பொது மாநாடு
நீங்கள் விடுதலையாக்கப்படுவீர்கள்
ஏப்ரல் 2021 பொது மாநாடு


நீங்கள் விடுதலையாக்கப்படுவீர்கள்

நம்முடைய அநித்திய வாழ்க்கையின் நமது இருண்ட காலங்களிலும் நாம் உயரத் தூக்கிப்பிடிக்க வேண்டிய ஒளி இயேசு கிறிஸ்து.

எனக்கன்பான சகோதர சகோதரிகளே, ஆப்ரிக்காவிலிருந்து உங்களுக்கு உரையாற்றும் சிலாக்கியத்திற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இன்று தொழில்நுட்பம் இருப்பதும், நீங்கள் எங்கிருந்தாலும் உங்களைச் சென்றடைய மிகவும் பயனுள்ள வழியில் அதைப் பயன்படுத்துவதும் ஒரு ஆசீர்வாதம்.

செப்டம்பர் 2019 ல், சகோதரி முட்டோம்போவும் நானும், மேரிலேண்ட் பால்டிமோர் ஊழியத்தின் தலைவர்களாக பணியாற்றும்போது, ஊழிய தலைமை கருத்தரங்கில் பங்கேற்றபோது, நியூயார்க்கின் பால்மைராவில் உள்ள சபை வரலாற்று தளங்கள் சிலவற்றை பார்வையிடும் சிலாக்கியம் கிடைத்தது. பரிசுத்த தோப்பில் எங்கள் பயணத்தை முடித்தோம். பரிசுத்த தோப்புக்கு வருவதற்கான எங்கள் நோக்கம் ஒரு சிறப்பு வெளிப்பாடோ அல்லது ஒரு தரிசனமோ அல்ல, ஆனால் இந்த பரிசுத்த இடத்தில் தேவனின் பிரசன்னத்தை நாங்கள் உணர்ந்தோம். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்திற்காக எங்கள் இருதயங்கள் நன்றியால் நிறைந்தன.

வாகனத்தை ஓட்டிக்கொண்டு திரும்பி வரும் வழியில், நான் பெரிதாக புன்னகைத்ததை சகோதரி முட்டோம்போ கவனித்தாள், அதனால் அவள் கேட்டாள், “உங்கள் உற்சாகத்திற்கு காரணம் என்ன?”

“என் அன்பான நாத்தலி, உண்மை எப்பொழுதும் பிழையை வெல்லும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தால் இருள் பூமியில் தொடராது” என நான் பதிலளித்தேன்.

“அவைகள் இருக்கிறபடியே, அவைகள் இருந்தபடியே, அவைகள் இருக்கப்போகிறபடியே காரியங்களைப்பற்றிய ஞானத்தை நாம் பெறும்படியாக” மறைக்கப்பட்டிருந்ததை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதற்காக பிதாவாகிய தேவனும் இயேசு கிறிஸ்துவும் இளம் ஜோசப் ஸ்மித்தை சந்தித்தனர் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:24).

ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகும், சில மரபுகள் மற்றும் சத்துரு உலகம் முழுவதும் பரப்புகிற பொய்களிலிருந்தும் விடுபடத் தேவையான சத்தியங்களை இன்னும் பலர் நாடுகிறார்கள். அநேகர் “மனுஷர்களின் சூதான தந்திரத்தால் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 123:12). எபேசியருக்கு எழுதிய அவனுடைய நிருபத்தில் பவுல் போதித்தான்: “தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பார்” (எபேசியர் 5:14). அவருடைய வார்த்தைகளைக் கேட்கிறவர்களுக்கு அவர் என்றென்றைக்கும் ஒளியாய் இருப்பார் என இரட்சகர் வாக்களித்தார் (2 நேபி 10:14 பார்க்கவும்).

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் பெற்றோரும் குருடாக்கப்பட்டார்கள், சத்தியத்தை அறிய தீவிரமாக முயன்றார்கள், அதைக் கண்டுபிடிப்பதற்கு எங்கு திரும்புவது என்பதில் அக்கறை கொண்டிருந்தார்கள். எனது பெற்றோர் இருவரும் கிராமத்தில் பிறந்தவர்கள், அங்கு மரபுகள் உண்மையில் தனிநபர்கள்’ மற்றும் குடும்பங்களின்’ வாழ்க்கையில் வேரூன்றியிருந்தன. அவர்கள் இருவரும் சிறு வயதிலேயே தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி, ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேடி நகரத்திற்கு வந்தார்கள்.

