பொது மாநாடு
இறுதிபரியந்தம் விசுவாசமாயிருத்தல்
ஏப்ரல் 2024 பொது மாநாடு


இறுதிபரியந்தம் விசுவாசமாயிருத்தல்

அவருடைய கையால், உங்கள் வாழ்க்கையில் தோன்றும் ஒவ்வொரு கோலியாத்தையும் வீழ்த்த முடியும்.

அன்பான இளம் நண்பர்களே, இன்று நான் உங்களிடம் நேரடியாகப் பேச விரும்புகிறேன்—சபையின் இளைஞர்கள்.

நமது இளம் பெண்கள் பொதுத் தலைமை அழைக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. கடந்த ஒரு வருடத்தில் எவ்வளவு நடந்திருக்கிறது!

நாங்கள் உங்களில் பலரைச் சந்தித்து கிறிஸ்துவின் போதனைகளை ஒன்றாகப் படித்திருக்கிறோம். நாம் பாடல்களைப் பாடியுள்ளோம், புதிய நண்பர்களை உருவாக்கி, உங்களுடன் நமது சமூகங்களில் சேவை செய்துள்ளோம். இளைஞர் மாநாடுகள் மற்றும் உலக நிகழ்வுகளில் உங்கள் சாட்சியங்களைக் கேட்டு நாங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளோம். மேலும் கர்த்தரின் வீட்டில் ஒன்றாக வழிபாடு செய்திருக்கிறோம்.

ஒவ்வொரு முறையும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து ஒரு செய்தியைப் பகிர்ந்து கொள்கிறோம். இன்றிரவு வித்தியாசமாக இருக்காது; இயேசு கிறிஸ்துவின் சபையின் இளைஞர்களே, உங்களுக்காக என்னிடம் ஒரு செய்தி உள்ளது.

பெரிய கேள்விகள்

பாவம் நிறைந்த உலகில் வாழும்போது எப்படி தேவனுக்கு உண்மையாக இருக்க முடியும் என்று நீங்கள் எப்போதாவது வியந்திருக்கிறீர்களா? முன்னோக்கிச் செல்லவும், தொடர்ந்து நல்லதைச் செய்யவும் உங்களுக்கு எங்கிருந்து பலம் கிடைக்கிறது? உண்மையான மகிழ்ச்சியை எப்படி அனுபவிக்கிறீர்கள்?

தாவீது மற்றும் கோலியாத்தின் அனுபவம் உதவலாம் என்று நினைக்கிறேன்.1

தாவீதும் கோலியாத்தும்

பழைய ஏற்பாட்டில், பெலிஸ்தியர்களின் இராணுவம் இஸ்ரவேலர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தது, ஒவ்வொரு காலையிலும் ஒவ்வொரு மாலையிலும், கோலியாத் என்ற ஒரு மாபெரும் பெலிஸ்தியன் எந்த இஸ்ரவேலரையும் தன்னுடன் போரிடுமாறு சவால் விடுத்தான்.

படம்
தாவீதும் கோலியாத்தும்

இஸ்ரவேலர்கள் மத்தியில் தாவீது வாழ்ந்தான், கோலியாத்தை விட சிறிய ஆடு மேய்ப்பவன், ஆனால் இயேசு கிறிஸ்துவில் ஒரு மாபெரும் விசுவாசம் கொண்டிருந்தவன்! தாவீது போராட முன்வந்தான். ராஜா கூட அவனைத் தடுக்க முயன்றான், ஆனால் தாவீது இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்கத் தேர்ந்தெடுத்தான்.

முன்பு, தாவீது சிங்கத்துடனும் கரடியுடனும் சண்டையிட்டிருக்கிறான். அந்த அனுபவங்களிலிருந்து, தேவன் தன்னைப் பாதுகாத்து வெற்றிபெறச் செய்தார் என்பதை அவன் அறிந்தான். தாவீதைப் பொறுத்தவரை, தேவனின் நோக்கம் மிக முக்கியமான காரணமாக இருந்தது. எனவே, தன்னைக் கைவிடாத தேவன் மீது முழு விசுவாசம் கொண்டு, ஐந்து வழுவழுப்பான கற்களைச் சேகரித்து, தனது கவணை எடுத்துக்கொண்டு, அந்த ராட்சசனை எதிர்கொள்ளச் சென்றான்.

