடப்பட்டபோது, தேவனில் நேபியின் நம்பிக்கை எவ்வாறு சோதிக்கப்பட்டது என்பதைப் பற்றி நாம் சமீபத்தில் படித்தோம். அவர்களின் ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, அவனது சகோதரர்கள் கைவிட்டு, தகடுகள் இல்லாமல் திரும்பத் தயாராக இருந்தனர். ஆனால் நேபி தனது முழு நம்பிக்கையை கர்த்தரில் வைக்க முடிவு செய்து தகடுகளைப் பெறுவதில் வெற்றிகரமாக இருந்தான்.10 நேபியின் வில் அறுந்து, குடும்பம் வனாந்தரத்தில் பட்டினியை எதிர்கொண்டபோது அந்த அனுபவம் தேவன் மீதான நம்பிக்கையைப் பலப்படுத்தியிருக்கலாம். மீண்டும், நேபி தேவனை நம்ப தெரிந்துகொண்டான், குடும்பம் பாதுகாக்கப்பட்டது.11 இந்த தொடர்ச்சியான அனுபவங்கள் நேபிக்கு தேவன் மீது இன்னும் வலுவான நம்பிக்கையை அளித்தது, அவன் விரைவில் ஒரு கப்பலைக் கட்டும் பணியை எதிர்கொள்ளவிருந்தான்.12

இந்த அனுபவங்களின் வாயிலாய், தேவனை சீராகவும் தொடர்ச்சியாகவும் நம்புவதன் மூலம் அவருடனான தனது உறவை நேபி பலப்படுத்தினான். தேவன் நம்மிடமும் அதே மாதிரியைப் பயன்படுத்துகிறார். அவரில் நமது நம்பிக்கையை பலப்படுத்தவும் ஆழப்படுத்தவும் அவர் நமக்கு தனிப்பட்ட அழைப்புகளை வழங்குகிறார்.13 ஒவ்வொரு முறையும் நாம் அழைப்பை ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கும்போது, தேவன்மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை வளர்கிறது. ஒரு அழைப்பை நாம் புறக்கணித்தால் அல்லது மறுத்தால், ஒரு புதிய அழைப்பைச் செயல்படுத்த நாம் தயாராகும்வரை நம்முடைய முன்னேற்றம் நின்றுவிடும்.

நல்ல செய்தி என்னவென்றால், கடந்த காலத்தில் தேவனில் நம்பிக்கை வைக்க நாம் தேர்ந்தெடுத்திருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்றும் ஒவ்வொரு நாளும் தேவனை நம்ப நாம் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு முறையும் நாம் செய்யும் போது, தேவன் நம்மைப் பிடித்துக்கொள்ள அங்கு இருப்பார் என்று நான் வாக்களிக்கிறேன், மேலும் நாம் அவருடனும் அவருடைய குமாரனுடனும் ஒன்றாக மாறும் நாள் வரை நமது நம்பிக்கை உறவு அதிக பெலமானதாக வளரும். அப்போது, “கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன், நான் என்றென்றும் உம்மை நம்புவேன்” என்று நேபியைப் போல நாம் அறிவிக்கலாம்.14 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.