பொது மாநாடு
தேவன் தன் பிள்ளைகளை நேசிக்கிறார்
ஏப்ரல் 2021 பொது மாநாடு


தேவன் தன் பிள்ளைகளை நேசிக்கிறார்

நம்முடைய பரலோக பிதா அவருடைய பிள்ளைகளாகிய நம்மீது, அன்பை வெளிப்படுத்தும் மூன்று குறிப்பிட்ட வழிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் நான் உங்களுடன் களிகூர்கிறேன். நான் பிலிப்பைன்ஸில் உள்ள மனஉறுதியுள்ள உறுப்பினர்களிடமிருந்து அன்பைக் கொண்டு வந்து, அவர்கள் சார்பாக சொல்லுகிறேேன், மாபுஹே!

இந்த ஈஸ்டர் காலையில், ஜீவனுள்ள கிறிஸ்துவைப்பற்றியும் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதையும், நம்மீதும் பரலோகத்திலுள்ள நம்முடைய பிதா மீதும் அவரது அன்பு தூய்மையானது, நித்தியமானது என்பதையும் நான் சாட்சியளிக்கிறேன். இன்று, அனைவரும் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் அன்பில், கவனம் செலுத்த விரும்புகிறேன், இது இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம் வெளிப்படுகிறது. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”(யோவான் 3:16).

தேவனைப்பற்றிய அறிவைப்பற்றி நேபி தீர்க்கதரிசியிடம் ஒரு தூதன் கேட்டபோது, நேபி வெறுமனே பதிலளித்தான், “அவர் தம் பிள்ளைகளை நேசிக்கிறார் என நான் அறிவேன்.” (1 நேபி 11:16–17 பார்க்கவும்).

இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடான மார்மன் புஸ்தகத்திலிருந்து ஒரு வசனம் இரட்சகரின் பரிபூரண அன்பை வல்லமையாக விவரிக்கிறது: “மேலும் இந்த உலகம் அவர்களின் அக்கிரமத்தால் அவரை ஒரு அற்பமான பொருள் என்று நியாயந்தீர்க்கும். … அவரை வாரினால் அடிப்பார்கள், … அவரை அடிப்பார்கள். … அவர் மேல் துப்புவார்கள், … அவர் மனுபுத்திரர் மேலுள்ள அன்பான தயவினிமித்தமும் நீடிய பொறுமையினிமித்தமும் அவர் அவைகளின் பாடனுபவிப்பார்.(1 நேபி 19:9). இரட்சகரின் உலகளாவிய அன்பு தான் அவர் செய்யும் எல்லாவற்றிற்கும் பின்னால் உள்ள உந்துசக்தியாகும். பரலோகத்திலுள்ள நம்முடைய பிதா நம்மீது வைத்திருக்கும் அதே அன்புதான் என்பதை நாம் அறிவோம், ஏனென்றால் இரட்சகர் தாமும் பிதாவும் “ஒன்று” என்று தாழ்மையுடன் கற்பித்தார் (யோவான் 10:30; 17:20–23).

அப்படியானால், அவர்களின் உலகளாவிய அன்பிற்கு நாம் எவ்வாறு நன்றியுணர்வை திரும்பக் காட்டுகிறோம்? இரட்சகர் இந்த எளிய, அனைத்தையும் உள்ளடக்கிய அழைப்பை நமக்குக் கற்றுக் கொடுத்தார்: “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்”(யோவான் 14:15).

தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்தார், “தேவனின் உலகளாவிய மற்றும் பரிபூரண அன்பு அவருடைய சுவிசேஷத் திட்டத்தின் அனைத்து ஆசீர்வாதங்களிலும் காட்டப்பட்டுள்ளது, அவருடைய நியாயப்பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்காக அவருடைய சிறந்த ஆசீர்வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன.”1

நம்முடைய பரலோக பிதா அவருடைய பிள்ளைகளாகிய நம்மீது, அன்பை வெளிப்படுத்தும் மூன்று குறிப்பிட்ட வழிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலாவதாக, தேவன் மற்றும் குடும்பத்துடனான உறவுகள் அவருடைய அன்பை வெளிப்படுத்துகின்றன.