படம்
தாவீதின் ஐந்து கற்கள்.

தாவீது எறிந்த முதல் கல் கோலியாத்தின் நெற்றியில் மோதி அவனது வாழ்க்கையை முடித்துவிட்டதாக வேதங்கள் கூறுகின்றன.2

விடை தேடுதல்

தாவீது கோலியாத்தை கொல்ல ஒரே ஒரு கல்லை மட்டுமே பயன்படுத்தினான், அவன் ஐந்துடன் தயாராக இருந்தான். ஐந்துடன்! இது இந்த உலகத்தை எதிர்கொள்ள நான் எப்படி என்னைத் தயார்படுத்திக் கொள்வது என்று சிந்திக்க வைக்கிறது.

தாவீதின் கற்கள் ஒவ்வொன்றும் நம் வாழ்வில் வெற்றிபெற வேண்டிய பலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினால் என்ன? அந்த ஐந்து கற்கள் என்னவாக இருக்கும்? இந்த சாத்தியக்கூறுகளை நான் நினைத்தேன்:

  1. தேவன் மீதான என் அன்பின் கல்.

  2. நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மீது என் விசுவாசத்தின் கல்.

  3. என் உண்மையான அடையாளம் பற்றிய அறிவின் கல்

  4. என் தினசரி மனந்திரும்புதலின் கல்

  5. தேவனின் வல்லமையை நான் பெறுவதற்கான கல்.

இந்த பலங்களால் நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறோம் என்பதைப் பற்றி பேசுவோமாக.

முதலில், தேவன் மீதான என் அன்பின் கல். தேவனை நேசிப்பது முதல் பெரிய கட்டளை.3 இளைஞரின் பெலனுக்காக வழிகாட்டி நமக்குக் கற்பிக்கிறது: “தேவன் உங்களை நேசிக்கிறார். அவரே உங்கள் பிதா. அவருடைய பரிபூரண அன்பு அவரை நேசிக்க உங்களுக்கு உணர்த்தும். பரலோக பிதா மீதான உங்கள் அன்பு உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வாக்கு என்றால், பல முடிவுகள் எளிதாகிவிடும்.”4

தேவன்மீது நமக்குள்ள அன்பும், அவருடனான நமது நெருங்கிய உறவும், நம் இருதயங்களை மாற்றுவதற்கும், நமது சவால்களை எளிதாகச் சமாளிக்கவும் நமக்குத் தேவையான பலத்தை அளிக்கிறது.

இரண்டாவதாக, நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மீது என் நம்பிக்கையின் கல். இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தபோது, அவர் நம்முடைய பாவங்களுக்காக பாடுபட்டார்,5 நம்முடைய துக்கங்களையும், வலிகளையும், பலவீனங்களையும், நமது உடல் மற்றும் மன நோய்களையும் அவர் ஏற்றுக்கொண்டார். அதனால்தான் நமக்கு எப்படி உதவுவது என்று அவருக்குத் தெரியும். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது என்பது அவருடைய ஞானம், அவருடைய நேரம், அவருடைய அன்பு மற்றும் நம்முடைய பாவங்களுக்குப் பாவநிவர்த்தி செய்யும் அவருடைய வல்லமை ஆகியவற்றை முழுமையாக நம்புவதாகும். இயேசு கிறிஸ்து மீதான நம்பிக்கையின் கல் நம் வாழ்வில் எந்த ஒரு “ராட்சசனையும்” தோற்கடிக்கும்.6 இந்த வீழ்ச்சியுற்ற உலகத்தை நாம் வெல்ல முடியும், ஏனென்றால் அவர் முதலில் அதை வென்றார்.7

எண் மூன்று, என் உண்மையான அடையாளம் பற்றிய அறிவின் கல். நமது அன்பான தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன், நம்முடைய மிக முக்கியமான அடையாளங்கள், நாம் தேவனின் குழந்தைகள், உடன்படிக்கையின் குழந்தைகள் மற்றும் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் என்று நமக்குக் கற்பித்தார்.8

நான் உண்மையில் யார் என்று எனக்குத் தெரிந்தவுடன் எல்லாம் மாறுகிறது.9 எனது திறன்களை நான் சந்தேகிக்கும்போது, நான் அடிக்கடி என் மனதிற்குள் அல்லது சத்தமாக, “நான் தேவனின் குமாரத்தி, நான் தேவனின் குமாரத்தி” நான் மீண்டும் நம்பிக்கையுடன் தொடரும் வரை எனக்கு தேவையான பல முறை திரும்பத் திரும்ப சொல்கிறேன்.

