பொது மாநாடு
இரண்டு பெரிய கட்டளைகளை இணைத்தல்
ஏப்ரல் 2024 பொது மாநாடு


இரண்டு பெரிய கட்டளைகளை இணைத்தல்

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான நமது திறன், முதல் மற்றும் இரண்டாவது கட்டளைகளை சமநிலையுடனும் சமமான அர்ப்பணிப்புடனும் வாழ்வதற்கான நமது பலத்தைப் பொறுத்தது.

முன்னுரை

ஒரு நியமிப்பில் நானும் என் மனைவி லெசாவும் உலகம் முழுவதிலும் பயணம் செய்யும்போது, பெரிய மற்றும் சிறிய சபைகளில் உங்களைச் சந்திக்கும் சிலாக்கியத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். கர்த்தருடைய பணியின் மீதான உங்கள் அர்ப்பணிப்பு எங்களை உற்சாகப்படுத்துகிறது மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு ஒரு சாட்சியாக நிற்கிறது. ஒவ்வொரு பயணத்திலிருந்தும் நாங்கள் உங்களிடமிருந்து பெற்ற அளவுக்கு, நாங்கள் திரும்ப வழங்கினோமா என்று யோசித்துக்கொண்டே வீடு திரும்புகிறோம்.

படம்
ரெயின்போ பாலம்
படம்
சிங் மா பாலம்
படம்
டவர் பாலம்

பயணம் செய்யும் போது, சுற்றிப்பார்க்க சிறிது நேரமே இருக்கிறது. இருப்பினும், முடிந்தால், நான் ஒரு குறிப்பிட்ட ஆர்வத்தில் சில தருணங்களை செலவிடுகிறேன். கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பில் எனக்கு ஆர்வம் மற்றும் பாலங்கள் மீது ஒரு சிறப்பு ஈர்ப்பு உள்ளது. தொங்கு பாலங்கள் என்னை வியக்க வைக்கின்றன. அது டோக்கியோவில் உள்ள ரெயின்போ பாலமாக இருந்தாலும் சரி, ஹாங்காங்கில் உள்ள சிங் மா பாலமாக இருந்தாலும் சரி, லண்டனில் உள்ள டவர் பாலமாக இருந்தாலும் சரி, நான் பார்த்த மற்றவையாக இருந்தாலும் சரி, இந்த சிக்கலான கட்டமைப்புகளுக்குள் கட்டப்பட்ட பொறியியல் மேதாவித்தனத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. நாம் செல்ல முடியாத இடங்களுக்கு பாலங்கள் நம்மை அழைத்துச் செல்லும். (நான் தொடர்வதற்கு முன், இந்த செய்தி தயாரிக்கப்பட்டதிலிருந்து, பால்டிமோரில் ஒரு சோகமான பால விபத்து ஏற்பட்டது என்பதை நான் குற்ப்பிடுகிறேன். உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவிப்பதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுகிறோம்.)

ஒரு மகத்தான தொங்கு பாலம்

சமீபத்தில், ஒரு மாநாட்டு பணி என்னை கலிபோர்னியாவிற்கு அழைத்துச் சென்றது, அங்கு நான் மீண்டும் ஒருமுறை உலகின் பொறியியல் அதிசயமாக கருதப்படும் கோல்டன் கேட் பாலத்தை கடந்தேன். இது அழகான கட்டிடம், செயல்பாட்டு நோக்கம் மற்றும் தலைசிறந்த பொறியியல் ஆகியவற்றை பின்னிப்பிணைக்கிறது. இது ஒரு உன்னதமான தொங்கு பாலமாகும், இது புக்கெண்ட் கோபுரங்கள், மிகப்பெரிய தூண்களால் தாங்கப்படுகிறது. கடலுக்கு மேலே உயரும் பிரமாண்டமான, கம்பீரமான எடை தாங்கும் இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்ட முதல் அமைப்புகள். அவைகள் ஒன்றாக சேர்ந்து, பிரமாண்ட பிரதான சஸ்பென்ஷன் கேபிள்கள் மற்றும் செங்குத்து சஸ்பெண்டர் கேபிள்களின் சுமைகளை சுமக்கின்றன, அவை கீழே உள்ள சாலையின் தொட்டிலாக உள்ளன. அசாதாரண நிலைப்படுத்தும் திறன், கோபுரத்தின் பலம், பாலத்தின் பொறியியலுக்குப் பின்னால் உள்ள மாயம்.