நமது மிக மதிப்புமிக்க உறவுகள் பிதாவுடனும் குமாரனுடனும் நமது சொந்த குடும்பங்களுடனும் உள்ளன, ஏனென்றால் அவர்களுடனான நமது உறவுகள் நித்தியமானவை. மகிழ்ச்சியின் மாபெரும் திட்டம் தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பின் அற்புதமான வெளிப்பாடாகும். தேவனின் திட்டத்தில் கண்களை நிறுத்தி, சுயநல ஆசைகளுக்கு ஆதரவளிக்கும் நமக்குள்ளேயுள்ள மண்ணையும் பாறைகளையும் செதுக்குவதற்கு நாம் விரும்பி தேர்வு செய்கிறோம், அவற்றை நித்திய உறவுகளை உருவாக்கும் அடித்தளங்களுடன் மாற்றுகிறோம். ஒரு விதத்தில், இது “ஆவிக்குரிய அகழ்வு” என்று அழைக்கப்படலாம். நம்முடைய ஆவிக்குரிய அகழ்வாராய்ச்சியைச் செய்வதில், நாம் முதலில் தேவனைத் தேட வேண்டும், அவரை அழைக்க வேண்டும்( எரேமியா 29:12-13 பார்க்கவும்).

அவரைத் தேடுவதும் அவரை அழைப்பதும் இந்த செயல்முறையைத் தொடங்கி நமது நித்திய உறவுகளை கட்டியெழுப்பவும் பலப்படுத்தவும் இடமளிக்கும். இது நமது ஆவிக்குரிய பார்வையை விரிவுபடுத்துகிறது, மேலும் நம் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள அச்சங்களை விட, நம்மால் கட்டுப்படுத்தக்கூடியதை மாற்றுவதில் கவனம் செலுத்த உதவுகிறது. நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் படிப்பது இந்த மற்ற அக்கறைகளை நித்திய கண்ணோட்டத்துடன் பார்க்க உதவும்.

கவனச்சிதறல்கள் சில சமயங்களில் நம் குடும்ப உறவுகள் மற்றும் செயல்பாடுகளில் தேவனின் அன்பை அனுபவிப்பதைத் தடுக்கலாம். மின்னணு உபகரணங்கள் தனது குடும்ப உறவுகளை எடுத்துக்கொள்வதாக ஒரு தாய் உணர்ந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். இரவு உணவு மேசையிலும், மற்ற குடும்ப நேரங்களிலும், அவர் கூப்பிடுகிறார், “தொலைபேசிகளை தள்ளி வையுங்கள்; நாம் முகத்தைப் பார்த்துக் கொள்ள நேரம் ஒதுக்குவோம். ” இது அவர்களின் குடும்பத்திற்கான புதிய விதிமுறை என்றும், உண்மையான முகத்தை பார்க்கும் நேரம் இருக்கும்போது அது ஒரு குடும்பமாக அவர்களின் உறவை பலப்படுத்துகிறது என்றும் அவர் கூறுகிறார். அவர்கள் இப்போது என்னைப் பின்பற்றி வாருங்களை குடும்பமாக ஒன்றாக தரமாக கலந்துரையாடுகிறார்கள்.

இரண்டாவதாக, அவர் தீர்க்கதரிசிகளை அழைப்பதன் மூலம் தனது அன்பை, தனது பிள்ளைகளுக்கு வெளிப்படுத்துகிறார்.

நமது தற்போதைய உலகம் “வார்த்தைகளின் போர் மற்றும் கருத்துக்களின் கொந்தளிப்பால்” பிரளயப்பட்டிருக்கிறது (ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:10). பவுல் நமக்கு நினைவூட்டுகிறான், “உலகத்திலே எத்தனையோ விதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது” (1 கொரிந்தியர் 14:10). எல்லா குரல்களிலும் எது தெளிவாகவும் அர்த்தமுள்ளதாகவும் மேலோங்கியும் உயர்கிறது? இது தேவனின் தீர்க்கதரிசிகள், ஞானதிருஷ்டிக்காரர்கள் மற்றும் வெளிப்படுத்துபவர்களின் குரல்.

2018 ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, வேலைக்குத் திரும்பியதும், சபை தலைமையகத்தில் கார் நிறுத்துமிடத்தில் நின்றதை நன்கு நினைவுகூர்கிறேன். திடீரென்று, “டானியேலா, டானியேலா” என்று அழைக்கிற தலைவர் ரசல் எம். நெல்சனின் குரலைக் கேட்டேன். நான் அவரை நோக்கி ஓடினேன், நான் எப்படி இருக்கிறேன் என்று அவர் கேட்டார்.

நான் சொன்னேன், “தலைவர் நெல்சன், நான் நன்றாக குணமடைந்து கொண்டிருக்கிறேன்.”

அவர் எனக்கு ஆலோசனையையும் அரவணைப்பையும் கொடுத்தார். “ஒருவருக்கு” ஒரு தீர்க்கதரிசியின் தனிப்பட்ட ஊழியத்தை நான் உண்மையிலேயே உணர்ந்தேன்.

தலைவர் நெல்சன் பூமியின் பல நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். என் மனதில், அவர் ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஊழியம் செய்வது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான “ஒருவர்களுக்கு” ஊழியம் செய்கிறார். அவ்வாறு செய்யும்போது, தேவன் தம்முடைய எல்லா பிள்ளைகளுக்கும் வைத்திருக்கும் அன்பைப் பகிர்ந்து கொள்கிறார்.

