பொது மாநாடு
இலக்கை நோக்கி முன்னேறுதல்
ஏப்ரல் 2021 பொது மாநாடு


இலக்கை நோக்கி முன்னேறுதல்

வாழ்க்கையில் நாம் என்ன அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது அதிக முக்கியம் இல்லை, ஆனால் நாம் என்ன ஆகிறோம் என்பதே முக்கியம்.

அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தையும் பவுலின் நிருபங்களையும் நான் வாசிக்கும்போது, சேவை செய்வதிலும், போதிப்பதிலும், இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சியமளிப்பதிலும் அன்பு மற்றும் நன்றியுணர்வால் பவுல் எவ்வாறு உந்தப்பட்டான் என்பதைப்பற்றி நான் வியப்படைகிறேன். விசேஷமாக அவனது பெரும் துன்பங்களை கருத்தில் கொண்டால், அத்தகைய நபர் எப்படி அன்புடனும் நன்றியுடனும் சேவை செய்ய முடியும்? சேவை செய்ய பவுலை எது தூண்டியது? “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தய பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”1

இலக்கை நோக்கி முன்னேறுதல் என்றால், நமது இரட்சகருடனும், பரலோக பிதாவுடனும், நித்திய ஜீவனுக்கு அழைத்துச் செல்லும், நெருக்கமும் இடுக்கமுமான வழியில்,2 விசுவாசத்துடன் தொடர்ந்து செல்வதுதான். “நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத் தக்கவைகள் அல்ல”3 என பவுல் தன் பாடுகளை பார்த்தான். சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது பிலிப்பியருக்கு பவுல் எழுதிய நிருபம் மிகுந்த மகிழ்ச்சியையும், களிகூருதலையும், நம் அனைவருக்கும் ஊக்கத்தையும் அளிக்கும் கடிதம், குறிப்பாக நிச்சயமற்ற இந்த கடினமான நேரத்தில். நாமனைவரும் பவுலிடமிருந்து தைரியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும், “அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.”4

பவுலின் ஊழியத்தைப் பார்க்கும்போது, நம்முடைய நாளில் நம்முடைய சொந்த “பவுல்களால்” நாம் உணர்த்தப்பட்டு உயர்த்தப்படுகிறோம், அவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் அவர்களின் வாழ்க்கையிலும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அன்புடனும் நன்றியுடனும் சேவை செய்கிறார்கள், கற்பிக்கிறார்கள், சாட்சியமளிக்கிறார்கள். 9 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம், இலக்கை நோக்கி முன்னேறுவதன் முக்கியத்துவத்தை உணர எனக்கு உதவியது.

2012 ஆம் ஆண்டில், பொது மாநாட்டின் தலைமைத்துவக் கூட்டத்துக்கு நான் முதன்முறையாக சென்றபோது, மிகவும் மகிழ்ந்தேன் மற்றும் போதுமானவனாக இல்லாதிருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை. என் மனதில் தொடர்ந்து ஒரு குரல் இருந்தது, “நீ இங்கு இருக்க வேண்டியவன் இல்லை! ஒரு கடுமையான தவறு செய்யப்பட்டுள்ளது! ” நான் உட்கார்ந்த இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது, மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் என்னைக் கண்டார். அவர் என்னிடம் வந்து, “எட்வர்ட், உன்னை இங்கே பார்ப்பது நல்லது” என்று சொன்னார், அவர் மென்மையாக என் கன்னத்தில் தட்டினார். நான் ஒரு குழந்தையைப் போல உணர்ந்தேன். அவருடைய அன்பும் அரவணைப்பும் என்னை இதமாக்கி, சொந்தமெனும் உணர்வை, சகோதரத்துவத்தின் உணர்வை உணர எனக்கு உதவியது. அடுத்த நாள், மூப்பர் ஹாலண்ட் முந்தைய நாளில் அவர் என்னிடம் செய்ததைப் போலவே, மூப்பர் டாலின் எச். ஓக்ஸின் கன்னத்தில் இதமாக அன்புடன் தட்டியதைக் கவனித்தேன், அவரோ அவருக்கு மூத்தவர்!

