பொது மாநாடு
கர்த்தரின் வீடுகளான, ஆலயங்கள் பூமியை நிரப்புகின்றன.
ஏப்ரல் 2024 பொது மாநாடு


கர்த்தரின் வீடுகளான, ஆலயங்கள் பூமியை நிரப்புகின்றன.

நீங்கள் அவருடைய பரிசுத்த வீட்டிற்கு தகுதியுடனும் ஜெபத்துடனும் வரும்போது, அவருடைய வல்லமையால் நீங்கள் ஆயுதம் தரித்திருப்பீர்கள்.

நாம் இப்போது பாடிய அழகான வார்த்தைகள் உங்களுக்கு பிடிக்கவில்லையா? “நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவுவேன், உன்னை நிலைநிறுத்துவேன், … என் நீதியுள்ள, சர்வ வல்லமையுள்ள கரத்தால் தாங்குவேன்.”1 கர்த்தர் தம்முடைய பரிசுத்த இல்லத்திற்கு வரும்போது எல்லா காலத்தின் தம்முடைய பரிசுத்தவான்களை பலப்படுத்துகிறார். கின்ஷாசா முதல் ஜோலிகோபன், புகுஓக்கா முதல் ஓக்லாந்து வரை, இளைஞர்கள், தங்கள் சொந்த முயற்சியால், நமது ஞானஸ்நானத் தொட்டியில் நிரம்பி வழிகின்றனர். கடந்த காலத்தில், மிகவும் பிரியமான நியமப் பணியாளர்களுக்கு நரைத்த முடி இருந்தது—ஆனால் இனி இல்லை. அழைக்கப்பட்ட ஊழியக்காரர்கள், சேவை ஊழியக்காரர்கள் மற்றும் பணிமுடித்த ஊழியக்காரர்கள் ஒவ்வொரு மூலையிலும் உள்ளனர். உலகம் முழுவதும் நம்மை தேவனின் இல்லத்திற்கு இழுக்கும் உணர்வு வளர்ந்து வருகிறது.

ஒரு வருடத்திற்கு முன்பு, 70 ஆண்டுகளாக ஊழியக்காரர்களால் கற்பிக்கப்பட்ட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் வசிக்கும் 95 வயதான ஒரு அன்பான குடும்ப நண்பர் தனது மகளிடம், “நான் உன்னுடன் ஆலயத்திற்குச் செல்ல விரும்புகிறேன்” என்றார்.

அதற்கு அவளுடைய மகள், “நல்லது, அம்மா, நீ முதலில் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்” என்று பதிலளித்தாள்.

படம்
வயதான சகோதரியின் ஞானஸ்நானம்.

“சரி,” அவள் பதிலளித்தாள், “அப்படியானால், நான் ஞானஸ்நானம் பெற விரும்புகிறேன்.” அவள் ஞானஸ்நானம் பெற்றாள். சில நாட்களுக்குப் பிறகு, அவள் ஆலய ஞானஸ்நானத் தொட்டிக்குள் அமிழ்ந்து கொண்டிருந்தாள். ஒரு மாதத்திற்கு முன்பு, அவள் தனது சொந்த தரிப்பித்தல் மற்றும் முத்திரித்தலுக்காக ஆலயத்திற்குள் நுழைந்தாள். “தேவனின் ஞானமும் வல்லமையும் விரிவடைகின்றன; பூமியின் மேலுள்ள திரை திறக்கத் தொடங்குகிறது.”2

படம்
ஆலயத்துக்கு வெளியே வயதான சகோதரி

கர்த்தர் இப்பொழுது தம்முடைய தீர்க்கதரிசியை, அவருடைய ஆலயங்கள், பூமியை நிரப்ப ஏன் வழிநடத்த வேண்டும் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?3 ஜனங்களின் பரிசுத்த தசமபாகம் மூலம், நூற்றுக்கணக்கான கர்த்தரின் வீடுகளைக் கட்டும்படி அவர்களுக்குத் தேவையான செழிப்பை கொடுக்க இந்த சமயத்தில் அவர் ஏன் கொடுக்க வேண்டு்ம்?