அவர்கள் திருமணம் செய்துகொண்டு தங்கள் குடும்பத்தை மிகவும் அடக்கமான முறையில் தொடங்கினர். என் பெற்றோர், என் இரண்டு சகோதரிகள் மற்றும் நான், எங்களுடன் வாழ்ந்த ஒரு சகோதரர் என ஒரு சிறிய வீட்டில் கிட்டத்தட்ட நாங்கள் எட்டு பேர் இருந்தோம். எங்கள் பெற்றோருடன் ஒரே மேஜையில் இரவு உணவு சாப்பிட எங்களுக்கு அனுமதி இல்லாததால், நாங்கள் உண்மையிலேயே ஒரு குடும்பமா என்று நான் வியந்துகொண்டிருந்தேன். எங்களுடைய தகப்பன் வேலையில் இருந்து திரும்பியபோது, அவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன், எங்களை வீட்டை விட்டு வெளியேறும்படி எங்களைக் கேட்டுக் கொண்டார். எங்கள் பெற்றோரின் திருமணத்தில் நல்லிணக்கம் மற்றும் உண்மையான அன்பு இல்லாததால் எங்களால் தூங்க முடியவில்லை என்பதால் எங்கள் இரவுகள் மிகக் குறுகியதாக இருந்தன. எங்கள் வீடு சிறிய அளவில் மட்டுமல்ல, அது ஒரு இருண்ட இடமாகவும் இருந்தது. ஊழியக்காரர்களை சந்திப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெவ்வேறு சபைகளில் கலந்துகொண்டோம். உலகத்தால் கொடுக்க முடியாத ஒன்றை எங்கள் பெற்றோர் நாடுகிறார்கள் என்பது தெளிவாக இருந்தது.

ஜைரில் (இன்று காங்கோ ஜனநாயகக் குடியரசு அல்லது காங்கோ-கின்ஷாசா என அழைக்கப்படுகிறது) ஊழியம் செய்ய அழைக்கப்பட்ட முதல் மூத்த ஊழியத் தம்பதியான மூப்பர் மற்றும் சகோதரி ஹட்ச்சிங்ஸை நாங்கள் சந்திக்கும் வரை இது தொடர்ந்தது. தேவனிடமிருந்து வந்த தூதர்களைப் போன்ற இந்த அற்புதமான ஊழியக்காரர்களை நாங்கள் சந்திக்கத் தொடங்கியபோது, எங்கள் குடும்பத்தில் ஏதோ மாற்றம் ஏற்படத் தொடங்குவதை நான் கவனித்தேன். எங்கள் ஞானஸ்நானத்திற்குப் பிறகு, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தால், உண்மையில் படிப்படியாக ஒரு புதிய வாழ்க்கை முறையை நாங்கள் தொடங்கினோம். கிறிஸ்துவின் வார்த்தைகள் எங்கள் ஆத்துமாக்களை விரிவாக்க ஆரம்பித்தன. அவைகள் எங்களுடைய புரிந்துகொள்ளுதலை தெளிவாக்கத் தொடங்கின, எங்களுக்கு சுவையாக மாறின, ஏனெனில் நாங்கள் பெற்ற சத்தியங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன, மேலும் ஒளியைக் காண முடிந்தது, மேலும் இந்த ஒளி தினமும் அதிகமதிகமாய் பிரகாசமாக வளர்ந்தது.