அந்த நேரத்தில் நான் தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்களாக நாம் ஆதரிக்கும் இந்த மனிதர்கள் மூலம் கர்த்தருடைய அன்பை உணர்ந்தேன். மூப்பர் ஹாலண்ட், அவரது அனபான, இயற்கையான செயல்களின் மூலம், எனது சுயநலத்தையும், போதாமை உணர்வுகளையும் மேற்கொள்ள எனக்கு உதவினார். ஆத்துமாக்களை கிறிஸ்துவிடம் கொண்டுவருவதற்காக, நான் அழைக்கப்பட்ட புனிதமான மற்றும் மகிழ்ச்சியான வேலையில் கவனம் செலுத்த அவர் எனக்கு உதவினார். அவர், பூர்வகால பவுலைப் போலவே, இலக்கை நோக்கி முன்னேற எனக்கு சுட்டிக்காட்டினார்.

சுவாரஸ்யமாக, அதே சமயம் பின்னால் இருப்பதை, நம்முடைய கடந்தகால அச்சங்கள், கவனம், கடந்தகால தோல்விகள் மற்றும் கடந்தகால சோகத்தை மறந்து, பவுல் நம்மை முன்னேறுமாறு அறிவுறுத்துகிறான். நமது அன்பான தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன், போலவே “ஒரு புதிய, பரிசுத்தமான அணுகுமுறைக்கு அவன் நம்மை அழைக்கிறான்.”5 இரட்சகரின் வாக்குத்தத்தம் உண்மையானது: “தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.”6

எனது முதல் பொது மாநாட்டு உரையில், எங்கள் பண்ணையில் பணியாற்ற என் அம்மா எனக்கு கற்பித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். “ஒருபோதும் திரும்பிப் பார்க்காதே,” என அவர் கூறினார். “நாம் இன்னும் செய்ய வேண்டியதற்கு முன்னே பாருங்கள்!”7

தனது வாழ்க்கையின் முடிவில், அம்மா புற்றுநோயை எதிர்த்துப் போராடியபோது, அவர் நவோமியுடனும் என்னுடனும் வாழ்ந்தார். ஒரு நாள் இரவு அவரது படுக்கையறையிலிருந்து அவரது அழுகுரலை கேட்டேன். அவரது கடைசி தினசரி மார்பைன் மாத்திரையை இரண்டு மணி நேரத்திற்கு முன்பே எடுத்துக் கொண்ட பிறகும், அவரது வலி அதிகமாக இருந்தது.

நான் அவரது அறைக்குள் நுழைந்து அவருடன் அழுதேன். அவருடைய வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற நான் சத்தமாக அவருக்காக ஜெபித்தேன். பல வருடங்களுக்கு முன்பு வயலில் செய்ததைப் போலவே அவர் செய்தார்: அவர் நிறுத்தி எனக்கு ஒரு பாடம் கற்பித்தார். அந்த நேரத்தில்: பலவீனமான, பாதிக்கப்பட்ட, வேதனையுடனான, மற்றும் வலி நிறைந்த, துக்கமடைந்த தன் மகனை பரிதாபத்துடன் பார்த்த அவருடைய முகத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அவர் கண்ணீரோடு புன்னகைத்தார், என் கண்களை நேரடியாகப் பார்த்து, “இது உனக்கோ அல்லது வேறு யாருக்கோ அல்ல, ஆனால் இந்த வலி நீங்குமா இல்லையா என்பது தேவனிடமே இருக்கிறது” என்றார்.

