பொது மாநாடு
நான் ஆலயத்தைக் காண விரும்புகிறேன்
ஏப்ரல் 2021 பொது மாநாடு


நான் ஆலயத்தைக் காண விரும்புகிறேன்

மரணத்திற்குப் பின்னும் நித்திய காலத்திற்கு நீடிக்கும், அன்பான குடும்ப தொடர்புகளின் உறுதிப்பாட்டை நாம் ஆலயத்தில் பெறலாம்.

என் அன்பான சகோதர சகோதரிகளே, இந்த பொது மாநாட்டின் முதல் கூட்டத்தில் உங்களுடன் இருப்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். செய்தியாளர்கள், இசை மற்றும் ஜெபம், அத்துடன் ஒளி மற்றும் நம்பிக்கையின் உணர்வும் கூட ஆவியானவரைக் கொண்டு வந்துள்ளன.

நான் சால்ட் லேக் ஆலயத்துக்குள் பிரவேசித்த முதல் நாள் உணர்வு மீண்டும் என் நினைவுக்கு வந்துள்ளது. நான் ஒரு இளைஞனாயிருந்தேன். அன்று எனது பெற்றோர் மட்டுமே என்னுடன் வந்தார்கள். உள்ளே, அவர்கள் ஒரு ஆலய ஊழியரை வாழ்த்த ஒரு கணம் இடைநிறுத்தினர். நான் ஒரு கணம் தனியாக அவர்களுக்கு முன்னால் நடந்தேன்.

ஒரு அழகான வெள்ளை ஆலய உடையில் ஒரு சிறிய வெள்ளை முடியுள்ள பெண்மணி என்னை வரவேற்றார். அவர் என்னைப் பார்த்து, புன்னகைத்தார், பின்னர் மிகவும் மென்மையாக, “ஆலயத்துக்கு வருக, சகோதரர் ஐரிங், என்றார்.” அவர் என் பெயரை அறிந்திருந்ததால் அவர் ஒரு தூதன் என்று ஒரு கணம் நான் நினைத்தேன். எனது கோட்டின் பாக்கெட் பகுதியில் என் பெயருடன் ஒரு சிறிய அட்டை வைக்கப்பட்டுள்ளதை நான் உணரவில்லை.

நான் அவரைக் கடந்து சென்று நின்றேன். நான் ஒரு உயர்ந்த வெள்ளை கூரையைப் பார்த்தேன், அது அறையை மிகவும் வெளிச்சமாக்கியது, அது வானத்தை நோக்கி திறந்திருப்பது போல் தோன்றியது. அந்த தருணத்தில், இந்த தெளிவான வார்த்தைகளில் ஒரு சிந்தனை என் மனதில் வந்தது: “நான் இதற்கு முன்பு இந்த ஒளிரும் இடத்தில் இருந்தேன்.” ஆனால் பின்பு உடனே என் மனதில் வந்தது, என் சொந்தக் குரலில் அல்ல, இந்த வார்த்தைகள்: “இல்லை, நீ இதற்கு முன்பு இங்கு வந்ததில்லை. நீ பிறப்பதற்கு முன்னுள்ள ஒரு கணநேரத்தை நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய். இந்த மாதிரியான ஒரு பரிசுத்த இடத்தில் நீ இருந்தாய்.”

நமது ஆலயங்களின் வெளிப்புறத்தில், “கர்த்தருக்கு பரிசுத்தம்” என்ற வார்த்தைகளை எழுதி வைக்கிறோம். அந்த வார்த்தைகள் உண்மை என்று எனக்குத் தெரியும். இந்த ஆலயம் ஒரு புனித ஸ்தலமாகும், அதற்கு நம் இருதயங்கள் திறந்திருந்தால், அதற்கு நாம் தகுதியுள்ளவர்களாயிருந்தால், அங்கு வெளிப்படுத்தல் எளிதாக நமக்குள் வருகிறது,

அந்த முதல் நாளின் பிற்பகுதியில் நான் மீண்டும் அதே ஆவியை உணர்ந்தேன். சித்தரிக்கப்படுவது உண்மை என்பதை உறுதிப்படுத்துகிற, என் இருதயத்தில் எரியும் உணர்வைக் கொண்டுவந்த, ஆலய சடங்கில் சில வார்த்தைகள் அடங்கியுள்ளன. என் எதிர்காலம் குறித்து நான் உணர்ந்தது எனக்கு தனிப்பட்ட காரியம், 40 ஆண்டுகளுக்குப் பிறகு கர்த்தரிடமிருந்து சேவை செய்வதற்கான அழைப்பின் மூலம் அது ஒரு உண்மை ஆனது.

