பொது மாநாடு
கிறிஸ்துவில் நம்பிக்கை
ஏப்ரல் 2021 பொது மாநாடு


கிறிஸ்துவில் நம்பிக்கை

தனியாக உணரும் அல்லது தாங்கள் சொந்தமானவர்கள் இல்லை என்று நினைக்கும் அனைவருக்கும் உதவ நாங்கள் ஏங்குகிறோம். குறிப்பாக, தற்போது தனிமையில் இருப்பவர்களைக் குறிப்பிடுகிறேன்.

சகோதர சகோதரிகளே, இந்த ஈஸ்டர் நேரத்தில் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையான உயிர்த்தெழுதலில் கவனம் செலுத்துகிறோம். நாம் அவருடைய அன்பான அழைப்பை நினைவு கூர்கிறோம் “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

“என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”1

தன்னிடம் வரும்படியான இரட்சகரின் அழைப்பு அனைவருக்கும் அவரிடம் வருவது மட்டுமல்லாமல், அவருடைய சபைக்குச் சொந்தமாவதற்குமான அழைப்பும் கூட.

இந்த அன்பான அழைப்பிற்கு முந்தைய வசனத்தில், அவரைப் பின்பற்ற முற்படுவதன் மூலம் இது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை இயேசு போதிக்கிறார். அவர் அறிவித்தார், “பிதா தவிர வேறொருவனும் [வேறொருத்தியும்] குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு[எவளுக்கு] அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் [அல்லது அவளும்] தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.”2

தேவன் ஒரு அன்பான பரலோக பிதா என்பதை நாம் அறிய வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

நம்முடைய பரலோக பிதாவால் நாம் நேசிக்கப்படுகிறோம் என்பதை அறிவது, நாம் யார் என்பதை அறியவும், அவருடைய பெரிய நித்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியவும் உதவும்.

மாயோ கிளினிக் சமீபத்தில் குறிப்பிட்டது: “சொந்தமானவர் என்ற உணர்வு இருப்பது மிகவும் முக்கியமானது. … கிட்டத்தட்ட நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் ஏதோவொன்றுக்குச் சொந்தமானதாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை மேலும் கூறுகிறது, “நமது சரீர மற்றும் மன ஆரோக்கியத்திலிருந்து சொந்தமாகுதல் உணர்வின் முக்கியத்துவத்தை நம்மால் பிரிக்க முடியாது,”3 நமது ஆவிக்குரிய ஆரோக்கியத்தை அதனுடன் நான் சேர்க்கிறேன்.

கெத்செமனேயில் அவர் கஷ்டப்படுவதற்கும் சிலுவையில் மரிப்பதற்கும் முந்தைய மாலை, இரட்சகர் கடைசி இராப்போஜனத்துக்காக தம் சீஷர்களைச் சந்தித்தார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்”4 என அவர் அவர்களிடம் கூறினார். மறுநாள் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு, இயேசு கிறிஸ்து பாடுபட்டு, “நம்முடைய பாவங்களுக்காக [சிலுவையில்] மரித்தார்.”5

சூரியன் மறைந்ததும் இருளும் பயமும் அவர்களைச் சூழ்ந்திருந்தபோது, எருசலேமில் அவரைப் பின்பற்றிய உண்மையுள்ள பெண்களும் ஆண்களும் எவ்வளவு தனிமையாக உணர்ந்திருக்க வேண்டும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.6

ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்த பண்டைய சீஷர்களைப் போலவே, உங்களில் பலரும் அவ்வப்போது தனிமையாக உணரக்கூடும். இரண்டரை வருடங்களுக்கு முன்பு எனது அருமை மனைவி பார்பரா இறந்ததிலிருந்து இந்த தனிமையை நான் அனுபவித்திருக்கிறேன். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் சூழப்பட்டிருப்பது என்றால் என்னவென்று எனக்குத் தெரியும், ஆனால் இன்னும் தனிமையாக உணர்கிறேன், ஏனென்றால் என் வாழ்க்கையின் அன்பு இனிமேலும் என் அருகில் இல்லை.

