பொது மாநாடு
தேவன் நம்மிடையே
ஏப்ரல் 2021 பொது மாநாடு


தேவன் நம்மிடையே

தேவன் நம்மிடையே இருக்கிறார், நம்முடைய வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டிருக்கிறார், அவருடைய பிள்ளைகளுக்கு முனைப்புடன் வழிகாட்டுகிறார்.

யுகங்களாக, தேவன் தம்முடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசியுள்ளார்.1 இன்று காலை தேவனின் தீர்க்கதரிசி உலகம் முழுவதற்கும் பேசுவதைக் கேட்கும் சிலாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. தலைவர் நெல்சன், நாங்கள் உங்களை நேசிக்கிறோம், உங்கள் வார்த்தைகளை படிக்கவும், செவிசாய்க்கவும் எல்லா இடங்களிலும் உள்ள அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன்.

நான் எனது 12வது பிறந்தநாளை அடைவதற்கு முன்பு, எங்கள் குடும்பம் போர் மற்றும் அரசியல் பிளவு காரணமாக ஏற்பட்ட குழப்பம், பயம் மற்றும் நிச்சயமற்ற நிலைகளுக்கு இடையே இருமுறை வீட்டைவிட்டு வெளியேறி, மீண்டும் தொடங்க கட்டாயப்படுத்தப்பட்டது. இது எனக்கு ஒரு கவலையான நேரமாயிருந்தது, ஆனால் அது என் அன்பான பெற்றோருக்கு திகிலூட்டியிருக்க வேண்டும்.

இந்தச் சுமையைப்பற்றி என் அம்மாவும் அப்பாவும் நான்கு குழந்தைகளாகிய, எங்களுடன் சிறிதே பகிர்ந்து கொண்டனர். அவர்கள் தங்களால் முடிந்தவரை சிரமத்தையும் துன்பத்தையும் தாங்கினார்கள். அவர்களின் நேரத்தை விழுங்கி அவர்களின் நம்பிக்கையை மழுங்கடித்து, பயம் அடக்குமுறையாக இருந்திருக்க வேண்டும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த இருண்ட காலம் உலகத்தின் மீது தனது அடையாளத்தை விட்டுச் சென்றது. அது அதன் அடையாளத்தை என் மீது வைத்தது.

பின்னர், “உலகில் ஏதேனும் நம்பிக்கை எஞ்சி இருக்கிறதா?” என, என் தனிமையான மணிநேரத்தின், நான் அடிக்கடி வியந்தேன்.

தூதர்கள் நம்மிடையே

இந்த கேள்விகளைப்பற்றி நான் யோசித்தபோது, அந்த ஆண்டுகளில் எங்களிடையே ஊழியம் செய்த எங்கள் இளம் அமெரிக்க ஊழியக்காரர்களைப்பற்றி நினைத்தேன். அவர்கள் தங்கள் வீடுகளின் பாதுகாப்பை உலகத்தின் பாதிதூரத்தில் விட்டுவிட்டு, எம் மக்களுக்கு தெய்வீக நம்பிக்கையை வழங்குவதற்காக, அவர்களின் அண்மை எதிரிகளின் தேசமான, ஜெர்மனிக்கு பயணித்தார்கள். அவர்கள் குறை சொல்லவோ, சொற்பொழிவு ஆற்றவோ, வெட்கப்படுத்தவோ வரவில்லை. உலகப்பிரகார ஆதாயத்தைப்பற்றி அவர்கள் சிந்திக்காமல், தாங்கள் அனுபவித்த மகிழ்ச்சியையும் அமைதியையும் கண்டுபிடிக்க மற்றவர்களுக்கு உதவ மட்டுமே விரும்பி, அவர்கள் தங்கள் இளம் வாழ்க்கையை மனமுவந்து கொடுத்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்த இளைஞர்களும் பெண்களும் பரிபூரணமானவர்கள். அவர்களில் குறைபாடுகள் இருந்தன என்பது எனக்குத் தெரியும், ஆனால் எனக்கு குறைகள் தெரியவில்லை. ஒளி மற்றும் மகிமையின் தூதர்கள், இரக்கம், நன்மை மற்றும் சத்தியத்தின் ஊழியக்காரர்களான அவர்கள் வாழ்க்கையை விட பெரியவர்கள் என்று நான் எப்போதும் நினைப்பேன்.

