பொது மாநாடு
கல்லறைக்கு ஜெயம் இல்லை
ஏப்ரல் 2021 பொது மாநாடு


கல்லறைக்கு ஜெயம் இல்லை

இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பாவநிவர்த்தி மற்றும் மகிமையான உயிர்த்தெழுதல் மூலம், நொறுங்குண்ட இருதயங்கள் குணமாக்கப்படலாம், வேதனை சமாதானமாக மாறலாம், துன்பம் நம்பிக்கையாக மாறும்.

இந்த மகிமையான ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, நமது பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் பாடுகிறார்கள், “ஒரு தங்க வசந்த காலத்தில், இயேசு கிறிஸ்து விழித்தெழுந்து, அவர் கிடத்தப்பட்ட கல்லறையை விட்டு வெளியேறினார்; மரணத்தின் கட்டுகளை அவர் உடைத்தார்.”1

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றிய நமது அறிவுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இருப்பினும் நம் வாழ்வின் ஒரு கட்டத்தில், நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரை இழந்த பிறகு நாம் மனம் உடைந்திருப்போம். தற்போதைய உலகளாவிய தொற்றுநோயால், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் என நம்மில் பலர் அன்புக்குரியவர்களை இழந்துவிட்டோம்.2 அத்தகைய இழப்புக்காக வருத்தப்படுபவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்.

தலைவர் ரசல் எம். நெல்சன் சொன்னார்:

“வயதைப் பொருட்படுத்தாமல், நேசிக்கப்பட்டு, இழக்கப்பட்டவர்களுக்காக நாம் துக்கப்படுகிறோம். துக்கம் என்பது தூய அன்பின் ஆழமான வெளிப்பாடுகளில் ஒன்றாகும். …

“மேலும், இப்போதைய கண்ணீருடனான பிரிவுகள் இல்லாமல் மகிழ்ச்சியான ஒன்றுகூடுதலை நாம் முழுமையாகப் பாராட்ட முடியாது. மரணத்திலிருந்து துக்கத்தை வெளியேற்றுவதற்கான ஒரே வழி, அன்பை வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுவதே.”3

படம்
பெண்கள் சீஷர்கள் இயேசுவுக்காக துக்கப்பட்டனர்.

இயேசுவின் நண்பர்கள், அவரைப் பின்பற்றி அவருக்கு ஊழியம் செய்தவர்கள்,4 அவரது மரணத்தைப் பார்த்த பிறகு உணர்ந்ததை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.5 “அவர்கள் துக்கப்பட்டு அழுதார்கள்” என்பதை நாம் அறிவோம்.6 சிலுவையில் அறையப்பட்ட நாளில், ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கும் என்று தெரியாமல், அவர்கள் தங்கள் கர்த்தர் இல்லாமல் எப்படி வாழப்போகிறோம் என்று ஆச்சரியப்பட்டு, துன்பத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆயினும்கூட, அவர்கள் மரணத்திலும் கூட அவருக்கு தொடர்ந்து ஊழியம் செய்தார்கள்.

அரிமத்தேயா ஊரானாகிய யோசேப்பு, பிலாத்துவிடம் இயேசுவின் சரீரத்தைக் கொடுக்கும்படி கெஞ்சினான். அவரது சரீரத்தைக் கீழே இறக்கி, அதை நன்றாக துணியால் போர்த்தி, தனது சொந்த புதிய கல்லறையில் வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்தான்.7

நிக்கோதேமு வெள்ளைப்போளமும் சுகந்த வாசனையும் கொண்டு வந்தான். அவன் சரீரத்தை எடுத்து வாசனைத் திரவியங்களுடன் துணியால் போர்த்த யோசேப்புக்கு உதவினான்.8

மகதலேனா மரியாளும் பிற பெண்களும் யோசேப்பு மற்றும் நிக்கோதேமுவைப் பின்தொடர்ந்து, அவர்கள் இயேசுவின் சரீரத்தை எங்கே வைத்தார்கள் என்று பார்த்து, எண்ணெய் பூச இனிமையான வாசனைத் திரவியங்களையும் எண்ணெயையும் தயார் செய்தனர்.9 அன்றைய கடுமையான சட்டங்களின்படி, சனிக்கிழமை ஓய்வுநாள் என்பதால் உடலை மேலும் ஆயத்தப்படுத்தி எண்ணெய் பூச அவர்கள் காத்திருந்தார்கள்.10 பின்னர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், அவர்கள் கல்லறைக்குச் சென்றனர். இரட்சகர் அங்கே இல்லை என்பதை உணர்ந்த பிறகு, அவர்கள் இயேசுவின் அப்போஸ்தலர்களான சீஷர்களிடம் சொல்லச் சென்றார்கள். அப்போஸ்தலர்கள் அவர்களுடன் கல்லறைக்கு வந்து, அது காலியாக இருப்பதைக் கண்டார்கள். இரட்சகரின் சரீரத்துக்கு என்ன நேர்ந்தது என்று யோசித்துக்கொண்டு மகதலேனா மரியாள் தவிர அனைவரும் இறுதியில் வெளியேறினர்.11

