பொது மாநாடு
ஜெபியுங்கள், அவர் இருக்கிறார்
ஏப்ரல் 2024 பொது மாநாடு


ஜெபியுங்கள், அவர் இருக்கிறார்

பரலோக பிதா இருக்கிறார் என்பதை அறிய ஜெபிக்கவும், அவரைப் போல ஆக வளர ஜெபிக்கவும், மற்றவர்களுக்கு அவருடைய அன்பைக் காட்டவும் ஜெபிக்கும்படி உங்களை அழைக்கிறேன்.

சகோதர சகோதரிகளே, குழந்தைகளிடம் பேசும் எண்ணத்திற்கு நான் பதிலளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

பெண்கள் மற்றும் சிறுவர்கள், நீங்கள் உலகில் எங்கிருந்தாலும், நான் உங்களுடன் ஏதாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நமது பரலோக பிதா உங்களை நேசிக்கிறார்! நீங்கள் அவருடைய பிள்ளை. அவர் உங்களை அறிகிறார். அவர் உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். அவருடைய அன்பை நீங்கள் உணர வேண்டும் என்று முழு மனதுடன் ஜெபிக்கிறேன்.

நீங்கள் வரங்களைப் பெற விரும்புகிறீர்களா? உங்களுக்கு உதவ பரலோக பிதா உங்களுக்குக் கொடுத்துள்ள ஒரு சிறப்பான வரம் பற்றி நான் உங்களிடம் பேச விரும்புகிறேன். இது ஜெபத்தின் வரம். ஜெபம் என்ன ஒரு ஆசீர்வாதம்! நாம் ஜெபத்தின் மூலம் பரலோக பிதாவிடம் எப்போதும் எங்கேயும் பேச முடியும்.

படம்
பிள்ளைகளுடன் இயேசு.

இயேசு பூமியில் இருந்தபோது, அவர் நமக்கு ஜெபிக்க கற்றுக்கொடுத்தார். அவர், “கேளுங்கள், நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்” என்றார்.1

என்ன வரங்களுக்காக நீங்கள் ஜெபிக்கலாம்? பல உள்ளன, ஆனால் இன்று நான் மூன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

  1. தெரிந்துகொள்ள ஜெபியுங்கள்.

  2. வளர ஜெபியுங்கள்.

  3. காட்டுவதற்கு ஜெபியுங்கள்.

ஒவ்வொன்றையும் பற்றி பேசுவோம்.

முதலில், தெரிந்துகொள்ள ஜெபியுங்கள்

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

உலகம் முழுவதும் ஆரம்ப வகுப்பு குழந்தைகள் பாடும் ஜெபத்தைப் பற்றிய ஒரு பாடல் உள்ளது. இது ஒரு கேள்வியுடன் தொடங்குகிறது. அது என்ன பாடல் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் உண்மையிலேயே தைரியமாக இருந்தால், நான் அதை உங்களுக்காக பாடுவேன்!

“பரலோக பிதாவே, நீங்கள் உண்மையில் இருக்கிறீர்களா? ஒவ்வொரு குழந்தையின் ஜெபத்தையும் நீங்கள் கேட்டு பதிலளிக்கிறீர்களா?”2

உங்களால் அவரைப் பார்க்க முடியாவிட்டாலும், பரலோக பிதா உண்மையில் இருக்கிறார் என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொள்ள முடியும்?

தலைவர் ரசல் எம். நெல்சன் உங்களை அழைத்திருக்கிறார், “உங்கள் இருதயத்தை உங்கள் பரலோக பிதாவிடம் ஊற்றுங்கள். … பின்னர் செவிகொடுங்கள்.”3 உங்கள் இருதயத்தில் உணர்வதும் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் செவிகொடுங்கள்.4

பரலோக பிதா மாம்சமும் எலும்புகளும் உடைய மகிமைபெற்ற சரீரத்தைக் கொண்டிருக்கிறார், உங்கள் ஆவியின் பிதாவாக இருக்கிறார். பரலோக பிதா சகல வல்லமையும் உடையவராகவும் எல்லாவற்றையும் அறிந்தவராகவும் இருப்பதால், அவர் தம் பிள்ளைகள் அனைவரையும் பார்க்க முடியும்,5 மேலும் ஒவ்வொரு ஜெபத்தையும் கேட்கவும் பதிலளிக்கவும் முடியும். அவர் இருக்கிறார் என்பதையும் அவர் உங்களை நேசிக்கிறார் என்பதையும் நீங்களே அறிந்து கொள்ளலாம்.