உலகம் சிடுமூஞ்சித்தனம், கசப்பு, வெறுப்பு, பயம் ஆகியவற்றில் மூழ்கிக் கொண்டிருந்தபோது, இந்த இளைஞர்களின் முன்மாதிரியும் போதனைகளும் என்னை நம்பிக்கையால் நிரப்பின. அவர்கள் வழங்கிய சுவிசேஷ செய்தி அரசியல், வரலாறு, மனக்கசப்பு, குறைகள் மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பாற்பட்டது. இந்த கடினமான காலங்களில் நம்மிடம் இருந்த முக்கியமான கேள்விகளுக்கு இது தெய்வீக பதில்களை அளித்தது.

கொந்தளிப்பு, குழப்பம், நிச்சயமின்மை போன்ற இந்த மணிநேரங்களில் கூட தேவன் ஜீவித்தார், நம்மைப்பற்றி அக்கறை கொண்டிருந்தார் என்பதுதான் செய்தி. சத்தியத்தையும் ஒளியையும், அவருடைய சுவிசேஷத்தையும் அவருடைய சபையையும். மறுஸ்தாபிதம் செய்வதற்காக நம் காலத்தில் அவர் உண்மையாகவே தோன்றினார். அவர் மீண்டும் தீர்க்கதரிசிகளுடன் பேசுகிறார்; தேவன் நம்மிடையே இருக்கிறார், தாமே நம் வாழ்வில் இடைபடுகிறார், அவருடைய பிள்ளைகளுக்கு முனைப்புடன் வழிகாட்டுகிறார்.

நம்முடைய பரலோக பிதாவின் இரட்சிப்பு மற்றும் மேன்மைப்படுதலின் திட்டம், அவருடைய பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியின் திட்டம், அதை நாம் சற்று நெருக்கமாகப் பார்க்கும்போது நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் முக்கியமற்றவர்களாகவும், தள்ளப்பட்டவர்களாகவும், மறந்துவிடப்பட்டவர்களாகவும் உணரும்போது, தேவன் நம்மை மறக்கவில்லை என்று நமக்கு உறுதியளிக்கப்படலாம்; உண்மையில், அவர் தனது எல்லா பிள்ளைகளுக்கும் கற்பனை செய்ய முடியாத ஒன்றை வழங்குகிறார்: “தேவனுடன் சுதந்தரரும், கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரருமாமே.”2

இதன் அர்த்தம் என்ன?

நாம் என்றென்றைக்கும் வாழ்வோம், முழுமையான மகிழ்ச்சியடைவோம்,3 “சிங்காசனங்களையும், ராஜ்யங்களையும், துரைத்தனங்களையும், வல்லமைகளையும் சுதந்தரிக்க,” ஆற்றல் பெறுவோம். 4

நாம் யார் என்பதன் காரணமாக அல்ல, ஆனால் தேவன் யார் என்பதன் காரணமாக, இந்த மகத்தான மற்றும் அற்புதமான எதிர்காலம் சாத்தியமானது என்பதை அறிந்துகொள்வது மிகவும் தாழ்மையடைய வைக்கிறது.