இன்று காலை, உலகெங்கிலும் கட்டப்பட்டு வரும் ஆலயங்களின் அழகிய காட்சியை தலைவர் டாலின் எச். ஓக்ஸ் காட்டினார். நானும் கேத்தியும் சமீபத்தில் பிலிப்பைன்ஸில் இருந்தோம். இந்த அற்புதத்தை நினைத்துப் பாருங்கள்: மணிலா ஆலயம் 1984 இல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. செபு சிட்டியில் இரண்டாவது ஆலயம் 2010ல் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பு 26 வருடங்கள் கடந்து போனது. இப்போது, 14 வருடங்களுக்குப் பிறகு, 11 ஆலயங்கள் கட்டப்பட்டுக் கொண்டும், வடிவமைக்கப்பட்டும் அல்லது பிரதிஷ்டைக்கு தயாராகியும் வருகின்றன. வடக்கிலிருந்து தெற்கே: லாவோக், துகுகேராவ், சாண்டியாகோ, உர்டானேடா, அலபாங், நாகா, டாக்லோபன் சிட்டி, இலோய்லோ, பகோலோட், ககாயன் டி ஓரோ மற்றும் டாவோ. தேவனின் அற்புத செயல்களைப் பார்ப்பது பிரம்மிப்பாக இருக்கிறது!

படம்
பிலிப்பைன்சில் ஆலயங்கள்.

உலகம் முழுவதும், கர்த்தருடைய வீடுகள் நமக்கு நெருக்கமாக வருகின்றன. ஏன் நம் நாளில்?

கடைசி நாட்கள்

கடைசி நாட்களில், தேசங்களுக்குள் துன்பம் ஏற்படும்,4 ஜனங்கள் “தற்பிரியராய்” இருப்பார்கள், 5 “சகல காரியங்களும் குழப்பத்திலிருக்கும்,”6 குழப்பம் அதிகரித்து,6“மனுஷர்களுடைய இருதயங்கள் சோர்ந்துபோகும்” என்று கர்த்தர் எச்சரித்தார்.8 ஆண்கள் மற்றும் பெண்களின் இருதயங்கள் சோர்ந்துபோவதை நாம் நிச்சயமாகப் பார்த்திருக்கிறோம்: உலகத்தின் கவர்ச்சி, கவர்ச்சியான குரல்களின் கவனச்சிதறல், ஆவிக்குரிய போஷிப்பின் புறக்கணிப்பு, சீஷத்துவத்தின் கோரிக்கைகளின் சோர்வு.9 நீங்கள் நேசிக்கும் ஒருவர் ஒரு காலத்தில் இயேசு கிறிஸ்துவின் மீது உள்ள தனது விசுவாசத்தைப் பற்றி உண்மையாகப் பேசினார், மார்மன் புஸ்தகத்தைப் பற்றி சாட்சியம் அளித்தார், மேலும் தேவனுடைய ராஜ்யத்தை கட்டியெழுப்ப ஆர்வமாக உதவினார், குறைந்தபட்சம் இப்போதைக்கு, அவரது நம்பிக்கைகளிலிருந்து விலகி சபையின் விளிம்பிற்கு சென்றதை பார்த்து ஒருவேளை நீங்கள் வருத்தப்பட்டிருக்கலாம். உங்களுக்கு என் அறிவுரை என்னவென்றால், விரக்தியடைய வேண்டாம்! எல்லாம் நலமே! தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை. 10

உலகில் இந்த தீர்க்கதரிசனமுரைக்கப்பட்ட குழப்பம் மற்றும் அவநம்பிக்கையுடன், தங்கள் இடத்தை விட்டு அசையாது பரிசுத்தமான பின்னணிகளில் நிற்கும் ஜனங்கள்; உடன்படிக்கையின் ஜனங்கள் இருப்பார்கள் என்று கர்த்தர் வாக்களித்தார். 11 சத்துருவின் வஞ்சகங்களை எதிர்த்து, தங்கள் விசுவாசத்தை ஒழுங்குபடுத்தும், சிலஸ்டியலாக நினைத்து, இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை முழுமையாக நம்பும் நீதியான ஜனங்களைப் பற்றி அவர் பேசினார்.