லோகன் யூட்டா ஆலயத்தில், நான் திருமணம் செய்துகொண்டபோது அதே உணர்வை அனுபவித்தேன். தலைவர் ஸ்பென்சர் டபிள்யூ. கிம்பல் முத்திரித்தலை நடத்தினார். அவர் பேசிய சில வார்த்தைகளில், அவர் இந்த ஆலோசனையை வழங்கினார், “ஹால் மற்றும் கேத்தி, அழைப்பு வரும்போது, நீங்கள் எளிதாக விலகிச் செல்ல முடியும் விதமாக வாழுங்கள்.”

அவர் அந்த சில சொற்களைச் சொன்னபோது, என் மனதில், முழுமையான வண்ணத்தில், செங்குத்தான மலையையும், மேலே செல்லும் சாலையையும் தெளிவாகக் கண்டேன். சாலையின் இடது பக்கத்தில் ஒரு வெள்ளை வேலி சென்று, மலையின் உச்சியில் உள்ள மரங்களின் வரிசையில் காணாமல் போனது. மரங்களின் ஊடே ஒரு வெள்ளை வீடு மங்கலாகத் தெரிந்தது.

ஒரு வருடம் கழித்து, அந்த மலைக்கு மேல் என் மாமனார் எங்களை அந்த சாலையில் காரில் அழைத்துச் சென்றதை நான் அடையாளம் கண்டேன். தலைவர் கிம்பல் ஆலயத்தில் தனது ஆலோசனையை வழங்கியபோது நான் கண்டதன் விளக்கமாக அது இருந்தது.

நாங்கள் மலையின் உச்சியில் வந்ததும், என் மாமனார் வெள்ளை மாளிகை அருகில் நிறுத்தினார். அவரும் அவரது மனைவியும் அச்சொத்தை வாங்குகிறார்கள் என்றும், அவருடைய மகளும் நானும் விருந்தினர் மாளிகையில் வசிக்க விரும்புவதாகவும் அவர் எங்களிடம் கூறினார். அவர்கள் ஒரு சில அடி தூரத்தில் உள்ள பிரதான வீட்டில் வசிப்பார்கள். எனவே, நாங்கள் அந்த அழகான குடும்ப பின்னணியில் வாழ்ந்த 10 ஆண்டுகளில், நானும் என் மனைவியும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், “நாங்கள் அதை நன்றாக அனுபவித்தோம், ஏனென்றால் நாங்கள் இங்கு நீண்ட காலம் இருக்கப் போவதில்லை.”

சபை கல்வி ஆணையர் நீல் ஏ. மேக்ஸ்வெல்லிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. “எளிதில் விலகிச் செல்ல” முடியும்படிக்கு இருக்குமாறு தலைவர் கிம்பல் அளித்த எச்சரிக்கை ஒரு உண்மையானது. மனநிறைவான குடும்ப சூழ்நிலையை விட்டுவிட்டு, எனக்கு எதுவும் தெரியாத ஒரு இடத்தில் ஒரு வேலையில் பணியாற்றுவதற்காக செல்வதற்கான அழைப்பு இது. ஒரு பரிசுத்த ஆலயத்தில், வெளிப்படுத்தும் இடத்தில், ஒரு தீர்க்கதரிசி, நாங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த, எதிர்கால நிகழ்வைக் கண்டதால், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நேரத்தையும் இடத்தையும் விட்டு வெளியேற எங்கள் குடும்பம் தயாராக இருந்தது.

கர்த்தருடைய ஆலயங்கள் பரிசுத்த ஸ்தலங்கள் என்பதை நான் அறிவேன். ஆலயங்களைப்பற்றி பேசுகிற இன்று, எனது நோக்கம் என்னவென்றால், உங்கள் விருப்பமும் என்னுடைய விருப்பமும், நமக்காக வரவிருக்கிற ஆலய அனுபவங்களுக்கான அதிகரித்த வாய்ப்புகளுக்குத் தகுதியாகவும் தயாராகவும் இருப்பதே ஆகும்.

