பொது மாநாடு
கோவிட்-19 மற்றும் ஆலயங்கள்
ஏப்ரல் 2021 பொது மாநாடு


கோவிட்-19 மற்றும் ஆலயங்கள்

உங்கள் மனங்களிலும் இருதயங்களிலும், உங்கள் ஆலய உடன்படிக்கைகளையும் ஆசீர்வாதங்களையும் முதன்மையாக காத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்த உடன்படிக்கைகளுக்கு உண்மையாயிருங்கள்.

எனக்கன்பான சகோதர, சகோதரிகளே, உண்மையிலே நமக்கு ஒரு ஆவிக்குரிய விருந்தை பெற்றோம். முழு மாநாட்டின் ஜெபங்கள், செய்திகள் மற்றும் இசைக்காக நான் மிகுந்த நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நீங்கள் எங்கிருந்தாலும், எங்களுடன் இணைந்திருப்பதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில், கோவிட்-19 தொற்றுநோயினாலும் நல்ல உலகளாவிய குடிமக்களாக இருக்க வேண்டும் என்ற நமது விருப்பத்தினாலும், அனைத்து ஆலயங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கான கடினமான தீர்மானத்தை நாம் எடுத்தோம். அடுத்து வந்த மாதங்களில், மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையின் மூலம் ஆலயங்களை படிப்படியாக மீண்டும் திறக்க நாம் உணர்த்தப்பட்டோம். ஆலயங்கள் இப்போது திறக்கப்பட்டு, உள்ளூர் அரசாங்க விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, நான்கு கட்டங்களாக இயங்கி வருகின்றன.

கட்டம் 1 ல் உள்ள ஆலயங்களில், முன்னர் தங்களது சொந்த தரிப்பித்தலைப் பெற்ற தகுதி வாய்ந்த தம்பதிகள் கணவன் மனைவியாக முத்திரிக்கப்படலாம்.

கட்டம் 2 ல் உள்ள ஆலயங்களில், ஒருவரின் சொந்த தரிப்பித்தல் உட்பட, உயிரோடிருக்கிறவர்களுக்காக, அனைத்து நியமங்களும் கணவன், மனைவி முத்திரித்தல் மற்றும் பிள்ளைகள் பெற்றோருடன் முத்திரிக்கப்படுகின்றனர். கட்டம் 2 ன் விதிகளை நாங்கள் சமீபத்தில் திருத்தியுள்ளோம், இப்போது நமது இளைஞர்கள், புதிய உறுப்பினர்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டு பரிந்துரை வைத்திருக்கும் பிறர் தங்கள் முன்னோர்களுக்கான பதிலி ஞானஸ்நானத்தில் பங்கேற்க பரிந்துரைக்கிறோம்.

3 ம் கட்டத்தில் உள்ள ஆலயங்களில், திட்டமிடப்பட்ட நியமங்கள் செய்பவர்கள், உயிரோடிருக்கிறவர்களுக்கான நியமங்களில் மட்டுமல்லாமல், மரித்த முன்னோர்களுக்கான அனைத்து பதிலி நியமங்களிலும் பங்கேற்கலாம்.

கட்டம் 4 என்பது முழுமையான, வழக்கமான ஆலய நடவடிக்கைகளுக்கு திரும்புவதாகும்.

இந்த மாறிக்கொண்டிருக்கும் மற்றும் சவாலான காலகட்டத்தில் உங்கள் பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு சேவைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஆலயத்தில் தொழுவதற்கும் சேவை செய்வதற்கும் உங்கள் விருப்பம் முன்னெப்போதையும் விட பிரகாசமாக எரிய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

நீங்கள் எப்போது ஆலயத்திற்கு திரும்ப முடியும் என நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கக்கூடும். பதில்: உள்ளூர் அரசாங்க விதிமுறைகள் அனுமதிக்கும்போது உங்கள் ஆலயம் திறந்திருக்கும். உங்கள் பகுதியில் கோவிட்-19ன் நிகழ்வு பாதுகாப்பான எல்லைக்குள் இருக்கும்போது, உங்கள் ஆலயம் மீண்டும் திறக்கப்படும். ஆலயத்திற்குச் செல்லும் உங்கள் வாய்ப்புகள் அதிகரிக்கும்படியாக, உங்கள் பகுதியில் கோவிட் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைகளைக் குறைக்க உதவ உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.

