பொது மாநாடு
வரவேற்பு செய்தி
ஏப்ரல் 2021 பொது மாநாடு


வரவேற்பு செய்தி

பொது மாநாட்டிற்கும் கர்த்தரின் குரலைக் கேட்கும்படியான சிலாக்கியத்திற்கும் வரவேற்பு.

உலகமுழுவதிலுமுள்ள எனக்கன்பான சகோதர சகோதரிகளே, நண்பர்களே, இந்த பொது மாநாட்டிற்கு உங்களுக்கு எனது தனிப்பட்ட வரவேற்பை நான் வழங்குகிறேன். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவை தொழுதுகொள்ள விரும்பும் ஒரு பெரிய உலகளாவிய குடும்பமாக நாம் கூடுகிறோம். எங்களுடன் இணைந்ததற்காக உங்களுக்கு நன்றி.

இந்த கடந்த ஆண்டு, வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாயிருந்தது. நாம் முன்னர் அறியாத காரியங்களை நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டோம் என்பதில் சந்தேகமில்லை. முன்பு நான் அறிந்த சில பாடங்கள் என் இருதயத்தில் புதிய மற்றும் அறிவுறுத்தும் வழிகளில் எழுதப்பட்டுள்ளன.

உதாரணமாக, அவருடைய சபையின் விவகாரங்களை கர்த்தர் வழிநடத்துகிறார் என்பதை நான் நிச்சயமாக அறிவேன். “என் சுயகிரியையை நான் செய்யக்கூடும் என்பதை நான் உனக்குக் காண்பிப்பேன்”1 என அவர் சொன்னார்.

நாங்கள் எங்களால் முடிந்த சிறந்ததைச் செய்து, இனியும் எதுவும் செய்யமுடியாது என்ற மிகவும் சவாலான சூழ்நிலைகளில், அவர் தலையிட்டபோது, பெரும்பாலும், என் ஆலோசகர்களும் நானும் அதை கண்ணீர் நிறைந்த கண்களால் பார்த்திருக்கிறோம். நாங்கள் உண்மையாகவே முழு ஆச்சரியத்தோடு நிற்கிறோம்.

“இதோ, நான் ஏற்றகாலத்திலே எனது பணியை தீவிரமாய் நடப்பிப்பேன்”2 என அவர் சொன்னபோது, அவர் என்ன சொன்னார் என்பதை இப்போது என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. உலகளாவிய தொற்றுநோயின் போது கூட, அவர் தனது பணியை விரைவுபடுத்தி நிறைவேற்றியதால் மீண்டும் மீண்டும் நான் களிகூர்ந்திருக்கிறேன்.

எனக்கன்பான சகோதர சகோதரிகளே, சபையின் வலிமை அதன் உறுப்பினர்களின் முயற்சிகள் மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் சாட்சிகளில் உள்ளது. வீட்டில் சிறந்த முறையில் சாட்சிகள் விருத்தி செய்யப்படுகின்றன. இந்த கடந்த ஆண்டில், உங்களில் அநேகர் உங்கள் வீடுகளில், சுவிசேஷப் படிப்பை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளீர்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன், உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு நன்றி கூறுவார்கள்.

சால்ட் லேக் ஆலய புதுப்பித்தலுக்கான மிகப்பெரிய திட்டம் தொடருகிறது. ஆலய திறந்த பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை எனது அலுவலகத்திலிருந்து கவனிக்க முன் வரிசையில் எனக்கு ஒரு இருக்கை உள்ளது.

படம்
ஆலய நகர சதுக்கத்தில் கட்டுமான பணி

பழைய மர வேர்களை, பிளம்பிங், வயரிங் மற்றும் கசிந்த அஸ்திபாரம் ஆகியவற்றை பணியாளர்கள் தோண்டி எடுப்பதை நான் பார்த்திருக்கிறேன், இரட்சகரின் உதவியுடன், நம் வாழ்வில் உள்ள பழைய குப்பைகளை நாம் ஒவ்வொருவரும் அகற்ற வேண்டியதன் அவசியத்தைக் குறித்து நான் நினைத்தேன்.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஒரு மனந்திரும்புதலின் சுவிசேஷம் ஆகும். 3 இரட்சகரின் பாவநிவிர்த்தியினால், மாறவும், வளரவும், மேலும் தூய்மையாக ஆகவும் அவருடைய சுவிசேஷம் ஒரு அழைப்பை வழங்குகிறது. இது நம்பிக்கை, குணப்படுத்துதல் மற்றும் முன்னேற்றத்தின் சுவிசேஷம். அப்படியாக, சுவிசேஷம் ஒரு மகிழ்ச்சியின் செய்தி! முன்னேற நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய அடியிலும் நமது ஆவிகள் களிகூருகின்றன.

இஸ்ரவேலின் கூட்டிச்சேர்த்தலின் பகுதியும், மிக முக்கிய பகுதியும், ஒரு தகுதியுள்ள ஜனங்களாக, கர்த்தருடைய இரண்டாம் வருகைக்காக உலகத்தை ஆயத்தப்படுத்த உதவ விருப்பமுள்ளவர்களாயுமிருக்கிறதும் நமக்கான பொறுப்பாகும்.

பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலின் கீழ் நமது தலைவர்களால் கவனமாக ஆயத்தப்படுத்தப்பட்ட செய்திகளை நாம் கேட்கும்போது, நீங்கள் மிகவும் தகுதியானவராக ஆக முடியும்படியாக உங்கள் வாழ்க்கையிலிருந்து நீங்கள் அகற்ற வேண்டிய குப்பைகளை அடையாளம் காண ஜெபிக்கும்படி நான் உங்களை அழைக்கிறேன்.

என் அன்பான சகோதர சகோதரிகளே, நான் உங்களை நேசிக்கிறேன், நமது பரலோக பிதாவும் அவருடைய நேச குமாரனும் உங்களைத் தனித்தனியாக அறிந்திருக்கிறார்கள், நேசிக்கிறார்கள் என்பதற்கு சாட்சியளிக்கிறேன். முன்னேற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு உதவ அவர்கள் ஆயத்தமாக நிற்கிறார்கள். பொது மாநாட்டிற்கும் கர்த்தரின் குரலைக் கேட்கும்படியான சிலாக்கியத்திற்கும் வரவேற்பு. இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.