என்னைப் பொறுத்தவரை, ஆலய அனுபவங்களுக்கு தகுதியுடையவராக இருப்பதற்கான மிகப்பெரிய உந்துதல் கர்த்தர் தம்முடைய பரிசுத்த வீடுகளைப்பற்றி கூறியது:

“என் ஜனம் கர்த்தருடைய நாமத்தினாலே எனக்கு ஒரு வீட்டைக் கட்டியெழுப்புகிற அளவில், அசுத்தமான எந்தவொரு காரியமும் அதில் வர அனுமதிக்கக்கூடாது, அது தீட்டுப்படுத்தப்படக்கூடாது, என் மகிமை அதன்மேல் தங்கும்;

“ஆம், என் பிரசன்னம் அங்கு இருக்கும், ஏனென்றால் நான் அதற்குள் வருவேன், அதற்குள் வரும் பரிசுத்தமான அனைவருமே தேவனைக் காண்பார்கள்.

“ஆனால் அது தீட்டுப்படுத்தப்பட்டால் நான் அதற்குள் வரமாட்டேன், என் மகிமை அங்கு இருக்காது; நான் பரிசுத்தமற்ற ஆலயங்களுக்கு வரமாட்டேன்.”1

அவர் இனிமேலும் நமக்குத் தெரியாதவர் ஆக இல்லை எனும் அர்த்தத்தில், இரட்சகரை ஆலயத்தில் நாம் “பார்க்க” முடியும் என்று, தலைவர் ரசல் எம். நெல்சன் நமக்கு தெளிவுபடுத்தினார். தலைவர் நெல்சன் இதை கூறினார்: “நாம் அவரை புரிந்துகொள்கிறோம். நாம் அவருடைய கிரியையும் அவருடைய மகிமையையும் புரிந்து கொள்கிறோம். அவருடைய இணையற்ற வாழ்க்கையின் எல்லையற்ற தாக்கத்தை நாம் உணர ஆரம்பிக்கிறோம்.”2

நீங்களோ அல்லது நானோ போதுமானபடி பரிசுத்தமற்றவராக ஆலயம் செல்ல வேண்டுமானால், பரிசுத்த ஆவியின் வல்லமையால், ஆலயத்தில் நாம் பெறும் இரட்சகரைப் பற்றிய ஆவிக்குரிய போதனையை நம்மால் பார்க்க முடியாது.

இத்தகைய போதனைகளைப் பெறுவதற்கு நாம் தகுதியுடையவர்களாக இருக்கும்போது, நம் ஆலய அனுபவத்தின் மூலம் நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் நேர்மறை எண்ணம் நம் வாழ்நாள் முழுவதும் வளர முடியும். பரிசுத்த ஆலயங்களில் நிறைவேற்றப்படும் நியமங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே அந்த நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் நேர்மறை எண்ணம் கிடைக்கும். மரணத்திற்குப் பின்னும் நித்திய காலத்திற்கு நீடிக்கும், அன்பான குடும்ப தொடர்புகளின் உறுதிப்பாட்டை நாம் ஆலயத்தில் பெறலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஆயராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு அழகிய இளைஞன், குடும்பங்களில் தேவனுடன் என்றென்றும் வாழ தகுதியுடையவனாக ஆக வேண்டும் என்ற எனது அழைப்பை எதிர்த்தான். அவன் தனது நண்பர்களுடன் இருந்த நல்ல நேரங்களை ஒரு எதிர்ப்புணர்வுடன் என்னிடம் கூறினான். நான் அவனைப் பேச விட்டேன். தனது ஒரு விருந்தின் போது, அந்தக் கனத்த சத்தத்தின் நடுவே, அவன் ஒரு தனிமையை திடீரென்று உணர்ந்த ஒரு கணம்பற்றி என்னிடம் கூறினான். என்ன நடந்தது என்று நான் அவனிடம் கேட்டேன். அவன் ஒரு சிறுவனாக இருந்தபோது, தனது தாயின் மடியில் உட்கார்ந்து, அவரது கைகள் அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டதை நினைவுகூர்ந்ததாக கூறினான். அவன் அந்தக் கதையைச் சொன்ன அந்தக் கணத்தில், அவன் கண்ணீர் விட்டான். எனக்குத் தெரிந்தவை உண்மை என்று நான் அவனிடம் சொன்னேன்: “அந்தக் குடும்பத்தின் உணர்வை நீ என்றென்றும் தழுவிக்கொள்ளும் ஒரே வழி, நீயே தகுதியுடையவனாக மாறி, ஆலய முத்திரிக்கும் நியமங்களைப் பெற மற்றவர்களுக்கு உதவுவதே.”