தேவன் இப்போது நூற்றுக்கணக்கான ஆலயங்களை நமக்கு அருகில் கொண்டு வருவது ஏன்? ஒரு காரணம் என்னவென்றால், உலகின் கொந்தளிப்பு மற்றும் சோதனைகளுக்கு மத்தியில், அவர் தனது உடன்படிக்கை பரிசுத்தவான்களை பலப்படுத்தி ஆசீர்வதிப்பதாக வாக்களித்துள்ளார்.

கர்த்லாந்து ஆலயத்திலிருந்து வாக்குத்தத்தங்கள்

இந்தப் பரிசுத்த வீடுகள் எவ்வாறு நம்மை பெலப்படுத்துகின்றன, ஆறுதலளிக்கின்றன, பாதுகாக்கின்றன? கர்த்லாந்து ஆலய பிரதிஷ்டையின் போது தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்தின் மன்றாட்டுகளில் ஒரு பதிலைக் காண்கிறோம். “நாம் பாடுவோம், பரலோக சேனைகளுடன் சத்தமிடுவோம்” என்று இந்த ஆலயத்தில்தான் பரிசுத்தவான்கள் பாடினார்கள். 12 இரட்சகர் தாமே தோன்றி, முற்காலத்து தீர்க்கதரிசிகள் திரும்பி வந்து, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்திற்கு ஆசாரியத்துவத்தின் திறவுகோல்களை அருளினர்.13

கர்த்லாந்து ஆலயத்தில் அந்த பரிசுத்தமான சந்தர்ப்பத்தில், கர்த்தருடைய பரிசுத்த வீட்டில், தேவனுடைய வல்லமையால் ஆயுதந்தரித்தவர்களாகவும், இயேசு கிறிஸ்துவின் நாமம் அவர்கள் மீது இருக்கும்படியாகவும், அவருடைய தூதர்கள் அவர்கள்மீது பொறுப்பேற்றுக் கொள்ளவும், கர்த்தரில் அவர்கள் வளரவும், பரிசுத்த ஆவியின் பரிபூரணத்தை பெற்றுக் கொள்ளும்படியாகவும் தீர்க்கதரிசி ஜெபித்தார். 14 கர்த்தரின் வீட்டில் நாம் உண்மையாக வழிபடுவதால் இந்த வல்லமை வாய்ந்த வேண்டுதல்கள் நம் வாழ்வில் நிறைவேறும்.

வல்லமையுடன் ஆயுதந்தரித்து

அவருடைய வீட்டில், நாம் உண்மையில் பரலோக வல்லமையுடன் தரிப்பிக்கப்படுகிறோம்.15 இயேசு கிறிஸ்து மீதான நமது விசுவாசமும், அவர்மீது நமக்குள்ள அன்பும் திடப்படுத்தப்பட்டு, பலப்படுத்தப்படுகிறது. நமது உண்மையான அடையாளம் மற்றும் வாழ்க்கையின் நோக்கங்கள் குறித்து ஆவிக்குரிய ரீதியில் உறுதியளிக்கப்பட்டுள்ளோம்.16 நாம் உண்மையுள்ளவர்களாக இருப்பதால், சோதனைகள் மற்றும் கவனச்சிதறல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புடன் நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். நம்முடைய கஷ்டங்கள், துக்கங்கள், ஆகியவற்றிலிருந்து அவர் நம்மை உயர்த்தும்போது, நம்முடைய இரட்சகரின் அன்பை நாம் உணர்கிறோம். தேவனுடைய வல்லமையினால் ஆயுதந்தரித்திருக்கிறோம்.