படம்
கோல்டன் கேட் பாலம் கட்டுமானத்தில் உள்ளது.

கோல்டன் கேட் பாலம் மாவட்டம்

பாலத்தின் ஆரம்பகால கட்டுமானப் படங்கள் இந்த பொறியியல் கொள்கைக்கு சான்று பகர்கின்றன. ஒவ்வொரு பால பாகமும் சமச்சீர் கோபுரங்களிலிருந்து எடை தாங்கும் ஆதரவைக் காண்கிறது, இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இணைக்கப்பட்டுள்ளன.

படம்
கோல்டன் கேட் பாலம் கட்டுமானத்தில் உள்ளது.

Getty Images/Underwood Archives

கட்டி முடிக்கப்பட்டதும், இரண்டு கோபுரங்களும் உறுதியான இடத்தில் உள்ளன, மேலும் பாறைகளின் அடித்தளத்தில் நங்கூரமிடப்பட்ட தூண்கள் வலிமை மற்றும் அழகின் உருவமாக உள்ளன.

படம்
கோல்டன் கேட் பாலம்

இன்று நான் இந்த கம்பீரமான பாலத்தை சுவிசேஷ உருப்பெருக்கி மூலம், பார்க்க உங்களை அழைக்கிறேன், அதன் உயரும் இரட்டைக் கோபுரங்கள் வலுவான அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளன.

இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் அந்தி நேரத்தில், நாம் பரிசுத்த வாரம் என்று அழைக்கும் இப்போது, ஒரு நியாயசாஸ்திரியாக இருந்த ஒரு பரிசேயன்,1 பதிலளிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று அவன் அறிந்த ஒரு கேள்வியை இரட்சகரிடம் கேட்டான்:2 “போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது?” நியாயசாஸ்திரி, “அவரைச் சோதிக்கும்படி” மற்றும் சட்டரீதியான பதிலைத் தேடினான், வெளித்தோற்றத்தில் நேர்மையற்ற நோக்கத்துடன், இயேசு கிறிஸ்துவிடமிருந்து உண்மையான, பரிசுத்தமான, தெய்வீகமான பதிலைப் பெற்றான்.

“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.

“இது முதலாம் பிரதான கற்பனை.” நமது பாலம் ஒப்புமைக்கு செவிசாய்க்கிறோம், முதல் கோபுரம்!

“இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக.” இதுவே இரண்டாம் பாலம்!

“இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.”3 பாலத்தின் மீதமுள்ள கூறுகள்!

இயேசு கிறிஸ்துவின் பதிலில் வெளிப்படுத்தப்பட்ட மற்றும் ஓதப்பட்ட இரண்டு பெரிய கட்டளைகளில் ஒவ்வொன்றையும் நாம் ஆராயலாம். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, பிரம்மாண்டமான தொங்கு பாலத்தின் உருவம், உங்கள் மனக்கண்ணில் எதிரொலிக்கட்டும்.

கர்த்தரை நேசியுங்கள்

முதலாவது, கர்த்தரை முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் நேசிப்பது.