அதேநேரத்தில், உங்கள் ஆலய உடன்படிக்கைகளையும் ஆசீர்வாதங்களையும் உங்கள் மனங்களிலும் இருதயங்களிலும் முதன்மையாக வைத்திருங்கள். நீங்கள் செய்த உடன்படிக்கைகளுக்கு உண்மையாயிருங்கள்.

வருங்காலத்திற்காக இப்போது நாம் கட்டிக்கொண்டிருக்கிறோம். நாற்பத்தொன்று ஆலயங்கள் தற்போது கட்டுமானத்தில் அல்லது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, தொற்றுநோய் இருந்தபோதிலும், 21 புதிய ஆலயங்களுக்கு அஸ்திபாரமிடப்பட்டது!

அவர்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கும் போதெல்லாம் ஆலயத்தில் கலந்துகொள்ளும் பரிசுத்தமான சிலாக்கியத்தை நமது உறுப்பினர்கள் பெறும்படியாக, கர்த்தருடைய வீட்டை அவர்களுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம், .

மேலும் 20 ஆலயங்களைக் கட்டும் எங்கள் திட்டங்களை நான் அறிவிக்கையில், இன்று இந்த வரலாற்றை உருவாக்க அவர்களுடைய அர்ப்பணிப்பான வாழ்க்கை உதவிய, கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலுமுள்ள முன்னோடிகளை சிந்தித்துப் பார்க்கிறேன், பாராட்டுகிறேன். பின்வரும் ஒவ்வொரு இடங்களிலும் ஒரு புதிய ஆலயம் கட்டப்படும்: ஒஸ்லோ, நார்வே; பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்; வியன்னா, ஆஸ்திரியா; குமாசி, கானா; பெய்ரா, மொசாம்பிக்; கேப் டவுன், தென்னாப்பிரிக்கா; சிங்கப்பூர், சிங்கப்பூர் குடியரசு; பெலோ ஹொரிசொன்ட், பிரேசில்; கலி, கொலம்பியா; குவெரடாரோ, மெக்சிகோ; டோரீன், மெக்சிகோ; ஹெலினா, மொன்டானா; காஸ்பர், வயோமிங்; கிராண்ட் ஜங்ஷன், கொலராடோ; ஃபார்மிங்டன், நியூ மெக்சிகோ; பர்லி, ஐடஹோ; யூஜின், ஓரிகான்; எல்கோ, நெவாடா; யோர்பா லிண்டா, கலிபோர்னியா; மற்றும் ஸ்மித்பீல்ட், யூட்டா.

ஆலயங்கள், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதத்தின் பரிபூரணத்தில், ஒரு முக்கியமான பகுதியாகும். ஆலய நியமங்கள் நம் வாழ்க்கையை, வேறு வழியில் கிடைக்காத, வல்லமையுடனும் பெலத்துடனும் நிரப்புகின்றன. அந்த ஆசீர்வாதங்களுக்காக நாம் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்த மாநாட்டை நாம் இறுதி செய்யும்போது, எங்கள் அன்பை மீண்டும் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் ஒவ்வொருவர்மீதும் தேவன் அவருடைய ஆசீர்வாதங்களையும், கண்காணிப்பையும் பொழியப்பண்ணுவார் என நாங்கள் ஜெபிக்கிறோம். அவருடைய பரிசுத்த சேவையில் நாம் ஒன்றுசேர்ந்து ஈடுபட்டிருக்கிறோம். கர்த்தருடைய மகிமையான பணியில் நாம் அனைவரும் தைரியத்துடன் முன்னேறுவோம்! இதற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன், ஆமென்.