ஆவி உலகில் உள்ள குடும்ப தொடர்புகளின் விவரங்கள் அல்லது நாம் உயிர்த்தெழுந்த பிறகு என்ன வரலாம் என்பது நமக்குத் தெரியாது. பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடமும், பிள்ளைகளை பிதாக்களிடமும் திருப்புவதாக வாக்குறுதியளித்தபடியே எலியா தீர்க்கதரிசி வந்தான் என்பது நமக்குத் தெரியும்.3 நம்முடைய நித்திய மகிழ்ச்சி, நம்மால் முடிந்தவரை நம்முடைய உறவினர்களில் பலருக்கும் அதே நீடித்த மகிழ்ச்சியை வழங்க நம்மால் முடிந்ததைச் செய்வதைப் பொறுத்தது என்பதை நாம் அறிவோம்.

ஆலயத்தில் முத்திரிக்கும் நியமங்களைப் பெற தகுதியுடையவராகவும், மதிக்கவும் உயிரோடிருக்கிற குடும்ப உறுப்பினர்களை அழைப்பதில் வெற்றியடைய அதே விருப்பத்தை நான் உணர்கிறேன். இது திரையின் இருபுறமும் கடைசி நாட்களில் இஸ்ரவேலின் கூடுகையின் வாக்குறுதியளிக்கப்பட்ட ஒரு பகுதியாகும்.

நமது மிகச்சிறந்த வாய்ப்புக்களில் ஒன்று, நமது குடும்ப உறுப்பினர்கள் இளமையாக இருக்கும்போதுதான். அவர்கள் வரமாக கிறிஸ்துவின் ஒளியுடன் பிறந்தவர்கள். எது நல்லது, எது தீமை என்பதை உணர இது அவர்களுக்கு உதவுகிறது. அந்த காரணத்திற்காக, ஒரு ஆலயத்தையோ அல்லது ஒரு ஆலயத்தின் படத்தையோ பார்ப்பது கூட ஒரு நாள் உள்ளே செல்ல தகுதியும் சிலாக்கியமும் பெறும் விருப்பத்தை ஒரு பிள்ளைக்கு வளர்க்கலாம்.

ஒரு இளைஞனாக, அவர்கள் ஒரு ஆலய பரிந்துரை பெறும் நாள் வரும்போது, ஆலயத்தில் பதிலி ஞானஸ்நானம் நிறைவேற்ற பரிந்துரை பெறும் நாள் வரலாம். அந்த அனுபவத்தில், ஆலயத்தின் நியமங்கள் எப்போதும் இரட்சகரையும் அவருடைய பிராயச்சித்தத்தையும் சுட்டிக்காட்டுகின்றன என்னும் அவர்களின் உணர்வு வளரக்கூடும். ஆவி உலகில் ஒரு நபருக்கு அவர்கள் பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பை வழங்குகிறார்கள் என்று அவர்கள் உணரும்போது, நம்முடைய பரலோக பிதாவின் குழந்தையை ஆசீர்வதிப்பதற்கான இரட்சகரின் பரிசுத்தமான வேலையில் அவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களின் உணர்வு வளரும்.

அந்த அனுபவத்தின் வல்லமை ஒரு இளைஞனின் வாழ்க்கையை மாற்றுவதை நான் கண்டிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு மகளுடன் பிற்பகல் தாமதமாக ஒரு ஆலயத்துக்குச் சென்றேன். ஞானஸ்நானத் தொட்டியில் பதிலியாக கடைசியாக பணியாற்றியது அவள்தான். பெயர்கள் ஆயத்தப்படுத்தப்பட்ட அனைத்து ஜனத்துக்கும் நியமங்களை முடிக்க அதிக நேரம் தங்க முடியுமா என்று என் மகள் கேட்கப்பட்டாள். அவள் சொன்னாள் ஆம்.

என் சிறுமகள் ஞானஸ்நான தொட்டிக்குள் கால்வைத்தபோது நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஞானஸ்நானங்கள் தொடங்கின. என் சிறிய மகள் ஒவ்வொரு முறையும் தண்ணீரிலிருந்து தூக்கப்பட்டபோது அவள் முகத்தில் தண்ணீர் வழிந்து ஓடியது. அவளிடம் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது, “நீ இன்னும் செய்ய முடியுமா?” ஒவ்வொரு முறையும், அவள் ஆம் என்று சொன்னாள்.