நான் அமைதியாக அமர்ந்தேன். அவரும் அமைதியாக அமர்ந்திருந்தார். அக்காட்சி என் மனதில் தெளிவாக உள்ளது. அந்த இரவு, என் அம்மா மூலம், கர்த்தர் என்னுடன் என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு பாடத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தார். தேவனின் விருப்பத்தை என் தாய் ஏற்றுக்கொண்டதை வெளிப்படுத்தியபோது, கெத்செமனே தோட்டத்திலும் கொல்கதாவில் சிலுவையிலும் இயேசு கிறிஸ்து அனுபவித்த காரணத்தை நான் நினைவு கூர்ந்தேன். அவர் சொன்னார்: “இதோ என் சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன், நான் உங்களுக்குக் கொடுத்த சுவிசேஷம் இதுவே, என் பிதா என்னை அனுப்பினதினிமித்தம், என் பிதாவின் சித்தத்தைச் செய்யவே நான் உலகத்தில் வந்தேன்.” 8

படம்
கெத்செமனேயில் கிறிஸ்து

கடந்த பொது மாநாட்டில், நமக்கு நமது அன்பான தீர்க்கதரிசி தலைவர் நெல்சனின் தீர்க்கதரிசன கேள்விகள்பற்றி நான் சிந்திக்கிறேன். தலைவர் நெல்சன் கேட்டார், “நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தேவன் ஜெயங்கொள்ள அனுமதிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வாக்கு, தேவனாக இருக்க அனுமதிக்கிறீர்களா? … அவருடைய குரல் வேறு எந்த ஆசையையும் விட முன்னுரிமை பெற அனுமதிப்பீர்களா? உங்கள் விருப்பம் அவரது சித்தத்தால் விழுங்கப்படுவதற்கு நீங்கள் சித்தமாக இருக்கிறீர்களா?”9 என் அம்மா ஒரு உணர்ச்சிபூர்வமான ஆனால் உறுதியான “ஆம்” என்று பதிலளித்திருப்பார், மேலும் உலகெங்கிலும் உள்ள சபையின் மற்ற உண்மையுள்ள உறுப்பினர்களும் உணர்ச்சிபூர்வமான ஆனால் உறுதியான “ஆம்” என்று பதிலளிப்பார்கள். தலைவர் நெல்சன், இந்த தீர்க்கதரிசன கேள்விகள் மூலம் எங்களை ஊக்கப்படுத்தியதற்கும் மற்றும் மேம்படுத்தியதற்கும் நன்றி.

சமீபத்தில், தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் தனது மனைவியையும், வயதுவந்த மகளையும் ஒரே நாளில் அடக்கம் செய்த ஒரு ஆயருடன் உரையாடினேன். இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டேன். ஆயர் டெடி தபேத்தேவின் பதில், கர்த்தருடைய தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்களிடமிருந்து வரும் சொற்களையும் ஆலோசனையையும் பின்பற்றுவதற்கான எனது தீர்மானத்தை பலப்படுத்தியது. ஆயர் தபேத்தே பதிலளித்தார், இரட்சகர் தம்முடைய மக்களின் வேதனைகளை தானே எடுத்துக்கொண்டார், அவர் நமக்கு எப்படி உதவுவது என்று அவருக்குத் தெரியும் என்பதை அறிந்து கொள்வதில் எப்போதும் நம்பிக்கையும் ஆறுதலும் இருக்கிறது.10 ஆழ்ந்த நம்பிக்கையுடன் அவர் சாட்சியம் அளித்தார், “இரட்சிப்பின் திட்டத்திற்கும், மகிழ்ச்சியின் திட்டத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” பின்னர் அவர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார், “கடந்த மாநாட்டில் நமது தீர்க்கதரிசி நமக்குக் கற்பிக்க முயற்சித்தது அதுவல்லவா?”

உலகத்தின் சவால்கள் நம் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் வரும் என்றாலும், நம்முடைய குறிக்கோளில் கவனம் செலுத்துவோம் “தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருவோம்.”11

ஒருபோதும் தைரியத்தை இழக்கக்கூடாது என்பதே நம் அனைவருக்கும் எனது தாழ்மையான அழைப்பு! “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓட” நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.12

வாழ்க்கையில் நாம் என்ன அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை, ஆனால் நாம் என்ன ஆகிறோம் என்பதே முக்கியம். இலக்கு நோக்கி முன்னேறுவதில் மகிழ்ச்சி இருக்கிறது. அனைத்தையும் ஜெயம் கொண்டவர், நாம் அவரை நோக்கிப் பார்க்கும்போது நமக்கு உதவுவார் என்று நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.