கோவிட்-19 தொற்றுநோய் இந்த தனிமை மற்றும் தனிமையின் உணர்வை பலருக்கு எடுத்துக்காட்டுகிறது. வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் இருந்தபோதிலும், அந்த முதல் ஈஸ்டர் காலையைப் போலவே, நம்பிக்கைக்கும் சொந்தமாகுதலுக்கும் நாம் கர்த்தரிடத்தில் திரும்பும்போது, புதிய மற்றும் அற்புதமான சாத்தியக்கூறுகள் மற்றும் புதிய யதார்த்தங்களுடன் கிறிஸ்துவில் ஒரு புதிய வாழ்க்கைக்கு நாம் விழித்துக் கொள்ள முடியும்.

சொந்தமானது என்ற உணர்வு இல்லாதவர்களின் வலியை நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். நான் உலகம் முழுவதிலுமிருந்து வரும் செய்திகளைப் பார்க்கும்போது, இந்த தனிமையை அனுபவிப்பதாகத் தோன்றும் பலரை நான் காண்கிறேன். நான் நினைக்கிறேன், பலர், அவர்கள் பரலோக பிதாவால் நேசிக்கப்படுகிறார்கள் என்பதையும், நாம் அனைவரும் அவருடைய நித்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். தேவன் நம்மை நேசிக்கிறார், நாம் அவருடைய பிள்ளைகள் என்று நம்புவது ஆறுதலளிக்கிறது, உறுதியளிக்கிறது.

நாம் தேவனின் ஆவி பிள்ளைகள் என்பதால், அனைவருக்கும் தெய்வீக தோற்றம், இயல்பு மற்றும் ஆற்றல் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் “பரலோக பெற்றோரின் அன்புக்குரிய ஆவி குமாரன் அல்லது குமாரத்தி.”7 இது நமது அடையாளம். இதுதான் நாம் உண்மையில் யாரென்பதாகும்!

இன, கலாச்சார அல்லது தேசிய பாரம்பரியம் உள்ளிட்ட பல பூலோக அடையாளங்களை நாம் புரிந்துகொள்வதால் நமது ஆவிக்குரிய அடையாளம் மேம்படுகிறது.

ஆவிக்குரிய மற்றும் கலாச்சார அடையாளம், அன்பு மற்றும் சொந்தமாகுதல் என்ற இந்த உணர்வு இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கையையும் அன்பையும் ஊக்குவிக்கும்.

நான் கிறிஸ்துவில் நம்பிக்கையைப்பற்றி பேசுகிறேன், விருப்பமான எண்ணமாக அல்ல. மாறாக, நம்பிக்கையை ஒரு நிஜமாகப்போகும் எதிர்பார்ப்பாக நான் பேசுகிறேன். துன்பத்தை சமாளிப்பதற்கும், ஆவிக்குரிய உறுதியையும் வலிமையையும் வளர்ப்பதற்கும், நம்முடைய நித்திய பிதாவினால் நாம் நேசிக்கப்படுகிறோம் என்பதையும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த, அவருடைய பிள்ளைகள் என்பதையும் அறிந்து கொள்வதற்கும் இத்தகைய நம்பிக்கை அவசியம்.

கிறிஸ்துவில் நமக்கு நம்பிக்கை இருக்கும்போது, பரிசுத்தமான உடன்படிக்கைகளை செய்து காக்க வேண்டியிருப்பதால், நம்முடைய அன்பான ஆசைகளும் கனவுகளும் அவர் மூலமாக நிறைவேற முடியும் என்பதை அறிவோம்.

பன்னிரு அப்போஸ்தலர் குழுமம் ஜெப ஆவியோடும் புரிந்து கொள்ளும் ஏக்கத்துடனும், தனிமையாக உணரும் அல்லது தாங்கள் சொந்தமானவர்கள் இல்லை என்று நினைக்கும் அனைவருக்கும், எப்படி உதவுவது என்பதைப்பற்றி ஒன்றாக ஆலோசித்தோம். இவ்வாறு உணரும் அனைவருக்கும் உதவ நாங்கள் ஏங்குகிறோம். குறிப்பாக, தற்போது தனிமையில் இருப்பவர்களைக் குறிப்பிடுகிறேன்.