இந்த பதிலில், பழைய ஏற்பாட்டின் பரிசுத்த போதனைகளில் பொதிந்துள்ள நியாயப்பிரமாணத்தின் சாரத்தை இயேசு கிறிஸ்து சுருக்குகிறார். கர்த்தரை நேசிப்பது முதலில் உங்கள் இருதயத்தை—உங்கள் இயல்பை மையமாகக் கொண்டுள்ளது. உங்கள் முழு ஆத்துமாவோடு—உங்கள் முழு அர்ப்பணிப்புடன், நீங்கள் நேசிக்க வேண்டும் என்றும் 4—இறுதியாக, உங்கள் முழு மனதுடன்—உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் அறிவுடன் நேசிக்கவும் கர்த்தர் கேட்கிறார். தேவன் மீதான அன்பு வரம்புக்கு அல்லது எல்லைக்கு உட்பட்டதல்ல. அது எல்லையற்றது மற்றும் நித்தியமானது.

என்னைப் பொறுத்தவரை, முதல் பெரிய கட்டளையின் பயன்பாடு சில சமயங்களில் சுருக்கமாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கலாம். நன்றிகூறும்விதமாக, இயேசு தம் சீடர்களுக்கு வழங்கிய வார்த்தைகளை நான் கருத்தில் கொள்ளும்போது, இந்தக் கட்டளை மிகவும் புரிந்துகொள்ளத் தக்கதாகிறது: “நீங்கள் என்னில் அன்பாயிருந்தால், என் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்.”5 இது என்னால் முடியும். நான் பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் நேசிக்க முடியும், அது ஜெபம், வேதப் படிப்பு மற்றும் ஆலய ஆராதனைக்கு வழிவகுக்கிறது. தசமபாகம் செலுத்துவதன் மூலமும், ஓய்வுநாளைப் பரிசுத்தமாகக் கடைப்பிடிப்பதன் மூலமும், நல்லொழுக்கமுள்ள மற்றும் தூய்மையான வாழ்க்கை வாழ்வதன் மூலமும், கீழ்ப்படிதலினாலும் நாம் பிதாவையும் குமாரனையும் நேசிக்கிறோம்.

கர்த்தரை நேசிப்பது பெரும்பாலும் சிறிய தினசரி செயல்களில் அளவிடப்படுகிறது, உடன்படிக்கையின் பாதையில் அடிச்சுவடுகள்: இளைஞர்களுக்கு, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கிழித்து விட அல்லாமல் கட்டவும்; தரநிலைகள் சவால் விடக்கூடிய காட்சி, திரைப்படம் அல்லது நிகழ்ச்சியை விட்டு வெளியேறுதல்; பரிசுத்தமான விஷயங்களுக்கு மரியாதை காட்டுதல்.

இந்த மென்மையான உதாரணத்தைக் கருத்தில் கொள்ளவும். உபவாச ஞாயிற்றுக்கிழமை வான்ஸும்6 நானும் ஒரு சிறிய, எளிமையான வீட்டின் கதவைத் தட்டினோம். “தயவுசெய்து உள்ளே வாருங்கள்” என்ற வார்த்தைகளை நாங்கள் மற்றும் குழுமத்தில் இருந்த மற்ற உதவிக்காரர்களும் கதவு வழியாகக் கேட்கும் அளவுக்கு தடிமனான ஜெர்மன் உச்சரிப்பில் இதமாகக் கத்துவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், . தொகுதியில் இருந்த பல புலம்பெயர்ந்த விதவைகளில் சகோதரி முல்லர் ஒருவர். சட்டரீதியாக பார்வையற்றவளாக இருந்ததால் அவளால் எளிதில் கதவைத் திறக்க முடியவில்லை. மங்கலான வெளிச்சமுள்ள வீட்டிற்குள் நுழைந்து, அன்பான கேள்விகளுடன் எங்களை வரவேற்றாள்: உங்கள் பெயர்கள் என்ன? நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள்? நீங்கள் கர்த்தரை நேசிக்கிறார்களா? நாங்கள் பதில் அளித்து, அவளுடைய உபவாசக் காணிக்கைகளைப் பெற வந்தோம் என்று பகிர்ந்து கொண்டோம். எங்கள் இளம் வயதில் கூட, அவளுடைய எளிய சூழ்நிலைகள் உடனடியாகத் தெளிவாகத் தெரிந்தன, அவளுடைய நம்பிக்கை நிறைந்த பதில் ஆழமாகத் தொட்டது: “நான் இன்று காலை கவுண்டரில் ஒரு காசை வைத்தேன். எனது உபவாச காணிக்கையை வழங்குவதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அதை உறையில் வைத்து, எனது உபவாச காணிக்கை ரசீதை நிரப்ப நீங்கள் தயவாக இருப்பீர்களா?” ஒவ்வொரு முறையும் நாங்கள் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறும்போது கர்த்தர் மீதான அவளுடைய அன்பு எங்கள் விசுவாசத்தை உயர்த்தியது.