இதை அறிந்தால், நாம் எப்படி முணுமுணுக்கவோ அல்லது மனமுடைந்து போகவோ முடியும்? தெய்வீக மகிழ்ச்சியின் கற்பனைக்கு எட்டாத எதிர்காலத்திற்கு பறந்து செல்ல ராஜாக்களின் ராஜா நம்மை அழைக்கும்போது நாம் எப்படி நம் கண்களை தரையின்மீது வைத்திருக்க முடியும்?5

இரட்சிப்பு நம்மிடையே

தேவன் நம்மீது வைத்திருக்கும் பரிபூரண அன்பு மற்றும் இயேசு கிறிஸ்துவின் நித்திய பலியின் காரணமாக, நம்முடைய பெரிய மற்றும் சிறிய பாவங்களை வெளியேற்ற முடியும், இனியும் நினைவில் வைக்கப்படாது.6 நாம் அவர் முன் தூய்மையான, தகுதியான, பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக நிற்க முடியும்.

என் பரலோக பிதாவுக்கான நன்றியுடன் என் இதயம் நிரம்பி வழிகிறது. ஒரு பிரகாசமான மற்றும் நித்திய எதிர்காலத்திற்கான நம்பிக்கையின்றி அவர் தனது பிள்ளைகளை மரணத்தின் மூலம் தடுமாறச் செய்யவில்லை என்பதை நான் உணர்கிறேன். அவரிடம் திரும்பி போவதற்கான வழியை வெளிப்படுத்தும் வழிமுறைகளை அவர் வழங்கியுள்ளார். அவை எல்லாவற்றிற்கும் மையமாக அவருடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் 7 மற்றும் நமக்காக அவர் செய்த தியாகமும் இருக்கிறது.

இரட்சகரின் எல்லையற்ற பாவநிவர்த்தி நம்முடைய மீறுதல்களையும் குறைபாடுகளையும், நாம் காணும் விதத்தை முற்றிலும் மாற்றுகிறது. அவற்றை யோசிப்பதற்கும், மீட்க முடியாதவர்களாக அல்லது நம்பிக்கையற்று உணருவதற்கும் பதிலாக, அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ளலாம், நம்பிக்கையுடையவர்களாக உணரலாம்.8 மனந்திரும்புதலின் சுத்திகரிக்கும் வரம் நம் பாவங்களை விட்டுவிட்டு ஒரு புதிய சிருஷ்டியாக வெளிவர அனுமதிக்கிறது.9

இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாக, நம்முடைய தோல்விகள் நம்மை வரையறுக்க வேண்டியதில்லை. அவை நம்மை சுத்திகரிக்க முடியும்.

ராகங்களை ஒத்திகை பார்க்கும் ஒரு இசைக்கலைஞரைப் போலவே, நம்முடைய தவறான செயல்கள், குறைபாடுகள் மற்றும் பாவங்களை அதிக சுய விழிப்புணர்வு, மற்றவர்களுக்கு ஆழ்ந்த மற்றும் நேர்மையான அன்பு மற்றும் மனந்திரும்புதலின் மூலம் சுத்திகரிப்புக்கான வாய்ப்புகளாக நாம் காணலாம்.

நாம் மனந்திரும்பினால், தவறுகள் நம்மைத் தகுதியிழக்கச் செய்யாது. அவை நமது முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகும்.

நாம் ஆவதற்கு வடிவமைக்கப்பட்ட மகிமை மற்றும் ஆடம்பரங்களுடன் ஒப்பிடும்போது நாம் அனைவரும் குழந்தைகளாக இருக்கிறோம். அடிக்கடி தடுமாறல்கள், புடைப்புகள் மற்றும் காயங்கள் இல்லாமல் ஊர்ந்து செல்வதிலிருந்து நடக்கவும், ஓடுவதுமின்றி உலகில் எந்த ஜீவனும் முன்னேறுவதில்லை. அவ்வாறுதான் நாம் கற்கிறோம்.

நாம் ஆர்வத்துடன் பயிற்சி செய்தால், எப்பொழுதும் தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க முயற்சி செய்து, மனந்திரும்புதல், சகிப்புத்தன்மை மற்றும் நாம் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்தால், வரி வரியாக, நம் ஆத்துமாக்களில் ஒளியை சேகரிப்போம்.10 இப்போது நம்முடைய முழு திறனை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றாலும்,“[இரட்சகர்] வெளிப்படும்போது, அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம் என்று அறிந்திருக்கிறோம்,” அவரது முகரூபத்தை நம்மில் பார்ப்போம்.11

என்ன ஒரு மகிமையான வாக்குத்தத்தம்!