சகோதர சகோதரிகளே, இன்று சபையில் வயது வந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விதவையாக்கப்பட்டவர்கள், விவாகரத்து செய்யப்பட்டவர்கள் அல்லது ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளாதவர்கள். தேவனின் திட்டத்திலும் சபையிலும் தங்களின் வாய்ப்புகள் மற்றும் இடத்தைப்பற்றி சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். நித்திய ஜீவன் வெறுமனே தற்போதைய திருமண நிலையைப்பற்றிய கேள்வி மட்டும் அல்ல, ஆனால் சீஷத்துவம் மற்றும் “இயேசுவைப்பற்றிய சாட்சியத்தில் வைராக்கியமாயிருப்பது” என்பதையே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.8 கர்த்தருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் அனைத்து உறுப்பினர்கள் போலவே தனிமையாயிருப்பவர்களின் நம்பிக்கையும் ஒன்றுதான் “சுவிசேஷத்தின் நியாயப்பிரமாணங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிதல்” மூலம் கிறிஸ்துவின் கிருபையை அடைவது.9

நாம் புரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான கொள்கைகள் உள்ளன என்று நான் ஆலோசனையளிக்கிறேன்.

முதலாவதாக, சுவிசேஷ உடன்படிக்கைகளை கடைப்பிடிப்பதில் உண்மையுள்ள அனைவருக்கும் மேன்மையடைதலின் வாய்ப்பு கிடைக்கும் என்பதை வேதங்களும் பிற்காலத் தீர்க்கதரிசிகளும் உறுதிப்படுத்துகிறார்கள். தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்: “கர்த்தருடைய சொந்த வழியிலும் நேரத்திலும், அவருடைய உண்மையுள்ள பரிசுத்தவான்களிடமிருந்து எந்த ஆசீர்வாதமும் தடுத்து வைக்கப்படாது. கர்த்தர் ஒவ்வொரு நபருக்கும் இதயப்பூர்வமான வாஞ்சை மற்றும் செயலுக்கு ஏற்ப தீர்ப்பளித்து பிரதிபலன் அளிப்பார்.”10

இரண்டாவதாக, மேன்மையடைதலின் ஆசீர்வாதங்கள் அருளப்படும் துல்லியமான நேரம் மற்றும் விதம் அனைத்தும் வெளிப்படுத்தப்படவில்லை, ஆனால் இருப்பினும் அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன .11தலைவர் டாலின் ஹெச். ஓக்ஸ் விளக்கினார், “இறப்புக்கான சில சூழ்நிலைகள் ஆயிரம் வருஷ அரசாட்சியில் சரிசெய்யப்படும், நமது பிதாவின் தகுதியான பிள்ளைகள் அனைவருக்கும் மகிழ்ச்சியின் மாபெரும் திட்டத்தில் முழுமையடையாத அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான நேரம் அதுவே.”12

ஒவ்வொரு ஆசீர்வாதமும் ஆயிரம் வருஷ அரசாட்சி வரை நிறுத்திவைக்கப்படுகிறது என்று அர்த்தமல்ல; சில ஏற்கனவே பெறப்பட்டுள்ளன, மற்றவை அந்த நாள் வரை தொடர்ந்து பெறப்படும்.13

மூன்றாவதாக, கர்த்தரிடத்தில் காத்திருப்பது, அவருக்கு தொடர்ந்து கீழ்ப்படிதல் மற்றும் ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. கர்த்தருக்காகக் காத்திருப்பது ஒருவரின் நேரத்தில் காத்திருப்பதைக் குறிக்காது. நீங்கள் காத்திருக்கும் அறையில் இருப்பதைப் போல ஒருபோதும் உணரக்கூடாது.