பரலோக பிதா உண்மையானவர் என்பதையும் அவர் உங்களை நேசிக்கிறார் என்பதையும் நீங்கள் அறியும்போது, நீங்கள் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் வாழலாம்! “ஜெபியுங்கள், அவர் இருக்கிறார்; பேசுங்கள், அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.”6

நீங்கள் எப்போதாவது தனிமையாக உணர்ந்திருக்கிறீர்களா? எங்கள் பேத்தி ஆஷ்லிக்கு ஆறு வயதாக இருந்தபோது ஒரு நாள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாட தோழி இல்லாமல் இருந்த ஒரே சிறுமியாக இருந்தாள். அவள் அங்கே நின்றுகொண்டிருந்தபோது, முக்கியமற்றவளாகவும், கண்ணுக்குத் தெரியாதவளாகவும் உணர்ந்தாள், அவள் மனதில் ஒரு குறிப்பிட்ட எண்ணம் தோன்றியது: “காத்திரு! நான் தனியாக இல்லை! எனக்கு கிறிஸ்து இருக்கிறார்!” ஆஷ்லி விளையாட்டு மைதானத்தின் நடுவில் மண்டியிட்டு, கைகளைக் கூப்பி, பரலோக பிதாவிடம் ஜெபம் செய்தாள். அவள் கண்களைத் திறக்கும் நேரத்தில், அவள் வயதுடைய ஒரு சிறுமி விளையாட விரும்புகிறாயா என்று கேட்டு நின்றுகொண்டிருந்தாள். ஆஷ்லி எழுதினாள், “நாம் கர்த்தருக்கு முக்கியமானவர்கள் என்பதை நான் கற்றுக்கொண்டேன், நாம் ஒருபோதும் உண்மையில் தனியாக இல்லை.”

சில நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் கடினமான ஒன்று ஏன் நடக்கிறது அல்லது நீங்கள் ஜெபித்த ஆசீர்வாதத்தை ஏன் பெறவில்லை என்பதை நீங்கள் அறிய விரும்பலாம். பரலோக பிதாவிடம் அடிக்கடி கேட்க வேண்டிய சிறந்த கேள்வி ஏன் அல்ல, ஆனால் என்ன?

நேபியும் அவனுடைய குடும்பமும் வனாந்தரத்தில் பிரயாணம் செய்துகொண்டிருந்தபோது பசியாக இருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நேபியும் அவனது சகோதரர்களும் உணவுக்காக வேட்டையாடச் சென்றபோது, நேபி தன் வில்லை முறித்தான். ஏன் என்று நேபி கேட்கவில்லை.

படம்
உணவை எங்கு கண்டுபிடிக்கலாம் என்று நேபி லேகியிடம் கேட்டான்.

நேபி ஒரு புதிய வில்லைச் செய்து, தன் தகப்பனாகிய லேகியிடம் உணவு பெற எங்கு செல்லலாம் என்று கேட்டான். லேகி ஜெபம் செய்தான், நேபி எங்கு செல்லலாம் என்று கர்த்தர் அவர்களுக்குக் காட்டினார்.7 நீங்கள் என்ன செய்ய முடியும், என்ன கற்றுக்கொள்ளலாம் என்று நீங்கள் அவரிடம் கேட்கும்போது பரலோக பிதா உங்களுக்கு வழிகாட்டுவார்.

இரண்டாவதாக, வளர ஜெபம் செய்யுங்கள்

பரலோக பிதா நீங்கள் வளர உதவ விரும்புகிறார்! அவர் நம்மை மிகவும் நேசிக்கிறார், அவர் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, நாம் வாழ வழி காட்ட அனுப்பினார்.8 இயேசு பாடுபட்டு, மரித்தார், உயிர்த்தெழுந்தார், அதனால் நாம் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவரைப் போலவே வளரலாம்.

நீங்கள் பொறுமையில் அல்லது நேர்மையில் வளர வேண்டுமா? நீங்கள் திறமையில் வளர விரும்புகிறீர்களா? ஒருவேளை நீங்கள் வெட்கப்படுவீர்கள் மற்றும் தைரியத்தில் வளர விரும்புகிறீர்கள். “ஜெபியுங்கள், அவர் இருக்கிறார்!”9 அவருடைய ஆவியின் மூலம், உங்கள் இருதயம் மாறலாம், மேலும் நீங்கள் பலத்தைப் பெறலாம்.

எனது புதிய நண்பன் ஜோனா எழுதினான், “நான் காலையில் பள்ளிக்கு செல்லும் வழியில் அடிக்கடி பதட்டமாக உணர்கிறேன். தாமதமாக வருவது, எதையாவது மறந்துவிடுவது மற்றும் பரீட்சை எழுதுவது போன்ற விஷயங்களைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். எனக்கு 10 வயதாக இருந்தபோது, என் அம்மாவுடன் பள்ளிக்கு செல்லும் வாகனத்தில் ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு தேவையான உதவியை நான் கேட்கிறேன், என் குடும்பத்திற்காகவும் ஜெபம் செய்கிறேன். நான் நன்றி பாராட்டும் விஷயங்களைப் பற்றியும் நினைக்கிறேன். [பரலோக பிதாவிடம் ஜெபித்தல்] எனக்கு உதவியது. சில சமயங்களில் நான் காரை விட்டு இறங்கும் போது நிம்மதியை உணர்வதில்லை, ஆனால் எனது வகுப்பறைக்கு வருவதற்குள் நான் சமாதானமாக உணர்கிறேன்.”10

ஜோனாவின் விசுவாசம் ஒவ்வொரு நாளும் அவன் ஜெபிக்கும்போது வளர்ந்து முன்னேறிச் செல்கிறது.