சமீபத்தில், தலைவர் நெல்சனின் வார்த்தைகள் பிலிப்பைன்ஸ் மக்களுக்கு பலத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் ஆதாரமாக இருந்தன. உலகின் ஒவ்வொரு நாட்டையும் போலவே, 2020ம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய், அத்துடன் எரிமலை வெடிப்பு, பூகம்பங்கள், வலுவான சூறாவளி மற்றும் பேரழிவு தரும் வெள்ளத்தால் பிலிப்பைன்ஸ் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆனால், பயம், தனிமை, விரக்தி ஆகியவற்றின் இருண்ட மேகங்கள் வழியாக பிரகாசிக்கும் ஒளியின் கற்றை போல, தீர்க்கதரிசியின் வார்த்தைகள் வந்தன. அவை உலகளாவிய உபவாசம் மற்றும் ஜெபம் மற்றும் தொற்றுநோயையும் மீறி முன்னேறும் ஆலோசனை ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன. நமது வீடுகளை விசுவாசத்தின் தனிப்பட்ட சரணாலயங்களாக மாற்ற அவர் நம்மை அழைத்தார். தேவனின் எல்லா பிள்ளைகளையும் மதிக்கவும், தேவன் நம் வாழ்வில் ஜெயம்பெறவும் எல்லா இடங்களிலுமுள்ள பிற்காலப் பரிசுத்தவான்களையும் அவர் அழைத்தார்.2

அதேபோல், தலைவர் நெல்சனின் நன்றியுணர்வின் ஆற்றலைப்பற்றிய சமீபத்திய காணொளி சாட்சியும் கிளர்ச்சியூட்டுவதாயிருந்தது, அவரது நிறைவு ஜெபமும் பிலிப்பைன்ஸ் முழுவதும் எதிரொலித்தது.3 லெய்டே மாகாணத்தில், காணொலி ஒரு சர்வசமய நிகழ்வின் போது இயக்கப்பட்டது, மேலும் இது ஒரு பாதிரியாரின் மரியாதைக்குரிய பகுதியாக குறிப்பிடப்பட்டது. பிலிப்பைன்ஸ் ஜனங்கள், முழு உலகத்துடனும், தேவனின் அன்பை அவர் தெரிந்துகொண்ட தீர்க்கதரிசியின் வார்த்தைகளின் மூலம் உணர மிகவும் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்.

மூன்றாவதாக, தண்டனை என்பது தேவனின் பிள்ளைகளின் மீது அன்பின் வெளிப்பாடாக இருக்கலாம்

சில நேரங்களில், தேவன் நம்மை தண்டிப்பதன் மூலம் தனது அன்பை வெளிப்படுத்துகிறார். அது அவர் நம்மை நேசிக்கிறார் என்பதுவும், நாம் யார் என்றும் அவருக்குத் தெரியும் என்பதையும் நினைவூட்டுவதற்கான ஒரு வழியாகும். அவர் வாக்குறுதியளிக்கப்பட்ட சமாதானத்தின் ஆசீர்வாதம், உடன்படிக்கை பாதையில் தைரியமாக நடந்து, திருத்தம் பெற தயாராக உள்ள அனைவருக்கும் திறந்திருக்கிறது.

தண்டனையை நாம் அடையாளம் கண்டு, பெறுபவர்களாக இருக்கும்போது, அது ஒரு ஆவிக்குரிய அறுவை சிகிச்சையாக மாறும். அறுவை சிகிச்சையை யார் விரும்புகிறார்கள்? ஆனால் அது தேவைப்படுபவர்களுக்கும் அதைப் பெறத் தயாராக இருப்பவர்களுக்கும் அது உயிர் காப்பதாக இக்கும். கர்த்தர் தான் நேசிக்கிறவர்களைத் தண்டிக்கிறார். வேதங்கள் அவ்வாறே நமக்குச் சொல்கின்றன (எபிரெயர் 12:5–11; ஏலமன் 12:3; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:27; 95:1 பார்க்கவும்). அந்த தண்டனை அல்லது ஆவிக்குரிய அறுவை சிகிச்சை நம் வாழ்வில் தேவையான மாற்றத்தை கொண்டு வரும். சகோதர சகோதரிகளே, அது நம் உள்ளிந்திரியங்களை சுத்திகரித்து தூய்மையாக்குகிறது என்பதை நாம் உணருவோம்.

மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசியான ஜோசப் ஸ்மித்தே தண்டிக்கப்பட்டார். ஜோசப் மார்மன் புஸ்தக கையெழுத்துப் பிரதியின் 116 பக்கங்களை இழந்த பிறகு, கர்த்தர் இவ்வாறு சரிசெய்து அன்பைக் காட்டினார்: “நீ தேவனை விட மனிதனுக்கு அஞ்சியிருக்கக்கூடாது. … நீ விசுவாசமாக இருந்திருக்க வேண்டும். … இதோ, ஜோசப், நீ தெரிந்து கொள்ளப்பட்டவன். … நினைவில் கொள், தேவன் இரக்கமுள்ளவர்; எனவே, மனந்திரும்பு” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:7–10).

2016 ஆம் ஆண்டில், ஆர்கன்சாஸின் லிட்டில் ராக் நகரில் ஒரு பணிக்குச் சென்றபோது, பிஜியில் உள்ள ஒரு தீவில் வசித்து வந்த எனது மூத்த சகோதரிக்கு ஒரு பொதியை வழங்குமாறு சகோதரர் காவாவிடம் கேட்டேன். அவரது பதில் நான் எதிர்பார்த்த ஒன்று அல்ல. “தலைவர் வாக்கோலோ,” உங்கள் சகோதரி காலமாகி விட்டார், 10 நாட்களுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டார் “என்று அவர் முனகினார். நான் சுய பரிதாபம் அடைந்தேன், எனக்கு தெரியப்படுத்த என் குடும்பத்தினர் கூட கவலைப்படவில்லை என்று ஒரு சிறிய வருத்தத்தை உணர்ந்தேன்.

அடுத்த நாள், என் மனைவி ஊழியக்காரர்களுக்கு கற்பிக்கும் போது, இந்த எண்ணம் என் ஆத்துமாவை ஊடுருவியது: “டானியேலா, இந்த அனுபவங்கள் அனைத்தும் உன் சொந்த நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் ஆகும். இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்திபற்றிய உனது சாட்சியத்தை நீ கற்பித்து வருகிறாய்; இப்போது அதன்படி வாழு.” “இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்” (யோபு 5:17), என நான் நினைவூட்டப்பட்டேன் இது எனக்கு ஒரு ஆவிக்குரிய அறுவை சிகிச்சை, மற்றும் அந்த தீர்வு உடனடியாக வந்தது.

அந்த அனுபவத்தைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்ததைப் போலவே, கலந்துரையாடலுக்கு எனது நிறைவு கருத்துக்களை வழங்கும்படி அழைக்கப்பட்டேன். மற்றவற்றுடன், எனக்கு தற்போது கற்பிக்கப்பட்ட பாடங்களை பகிர்ந்து கொண்டேன்: ஒன்று, நான் பரிசுத்த ஆவியால் தண்டிக்கப்பட்டேன், நான் அதை விரும்பினேன், ஏனென்றால் நான் மட்டுமே அதைக் கேட்டேன்; இரண்டு, மீட்பரின் பலி மற்றும் மீட்கும் விலைக்கிரயம் காரணமாக, நான் இனி எனது சவால்கள், சோதனைகள் மற்றும் இன்னல்கள் என்று குறிப்பிட மாட்டேன், ஆனால் எனது “கற்றல் அனுபவங்கள்” என்பேன்; மூன்று, அவருடைய பரிபூரண மற்றும் பாவமற்ற வாழ்க்கை காரணமாக நான் இனி எனது குறைபாடுகளையும் திறன்களின் பற்றாக்குறையையும் பலவீனங்களாகக் குறிப்பிட மாட்டேன், மாறாக எனது வளர்ச்சி வாய்ப்புகள் என்று குறிப்பிடுவேன். தேவன் நம்மை நேசிப்பதால் தேவன் நம்மை தண்டிக்கிறார் என்பதை அறிய இந்த அனுபவம் எனக்கு உதவியது.

நான் நிறைவு செய்கிறேன். நம்முடைய நித்திய பிதாவும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும், அவர்களுடனும் நமது குடும்ப உறுப்பினர்களுடனும், நித்திய உறவை ஏற்படுத்துவதன் மூலமும், தற்கால தீர்க்கதரிசிகளை நமக்குக் கற்பிப்பதற்கும், ஊழியம் செய்வதற்கும் அழைப்பதன் மூலமும், நம்மைத் தண்டிப்பதன் மூலமும் கற்றுக்கொள்ளவும் வளரவும் நமக்கு உதவ அவர்களின் அன்பைக் காட்டுகிறார்கள். “தம்முடைய தெய்வீக குமாரன்,” நம்முடைய உயிர்த்தெழுந்த கர்த்தர், ஜீவிக்கும் கிறிஸ்துவாகிய “ஒப்பற்ற பரிசுக்காக தேவன் நன்றி தெரிவிக்கப்படுவாராக.”4 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.