ஆம், உலகம் குழப்பத்திலுள்ளது. ஆம், நமக்கு பெலவீனமுண்டு. ஆனால் நாம் விரக்தியில் தலையைத் தொங்க விடத் தேவையில்லை, ஏனென்றால் நாம் தேவனை நம்பலாம், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம்பலாம், மகிழ்ச்சியும் தெய்வீக சந்தோஷமும் நிறைந்த வாழ்க்கையை நோக்கிய இப்பாதையில் நம்மை வழிநடத்த ஆவியின் வரத்தை ஏற்றுக்கொள்ளலாம்.12

இயேசு நம்மிடையே

நான் அடிக்கடி ஆச்சரியப்பட்டிருக்கிறேன், இயேசு இன்று நம்மிடையே இருந்திருந்தால் என்ன கற்பிப்பார், என்ன செய்வார்?

உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, இயேசு கிறிஸ்து தம்முடைய “பிற ஆடுகளை” சந்திப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.13

மார்மன் புஸ்தகம்: இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு அமெரிக்க கண்டத்தில் உள்ள மக்களுக்கு இதுபோன்ற தரிசனம்பற்றி பேசுகிறது. இரட்சகரின் பணியின் உறுதியான சாட்சியாக இந்த அருமையான பதிவு நம்மிடம் உள்ளது.

மார்மன் புஸ்தகத்தின் ஜனங்கள் உலக உருண்டையின் மறுபக்கத்தில் வாழ்ந்தார்கள்-அவர்களின் வரலாறுகள், கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் நிலைகள் இயேசு தனது பூலோக ஊழியத்தின் போது கற்பித்த ஜனங்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவை. ஆனாலும் அவர் பரிசுத்த தேசத்தில் கற்பித்த பல விஷயங்களை அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.

அவர் ஏன் அப்படிச் செய்தார்?

இரட்சகர் எப்போதும் காலத்துக்கு அப்பாற்பட்ட சத்தியங்களை கற்பிக்கிறார். அவை ஒவ்வொரு வயதினருக்கும் எந்த சூழ்நிலையிலும் பொருந்துகின்றன.

அவருடைய செய்தி நம்பிக்கை மற்றும் சொந்தமாவதன் செய்தியாகும், நம்முடைய பரலோக பிதாவாகிய தேவன் தம் பிள்ளைகளைக் கைவிடவில்லை என்பது பற்றிய சாட்சியம்.

அந்த தேவன் நம்மிடையே இருக்கிறார்!

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, இரட்சகர் மீண்டும் பூமிக்குத் திரும்பினார். பிதாவாகிய தேவனோடு, அவர் 14 வயது ஜோசப் ஸ்மித்துக்குத் தோன்றி, சுவிசேஷத்தையும், இயேசு கிறிஸ்துவின் சபையின் மறுஸ்தாபிதத்தையும் நிகழச் செய்தார். அன்றிலிருந்து, வானம் திறந்தது, பரலோக தூதர்கள் அழியாத மகிமையின் அரங்குகளிலிருந்து இறங்கினார்கள். வான சிம்மாசனத்திலிருந்து வெளிச்சமும் அறிவும் பொழியப்படுகின்றன.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் உலகத்துடன் பேசினார்.

அவர் என்ன சொன்னார்?

நம்முடைய ஆசீர்வாதமாக, அவருடைய பல வார்த்தைகள் கோட்பாடும் உடன்படிக்கைகளுமில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றை வாசித்து படிக்க விரும்பும் உலகில் உள்ள எவருக்கும் அது கிடைக்கிறது. இந்த வார்த்தைகள் இன்று நமக்கு எவ்வளவு விலைமதிப்பற்றவை!