கர்த்தருக்காக காத்திருப்பது செயலைக் குறிக்கிறது. நாம் மற்றவர்களுக்கு சேவை செய்யும் போது கிறிஸ்துவில் நம்முடைய நம்பிக்கை அதிகரிக்கிறது என்பதை நான் பல ஆண்டுகளாக கற்றுக்கொண்டேன். இயேசு சேவை செய்தபடியே சேவை செய்வதால், இயல்பாகவே அவர் மீதுள்ள நமது நம்பிக்கையை நாம் அதிகரிக்கிறோம்.

கர்த்தர் மற்றும் அவரது வாக்குத்தத்தத்துக்காக காத்திருக்கும்போது ஒருவர் இப்போது அடையக்கூடிய தனிப்பட்ட வளர்ச்சி, நம் ஒவ்வொருவருக்கும் அவருடைய திட்டத்தின் மதிப்பிட இயலாத, பரிசுத்தமான, அம்சமாகும். பூமியில் சபையை கட்டியெழுப்பவும், இஸ்ரவேலை கூட்டிச்சேர்க்கவும் ஒருவர் இப்போது செய்யக்கூடிய பங்களிப்புகள் மிகவும் தேவை. திருமண நிலை ஒருவரின் சேவை செய்யும் திறனுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. பொறுமையுடனும் விசுவாசத்துடனும் தம்மைச் சேவிப்பவர்களையும் அவருக்காக காத்திருப்பவர்களையும் கர்த்தர் மதிக்கிறார்.14

நான்காவதாக, தேவன் தம் குழந்தைகள் அனைவருக்கும் நித்திய ஜீவனை வழங்குகிறார். இரட்சகரின் மனந்திரும்புதலின் கிருபையான வரத்தை ஏற்றுக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி வாழ்பவர்கள் அனைவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள், இருப்பினும் அவர்கள் உலகத்தில் அதன் அனைத்து குணாதிசயங்களையும், பரிபூரணத்தையும் அடைவதில்லை. மனந்திரும்புகிறவர்கள் கர்த்தர் உறுதியளித்தபடி மன்னிப்பதற்கு கர்த்தர் தயாராக இருப்பதை அனுபவிப்பார்கள், “ஆம், எப்போதைக்கெப்போது என் ஜனங்கள் மனந்திரும்புவார்களோ அவ்வளவாய் எனக்கு விரோதமான மீறுதல்களை நான் மன்னிப்பேன்.”15

இறுதி பகுப்பாய்வில், ஒரு நபரின் திறன், வாஞ்சைகள் மற்றும் நித்திய ஆசீர்வாதங்களுக்கான தகுதி உட்பட சுயாதீனம் மற்றும் தேர்ந்தெடுப்பு விஷயங்களில் வாய்ப்புகள் ஆகியவை கர்த்தர் மட்டுமே தீர்மானிக்கக்கூடிய விஷயங்கள்.

ஐந்தாவது, இந்த உத்தரவாதங்கள் மீதான நம்முடைய நம்பிக்கை இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதில் வேரூன்றியுள்ளது, அவருடைய கிருபையால் உலக வாழ்க்கை தொடர்பான அனைத்தும் சரி செய்யப்பட்டன. 16வாக்குறுதியளிக்கப்பட்ட எல்லா ஆசீர்வாதங்களும் அவர் மூலமாக சாத்தியமாகும், அவர் தம்முடைய பாவநிவர்த்தியால், “எல்லாவற்றிற்கும் கீழே இறங்கினார்”17 மற்றும் “உலகை ஜெயித்தார்.”18 அவர், “மனுபுத்திரர் மேல் வைத்திருந்த தம்முடைய இரக்கத்தின் உரிமைகளைப் பிதாவிடத்திலிருந்து கோரத்தக்கதாக, தேவனுடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்தார், … ஆகையால் அவர் மனுபுத்திரருக்காக பரிந்து பேசுகிறார்.”19 இறுதியில், “பரிசுத்தவான்கள் அவருடைய மகிமையால் நிரப்பப்படுவார்கள், அவர்களுடைய சுதந்தரத்தைப் பெறுவார்கள்,”20 ”கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாக” இருப்பார்கள்.21

இந்த கோட்பாடுகள் அனைவருக்கும் கிறிஸ்துவில் நம்பிக்கையை அதிகரிக்கவும், சொந்தமாயிருக்கிற உணர்வை உணரவும் உதவும் என்பதே எங்கள் விருப்பம்.