அவர் நாமம் நம்மீது

அவருடைய பரிசுத்த வீட்டில், அவருடைய நாமத்தை முழுமையாக நம்மீது ஏற்றுக்கொள்கிறோம். நாம் ஞானஸ்நானம் பெறும்போது, ​​அவர் மீது நம்முடைய நம்பிக்கையையும் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க விருப்பத்தையும் அறிக்கையிடுகிறோம். ஆலயத்தில், அவரை என்றென்றும் பின்பற்றுவதற்கு நாம் நமது உடன்படிக்கைகளின் மூலம் பரிசுத்தமாக வாக்களிக்கிறோம்.

படம்
ஹீபர் பள்ளத்தாக்கு யூட்டா ஆலய படம்.

இச்சபையின் இளைஞர்கள் வியக்கத்தக்கவர்கள். ஒரு கடினமான உலகில், அவர்கள் தங்கள் மேல் கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொள்கிறார்கள். யூட்டா மாகாணத்தில் உள்ள ஹீபர் சிட்டியில், கட்ட திட்டமிடப்பட்டுள்ள ஒரு ஆலயத்தின் விவரங்களைப் பற்றி விவாதிக்க ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்மொழியப்பட்ட ஆலயத்திற்கு தங்கள் ஆதரவைக் காட்ட முந்நூறு இளைஞர்கள் பக்கத்திலுள்ள பூங்காவை நிரப்பினர். ஒரு இளைஞன், ஒரு திறந்த மன்றத்தில் அரசாங்கத் தலைவர்களிடம் பேசுகையில், “நான் இந்த ஆலயத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று தைரியமாக விளக்கினான். என்னைச் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள [ஆலயம் உதவும்].” மற்றொருவர் ஆலயத்தை ஒளி மற்றும் நம்பிக்கையின் சின்னமாக விவரித்தார். உலகெங்கிலும் உள்ள சபையின் இளைஞர்களும் இளம் பெண்களும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தைத் தழுவுகிறார்கள்.17

படம்
ஹீபர் சிட்டி பூங்காவை நிரப்பும் இளைஞர்கள்

தூதர்கள் நம்மிடையே

கர்த்லாந்து ஆலயத்தில், “தூதர்கள் [பரிசுத்தவான்கள்] மீது பொறுப்பேற்றுக் கொள்வார்கள்” என்று தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் ஜெபித்தார்.18 நமது முன்னோர்களுக்கு ஆலயத்தில் ஒழுங்காக நியமங்கள் செய்வது, திரைக்கு அப்பால் வாழ்க்கை தொடர்கிறது என்பதை இனிமையாகவும் நிச்சயமாகவும் உறுதிப்படுத்துகிறது.

கர்த்தருடைய வீட்டில் நம்முடைய பல அனுபவங்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு பரிசுத்தமானவை என்றாலும், சிலவற்றை நாம் பகிர்ந்து கொள்ளலாம். நாற்பது வருடங்களுக்கு முன்பு, புளோரிடாவில் வசிக்கும் போது, கேத்தியும் நானும் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள ஆலயத்திற்குப் பயணித்தோம். மே 9, 1984, புதன்கிழமை இரவு, நாங்கள் ஆலயத்தில் ஒரு அமர்வை முடித்தபோது, ஒரு நியமப் பணியாளர் என்னை அணுகி, ஒரு ஆயத்த நியமம் மட்டும் செய்ய எனக்கு நேரம் இருக்கிறதா என்று கேட்டார். நான் பிரதிநிதித்துவப்படுத்திய நபரின் பெயர் அசாதாரணமாயிருந்தது. அவர் பெயர் எலியேசர் செர்சி.