இரட்சகர் தனது சுவிசேஷத்தின் முக்கிய செய்தியை மீண்டும் கற்பிக்கிறார் என்பதைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை: “உன் முழு இருதயத்தோடும், ஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும் உன் தேவனாகிய கர்த்தரை நேசிப்பாயாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவரை சேவிப்பாயாக.”14 தேவனை தேடவும், 15தம்முடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகளுக்கு அவர் வெளிப்படுத்திய போதனைகளின்படி வாழவும் அவர் நம்மைத் தூண்டுகிறார். 16

ஒருவரையொருவர் நேசிக்கவும்,17 எல்லா மனுஷருடனும் தயாளத்தில் நிறைந்தும் இருக்க,18 அவர் நமக்கு போதிக்கிறார்.

நன்மை செய்பவர்களாக இருக்க, அவருடைய கைகளாக இருக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார்.19 “வசனத்தினால் … அல்ல, கிரியையினாலும், உண்மையினாலும் அன்புகூரக் கடவோம்.”20

அவருடைய மாபெரும் ஆணைக்கு செவிசாய்க்க அவர் நமக்கு சவால் விடுகிறார்: அவருடைய சுவிசேஷத்துக்கும் அவருடைய சபைக்கும் அனைவரையும் அழைக்கவும், அன்புசெலுத்தவும், பகிரவும்.21

பரிசுத்த ஆலயங்களைக் கட்டவும், அங்கு பிரவேசித்து சேவை செய்யவும் அவர் நமக்குக் கட்டளையிடுகிறார்.22

அவருடைய சீஷர்களாக ஆக, நம்முடைய இருதயங்கள் தனிப்பட்ட வல்லமை, செல்வம், ஒப்புதல் அல்லது பதவிக்காக பாடுபடக்கூடாது என அவர் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். “இந்த உலகத்தின் விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, சிறந்த காரியங்களைத் தேடுங்கள்” என்று அவர் நமக்குக் கற்பிக்கிறார்.{23

மகிழ்ச்சி, தெளிவு, சமாதானம், சந்தோஷம்,24 மற்றும் அழியாமைக்கும் நித்திய ஜீவனுக்குமான வாக்குத்தத்தத்தை நாட அவர் நம்மை வலியுறுத்துகிறார்.25

இதை ஒரு படி மேலே கொண்டு செல்வோம். இயேசு இன்று உங்கள் தொகுதி, அல்லது கிளை, அல்லது உங்கள் வீட்டிற்கு வந்தார் என்று வைத்துக்கொள்வோம். அது எப்படி இருக்கும்?

அவர் உங்கள் இதயத்திற்குள் நேராக பார்ப்பார். வெளிப்புற தோற்றங்கள் அவற்றின் முக்கியத்துவத்தை இழக்கும். நீங்கள் இருப்பது போலவே அவர் உங்களை அறிவார். உங்கள் இருதயத்தின் ஆசைகளை அவர் அறிவார்.

சாந்தகுணமுள்ளவர்களையும் தாழ்மையானவர்களையும் அவர் உயர்த்துவார்.

நோய்வாய்ப்பட்டவர்களை அவர் குணமாக்குவார்.

அவர் சந்தேகப்படுவோருக்கு நம்பிக்கையளிக்க விசுவாசத்துடன் தைரியத்தையும் ஊட்டுவார்.

நம்முடைய இருதயங்களை தேவனிடத்தில் திறந்து மற்றவர்களிடம் சென்றடைய அவர் நமக்குக் கற்றுக்கொடுப்பார்.

அவர் நேர்மை, பணிவு, உத்தமம், ஒருமைப்பாடு, விசுவாசம், இரக்கம் மற்றும் தயாளம் ஆகியவற்றை அங்கீகரித்து மதிக்கிறார்.

அவருடைய கண்களை ஒரு பார்வை பார்த்தால், நாம் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டோம். நாம் என்றென்றைக்குமாக மாற்றப்படுவோம். தேவன் நம்மிடையே இருக்கிறார் என்பதை ஆழமாக உணர்ந்ததன் மூலம் மாற்றப்பட்டிருப்போம்.