பென்யமீன் ராஜா முதல் பெரிய கட்டளையைப் பின்பற்றுபவர்களுக்கு குறிப்பிடத்தக்க விளைவுகளை உறுதியளித்தான். “தன் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்பவர்களின் ஆசீர்வாதமானதும், மகிழ்ச்சியானதுமான நிலையை நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டுமென நான் விரும்புகிறேன். … “சகல காரியங்களிலும் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் முடிவுபரியந்தமும் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பார்களெனில் முடிவற்ற மகிழ்ச்சியுள்ள நிலையிலே … பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.”7

கர்த்தரை நேசிப்பது நித்திய மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்!

உங்கள் அயலாரை நேசியுங்கள்

பின்பு இயேசு சொன்னார், “இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக.”8 இது பாலத்தின் இரண்டாவது கோபுரம்.

இங்கே இயேசு கர்த்தரை நேசிப்பதற்காக, நமது பூமிக்குரிய வெளிப்புற பார்வையால், நம் சக மனிதர்களையும் சக பெண்களையும் நேசிக்கிற, நமது பரலோகத்தை நோக்கிய பார்வையை பாலமாக்குகிறார்,. ஒன்று மற்றொன்றைச் சார்ந்துள்ளது. நம் அண்டை வீட்டாரை புறக்கணித்தால் கர்த்தரின் அன்பு முழுமையடையாது. இந்த வெளிப்புற அன்பில் பாலினம், சமூக வர்க்கம், இனம், பாலியல் தன்மை, வருமானம், வயது அல்லது தேசியஇனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தேவனின் குழந்தைகள் அனைவரையும் உள்ளடக்கியது. காயப்பட்ட மற்றும் நொறுங்கியவர்களை, ஒதுக்கப்பட்டவர்களை நாம் தேடுகிறோம், ஏனெனில் “அனைவரும் தேவனுக்குச் சமமானவர்களே.”9 நாம் “பலவீனமானவர்களுக்கு உதவுகிறோம், தொங்கிய கைகளை நிமிர்த்துகிறோம், தளர்ந்த முழங்கால்களை பெலப்படுத்துகிறோம்.”10

இந்த உதாரணத்தை கருத்தில்11 கொள்ளுங்கள்: சகோதரர் எவன்ஸ் தனது காரை நிறுத்திவிட்டு, தெரியாத குடும்பத்தின் அறியாத கதவைத் தட்டத் தூண்டப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. 10 குழந்தைகளின் தாயான விதவை, கதவைத் திறந்தபோது, அவர்களுடைய கடினமான சூழ்நிலைகளும் பெரிய தேவைகளும் அவருக்கு உடனடியாகத் தெரிந்தன. முதலானது எளிமையானது, அவர்களின் வீட்டிற்கு வண்ணப்பூச்சுடன், பல ஆண்டுகளாக உலகப்பிரகார மற்றும் ஆவிக்குரிய ஊழியம் செய்யப்பட்டது.