நான்காவதாக, என் தினசரி மனந்திரும்புதலின் கல். இளைஞர்களின் பெலனுக்காக வழிகாட்டியில், நாம் படிக்கிறோம்: “மனந்திரும்புதல் பாவத்திற்கான தண்டனை அல்ல; அதுவே இரட்சகர் நம்மை பாவத்திலிருந்து விடுவிக்கும் வழி. மனந்திரும்புதல் என்பது மாறுவது–பாவத்திலிருந்து விலகி தேவனை நோக்கி திரும்புதல். அது மன்னிப்பை மேம்படுத்துதல் மற்றும் பெறுதல் என்பதாகும். இந்த மாதிரியான மாற்றம் ஒருமுறை நடக்கும் நிகழ்வு அல்ல; இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை.”10

தேவனின் மன்னிப்பை உணர்ந்து, நாம் தூய்மையாக இருக்கிறோம், அவருடன் சமரசமாக இருக்கிறோம் என்பதை அறிவதை விட வேறு எதுவும் விடுதலை அளிக்காது. மன்னிப்பு அனைவருக்கும் சாத்தியம்.

ஐந்தாவது கல் தேவனின் வல்லமையை பெறுவதற்கான கல் ஞானஸ்நான நியமத்தில் நாம் செய்யும் உடன்படிக்கைகள்,போன்ற தேவனுடன் நாம் செய்யும் உடன்படிக்கைகள், தேவத்துவத்தின் வல்லமையை நமக்கு கொடுக்கின்றன.11 தேவனின் வல்லமை என்பது சவால்களை எதிர்கொள்ளவும், நல்ல முடிவுகளை எடுக்கவும், கடினமான சூழ்நிலைகளைத் தாங்கும் திறனை அதிகரிக்கவும் உதவும் உண்மையான வல்லமை. இது நமக்குத் தேவையான குறிப்பிட்ட திறன்களில் வளரக்கூடிய ஒரு வல்லமையாகும்.12

இளைஞர்களின் பெலனுக்காக வழிகாட்டி விளக்குகிறது: “உடன்படிக்கைகள் உங்களை பரலோக பிதாவுடனும் இரட்சகருடனும் இணைக்கின்றன. அவை உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை அதிகரிக்கின்றன.”13

அந்தத் தொடர்பைப் பற்றி நாம் பேசுவோமாக. பாறையில் கட்டப்பட்ட வீட்டிற்கும் மணலில் கட்டப்பட்ட வீட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை கிறிஸ்து கற்பித்தது நினைவிருக்கிறதா?14 எல்டர் டியட்டர் எப். உக்டர்ப் விளக்கினார்: “வீடு வலுவாக இருப்பதால், புயலில் வீடு நிலை நிற்பதில்லை. பாறை வலுவாக இருப்பதாலேயும் வீடு புயலில் நிலைத்திருக்கவில்லை. அந்த வலிமையான பாறையில் உறுதியாகப் பிணைக்கப்பட்டிருப்பதால் மாத்திரமே புயலில் வீடு நிலைத்திருக்கிறது. பாறையுடனான இணைப்பின் வலிமை முக்கியமானது.”15

படம்
கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீடு.

இயேசு கிறிஸ்துவுடனான நமது தனிப்பட்ட தொடர்பு, நமது நம்பிக்கைகளை மதிக்காத அல்லது நம்மை பயமுறுத்துபவர்களுக்கு மத்தியில் முன்னேற தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும். கிறிஸ்து அவரை தொடர்ந்து நம் எண்ணங்களில் வைத்திருக்க நம்மை அழைக்கிறார்; அவர் நமக்குச் சொல்கிறார், “ஒவ்வொரு எண்ணத்திலும் என்னை நோக்கிப்பார்.”16 இரட்சகரைப் பற்றி சிந்திப்பது, முடிவுகளை எடுப்பதற்கும், அச்சமின்றி செயல்படுவதற்கும், தேவனுடைய போதனைகளுக்கு முரணானதை வேண்டாம் என்று கூறுவதற்கும் மனதை தெளிவுபடுத்துகிறது.17 எனது நாள் கடினமாக இருக்கும்போது, என்னால் இனி தாங்க முடியாது என நான் நினைக்கும்போது, கிறிஸ்துவைப் பற்றி நினைப்பது எனக்கு சமாதானம் தருகிறது மற்றும் எனக்கு நம்பிக்கையைத் தருகிறது.