நாம் என்ன செய்வோம்?26

நான் வளர்ந்து வரும் ஆண்டுகளில் நானாக இருந்த இளைஞனை தயவுடன் திரும்பிப் பார்க்கிறேன். நான் சரியான நேரத்தில் திரும்பிச் செல்ல முடிந்தால், நான் அவனை ஆறுதல்படுத்துவேன், சரியான பாதையில் இருக்கவும் தேடிக்கொண்டிருக்கவும் நான் சொல்லுவேன். இயேசு கிறிஸ்துவை அவனுடைய வாழ்க்கையில் அழைக்கும்படி நான் அவனிடம் கேட்பேன், ஏனென்றால் தேவன் நம்மிடையே இருக்கிறார்!

என் அன்பான சகோதர சகோதரிகளான உங்களுக்கும், என் அன்பு நண்பர்கள் மற்றும் பதில்கள், சத்தியம் மற்றும் மகிழ்ச்சியைத் தேடும் அனைவருக்கும் நான் அதே ஆலோசனையை வழங்குகிறேன்: விசுவாசத்துடனும் பொறுமையுடனும் தேடுங்கள்.27

கேளுங்கள், நீங்கள் பெறுவீர்கள். தட்டுங்கள், அது உங்களுக்கு திறக்கப்படும்.28 கர்த்தரை நம்புங்கள்.29

நம் அன்றாட வாழ்க்கையில் தேவனைச் சந்திப்பது நமது முக்கிய பணி மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட வாய்ப்பு.

நாம் பெருமையை ஒதுக்கி வைத்துவிட்டு, நொறுங்குண்ட இருதயத்தோடும், நருங்குண்ட ஆவியோடும் அவருடைய சிம்மாசனத்தை அணுகும்போது,30 அவர் நம்மிடத்தில் வருவார்.31

நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற நாடும்போது, சீஷத்துவத்தின் பாதையில் செல்லவும் முயற்சிக்கும்போது, மகிழ்ச்சியின் முழுமையைப் பெறும் கற்பனைக்கு எட்டாத அந்த வரத்தை நாம் அனுபவிப்போம்.

என் அன்பான நண்பர்களே, உங்கள் பரலோக பிதா உங்களை ஒரு பரிபூரண அன்பால் நேசிக்கிறார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய ஒரே குமரனை பலியாகவும், நம்முடைய பரலோக பெற்றோரிடம் திரும்புவதை யதார்த்தமாக்குவதற்கு அவருடைய பிள்ளைகளுக்கு ஒரு பரிசாகவும் அளிப்பதன் மூலம், அவர் தனது அன்பை முடிவில்லாத வழிகளில் நிரூபித்துள்ளார்.

நம்முடைய பரலோக பிதா ஜீவிக்கிறார் என்பதற்கும், இயேசு கிறிஸ்து அவருடைய சபையை வழிநடத்துகிறார் என்பதற்கும், தலைவர் ரசல் எம். நெல்சன் அவருடைய தீர்க்கதரிசி என்பதற்கும் நான் சாட்சி அளிக்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான ஈஸ்டர் பருவத்தில் எனது அன்பையும் ஆசீர்வாதத்தையும் உங்களுக்கு வழங்குகிறேன். உங்கள் சூழ்நிலைகள், சோதனைகள், துன்பங்கள் அல்லது தவறுகள் பொருட்டின்றி, நமது இரட்சகரும் மீட்பருமானவருக்கு உங்கள் இருதயத்தைத் திறக்கவும்; அவர் ஜீவிக்கிறார், அவர் உங்களை நேசிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம், மேலும் அவர் நிமித்தமாக நீங்கள் ஒருபோதும் தனியாக இருக்க மாட்டீர்கள்.

தேவன் நம்மிடையே இருக்கிறார்.

இதைக்குறித்து நான் இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தினாலே சாட்சியமளிக்கிறேன், ஆமென்.