சுவிசேஷத்தின் “ஏன்” என்பதைப்பற்றிய இந்த புரிந்துகொள்ளுதல் இரட்சகரைப் போல ஆக நமக்கு உதவிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டின் அளவு மாறவில்லை; எங்கள் சமூக நிலைமைகளும் மாறவில்லை. ஆனால் நாங்கள் தினமும், காலையிலும் மாலையிலும் ஜெபித்தபோது என் பெற்றோரின் இருதய மாற்றத்தை நான் கண்டேன். நாங்கள் மார்மன் புஸ்தகத்தைப் படித்தோம்; நாங்கள் குடும்ப இல்ல மாலையை நடத்தினோம்; நாங்கள் உண்மையிலேயே ஒரு குடும்பமாக மாறினோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6:00 மணிக்கு சபைக்குச் செல்லத் தயாரானோம், நாங்கள் புகார் செய்யாமல் ஒவ்வொரு வாரமும் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள மணிக்கணக்கில் பயணிப்போம். சாட்சி கொடுப்பது ஒரு அற்புதமான அனுபவமாயிருந்தது. முன்பு அந்தகாரத்தில் நடந்த நாங்கள் எங்களுக்கு மத்தியிலிருந்து அந்தகாரத்தை விரட்டி, (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 50:25 பார்க்கவும்) “பெரிய வெளிச்சத்தைக் கண்டோம்” (2 நேபி 19:2).

எனக்கு நினைவிருக்கிறது, ஒரு நாள் எங்கள் குடும்ப ஜெபத்திற்காக அதிகாலையில் எழுந்திருக்க நான் விரும்பாதபோது, நான் என் சகோதரிகளிடம் முணுமுணுத்தேன், “உண்மையில் இந்த வீட்டில் வேறு எதுவும் செய்யமுடியாது, ஜெபம், ஜெபம், ஜெபம் மட்டுமே.” என் வார்த்தைகளை என் அப்பா கேட்டார். “நீங்கள் இந்த வீட்டில் இருக்கும் வரை, நீங்கள் ஜெபிப்பீர்கள், ஜெபிப்பீர்கள், ஜெபிப்பீர்கள்” என்று அவர் அன்பாகவும் உறுதியாகவும் எனக்குக் கற்பித்தபோது அவருடைய எதிர்வினை எனக்கு நினைவிருக்கிறது.

என் தகப்பனின் வார்த்தைகள் தினமும் என் காதுகளில் ஒலித்தன. சகோதரி முட்டோம்போவும் நானும் இன்று எங்கள் பிள்ளைகளுடன் என்ன செய்கிறோம் என்று நினைக்கிறீர்கள்? நாங்கள் ஜெபிக்கிறோம், ஜெபிக்கிறோம், ஜெபிக்கிறோம். இது எங்கள் மரபு.

குருடனாகப் பிறந்து இயேசு கிறிஸ்துவால் குணமடைந்து, அண்டை வீட்டாரும் பரிசேயரும் அழுத்தம் கொடுத்த பின்னர் அவன் கூறினான்:

“இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சிலோவாம் குளத்தில் கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன். …

“… நான் குருடனாயிருந்தேன் ,இப்பொழுது காண்கிறேன், இது ஒன்றுதான் எனக்குத் தெரியும்” (யோவான் 9:11, 25).

நாமும் குருடர்களாக இருந்தோம், இப்போது காணமுடிகிறது. மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் அந்தக் காலத்திலிருந்து எங்கள் குடும்பத்தில் தாக்கம் ஏற்படுத்தியது. சுவிசேஷத்தின் “ஏன்” என்பதைப் புரிந்துகொள்வது எனது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை ஆசீர்வதித்துள்ளது, மேலும் வரப்போகிற பல தலைமுறைகளை தொடர்ந்து ஆசீர்வதிக்கும்.

இயேசு கிறிஸ்து: இருளில் பிரகாசிக்கிற ஒளி. அவரைப் பின்பற்றுகிறவர்கள் “இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பார்கள்” (யோவான் 8:12).