மறுநாள் ஆலயம் முழுவதும் பரிசுத்தவான்களால் நிறைந்திருந்தது. அன்றைய எனது இரண்டாவது தரிப்பித்தலைச் செய்ய நான் தயாரானபோது, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் நபரின் பெயர் எனக்கு வழங்கப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, முந்தைய இரவில் இருந்த அதே பெயர், எலியாசர் செர்சி. தரிப்பித்தல் முடிந்ததும் நான் கர்த்தரின் ஆவியை உணர்ந்தேன். பிற்பகலில், நாங்கள் ஆலயத்தின் வழியாக நடந்து சென்றபோது, கேத்தி இப்போது அட்லாண்டாவில் வசிக்கும் ஒரு வயதான குடும்ப நண்பரான சகோதரி டோலி பெர்னாண்டஸைக் கண்டார். அவளுடன் அவளது குடும்ப ஆண் உறுப்பினர்கள் இல்லாததால், அவளது தந்தையின் பெற்றோருடன் அவளது தந்தையை முத்திரித்து வைப்பதில் நான் உதவ முடியுமா என்று கேட்டாள். நிச்சயமாக நான் கௌரவிக்கப்பட்டேன்.

இந்த பரிசுத்த நியமத்திற்காக நான் பீடத்தின் முடிவில் மண்டியிட்டபோது, ​​இப்போது என் மனதில் பொறிக்கப்பட்ட பெயரை மீண்டும் ஒருமுறை கேட்டேன், அவளுடைய தந்தை, எலியேசர் செர்சி. இந்த வாழ்க்கையைத் தொடர்ந்து, அவரது அநித்திய வாழ்க்கையில் எலியேசர் செர்சி என்று அறியப்பட்ட ஒரு மனுஷனை நான் சந்தித்து அரவணைப்பேன் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

கர்த்தருடைய வீட்டில் நம்முடைய பெரும்பாலான அனுபவங்கள் வியத்தகு தலையீட்டைக் காட்டிலும் மகிழ்ச்சியான அமைதியையும் அமைதியான வெளிப்பாட்டையும் தருகின்றன. ஆனால் உறுதியாக இருங்கள்: தேவதூதர்கள் நம்மீது பொறுப்பேற்கிறார்கள்!

பரிசுத்த ஆவியின் பரிபூரணம்

நாம் சபையின் அங்கத்தினராக திடப்படுத்தப்படுவதால் பரிசுத்த ஆவியின் வரம் நமக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் நமது இரட்சகரை நினைவுகூரும் வகையில் நாம் அப்பம் மற்றும் தண்ணீரை தகுதியுடன் புசிக்கும்போது, அவருடைய ஆவி எப்பொழுதும் நம்முடன் இருக்கும் என்று நமக்கு வாக்குறுதி அளிக்கப்படுகிறது.19 பூமியின் மிக பரிசுத்த ஸ்தலமாகிய கர்த்தருடைய வீட்டிற்கு நாம் மனப்பூர்வமான இருதயத்தோடு வரும்போது, நாம் கர்த்தருக்குள் வளர்ந்து “பரிசுத்த ஆவியின் பரிபூரணத்தைப் பெறுகிறோம்.”20 பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால், நாம் சமாதானம் மற்றும் சந்தோஷம் மற்றும் சொல்ல முடியாத நம்பிக்கையால் நிரப்பப்பட்டுள்ளோம்.21 பரிசுத்த ஸ்தலங்களுக்கு வெளியே நம்மைக் கண்டாலும் அவருடைய சீடர்களாக நிலைத்திருப்பதற்கான பலத்தைப் பெறுகிறோம்.

தலைவர் ரசல் எம். நெல்சன் அறிவித்தார், “நமது இரட்சரும் மீட்பருமான இயேசு கிறிஸ்து இப்போதிலிருந்து மீண்டும் வரும்வரைக்கும் அவருடைய வல்லமையான சில செயல்களை நிறைவேற்றுவார்.” பிதாவாகிய தேவனும் … இயேசு கிறிஸ்துவும் இந்த சபையை மகத்துவத்திலும் மகிமையிலும் தலைமை தாங்குகிறார்கள் என்ற அற்புதமான அறிகுறிகளை நாம் காண்போம்.” 22 கர்த்தரின் வீடுகளால் பூமியை நிரப்புவது ஒரு மகத்தான செயல் மற்றும் அதிசயமான அறிகுறியாகும்.23