மகதலேனா மரியாள் தனியாக கல்லறையருகில் இருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்புதான், அவளுடைய சிநேகிதர் மற்றும் போதகரின் துயர மரணத்தை அவள் பார்த்திருந்தாள். இப்போது அவருடைய கல்லறை காலியாக இருந்தது, அவர் எங்கே இருக்கிறார் என்று அவளுக்குத் தெரியவில்லை. அதைத் தாங்கிக் கொள்வது அவளுக்கு அதிகமாக இருந்தது, அவள் அழுதாள். அந்த நேரத்தில், உயிர்த்தெழுந்த இரட்சகர் அவளிடம் வந்து, அவள் ஏன் அழுகிறாள், யாரைத் தேடுகிறாள் என்று கேட்டார். தோட்டக்காரன் அவளுடன் பேசினான் என்று நினைத்து, அவன் தனது கர்த்தரின் சரீரத்தை எடுத்துக் கொண்டிருந்தால், அதைப் பெற்றுக்கொள்ளும்படி அது எங்கிருக்கிறது என்று அவளிடம் சொல்லும்படி கேட்டாள்.12

படம்
மகதலேனா மரியாள்

மகதலேனா மரியாள் துக்கப்படவும் அவளுடைய வேதனையை வெளிப்படுத்தவும் கர்த்தர் அனுமதித்திருக்கலாம் என்று நான் கற்பனை செய்கிறேன்.13 அவர் அவளை பெயர் சொல்லி அழைத்தார், அவள் அவரிடம் திரும்பி அவரை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்டாள், அவருடைய மகிமையான உயிர்த்தெழுதலின் சாட்சியாக இருந்தாள்.14

உங்களைப் போலவே, மகதலேனா மரியாளும் அவளுடைய நண்பர்களும் தங்கள் கர்த்தரின் மரணத்தை நினைத்து வருத்தப்பட்டபோது ஏற்பட்ட வேதனையை ஒருவிதத்தில் என்னால் ஒப்பிட முடியும். எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, பேரழிவை உண்டாக்கிய பூகம்பத்தின் போது எனது மூத்த சகோதரனை இழந்தேன். இது எதிர்பாராத விதமாக நடந்ததால், என்ன நடந்தது என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள எனக்கு சிறிது நேரம் பிடித்தது. நான் துக்கத்தால் மனம் உடைந்தேன், நான் என்னையே கேட்டுக்கொள்வேன், “என் சகோதரனுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்கே இருக்கிறான்? அவன் எங்கு போனான்? நான் அவனை மீண்டும் பார்க்கலாமா?”

தேவனின் இரட்சிப்பின் திட்டத்தைப்பற்றி எனக்கு இன்னும் தெரியாது, நாம் எங்கிருந்து வருகிறோம், வாழ்க்கையின் நோக்கம் என்ன, நாம் மரித்த பிறகு நமக்கு என்ன நடக்கிறது என்பதை அறிய எனக்கு ஆசை இருந்தது. நாம் ஒரு அன்புக்குரியவரை இழக்கும்போது அல்லது நம் வாழ்க்கையில் சிரமங்களைச் சந்திக்கும்போது நாம் அனைவரும் அந்த ஏக்கங்கள் பெறுவதில்லையா?

சில ஆண்டுகளுக்குப் பிறகு, நான் ஒரு குறிப்பிட்ட விதமாக என் சகோதரனைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அவன் எங்கள் கதவைத் தட்டுவதாக நான் கற்பனை செய்வேன். நான் கதவைத் திறப்பேன், அவன் அங்கே நின்று கொண்டிருப்பான், அவன் என்னிடம் சொல்வான், “நான் மரிக்கவில்லை. நான் உயிருடன் இருக்கிறேன். என்னால் உங்களிடம் வர முடியவில்லை, ஆனால் இப்போது நான் உங்களுடன் தங்குவேன், மீண்டும் ஒருபோதும் வெளியேற மாட்டேன்.” அந்த கற்பனை, கிட்டத்தட்ட ஒரு கனவு, அவனை இழந்ததால் நான் உணர்ந்த வலியை சமாளிக்க எனக்கு உதவியது. அவன் என்னுடன் இருப்பான் என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் என் மனதுக்கு வந்தது. சில நேரங்களில் நான் கதவை வெறித்துப் பார்ப்பேன், அவன் தட்டுவான், நான் அவனை மீண்டும் பார்ப்பேன் என்று நம்பினேன்.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈஸ்டர் காலத்தில், நான் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன், என் சகோதரனைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். அந்த நேரத்தில், என் மனதில் ஏதோ தோன்றியது. அவன் என்னைப் பார்க்க வருவதை கற்பனை செய்து பார்த்தேன்.