2016 மற்றும் 2017 க்கு இடையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு, கசாய் பிராந்தியத்தில் மக்கள் ஒரு பயங்கரமான சோகத்தை எதிர்கொண்டனர். ஒரு பாரம்பரிய குழு போர்வீரர்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதலால் மக்களுக்கு இது மிகவும் இருண்ட காலமாயிருந்தது. கசாய் மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்களிலிருந்து பரந்த கசாய் பகுதி வரை வன்முறை பரவியது. பலர் பாதுகாப்பிற்காக வீடுகளை விட்டு வெளியேறி புதரில் மறைந்தனர். அவர்களிடம் உணவு, தண்ணீர், அல்லது உண்மையில் எதுவும் இல்லை, அவர்களில் கனங்கா பகுதியில் உள்ள பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் சில உறுப்பினர்களும் இருந்தனர். சபையின் சில உறுப்பினர்கள் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல், எல்லா வீதிகளும் துப்பாக்கிச் சூடு எல்லைகளாக மாற்றப்பட்டதால், கனங்காவில் உள்ள ஞான்சா தொகுதியின் சகோதரர் ஹானோரே முலும்பா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொஞ்சப்பேரில் சிலர். ஒரு மாலை வேளையில் அவர்கள் குடும்ப தோட்டத்தில் சாப்பிட சில காய்கறிகளைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்த ஒரு நாள், சகோதரர் முலும்பா மற்றும் அவரது குடும்பத்தினர் இருப்பதை அக்கம் பக்கத்திலுள்ள சில போராளிகள் கவனித்தனர், போராளிகளின் ஒரு குழு அவர்களுடைய வீட்டிற்கு வந்து அவர்களை வெளியே இழுத்து, தங்கள் போராளிகளின் நடைமுறைகளை கடைப்பிடிக்க தீர்மானிக்கும்படி, அல்லது அவர்கள் கொல்லப்படுவார்கள் எனக் கூறினர்.

சகோதரர் முலும்போ தைரியமாக அவர்களிடம் கூறினார், நான், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் ஒரு உறுப்பினன். நானும் என் குடும்பமும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோம், அவர்மீது விசுவாசம் வைத்திருக்கிறோம். நாங்கள் எங்கள் உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருப்போம், இறப்பதை ஏற்றுக்கொள்வோம்.”

அவர்கள், “நீங்கள் இயேசு கிறிஸ்துவைத் தேர்ந்தெடுத்தது போல, உங்கள் உடல்கள் நாய்களால் உண்ணப்படும்” என்று அவர்களிடம் சொன்னார்கள், அவர்கள் திரும்பி வருவார்கள் என்று உறுதியளித்தார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் திரும்பி வரவில்லை, குடும்பத்தினர் இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள், அவர்களை மீண்டும் அவர்கள் பார்த்ததில்லை. சகோதரர் முலும்பாவும் அவரது குடும்பத்தினரும் தங்கள் விசுவாசத்தின் ஜோதியை பிரகாசமாக வைத்திருந்தனர். அவர்கள் தங்கள் உடன்படிக்கைகளை நினைவில் கொண்டு பாதுகாக்கப்பட்டனர்.

அநித்திய வாழ்க்கையின் நமது இருண்ட காலங்களிலும் நாம் உயரத் தூக்கிப்பிடிக்க வேண்டிய ஒளி இயேசு கிறிஸ்து (3நேபி 18:24 பார்க்கவும்). கிறிஸ்துவைப் பின்பற்ற நாம் தேர்ந்தெடுக்கும்போது மாறுவதற்கு நாம் தேர்ந்தெடுக்கிறோம். கிறிஸ்துவுக்காக மாற்றப்பட்ட ஒரு ஆண் அல்லது பெண் கிறிஸ்துவின் தலைவராக இருப்பார்கள், பவுல் செய்ததைப் போல, “ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?” என்று நாம் கேட்டுக்கொண்டிருப்போம். (அப்போஸ். 9:6). நாம் “அவருடைய அடிச்சுவடிகளைப் பின்பற்றுவோம்” (1 பேதுரு 2:21). நாம் “அவர் நடந்தபடியே நடப்போம்” (1 யோவான் 2:6). (Ezra Taft Benson, “Born of God,” Tambuli, Oct. 1989, 2, 6 பார்க்கவும்.)

நித்தியம் மற்றும் மேன்மையடைதலின் ஆசீர்வாதத்தை நீங்களும் நானும் பெறும்பொருட்டு, அவர் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு ஏறினார் என நான் சாட்சியளிக்கிறேன். அவரே, “ஒளியாயும், ஜீவனாயும், சத்தியமாயுமிருக்கிறார்” (ஏத்தேர் 4:12). அவர் உலகின் குழப்பத்திற்கு மாற்று மருந்தாகவும், தீர்வாகவும் இருக்கிறார். மேன்மையடைதலுக்கு அவர், இயேசு கிறிஸ்துவும்கூட சிறப்பின் தரநிலையாயிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.