என் அன்பான நண்பர்களே, நம்மால் இயலும் ஆனாலும் ஆலயத்திற்கான வருகையை ஏற்கனவே அதிகரித்திருருக்கவில்லை என்றால், கர்த்தரின் வீட்டில் சேவை செய்ய தொடர்ந்து அதிக நேரத்தைக் கண்டுபிடிப்போம். சொத்துக்களை வாங்கலாம், அரசாங்கங்கள் திட்டங்களை அங்கீகரிக்கும், திறமையான தொழிலாளர்கள் தங்கள் திறன் பெரிதுபடுவதைக் காண்பார்கள், பரிசுத்த அர்ப்பணிப்புகள் பரலோகத்தின் அங்கீகாரத்தையும் தேவதூதர்களின் வருகையையும் கொண்டுவரும் என்று உலகெங்கும் அறிவிக்கப்பட்ட ஆலயங்களுக்காக ஜெபிப்போம்.

வாக்குத்தத்தங்கள்

ஆலயம் உண்மையில் கர்த்தருடைய வீடு. அவருடைய பரிசுத்த வீட்டிற்கு நீங்கள் தகுதியுடனும் ஜெபத்துடனும் வரும்போது, நீங்கள் அவருடைய பரிசுத்த வல்லமையால் ஆயுதந்தரித்தவர்களாகவும், அவருடைய நாமம் உங்கள் மீது இருக்கும்படியாகவும், அவருடைய தூதர்கள் உங்கள்மீது பொறுப்பேற்றுக் கொள்ளவும், பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதத்தில் நீங்கள் வளருவீர்கள் என்றும் நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன்.

கர்த்தர் வாக்களித்தார், “தன்னுடைய பாவங்களை விட்டுவிட்டு, என்னிடத்தில் வந்து, என்னுடைய நாமத்தில் அழைத்து, என்னுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற ஒவ்வொரு ஆத்துமாவும், என்னுடைய முகத்தைக் கண்டு நானே என்றறியும்”.24 கிறிஸ்துவின் முகத்தை பார்க்க பல்வேறு வழிகள் உள்ளன, அவருடைய பரிசுத்த வீட்டை விட சிறந்த இடம் இல்லை.25

குழப்பமும் கொந்தளிப்பும் நிறைந்த இந்த நாளில், நமது ஆலயங்கள் ஒவ்வொன்றும் அவரது வீடாக இருக்கிறது, அது நம்மைப் பத்திரப்படுத்தவும், நம்மைப் பாதுகாக்கவும், அவரது பரிசுத்த தூதர்கள் அனைவருடனும், இயேசு கிறிஸ்து மகத்துவத்திலும், வல்லமையிலும், மிகுந்த மகிமையிலும் திரும்பும் மகிமையான நாளுக்காக நம்மை ஆயத்தப்படுத்தவும் உதவும் என நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. “How Firm a Foundation,” Hymns, no. 85.

  2. “The Spirit of God,” Hymns, no. 2.

  3. தற்போது 182 செயல்படும் ஆலயங்கள் உள்ளன. ஆறு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஏழு பிரதிஷ்டைக்காகவும், மேலும் ஒன்று மறுபிரதிஷ்டைக்காகவும் காத்திருக்கிறது. 45 கட்டுமானத்தில் உள்ளன, மேலும் 94 அறிவிக்கப்பட்டுள்ளன அல்லது திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் உள்ளன.

  4. லூக்கா 21:10 பார்க்கவும்.

  5. 2 தீமோத்தேயு 3:2.

  6. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:91.

  7. மூப்பர் டேவிட் எ. பெட்னார் சொன்னார்: “சுவிசேஷ கொள்கைகள் எனக்கும் உங்களுக்கும் கப்பலுக்கு ஒரு சுக்கான் போன்றவை. சரியான கொள்கைகள் நம் வழியைக் கண்டுபிடிப்பதற்கும், உறுதியான, திடமான, மற்றும் அசைக்க முடியாததாகவும் நிற்க உதவுகின்றன, எனவே நம்முடைய சமநிலையை இழந்து, இருள் மற்றும் குழப்பத்தின் சீறி வரும் புயல்களில் நாம் விழுவதில்லை.” (“The Principles of My Gospel,” Liahona, May 2021, 126).