இந்த நன்றியுள்ள தாய் பின்னர் தனது பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட நண்பரைப் பற்றி எழுதினார்: “எங்களில் சிறியவர்களை அடைய நீங்கள் உங்கள் வாழ்க்கையை செலவிட்டீர்கள். நீங்கள் நிதி ரீதியாகவும் ஆவிக்குரிய ரீதியாகவும் செய்த நன்மைகளுக்கு, உங்களுக்கும் அவருக்கும் மட்டுமே தெரிந்திருக்கும் மக்களுக்கு அவர் தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தும்போது, கர்த்தர் உங்களிடம் சொல்லும் விஷயங்களைக் கேட்க நான் மிகவும் விரும்புகிறேன். பல வழிகளில் எங்களை ஆசீர்வதித்ததற்கு … நீங்கள் வழங்கிய ஊழியக்காரர்களுக்காக நன்றி. … கர்த்தர் உங்களைப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்தாரா, அல்லது நீங்கள் மட்டுமே கேட்பவராக இருந்தீர்களா என்று நான் அடிக்கடி ஆச்சரியப்படுகிறேன்.”

உங்கள் அண்டை வீட்டாரை நேசிப்பதில் கிறிஸ்துவைப் போன்ற தயவும் சேவையும் அடங்கும். நீங்கள் வெறுப்பை விட்டுவிடுவீர்களா, எதிரிகளை மன்னிப்பீர்களா, உங்கள் அண்டை வீட்டாரை வரவேற்று ஊழியம் செய்வீர்களா, வயதானவர்களுக்கு உதவுவீர்களா? அண்டை வீட்டாரின் அன்பின் கோபுரத்தை நீங்கள் கட்டும்போது நீங்கள் ஒவ்வொருவரும் உணர்த்தப்படுவீர்கள்.

தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்: “மற்றவர்களுக்கு உதவி கொடுப்பதில், நாமே நமக்கு அக்கறை காட்டுவதைவிட முடிந்தவரை அல்லது அதிகமாக மற்றவர்களுக்கு அக்கறை காட்டுவதில் ஒரு மனமுவந்த முயற்சியைச் செய்வது நமது மகிழ்ச்சி. விசேஷமாக, … அது நமக்கு வசதியாயில்லாதபோதும் நமது வசதி மண்டலத்தைவிட்டு நம்மை வெளியே கொண்டுபோகும்போதும். அந்த இரண்டாவது பெரிய கட்டளைப்படி வாழ்வதே இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடராவதற்கு திறவுகோலாகும்.12

ஒரு பரஸ்பர சார்பு

இயேசு மேலும் போதித்தார், “இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசிகளும் அடங்கியிருக்கிறது.”13 இது மிகவும் அறிவுறுத்துதலாக உள்ளது. கர்த்தரை நேசிப்பதற்கும் ஒருவரையொருவர் நேசிப்பதற்கும் இடையே ஒரு முக்கியமான பரஸ்பர சார்பு உள்ளது. கோல்டன் கேட் பாலம் அதன் வடிவமைக்கப்பட்ட செயல்பாட்டைச் செய்வதற்கு, இரண்டு கோபுரங்களும் சமமாக வலுவாகவும், சஸ்பென்ஷன் கேபிள்கள், சாலைப் பாதை மற்றும் பாலத்தைக் கடக்கும் போக்குவரத்தின் எடையையும் சமமாகத் தாங்கும். இந்த பொறியியல் சமச்சீரான தன்மை இல்லாமல், பாலம் அசைக்கப்பட்டு, இடிந்து விழுவதற்கும் கூட வழிவகுக்கும். எந்தவொரு தொங்கு பாலமும் அது கட்டப்பட்டதைச் செய்ய, அதன் கோபுரங்கள் முழுமையான இணக்கத்துடன் ஒன்றாகச் செயல்பட வேண்டும். அதேபோல், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான நமது திறன், முதல் மற்றும் இரண்டாவது கட்டளைகளை சமநிலையுடனும் சமமான அர்ப்பணிப்புடனும் வாழ்வதற்கான நமது பலத்தைப் பொறுத்தது.