இயேசு கிறிஸ்துவின் இந்த வல்லமையை நாம் எவ்வாறு பெறலாம்? நம்முடைய உடன்படிக்கைகளுக்குக் கீழ்ப்படிவதும், இயேசு கிறிஸ்துவில் நம்முடைய விசுவாசத்தை அதிகரிப்பதும் முக்கியமானவை.

நான் உண்மையில் தாவீது இன்னும் ஒரு கல் பெற்றிருக்க வேண்டும் என விரும்புகிறேன்; அது என் சாட்சியின் கல்லாக இருக்கும். நமது சாட்சியம் தனிப்பட்ட ஆவிக்குரிய அனுபவங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதில் நம் வாழ்வில் தெய்வீக செல்வாக்கை நாம் அடையாளம் காண்கிறோம்.18 அந்த அறிவை நம்மிடமிருந்து யாரும் பறிக்க முடியாது. நமது ஆவிக்குரிய அனுபவங்களில் வாழ்ந்து, நாம் அறிந்ததை அறிவது விலைமதிப்பற்றது. அந்த அறிவுக்கு உண்மையாக இருப்பது நமக்கு சுதந்திரத்தை அளிக்கிறது. அது நமக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது! நாம் உண்மையை நேசித்தால், அதைத் தேடுவோம், அதைக் கண்டுபிடித்தவுடன், அதைப் பாதுகாப்போம்.19

ஒரு அழைப்பு

நான் ஆறாவது கல்லைத் தேர்ந்தெடுத்தது போல், உங்கள் வகுப்பு, குழுமம் அல்லது குடும்பத்தைச் சந்தித்து, தேவனுக்கு உண்மையாக இருப்பதற்கும், உலகை வெல்வதற்கும் நீங்கள் பெற வேண்டிய வேறு என்ன பலம் உங்களுக்குத் தேவை என்பதைப் பற்றி சிந்திக்கவும் உங்களை அழைக்கிறேன்.

ஒரு வாக்குத்தத்தம்.

அன்பான நண்பர்களே, கிறிஸ்து நம் வாழ்க்கைப் பயணத்தில் நம்முடன் வர ஆர்வமாக இருக்கிறார். நான் வாக்களிக்கிறேன், நீங்கள் இரும்பு கம்பியை பிடித்துக்கொண்டு, நீங்கள் இயேசு கிறிஸ்துவுடன் கைகோர்த்து நடப்பீர்கள்.20 அவர் உங்களுக்கு வழிகாட்டுவார், அவர் உங்களுக்கு கற்பிப்பார்.21 அவருடைய கையால், உங்கள் வாழ்க்கையில் தோன்றும் ஒவ்வொரு கோலியாத்தையும் வீழ்த்த முடியும்.

சாட்சி

ஒவ்வொரு நாளும் ஜெபிப்பதிலும், ஒவ்வொரு நாளும் மார்மன் புஸ்தகத்தை வாசிப்பதிலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிருந்தில் பங்குகொள்வதிலும், வேத பாட வகுப்புக்குச் செல்வதிலும்—அதிகாலையிலும் கூட மகிழ்ச்சி இருக்கிறது என்று நான் சாட்சி கூறுகிறேன்! நன்மை செய்வதில் மகிழ்ச்சி இருக்கிறது.

பிரபஞ்சத்தின் தேவன், உலக இரட்சகர், ராஜாதி ராஜாவுக்கு விசுவாசமாக இருப்பதில் மகிழ்ச்சி இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் சீடராக இருப்பதில் மகிழ்ச்சி இருக்கிறது.

தேவனே நமது பிதா. அவர் உங்கள் இருதயத்தின் ஆசைகளையும் உங்கள் சாத்தியக்கூறுகளையும் அறிந்திருக்கிறார், அவர் உங்களை நம்புகிறார்.

அன்பான இளைஞர்களே, இறுதிபரியந்தம் விசுவாசமாக இருக்க இயேசு கிறிஸ்து உங்களுக்கு உதவுவார். இந்த சத்தியங்கள்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.