மூன்றாவது, காட்டுவதற்கு ஜெபியுங்கள்

பரலோக பிதாவின் அன்பை மற்றவர்களுக்குக் காட்ட உதவிக்காக நீங்கள் ஜெபிக்கலாம்.11 அவருடைய ஆவியின் மூலம், பரலோக பிதா சோகமாக இருக்கும் ஒருவரைக் கவனிக்க உங்களுக்கு உதவுவார், அதனால் நீங்கள் அவர்களை ஆறுதல்படுத்த முடியும். ஒருவரை மன்னிப்பதன் மூலம் அவருடைய அன்பைக் காட்ட அவர் உங்களுக்கு உதவ முடியும். ஒருவருக்கு சேவை செய்வதற்கும், அவர்கள் தேவனின் குழந்தை என்பதை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் அவர் உங்களுக்கு தைரியம் தருவார். இயேசுவையும் பரலோக பிதாவையும் உங்களைப் போலவே மற்றவர்களும் அறிந்து நேசிக்க உங்கள் முயற்சிகள் உதவும்.12

என் வாழ்நாள் முழுவதும் என் அப்பா பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினராக வேண்டும் என்று ஜெபம் செய்தேன். ஒரு இளம் பெண்ணாக இருந்தபோதும், அவர் எவ்வளவு ஆசீர்வாதங்களைப் பெற முடியும் என்பதை நான் அறிந்தேன். எங்கள் குடும்பம் நித்தியத்திற்கும் முத்திரிக்கப்பட்டு ஆசீர்வாதத்தைப் பெற முடியும். எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நான் அவருக்காக அடிக்கடி ஜெபம் செய்தோம், ஆனால் அவர் சபையில் சேரவில்லை. பரலோக பிதா யாரையும் தேர்வு செய்யும்படி வற்புறுத்துவதில்லை.13 நம்முடைய ஜெபங்களுக்கு அவர் வேறு வழிகளில் பதில் அனுப்ப முடியும்.

படம்
அவரது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோருடன் தலைவர் போர்ட்டர்.

எனக்கு போதுமான வயதாகியபோது, நான் என் கோத்திர பிதா ஆசிர்வாதம் பெற்றேன். அந்த ஆசீர்வாதத்தில் கோத்திர பிதா என்னிடம் சொன்னார், என் குடும்பம் பரலோகத்தில் ஒன்றாக இருக்க நான் செய்யக்கூடிய சிறந்த விஷயம், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்குக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதே. அதைத்தான் என்னால் செய்ய முடிந்தது!

என் அப்பா 86 வயது வரை வாழ்ந்தார். அவர் இறந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, நான் ஒரு பரிசுத்தமான மகிழ்ச்சியின் உணர்வைப் பெற்றேன். என் அப்பா இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களைப் பெற விரும்பினார் என்பதை பரலோக பிதா அவருடைய ஆவியின் மூலம் எனக்குத் தெரியப்படுத்தினார்! என் பெற்றோருடன் முத்திரிக்கப்பட என் சகோதரி மற்றும் சகோதரர்களுடன் ஆலயத்தில் உள்ள பலிபீடத்தைச் சுற்றி மண்டியிட்ட நாளை என்னால் மறக்க முடியாது. நான் ஆரம்ப வகுப்பிலிருக்கும்போது இந்த ஆசீர்வாதத்தை வேண்டி ஜெபிக்க ஆரம்பித்தேன், நான் பாட்டியாக இருந்தபோது அதைப் பெற்றேன்.

ஒருவேளை நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்கள் விரும்பும் மற்றவர்களுக்கும் ஆசீர்வாதங்களுக்காக ஜெபம் செய்கிறீர்கள். விட்டு விடாதீர்கள்! உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை பரலோக பிதா உங்களுக்குக் காண்பிப்பார்.

உங்கள் இருதயத்தில் உள்ளதை பரலோக பிதாவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.14 அவருடைய உதவியை நீங்கள் உண்மையாகக் கேட்கும்போது, உங்களை வழிநடத்த அவருடைய ஆவியைப் பெறுவீர்கள்.15 ஒவ்வொரு நாளும் ஜெபிப்பது பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீதான அன்பினால் உங்களை நிரப்பும். உங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களைப் பின்பற்ற இது உங்களுக்கு உதவும்!

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து குழந்தைகளும் தினமும் ஜெபம் செய்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? முழு உலகமும் தேவனின் அன்பால் ஆசீர்வதிக்கப்படும்!

படம்
உலகெங்கிலுமுள்ள பிள்ளைகள் ஜெபித்தல்.

பரலோக பிதா இருக்கிறார் என்பதை அறிய ஜெபிக்கவும், அவரைப் போல ஆக வளர ஜெபிக்கவும், மற்றவர்களுக்கு அவருடைய அன்பைக் காட்டவும் ஜெபிக்கும்படி உங்களை அழைக்கிறேன். அவர் ஜீவிக்கிறார் என்றும் உங்களை நேசிக்கிறார் என்றும் நான் அறிவேன். “ஜெபியுங்கள் , அவர் இருக்கிறார்.” இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.