படம்
கோல்டன் கேட் பாலம்

இருப்பினும், உலகில் அதிகரித்து வரும் சர்ச்சைகள், சில சமயங்களில் நாம் இதைப் பார்க்கவோ அல்லது நினைவில் வைத்துக் கொள்ளவோ தவறிவிடுகிறோம் என்பதைக் குறிக்கிறது. சிலர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள், அவர்கள் குறைந்த நீதியுள்ளவர்களாகக் கருதுபவர்களிடம் கொஞ்சம்கூட சகிப்புத்தன்மையைக் காட்டுவதில்லை. உடன்படிக்கைக்கு வெளியே தங்கள் வாழ்க்கையை வாழ விரும்புபவர்களை அல்லது எந்த மதப் பங்கேற்பிலிருந்தும் விலகி இருப்பவர்களை நேசிப்பது சிலருக்கு கடினமாக உள்ளது .

மாற்றாக, நாம் அனைவரும் தேவனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளாமல் மற்றவர்களை நேசிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துபவர்களும் உள்ளனர். முழுமையான உண்மை, அல்லது சரி மற்றும் தவறு போன்ற ஒரு விஷயம் இருக்கிறது என்ற கருத்தை சிலர் முற்றிலும் மறுக்கிறார்கள், மேலும் நமக்குத் தேவையானது முழுமையான சகிப்புத்தன்மை மற்றும் மற்றவர்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்வது மட்டுமே என்று கருதுகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வுகளில் ஒன்று உங்கள் தனிப்பட்ட ஆவிக்குரிய பாலத்தை சாய்க்க அல்லது வீழ்ச்சியடையச் செய்யலாம்.

தலைவர் டாலின் எச். ஓக்ஸ் இதை விவரித்தார்: “எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்று நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம், ஏனென்றால் இயேசுவின் நல்ல சமாரியன் உவமை அனைவரும் நம் அண்டை வீட்டாரே என்று போதிக்கிறது. ஆனால், இந்த இரண்டாவது கற்பனையைக் கைக்கொள்ள நமது வைராக்கியம், தேவனிடத்தில் நமது முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் அன்புகூருவாயாக என்ற முதலாம் கட்டளையை நாம் மறக்க காரணமாயிருக்கக்கூடாது.”14

முடிவுரை

ஆகவே, நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கேள்வி என்னவென்றால், நம் சொந்த விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பின் பாலத்தை எவ்வாறு உருவாக்குவது—தேவனை நேசிப்பதற்கும் நம் அண்டை வீட்டாரை நேசிப்பதற்கும் உயரமான பால கோபுரங்களை அமைப்பது? சரி, நாம் தொடங்குகிறோம். நமது ஆரம்ப முயற்சிகள் ஒரு துணியின் பின்புறத்தில் உள்ள திட்டம் அல்லது நாம் கட்டும் பாலத்தின் ஆரம்ப கட்ட வரைபடமாக இருக்கலாம். கர்த்தரின் சுவிசேஷத்தை அதிகமாகப் புரிந்துகொள்ள அல்லது மற்றவர்களை குறைவாக நியாயந்தீர்ப்பதாக சபதம் செய்வது என்ற சில யதார்த்தமான இலக்குகளைக் கொண்டிருக்கலாம். யாரும் தொடங்குவதற்கு மிகவும் இளமையாகவோ அல்லது மிகவும் வயதானவராகவோ இல்லை.

படம்
பாலம் வடிவமைப்பு படம்.