நீங்கள் நித்திய பிதாவாகிய தேவனுடைய பிள்ளை என்பதை இப்பொழுதும் என்றென்றும் மறந்துவிடாதீர்கள். அவர் உங்களை நேசிக்கிறார், சபைக்கு நீங்கள் தேவை. நீங்கள் எங்களுக்குத் தேவை! உங்கள் குரல்கள், தாலந்துகள், திறமைகள், நன்மை, நீதி ஆகியவை எங்களுக்குத் தேவை.

பல ஆண்டுகளாக, நாம் “தனிமையான இளம் வயதுவந்தோர்,” “தனிமையான வயது வந்தோர்” மற்றும் “வயதுவந்தோரைப்பற்றிப்” பேசியிருக்கிறோம். அந்த பட்டங்கள் சில நேரங்களில் நிர்வாக ரீதியாக ஓரளவு உதவியாக இருக்கும், ஆனால் நாம் மற்றவர்களை எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதை கவனக்குறைவு மாற்றலாம்.

நம்மை ஒருவருக்கொருவர் பிரிக்கக்கூடிய இந்த மனித போக்கைத் தவிர்க்க ஒரு வழி இருக்கிறதா?

தலைவர் நெல்சன், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினர்கள் என்று குறிப்பிடுமாறு கேட்டார். அது நம் அனைவரையும் உள்ளடக்கியதாகத் தெரிகிறது, இல்லையா?

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு நம்மை ஒன்றிணைக்கும் வல்லமை உள்ளது. நாம் வித்தியாசமாக இருப்பதை விட நாம் இறுதியில் ஒரே மாதிரியாக இருக்கிறோம். தேவனின் குடும்ப உறுப்பினர்களாக, நாம் உண்மையிலேயே சகோதர சகோதரிகள். பவுல் சொன்னான், “சகல ஜனங்களையும் [தேவன்] ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச் செய்திருக்கிறார்.”22

பிணையத் தலைவர்கள், ஆயர்கள், மற்றும் குழும மற்றும் சகோதரிகளின் தலைவர்களே, ஒவ்வொரு உறுப்பினரையும் நீங்கள் பங்குபெறச் செய்ய, உங்கள் பிணையம், தொகுதி, குழுமம் அல்லது அமைப்பின் உறுப்பினர்களாக பங்களிக்கவும், அழைப்புகளில் சேவை செய்யவும், மற்றும் பல வழிகளில் பங்கேற்க செய்வதையும் கருத்தில் கொள்ள நான் உங்களைக் கேட்கிறேன்.

நமது குழுமங்கள், அமைப்புகள், தொகுதிகள் மற்றும் பிணையங்களில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், இப்போது அவருடைய ராஜ்யத்தை கட்ட உதவக்கூடிய, தேவன் கொடுத்த வரங்களும் திறமைகளும் உள்ளன.

சேவை செய்வதற்கும், கைதூக்கிவிடுவதற்கும், கற்பிப்பதற்கும் தனிமையில் இருக்கும் நமது உறுப்பினர்களை அழைப்போமாக. சில நேரங்களில் தற்செயலாக அவர்களின் தனிமை உணர்வுகளுக்கு பங்களித்த அவர்கள் சொந்தமானவர்களல்ல அல்லது சேவை செய்ய முடியாது எனும் பழைய கருத்துக்களையும் யோசனைகளையும் புறக்கணிப்போமாக.

நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இந்த ஈஸ்டர் வார இறுதி நாட்களிலும், அவர் எனக்கும் அவருடைய நாமத்தை நம்புகிற அனைவருக்கும் அவர் அளிக்கும் நித்திய நம்பிக்கையைப்பற்றி நான் சாட்சியம் அளிக்கிறேன். இந்த சாட்சியை இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், தாழ்மையுடன் கூறுகிறேன், ஆமென்.