ஆவியானவர் ஒரு கடினமான நேரத்தில் எனக்கு ஆறுதல் அளித்ததை அன்றைய தினம் உணர்ந்தேன். என் சகோதரனின் ஆவி இறந்துவிடவில்லை என்னும் ஒரு சாட்சியைப் பெற்றேன்; அவன் வாழ்கிறான். அவன் தனது நித்திய இருப்பில் இன்னும் முன்னேறி வருகிறான். “[என்] சகோதரன் மீண்டும் எழுந்திருப்பான்” என்று இப்போது எனக்குத் தெரியும்,15 இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நிமித்தமாக, அந்த மகத்தான தருணத்தில் நாம் அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவோம். கூடுதலாக, நாம் அனைவரும் குடும்பங்களாக மீண்டும் ஒன்றிணைவதற்கும், அவருடன் பரிசுத்தமான உடன்படிக்கைகளைச் செய்வதற்கும், காத்துக்கொள்வதற்கும் நாம் தேர்ந்தெடுத்தால், தேவனின் முன்னிலையில் நித்திய மகிழ்ச்சியைப் பெறுவதை அவர் சாத்தியமாக்கியுள்ளார்.

தலைவர் நெல்சன் போதித்தார்:

“மரணம் என்பது நம் நித்திய இருப்புக்கு அவசியமான ஒரு அங்கமாகும். அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் இது தேவனின் மகிழ்ச்சியின் மாபெரும் திட்டத்திற்கு அவசியம். கர்த்தருடைய பாவநிவர்த்திக்கு நன்றி, இறுதியில் உயிர்த்தெழுதல் என்பது ஒரு உண்மை மற்றும் நித்திய ஜீவன் எல்லா மனிதர்களுக்கும் சாத்தியம். …

“… அன்புக்குரியவர்களைத் துக்கப்படுத்துவதற்காக … கிறிஸ்துவின் மீது உறுதியான நம்பிக்கை, நம்பிக்கையின் பரிபூரண பிரகாசம், தேவன் மற்றும் எல்லா மனிதர்களிடமும் உள்ள அன்பு, அவர்களுக்கு சேவை செய்வதற்கான ஆழ்ந்த ஆசை ஆகியவற்றால் மரணத்தின் கொடுக்கு மென்மையாக்கப்படுகிறது. அந்த விசுவாசம், அந்த நம்பிக்கை, அந்த அன்பு தேவனின் பரிசுத்த பிரசன்னத்திற்கு வரவும், மேலும் நம்முடைய நித்திய இணைகள் மற்றும் குடும்பங்களுடன், அவருடன் என்றென்றும் வாழ நம்மை தகுதிப்படுத்தும்.”16

படம்
கல்லறைத் தோட்டம்

நான் சாட்சியளிக்கிறதாவது, ”கல்லறை ஜெயம் பெறாமலும், மரணத்தின் வேதனை போகும்படி கிறிஸ்து மரணக்கட்டுக்களை முறியாமல், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழாவிட்டால், உயிர்த்தெழுதலும் இல்லாமற்போயிருக்கும்.

“ஆனால் உயிர்த்தெழுதல் இருப்பதால், கல்லறை ஜெயம் கொள்ளுகிறதில்லை, மரணத்தின் வேதனை கிறிஸ்துவிலே விழுங்கப்பட்டிருக்கிறது.

“அவரே உலகத்தின் ஒளியாகவும், ஜீவனுமாயுமிருக்கிறார், ஆம், அந்த ஒளி நித்தியமானதாயும் அந்தகாரமடையாத ஒளியாயும், மரணமே இல்லாத முடிவற்ற ஜீவனுமாயிருக்கிறார்.”17

படம்
உயிர்த்தெழுந்த இரட்சகர்

இயேசு கிறிஸ்து தாமே அறிவித்தார், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.”18

இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பாவநிவர்த்தி மற்றும் மகிமையான உயிர்த்தெழுதல் மூலம், நொறுங்குண்ட இருதயங்கள் குணமடையலாம், வேதனை சமாதானமாக மாறலாம், துன்பம் நம்பிக்கையாக மாறும் என, நான் சாட்சியளிக்கிறேன். அவர் நம் ஒவ்வொருவரையும் இரக்கம், ஆறுதல், அதிகாரம் மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றில் தழுவிக்கொள்ள முடியும். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.