  8. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:26.

  9. “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.” (மத்தேயு 16:24).

  10. லூக்கா 1:37 பார்க்கவும்.

  11. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 87:8 பார்க்கவும்.

  12. Hymns, no. 2.

  13. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110 பார்க்கவும். இதற்கு முன், ஜோசப் ஸ்மித் தீர்க்கதரிசி ஆரோனிய ஆசாரியத்துவத்தையும் அதன் திறவுகோல்களையும் யோவான் ஸ்நானனிடமிருந்து பெற்றார், மேலும் அவர் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தையும் அதன் திறவுகோலையும் அப்போஸ்தலர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரிடமிருந்து பெற்றார். (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13:1; 27:12–13 பார்க்கவும்).

  14. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:15; வசனம் 22 ஐயும் பார்க்கவும்.

  15. தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார், ”நமது தேடலுக்கு ஆலயம் உதவியாக இருக்கும். எல்லா பிணக்குகளையும் தூண்டும் சாத்தானை வெல்லும் திறன் நமக்குக் கொடுக்கப்பட்டு அங்கே நாம் தேவனின் வல்லமையினால் தரிப்பிக்கப்பட்டுள்ளோம்” (“Peacemakers Needed,” Liahona, May 2023, 101).

  16. See Russell M. Nelson, “Choices for Eternity” (worldwide devotional for young adults, May 15, 2022), Gospel Library.

  17. Elder Colin Stauffer, personal correspondence, Jan. 30, 2024.

  18. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:22.

  19. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79 பார்க்கவும்.

  20. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 109:15.

  21. ரோமர் 15:13 பார்க்கவும்.

  22. Russell M. Nelson, “Revelation for the Church, Revelation for Our Lives,” Liahona, May 2018, 96.

  23. பிரிகாம் யங் கூறினார், “நித்திரையில் இருந்துகொண்டு சுவிசேஷத்தை கேட்க சிலாக்கியம் இல்லாமலும் அதை கைக்கொள்ளாமலும் இருப்பவர்களுக்கு பதிலியாக செய்வதற்கு நூற்றுக்கணக்கான ஆலயங்களும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் நமக்கு இருப்பார்கள்l” (Teachings of Presidents of the Church: Brigham Young [1997], 312). மேலும் எஸ்றா டாப்ட் பென்சன் கூறினார் : “வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா, பசிபிக் தீவுகள், ஐரோப்பா மற்றும் சில இடத்தின் நிலப்பரப்பையும் ஆலயங்கள் நிரப்பும் என்று நம்முடைய முன்னோர்கள் தீர்க்கதரிசனமுரைத்தார்கள், இந்த மீட்புப்பணிகள் செய்ய வேண்டிய அளவில் நடைபெற வேண்டுமானால், நூற்றுக்கணக்கான ஆலயங்கள் தேவைப்படும்” (The Teaching of Ezra Taft Benson, 247).

  24. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:1

  25. மூப்பர் டேவிட் பி. ஹெய்ட் சொன்னார்:

    “சிலர் உண்மையில் இரட்சகரைப் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் ஒருவர் அகராதியைப் பார்க்கும்போது, அவரை அறிந்துகொள்வது, அவரைப் பகுத்துணர்வது, அவரையும் அவருடைய வேலையையும் அங்கீகரிப்பது, அவருடைய முக்கியத்துவத்தை உணர்வது, அவரைப் புரிந்துகொள்வது போன்ற பல அர்த்தங்கள் பார்க்கவும் என்ற வார்த்தைக்கு இருப்பதை அவர் அறிந்துகொள்கிறார்.

    “இப்படிப்பட்ட பரலோக ஞானமும் ஆசீர்வாதங்களும் நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்” (“Temples and Work Therein,” Ensign, Nov. 1990, 61).