காலப்போக்கில், ஜெபம் மற்றும் சிந்தனையுடன் திட்டமிடல், கடினமான கருத்துக்கள் செம்மைப்படுத்தப்படுகின்றன. புதிய செயல்கள் பழக்கமாக மாறும். ஆரம்ப வரைவுகள் மெருகூட்டப்பட்ட வரைபடங்களாக மாறும். பரலோக பிதா மற்றும் அவருடைய ஒரே பேறான குமாரன் மற்றும் நாம் அவர்களுடன் வேலை செய்யும், விளையாடும் மற்றும் வாழும் நம் சகோதர சகோதரிகளுடன் அர்ப்பணிக்கப்பட்ட இருதயங்களையும் மனதையும் கொண்டு நமது தனிப்பட்ட ஆவிக்குரிய பாலத்தை உருவாக்குகிறோம்.

வரும் நாட்களில், நீங்கள் ஒரு கம்பீரமான தொங்கு பாலத்தைக் கடந்து செல்லும் போதோ அல்லது உயரமான கோபுரங்களுடன் கூடிய ஒரு படத்தைப் பார்க்கும்போதோ, புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து விவரித்த இரண்டு பெரிய கட்டளைகளை நினைவில் வைத்துக் கொள்ள உங்களை அழைக்கிறேன். கர்த்தரின் அறிவுரைகள் நம்மை ஊக்குவிப்பதாக. நம்முடைய இருதயங்களும் மனங்களும் கர்த்தரை நேசிப்பதற்கும், புறம்பே திரும்பி, அண்டை வீட்டாரை நேசிப்பதற்கும் மேல்நோக்கி உயர்த்தப்படுவதாக.

இது இயேசு கிறிஸ்துவின் மீதும், அவருடைய பாவநிவர்த்தியின் மீதும் உள்ள நமது நம்பிக்கையை பலப்படுத்துவதாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. “புதிய ஏற்பாட்டில், [நியாயசாஸ்திரி எனும் சொல்] எழுத்தர் களுக்கு சமமானது, தொழிலில் ஒரு மாணவராகவும், சட்டத்தின் ஆசிரியராகவும் இருந்தவர், இதில் பென்டாடக்கில் எழுதப்பட்ட நியாயப்பிரமாணம் மற்றும் ‘மூப்பர்களின் பாரம்பரியம்’ உட்பட (மத். 22:35; மாற்கு 12:28; லூக்கா 10:25)” (Bible Dictionary, “Lawyer”).

  2. பண்டைய காலத்தில், யூத அறிஞர்கள் தோராவில் 613 கட்டளைகளை பட்டியலிட்டனர் மற்றும் ஒன்றுக்கு எதிராக மற்றொன்றின் முக்கியத்துவத்தை தீவிரமாக விவாதித்தனர். ஒருவேளை நியாயசாஸ்திரி இயேசுவின் பதிலை அவருக்கு எதிராகப் பயன்படுத்த நினைத்திருக்கலாம். ஒரு கட்டளை மிக முக்கியமானது என்று அவர் சொன்னால், நியாயப்பிரமாணத்தின் மற்றொரு அம்சத்தை இயேசு புறக்கணித்ததாக குற்றம் சாட்டுவதற்கு அது ஒரு தொடக்கத்தை அனுமதிக்கலாம். ஆனால் இரட்சகரின் பதில், இன்று, சபையில் நாம் செய்யும் அனைத்திற்கும் அடித்தளமாக இருக்கிற அடிப்படை அறிக்கை அவரை சிக்க வைக்க வந்தவர்களை அமைதிப்படுத்தியது.

  3. மத்தேயு 22:36-40.

  4. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:15 பார்க்கவும்.

  5. யோவான் 14:15.

  6. தனிமையைப் பாதுகாப்பதற்காக இந்தக் கதையில் இரண்டு பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.

  7. மோசியா 2:41.

  8. மத்தேயு 22:39.

  9. 2 நேபி 26:33.

  10. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 81:5.

  11. தனிமையைப் பாதுகாக்க பெயர் மாற்றப்பட்டது.

  12. Russell M. Nelson, “The Second Great Commandment,” Liahona, Nov. 2019, 100.

  13. மத்தேயு 22:40.

  14. Dallin H. Oaks, “Two Great Commandments,” Liahona, Nov. 2019, 73–74.