ஒரு அக்கறையுள்ள தகப்பனாக, அவள் இன்னும் அதிகமாகச் செய்வதிலிருந்து விடப்படலாம் என்று நான் நம்ப ஆரம்பித்தேன். ஆனால் அவளால் இன்னும் அதிகமாக செய்ய முடியுமா என்று கேட்கப்பட்டபோது அவளுடைய உறுதியை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன், அவள் ஒரு உறுதியான சிறிய குரலில், “ஆம்” என்று சொன்னாள். அந்த நாளில் பட்டியலில் கடைசி நபர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானத்தின் ஆசீர்வாதம் பெறும் வரை அவள் இருந்தாள்.

அன்று இரவு அவளுடன் ஆலயத்திலிருந்து வெளியே நடந்தபோது, நான் பார்த்ததைப்பற்றி ஆச்சரியப்பட்டேன். கர்த்தருடைய வீட்டில் சேவை செய்வதன் மூலம் ஒரு குழந்தை என் கண்களுக்கு முன்பாக உயர்த்தப்பட்டு மாற்றப்பட்டது. ஆலயத்திலிருந்து நாங்கள் ஒன்றாக நடந்து செல்லும்போது, அந்த ஒளி மற்றும் சமாதானத்தின் உணர்வு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

ஆண்டுகள் கடந்துவிட்டன. அது மிகவும் கடினமாக இருக்கும்போது அவருக்காக இன்னும் அதிகமாகச் செய்வாளா, எனும் கர்த்தரிடமிருந்து வரும் கேள்விக்கு அவள் இன்னும் ஆம் என்று சொல்லுகிறாள். ஆலய சேவை நம்மை மாற்றவும் உயர்த்தவும் முடியும். அதனால்தான் உங்களுக்கும் உங்கள் அன்பான குடும்பத்தினருக்கும், என் நம்பிக்கை என்னவென்றால், உங்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கும் போதெல்லாம் நீங்கள் கர்த்தருடைய வீட்டிற்குள் செல்ல தகுதியுடையவராக இருக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் உறுதியுடன் வளர வேண்டும்.

அவர் உங்களை அங்கு வரவேற்க விரும்புகிறார். பரலோக பிதாவின் பிள்ளைகளின் இருதயங்களில் அங்கு செல்ல வேண்டும், அங்கு அவர்கள் அவருடன் நெருக்கமாக உணர முடியும், மேலும் உங்கள் மூதாதையர்களும் அவருடன் மற்றும் உங்களுடன் என்றென்றும் இருக்க தகுதி பெற அழைக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறேன்.

இந்த வார்த்தைகள் நம்முடையதாக இருக்கலாம்:

நான் ஆலயத்தைக் காண விரும்புகிறேன்.

நான் ஒரு நாள் அங்கு செல்வேன்

பரிசுத்த ஆவியானவரை உணர,

கேட்கவும் ஜெபிக்கவும்.

ஆலயம் தேவனின் வீடு என்பதால்,

அன்பு மற்றும் அழகு நிறைந்த இடம்.

நான் இளமையாக இருக்கும்போது என்னை ஆயத்தம் செய்கிறேன்;

இது எனது பரிசுத்தமான கடமை.4

நாம், ஒரு அன்புள்ள பரலோக பிதாவின் பிள்ளைகளென்று நான் சாட்சி பகருகிறேன். அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராகவும் மீட்பராகவும் தெரிந்துகொண்டார். அவர்களுடனும் நமது குடும்பத்தினருடனும் வாழ திரும்பிச் செல்லும் ஒரே வழி, பரிசுத்த ஆலயத்தின் நியமங்களின் மூலமே. தலைவர் ரசல் எம். நெல்சன் தேவனின் எல்லா பிள்ளைகளுக்கும் நித்திய ஜீவனை சாத்தியமாக்கும் ஆசாரியத்துவத்தின் அனைத்து திறவுகோல்களையும் வைத்திருக்கிறார் மற்றும் பயன்படுத்துகிறார் என்று நான் சாட்சியளிக்கிறேன். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியமளிக்கிறேன், ஆமென்.